வீட்டிலேயே பங்குனி உத்திரம் வழிபாடு செய்பவர்கள் பின்பற்ற வேண்டியவை
பல்வேறு ஆன்மீக விசேஷங்கள் கொண்ட பங்குனி மாதத்தில் உத்திரம் நட்சத்திரத்தில் வரும் இந்த பங்குனி உத்திரமானது இறை வழிபாட்டிற்கு உகந்த மாதமாகும். இன்றைய தினம் பலரும் அவர்களின் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வார்கள்.
மேலும், பங்குனி உத்திரம் கலியுக வரதன் முருகப்பெருமான் வழிபாட்டிற்குரிய முக்கிய தினம் ஆகும். ஆக, பலரும் முருகன் ஆலயம் சென்று வழிபாடு செய்வார்கள், கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்தே முருகப்பெருமானுக்கு வழிபாடு மேற்கொள்வார்கள்.
அவ்வாறு வீட்டில் இருந்தே முருகப்பெருமானுக்கு வழிபாடு செய்பவர்கள் செய்யவேண்டிய முக்கியமான விஷயங்களை பற்றி பார்ப்போம்.
முருகப்பெருமானுக்கு ஆறு என்ற எண் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டது. அதாவது முருகப்பெருமானை வளர்த்த கார்த்திகை பெண்களும் ஆறு, முருகப்பெருமானின் ஆறுபடை வீடும் ஆறு.
ஆக, எப்பொழுதும் முருகப்பெருமானை வழிபாடு செய்யும் பொழுது 6 என்ற எண் கொண்டு விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது மிக சிறந்த பலன் கொடுக்கும். ஆனால், அந்த 6 விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய சில விதிமுறைகள் இருக்கிறது.
அவ்வாறு செய்யும் பொழுது தான் நாம் முருகப்பெருமானின் முழு அருளையும் பெற முடியும் என்கிறார்கள். இந்த விளக்கு ஏற்ற முதலில் பித்தளை தட்டு அல்லது வாழை இலை, சிறிதளவு பச்சரிசி மற்றும் சிறிதளவு துவரம்பருப்பு ஆகிய மூன்று பொருட்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பித்தளை தட்டு அல்லது வாழை இலையில் துவரம்பருப்பு மற்றும் பச்சரிசியைப் பரப்பி அதில் நம்முடைய மோதிர விரலால் நட்சத்திர கோலம் போடவேண்டும். அதன் மேல் ஆறு விளக்கைச் சுற்றி வைத்து, நெய் ஊற்றி வழிபட வேண்டும்.
நெய் ஊற்றி விளக்கேற்ற முடியவில்லையென்றால் சுத்தமான நல்லெண்ணெய் ஊற்றி வழிபடலாம். இந்த வழிபாட்டை இன்று காலை காலை 11 மணி முதல் 12 மணிக்குள் ஏற்றுவது உகந்த நேரம் ஆகும். இவ்வாறு வழிபாடு செய்யும் பொழுது நாம் முருகப்பெருமானின் முழு அருளையும் பெறலாம்.
அதுவும், இந்த வழிபாட்டை பங்குனி உத்திரம் நாளில் செய்யும் பொழுது நமக்கு இன்னும் கூடுதல் பலன் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |