2025 நரசிம்ம ஜெயந்தி: துன்பங்கள் விலக இந்த முறையில் வழிபாடு செய்யுங்கள்
விஷ்ணு அவதாரங்களில் ஒரே நாளில் தோன்றி மறைந்த அவதாரம் என்றால் அது நரசிம்ம அவதாரம் தான். தனது பக்தனான பிரகலாதனை, அவனின் தந்தையான ஹிரண்யகசிபுவின் கொடுமையில் இருந்து காப்பாற்றுவதற்காக எடுத்த அவதாரம் தான் நரசிம்மர் அவதாரம்.
நரசிம்மர் வலிமையின் வெளிச்சமாக இருக்கிறார். அப்படியாக, நரசிம்மர் தோன்றிய நாள் அன்று நரசிம்மர் அவதாரமாக கொண்டாடப்படுகிறது. அதாவது, வைசாக மாதம் சுக்லபட்ச சதுர்த்தசி நரசிம்ம ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.
தனது பக்தனின் துயர் நிலையை துடைக்க பாதி சிங்கம் பாதி மனித உருவத்தில் நரசிம்மராக தோன்றினார் மகாவிஷ்ணு. இந்த ஆண்டு நரசிம்ம ஜெயந்தி மே 11 அன்று கொண்டாடப்படுகிறது. சதுர்த்தசி திதி மே 10 மாலை 5:29 மணிக்கு தொடங்கி, மே 11 இரவு 8:01 மணிக்கு முடிவடைகிறது.
இந்த விஷேச நாளில் எதிரிகள் தொல்லையால் அவதி படுபவர்கள், தீராத துன்பத்தால் கவலை கொள்பவர்கள் நரசிம்ம ஜெயந்தி அன்று இந்த முறையில் வழிபாடு செய்தால் அவர்களுக்கு நரசிம்மர் அருளால் வாழ்க்கையில் நல்ல மாற்றம் கிடைக்கும்.
நரசிம்ம ஜெயந்தி வழிபாட்டு முறை:
நரசிம்ம ஜெயந்தி விரதம் ஏகாதசி விரதம் போலவே கடைப்பிடிக்கப்படுகிறது. மாலையில் தான் நரசிம்மரை வழிபாடு செய்யவேண்டும். வழிபாடு செய்யும் பொழுது வீட்டின் வடகிழக்கு மூலையை சுத்தம் செய்து ஒரு மர மேடையில் சிவப்பு, வெள்ளை அல்லது மஞ்சள் துணியை விரித்துக்கொள்ள வேண்டும்.
அதில் நரசிம்மர் மற்றும் லட்சுமி தேவியின் படங்கள் அல்லது சிலைகளை வைக்க வேண்டும். பிறகு கிழக்கு திசையை பார்த்து அமர்ந்தபடி பூஜைகளை செய்யவேண்டும். நரசிம்மருக்கு நெய்வேத்தியமாக பஞ்சாமிர்தம் பழங்கள், பூக்கள், உலர் பழங்கள், குங்குமப்பூ, குங்குமம், அரிசி, தேங்காய் மற்றும் மஞ்சள் துணி போன்றவற்றை வைத்து வழிபாடு செய்யவேண்டும்.
பிறகு நெய் விளக்கு ஏற்றி "ஓம் நரசிம்மாய வரப்ரதாய நமஹ" என்ற மந்திரத்தை உச்சரித்து வழிபாடு செய்யவேண்டும். இவ்வாறு நரசிம்மர் விரதத்தை முறையாக கடைப்பிடித்து வழிபாடு செய்யும் பொழுது நம் வாழ்க்கையில் உண்டான சிக்கல்கள் மற்றும் சட்ட பிரச்சனைகள் எல்லாம் விலகும்.
அதோடு வீட்டில் இருந்த பில்லி சூனியம் ஏவல் போன்ற பாதிப்புகள் இருந்தாலும் அவை நம்மை விட்டு அகலும் என்பது நம்பிக்கை. சிலர் தீராத பிரச்சனையால் மன வலிமை இழந்து காணப்படுவார்கள் அவர்கள் இந்த நரசிம்மர் விரதத்தை கடைப்பிடித்து வழிபாடு செய்யும் பொழுது மனதில் தெளிவும் தைரியமும் பிறக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |