கண் நோய் தீரக்கும் திருவீழி மிழலை சிவன் கோவில்
கும்பகோணத்துக்கு 26 கிலோமீட்டர் தொலைவில் தென்கரை என்ற கிராமத்தின் அருகில் திருவீழிமிழலை என்ற திருத்தலம் உள்ளது. இங்கே கோயில் கொண்டிருக்கும் இறைவனின் பெயர்கள் வீழி நாதேஸ்வரர், விழி அழகீசர், விழியழகர் மற்றும் நேத்ரார்பனேஸ்வரர் ஆகும்.
அம்மனின் பெயர் சுந்தர குஜாம்பிகை என்ற அழகு முலையாள். குஜா என்றால் வடமொழியில் பெண்ணின் மார்பைக் குறிக்கும், அபிதகுஜாம்பாள், சுந்தர குஜாம்பாள் கிரிகுஜாம்பாள் போன்ற அம்மனின் பெயர்கள் அவர்களின் மார்பைக் குறித்து வழங்கப்படுகின்றன. இங்குத் தலவிருட்சம் வீழி செடி ஆகும்.
வீழிமிழலை
திருவீழிமிழலையில் வீழிச் செடிகள் அதிகமாக இருந்த காரணத்தால் சங்ககாலத்தில் இவ்வூர் வீழி மிழலை என்று பெயர் பெற்றது. இவ்விடத்த்தில் குறும்பர் இனத்தவர் வாழ்ந்து வந்தனர். இவர்களின் தலைவன் எவ்வி எனப்படும் வள்ளல் ஆவான்.
மிழலை குறும்பன் என்பவன் தினமும் விளாம்பழத்தைப் படைத்து இறைவனை வணங்கி வந்தான். இறைவன் அவனது அன்பைக் கண்டு மெச்சி அஷ்டமா சித்திகளை அவனுக்கு வழங்கினார். அவன் வைத்த விளாம்பழத்தின் உருவம் இன்றைக்கும் இறைவனின் திருப்பாதத்தில் காணப்படுகிறது.
தலத்தின் சிறப்பு
வீழிப் பழத்தின் பெயரால் பெயர் வீழிமிழலை என்று பெயர் பெற்ற இவ்வூருக்கு பூ கைலாசம், கல்யாணபுரம், பஞ்சாட்சரபுரம், தட்சண காசி, சன் மங்கள ஸ்தலம், சுவேத கானம், ஆகாச நகரம், பனசாரண்யம், நேத்ரார்ப்பணபுரம், தேஜினிவனம் என்று வேறு 10 பெயர்களும் உண்டு.
உப சன்னதிகள்
திருவீழிமிழலை சிவன் கோவிலில் தெற்குப் பிரகாரத்தில் படிக்காசு விநாயகர் தனிச் சன்னதி கொண்டுள்ளார். சோமாஸ்கந்தர் முருகன் மற்றும் சண்டேஸ்வரருக்கு மேற்கில் தனித்தனி சன்னதிகள் உள்ளன. நடராசரும் தனிச் சன்னதியில் எழுந்தருளியுள்ளார்.
படிக்காசு விநாயகர்
திருவீழிமிழலையில் படிக்காசு வழங்கி பஞ்சம் தீர்த்த சிவபெருமான் எழுந்தருளி இருப்பதால் இங்கே உள்ள விநாயகருக்கும் படிக்காசு விநாயகர் என்று பெயர். ஒரு காலத்தில் மக்கள் பஞ்சத்தால் தவித்தனர். அப்போது திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் இறைவனைத் துதித்துப் பாமாலை பாடினர்.
இறைவன் இருவருக்கும் தனித்தனியாக தங்கக் காசை பலிபீடத்தின் மீது வைத்தார். அதனைக் கொண்டு அருகில் உள்ள ஐயன் பேட்டையில் இருக்கும் செட்டியார் கடையில் கொடுத்து பணமாகப் பெற்று ஏழை மக்களின் பசிப்பிணியைப் போக்கினார்கள். இதனை குறிக்கும் வகையில் அய்யம்பேட்டையிலும் ஒரு சிவன் கோவில் உண்டு.
அக்கோவிலில் குடி கொண்டிருக்கும் இறைவனின் பெயர் செட்டியப்பர் ஆவார். அம்மன் கையில் படியுடன் இருக்கும் படியளந்த நாயகி ஆவாள். உற்சவர் கையில் தராசுடன் காட்சி அளிப்பார்.
அப்பருக்கும் சம்பந்தருக்கும் படிக்காசு
திருவீழிமிழலையில் அப்பரும் சம்பந்தரு ம் தங்கி இருந்த திருமடங்கள் வடக்கு வீதியில் மேற்கு கோடியிலும் கிழக்குக்கோடியிலும் உள்ளன. இவர்கள் இருவருக்கும் இறைவன் கொடுத்த காசுகளில் நாவுக்கரசருக்கு கொடுத்த காசு மாற்று குறைந்ததாக இருந்தது.
இதனை அறிந்து நாவுக்கரசர் 'வாசி தீரவே காசு நல்குவே' என்று மீண்டும் ஒரு பதிகம் பாடி மாற்றுக் குறையாத காசுகளை அதன் பின்னர் பெற்றார். வெளிச்சுற்றில் கிழக்கே சம்பந்தர்க்கு இறைவன் படிக்காசு கொடுத்த பலிபீடம் உள்ளது.
மேற்கே அப்பருக்கு திருநாவுக்கரசருக்கு படிக்காசு வழங்கிய பலிபீடம் உள்ளது. இவ்விரண்டிற்கும் அருகே படிக்காசு விநாயகரும் அப்பர் ஞானசம்பந்தர் ஆகியவரின் திருவுருவங்களும் உள்ளன.
பாதாள நந்தி
திருவீழிமிழலைக் கோவிலில் நந்தி பெருமான் தரைதளத்திற்கு கீழே பாதாளத்தில் உள்ளார். முழுக் கோவிலும் நந்தியின் மேலே அமைந்துள்ளது. பாதாள நந்தியை சுற்றி மூன்று புறமும் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. நந்தி பாதாளத்தில் இருக்க மூலஸ்தானத்துக்குப் 18 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். மூலஸ்தானம் தரைத் தளத்தை விட உயரத்தில் இருப்பது கோவிலின் தனிச்சிறப்பாகும்.
மாப்பிள்ளை சாமி
காத்யாயன முனிவரின் ஒரே மகள் காத்யாயினி. இவள் சிவபெருமானைத் திருமணம் செய்து கொள்ள விரும்பி இத்தலத்திற்கு வந்து இறைவனை நோக்கி தவம் இருந்தாள். இறைவனும் மனம் இரங்கி இங்கு வந்து அவளைத் திருமணம் செய்து கொண்டார்.
எனவே இக்கோவிலின் உற்சவமூர்த்தி காசி யாத்திரைக்கு கிளம்பும் மாப்பிள்ளைக் கோலத்தில் காட்சி தருகின்றார். இவரை மாப்பிள்ளை சாமி என்று அழைக்கின்றனர். இத்தலம் திருமணத் தலமாக விளங்குவதால் திருமணத் தடை, தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து சாமியையும் அம்பாளையும் வேண்டிக் கொண்டால் திருமணம் சிறப்பாக நடைபெறும்.
இருவருமே மாப்பிள்ளைகள்
மற்ற கோவில்களில் ஏதேனும் ஒரு மூர்த்தி மட்டும் திருமணக் கோலத்தில் காணப்படும். ஆனால் திருவீழிமிழலை சிவன் கோவிலில் மூலவரும் உற்சவரும் மாப்பிள்ளை போல காட்சி தருகின்றனர்.
கருவறையில் சிவலிங்கத்திற்கு பின்புறம் சுவாமியும் அம்பாளும் தம்பதிகளாகக் காட்சி தருகின்றனர். உற்சவமூர்த்தி அம்பாளுடனும் அருகில் அவர் முகத்தை நிமிர்ந்து பார்க்கும் நந்தியுடனும் காட்சியளிக்கின்றார்.
திருமணத்துக்கு சாட்சி
திருவீழிமிழலை திருத்தலம் இறைவனுக்கும் அம்பிகைக்கும் திருமணம் நடந்த இடம் என்பதால் இங்கு மூலஸ்தானத்தின் வாசலில் அரசாணிக்கால் நடப்பட்டுள்ளது. மகா மண்டபத்தில் திருமணத்திற்கான பந்தல்கால் நடப்பட்டுள்ளது.
இவ்விரண்டும் கல் தூண்களாகக் காட்சி தருகின்றன. மர வழிபாடு நடந்து வந்த வரலாற்றுக்கு முற்பட்ட பழந்தமிழகத்தில் திருமணத்தின்போது அரசமரக்கொம்பை மணப்பந்தலில் மணமக்கள் முன்பு நட்டு வைத்து இம்மரத்தைப் போல தழைத்து மணமக்களின் குடும்பம் விளங்க வேண்டும் என்று வாழ்த்துவர். இது ஒரு வளமைச் சடங்கு முறையாகும். திருவீழி மிழலையிலும் அரசாணிக்காலும் பந்தல்காலும் நட்டு வைத்து திருமணம் செய்ததை காண்கின்றோம்.
மகா மண்டபத்தின் சிறப்பு
திருவீழிமிழலை சிவன் கோவிலில் இருக்கும் மகாமண்டபம் வவ்வால் நத்தி மண்டபம் எனப்படுகின்றது. இஃது உண்மையில் வவ்வால் நத்தாத (விரும்பாத) மண்டபம் ஆகும். (இதனைத் தினமலர் இணையத் தளம் வவ்வால் நெத்தி மண்டபம் என்றும் தினமணி இணையத் தளம் வவ்வால் நந்தி என்று குறிப்பிட்டுள்ளது). பொதுவாகக் கோவில்களில் உள் கூரையில் வவ்வால்கள் நிறைய தொங்கிக்கொண்டு இருப்பதைக் காணலாம்.
ஆனால் இந்த கோவிலில் வவ்வால் வந்து அடையாமல் இருக்க இருக்கும் வகையில் வவ்வால் நத்தி மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இம்மண்டபம் 175 அடி நீளமும் 75 அடி அகலமும் கொண்டது. மண்டபத்தின் நடுப்பகுதியில் தூண் எதுவும் இல்லை. கூரைப் பகுதி வளைந்து அரை வட்ட வடிவில் சரிவாக உள்ளது. இவ்வளைந்த பகுதியில் வவ்வால்களால் தொற்றிக் கொள்ள இயலாது.
வவ்வால் நத்தி மண்டபம் இம்மண்டபம் தமிழரின் கட்டுமானக் கலையின் சிறப்பை உணர்த்துகின்றது. புதிதாக கோவில் கட்ட ஒப்புக்கொள்ளும் சிற்பிகள் தஞ்சை பெரிய கோவில் விமானம், கடாரம் கொண்டான் மதில், ஆவுடையார் கோவில் கொடுங்கை, திருவலஞ்சுழி கருங்கல் பலகணி, திருவீழிமிழலை வவ்வால் நத்தி மண்டபம், திருநனிப்பள்ளி கோடி விட்டம் ஆகிய ஆறு வேலைப்பாடுகளைத் தவிர்த்து மற்றவற்றைச் செய்து தருவோம் என்று ஒப்பந்தம் செய்வார்கள். ஏனெனில் இந்த ஆறு வேலைப்பாடுகளும் மிகவும் கடினமானவை.
படிக்கட்டுகளின் சிறப்பு
திருவீழிமிழலை சிவன் கோவில் மகா மண்டபத்திற்குக் கிழக்கே வாரத்தின் ஏழு நாட்களைக் குறிக்கும் வகையில் ஏழு படிக்கட்டுகள், தெற்கே பன்னிரண்டு மாதங்களைக் குறிக்கும் வகையில் 12 படிக்கட்டுகள், வடக்கே ஒன்பது நவ கிரகங்களைக் குறிக்க 9 படிக்கட்டுகள் உள்ளன.
ஒரே மண்டபத்திற்கு மூன்று வகையான படிக்கட்டுகள் இருப்பது இக்கோவிலில் தனிச்சிறப்பாகும். கோவில் விமானத்தின் சிறப்பு கோயில் கருவறைக்கு மேலே உள்ள விமானம் விண்ணிழி விமானம் எனப்படுகிறது. இவ்விமானத்தை 16 சிங்கங்கள் தாங்கிக் கொண்டிருக்கின்றன. இத்தலத்தில் தவம் செய்த திருமால் இவ் விமானத்தைக் கொண்டு வந்து இங்கு ஸ்தாபித்தார்.
தீர்த்தங்களின் சிறப்பு
திருவீழிமிழலை சிவன் கோவிலின் முன்பு பெரிய கோயில் குளம் உள்ளது இது தவிர இக்கோயிலைச் சுற்றி ஏறத்தாழ 25 தீர்த்தங்கள் உள்ளன. பத்ம தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், திருவேணி சங்கமம், குபேர தீர்த்தம், இந்திர தீர்த்தம், வருண தீர்த்தம், இலக்குமி தீர்த்தம், வசிட்ட தீர்த்தம் ஆகியன அவற்றுள் சிலவாகும்.
இலக்கியச் சிறப்பு
திருவீழிமிழலை சிவன் கோவில் பாடல் பெற்ற ஸ்தலம் ஆகும். அப்பர் 8 பதிகங்களும் ஞானசம்பந்தர் 14 பதிகங்களும் சுந்தரர் ஒரு பதிகமும் என 23 பதிகங்களை சைவ சமயக் குரவர்கள் பாடியுள்ளனர். இவை தவிர சேந்தனார் திருவிசைப்பாவும் அருணகிரிநாதர் திருப்புகழும் பாடியுள்ளார்.
கதை
சைவப் பேரெழுச்சி காலத்தில் பழைய சமண, பௌத்தக் கோயில்கள் சிவன் விஷ்ணு கோயில்களாகப் புத்துருப் பெற்றன. அப்போது சைவ வைணவ பூசல் தொடங்கியது. பௌத்த தெய்வங்களான இந்திரன், பிரம தேவர்களுடன் சேர்த்து சிவன் கோவிலில் விஷ்ணுவையும் விஷ்ணு கோவிலில் சிவனையும் குறைத்துக் கூறும் மரபு தோன்றியது.
இதனால் சைவ சமயம் சிவனையும் வைணவ சமயம் திருமாலையும் தனிப்பெரும் கடவுளாகத் தமக்குள் உயர்த்தி பிடித்தன. இவ்வகையில் திருமால் சிவனை நோக்கி தவம் இருந்த கதை இத்தல புராணத்தில் இடம்பெற்றுள்ளது.
திருமாலின் கதாயுதத்தை ஜலந்தரன் என்பவன் அபகரித்துச் சென்று விட்டான். அதனை மீட்டுத் தர வேண்டி திருமால் இத் திருத்தலத்திற்கு வந்து சிவபெருமானை நோக்கி தவமியற்றினார். அப்போது சிவனை ஆயிரம் மலர்களால் அர்ச்சித்து வணங்கினார்.
999 மலர்கள் தூவி அர்ச்சித்த பிறகு ஆயிரமாவது மலரைக் காணவில்லை என்பதால் தனது விழியை எடுத்து ஆயிரமாவது மலராக சிவவனுக்குப் படைத்தார். இதனால் ஈசனுக்கு விழியழகன் என்ற பெயர் உண்டாயிற்று. விஷ்ணுவின் பக்தியைகங்கண்டு மெச்சிய சிவபெருமான் ஜலந்தரனிடம் இருந்து சக்ராயுதத்தை மீட்டு அதே சக்ராயுதத்தால் சலந்திரனை வதம் செய்தார். பின்பு சக்ராயுதத்தை திருமாலிடம் கொடுத்தார்.
தொடரும் கண்மலர் காணிக்கை
திருவீழிமிழலை சிவன் கோவிலில் கண் நோய்களால் பாதிப்புறும் பக்தர்கள் கண்மலர்களைக் காணிக்கையாக வழங்கும் பழக்கம் தொடர்கின்றது. பௌத்தக் கோயிலாக இருந்து வைதீகக் கோயிலாக மாறிய பிறகும் பக்தர்கள் சில வழிபாட்டு முறைகளை விட்டுவிடாமல் தொடர்கின்றனர்.
இங்குக் கண்மலர் காணிக்கை அளிப்பது போல் வேறு வைதிக சிவன் கோயில்களில்அளிப்பது கிடையாது. ( தனி அம்மன் கோயில்களில் உண்டு). திருவஹிந்திரபுரம் பெருமாள் கோவிலில் தீர்த்தக் கிணற்றில் தோல் நோய் குணமடைய பக்தர்கள் உப்பும் மிளகும் வெல்லமும் தூவுகின்றனர்.
இதுவும் பழைய புத்தமத சம்பிரதாயங்களில் ஒன்றாகும். இது போன்ற நடைமுறைகள் ஒரு சில வைதீக கோயில்களில் இன்னும் தொடர்கின்றன.
நேர்த்திக்கடன்
திருவீழிமிழலை சிவன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அம்மனுக்கும் இறைவனுக்கும் திருமுழுக்காட்டு என்னும் அபிஷேகம் செய்து இருவருக்கும் புதிய வஸ்திரம் சாந்தி வழிபடுகின்றனர். இவ் வழிபாட்டு முறை இக்கோவிலின் தனிச்சிறப்பு ஆகும்.
திருமணத்தடை உள்ளவர்கள் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கல்வியில் தொழிலில் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் என்ற எண்ணம் உள்ளவர்கள் இக்கோவிலுக்கு வந்து சாமிக்கு அபிஷேகம் செய்து வஸ்திரமும் படைத்து சகல நன்மைகளும் பெறலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |