6000 ஆண்டு வரலாறுடைய சென்னை கோலவிழி அம்மன் ஆலய சிறப்புக்கள்
மயிலாப்பூரில் உள்ள கோலவிழி அம்மன் கோவில் கற்பகாம்பாள் கோவிலுக்கு முந்தியது. இங்குப் பூசை நடந்த பிறகு கற்பகாம்பாள் கோவிலில் பூஜை நடைபெறும். கற்பகாம்பாள் கபாலீஸ்வரர் கோவிலின் அறுபத்து மூவர் ஊர்வலத்தில் கோலவிழி அம்மன் பல்லக்கு முதலில் செல்லும்.
அதன் பிறகு விநாயகரின் பல்லக்கு செல்லும். பொதுவாக விநாயகர் பல்லக்கு முதலில் செல்வதே திருவீதி உலாவின் மரபாகும். ஆனால் இங்கே இம்மரபு புதிய மாற்றத்தைக் காண்கின்றது.
பச்சைப்பட்டு கோலவிழியம்மன்
கோலவிழி அம்மன் வடக்கு வாய்ச் செல்வியாக எழுந்தருளி இருக்கின்றாள். இவளை பச்சப்பட்டு கோலவிழி அம்மன் என்றும் அழைப்பர். இவளுடைய ஆதி பெயர் பத்திரகாளி அம்மன் ஆகும்.
உருவத் தோற்றம்
கோலவிழி அம்மன் கருவறையில் அமர்ந்த கோலத்தில் ஒரு காலை மடக்கிக் குத்துக்காலிட்டு ஒரு காலைத் தொங்கவிட்டு வீராசனத்தில் (வீரத் தோற்றத்தில்) காணப்படுகின்றாள். தலையை ஒரு பக்கம் சாய்த்து திருவக்கரையில் உள்ள பத்ரகாளி போலத் தோன்றுகின்றாள்.
தலையில் அக்கினி மகுடமும் அதில் இடது பக்கம் சந்திரனும் கங்கா நதியும் வலது பக்கம் நாக ரூபமும் இடம் பெற்றுள்ளது. இவள் சன்னதிக்கு முன்பு சிறிய உருவில் நின்ற கோலத்தில் விநாயகரும் முருகனும் தனித்தனி சன்னதியில் உள்ளனர்.
கோலவிழி அம்மன் ஜ்வாலா மகுடமும் எட்டுக் கைகளும் கொண்டவள். வலது கைகளில் சூலம், வாள், உடுக்கை, வேதாளம் ஆகியவற்றையும் இடது கைகளில் கேடயம், அங்குசம், மணி, கபாலம் ஆகியவற்றையும் ஏந்தி உள்ளாள்.
கோலவிழி அம்மன்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலின் காவல் தெய்வமாக உள்ளாள். எல்லை காளி என்றும் இவளைப் போற்றுகின்றனர்.
திருமேனிகளின் தோற்றம்
மூலஸ்தானத்தில் கோலவிழி அம்மனுக்கு முன்பு அவளது இரண்டு செப்புத் திருமேனிகள் உள்ளன. அவற்றிற்கு தான் அபிஷேகம் செய்யப்படுகின்றது. இதில் ஒரு திருமேனி நான்கு கரங்களுடன் ஜ்வாலா மகுடத்துடன் உள்ளது.
மற்றொரு திருமேனி நின்ற கோலத்தில் தன் இடது கையைத் தொங்க விட்டு வலது காலைச் சுட்டி காட்டுகின்றது. ( திருவக்கரை வக்ரகாளியும் இதே தோற்றத்தில் தான் காணப்படுகின்றாள்.
நோய்நொடி விலக்கும் ஆமை
இங்கு வராகி அம்மன் சன்னதி தனியாக உள்ளது அதன் முன்புறத்தில் தரையில் புடைப்புச் சிற்பமாக ஆமை காணப்படுகின்றது. இந்த ஆமைக்கு இளநீர் அபிஷேகம் செய்தால் நோய்நொடி விலகும்.
நாகதோஷம் விலக்கும் நாகர்
இங்கு நாகலிங்க மரத்தடியில் நாகர்கள் வழிபடு தெய்வமாக இருக்கின்றனர். எனவே நாக தோஷம் உள்ளவர்கள் ராகு கேதுக்களால் திருமணத்தடை மற்றும் கர்ப்பப்பை கோளாறு கருவுறாமை போன்ற துன்பங்களால் அவதிப்படும் பெண்கள் இக்கோவிலுக்கு வந்து நேர்த்திக் கடன்களை செலுத்தி குறை தீர்ந்து நன்மை அடைகின்றனர்.
சாமி கதை
கற்பகாம்பளையும் கோலவிழி அம்மனையும் இணைத்து ஒரு கதை வழங்குகின்றது. மயிலாப்பூர் திருத்தலத்தில் பார்வதி தேவி மயில் வடிவில் தவம் செய்த போது அவளுக்கு இடையூறு செய்த அரக்கனைக் கொல்ல சிவபெருமான் பத்ரகாளி அம்மனை அனுப்பினார். அந்தப் பத்ரகாளியே இங்குக் கோலவிழி அம்மனாக அருள் பாலிக்கின்றாள்.
சூரிய வழிபாடு
சூரிய பகவான் கோலவிழி அம்மனை தன் ஒளிக்கரங்களால் தை மாதத்தில் ஆறு நாட்கள் தொட்டு வணங்கிச் செல்கிறார். சூரிய ஒளி அம்மனின் சிலை மீது படுகின்றது.
நேர்த்திக்கடன்கள்
கோலவிழி அம்மன் கோவிலை அனேக பக்தர்கள் அங்கப் பிரதட்சணம் செய்வது சிறப்பான குறிப்பிடத்தக்க நேர்த்திக்கடன் ஆகும். 27 சுற்று வலமாகவும் இரண்டு சுற்று இடமாகவும் சுற்றி வருகின்றனர்.
கடன் தீர்க்கும் மாவுக் காப்பு
அம்மனுக்குப் பச்சரிசி மாவினால் மாவுக்காப்பு சாற்றுவது கடன் நிவாரணத்திற்கு உண்டான நேர்த்திக்கடன் ஆகும். அம்மனுக்கு சந்தன காப்பும் குங்குமக் காப்பும் கூட நேர்த்திக்கடன்களாக நிறைவேற்றப்படுகின்றன.
சிறப்பு விழாக்கள்
சித்திரை மாதம் பௌர்ணமி அன்று பூச்சொரிதல் விழா நடைபெறும். ஆடிப்பூரத்திற்கு சுமார் 250க்கும் மேற்பட்டோர் அருகில் இருக்கும் முண்டகக் கன்னி அம்மன் கோவிலில் இருந்து இங்கு கோலவிழி அம்மன் கோவிலுக்கு தீச்சட்டி எடுத்து வருகின்றனர். புரட்டாசி மாதம் நவராத்திரி விழாவின் நிறைவில் அம்மன் சூரனை வதம் செய்த நிகழ்வு நடைபெறுகின்றது. புரட்டாசி மாதம் மூன்றாம் ஞாயிறு அன்று பக்தர்கள் பால்குடம் எடுத்து வருகின்றனர்.
6000 ஆண்டு வரலாறு
கோலவிழி அம்மன் கோவிலுக்கு எதிரே முன்பு மயானம் இருந்தது. அவள் ருத்ர பூமியை ஆட்சி செய்யும் ருத்ர தேவதையாக இங்கு. விளங்குகின்றாள். இம் மயானத்தின் பிடாரி அம்மனாக முன்பு விளங்கினாள். மயானத்தின் எரியும் பிணத்தின் இறைச்சியை உண்டு சாம்பலை பூசி தாந்திரீக உறவு கொண்டு வாழும் நூற்றுக்கணக்கான அகோரிகள் இப்பிடாரியம்மன் கோவிலில் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு தங்கி இருந்தனர். இவள் பிடாரி என்பதால் தலையில் நாக முடி அணிந்திருக்கின்றாள்.
நாகர்களின் பிடாரி
உலகின் தென் பகுதியில் ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை போன்ற பகுதிகள் ஒரே நிலப்பரப்பாக இருந்த காலத்தில் இங்கு வாழ்ந்த மனிதர்கள் நாகர்கள் எனப்பட்டனர். அவர்கள் இறந்து போன தங்கள்முன்னோர்கள் நாக உருவில் கண்களுக்கு தெரிவார்கள் என்று நம்பியதால் நாகத்தைத் தெய்வமாக வழிபட்டனர்.
ஒவ்வொரு வீட்டிலும் மனை நாகம் என் ஒன்று இருந்து வந்தது. இந் நாகர்களின் வழிபடு தெய்வம் நாகத்தை தலையிலும் உடலிலும் அணிந்து கொண்டிருந்த பிடாரனும் பிடாரியும் ஆவர். இறந்தவர்கள் நாக ரூபத்தில் வருவதான நம்பிக்கை இருந்ததனால் பிடாரனையும் பிடாரியையும் மக்கள் மயான தெய்வங்களாகப் போற்றினர்.
நோய் தீர்க்கும் அமிர்தம்
மாரியம்மன், பத்திரகாளி அம்மன் என்று பெயர் சூட்டப்பட்ட பௌத்த மருத்துவப் பெண் தெய்வங்களின் வலது கையில் ஒரு மருந்து கிண்ணம் இருக்கும். இவர்களின் நோய் தீர்க்கும் சக்தியை இக்கிண்ணம் புலப்படுத்தும். இதனை நோய் தீர்க்கும் அமிர்தம் என்று பௌத்தர்கள் அழைத்தனர்.
ஆனால் வைதீக மரபினர் இதனை கபாலம் என்றனர். இக்கோயிலில் உள்ள ஆமை உருவம் புத்த சமயத்தில் தீர்க்காயுள், உடல்நலம், மருந்து, அமிர்தம் ஆகியவற்றைக் குறிக்கின்றது.
பிடாரன் வழிபாடு
பிடாரியைக் குறிப்பிட்டது போல் பிடாரன் பற்றிய குறிப்பு எங்கும் காணப்படவில்லை. காரணம், பிடாரன் சமய வரலாற்றில் நாக தேவன்/ நாகர்கள் என்ற பெயரில் குறிக்க பெற்றான். மற்றொன்று, பிடாரன் மயானத்தில் இருக்கும் சுடலைச் சாம்பல் பூசியும், நாகங்களை உடம்பில் உலாவ விட்டுக் கொண்டும் தலையில் நாக முடி சூடியும் இருக்கிற கருப்பு நிறத் தெய்வமான சிவபெருமான் ஆக உயர் நிலை ஆக்கம் பெற்றான்.
கோலவிழி அம்மன் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பழந்தமிழர்களான நாகர் இனத்தவர் வழிபட்ட பிடாரி அம்மன் ஆவார். பின்பு பௌத்தர்கள் காலத்தில் அவர் பத்ரகாளியாக உருமாற்றம் பெற்றார். நோய் நொடி, பில்லி சூனியம், கிரக தோஷங்கள் ஆகியவற்றை அசுரர்கள் போல அழித்து ஒழிக்கின்ற காளியாக விளக்கினாலள்.
சைவ சமய பேரெழுச்சிக்குப் பின்பு கற்பகாம்பாளின் சிவத் தியானத்திற்கு உதவிய காவல் தெய்வமாக மாறினாள். இப்பகுதியில் எல்லை காளியாக கற்பகாம்பாள் கோயில் நிகழ்ச்சிகளுக்கு முன்னோடியாக இருந்து வருகிறாள்.
கடல் ஆமை உருவம்
இந்து சமயத்தில் கடல் ஆமை பாற்கடலைக் கடைய உதவிய மந்தார மலையையும் கூர்மாவதாரத்தையும் குறிக்கின்றது. ஜைன சமயத்தில் நிலைப்பாடு மற்றும் உறுதித் தன்மையைக் குறிக்கின்றது. புத்த சமயத்தில் தீர்க்காயுள், உடல்நலம், மருந்து, அமிர்தம் ஆகியவற்றைக் குறிக்கின்றது.
குளிர்ச்சியான சந்திர பிம்பமாகத் திகழும் குவான் ஜின் என்ற பௌத்தக் கடவுள் தர்மத்தின் சின்னம் ஆவார்.இவர் குளிர்ச்சியான கடல் ஆமையின் முதுகில் பயணம் செய்வார். கடல் ஆமை என்பது பௌத்தத்தில் அன்பும் அறமும் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்து அதன் நிறைவில் ஞான ஒளி பெறுவதைக் குறிக்கிறது.
அன்பு, அறம், ஞானம் என்பதன் சின்னமாக விளங்கிய ஆமையை காலமும் கருதும் துரதிர்ஷ்டம் பிடித்ததாக மாற்றிவிட்டது. ஆயினும் கோலவிழியம்மன் கோயிலில் மக்கள் குளிர்ந்த இளநீர் அபிஷேகம் செய்து குவான் ஜின்னை அவர்கள் அறியாமலேயே வணங்கி வருகின்றனர்.
இவ்வாறாக கோலவிழி அம்மனின் வரலாறும் வழிபாடும் வரலாற்றுக்கு முந்திய காலத்தில் தொடங்கி இன்று வரை மக்களிடம் தொட்டு நின்று நீடித்து வருகின்றது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |