காசி, ராமேஸ்வரத்திற்கு இணையான மற்றொரு புனித தீர்த்தம் எங்கு இருக்கிறது தெரியுமா?
இந்து மதத்தில் காசி ராமேஸ்வரம் மிகவும் புனித தலங்களாக பார்க்கப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் காசி ராமேஸ்வரத்தில் உள்ள தீர்த்தம் இந்துக்களின் மிகவும் புனித தீர்த்தமாக போற்றி வழிபாடு செய்யப்படுகிறது.
அப்படியாக, அந்த புனித தீர்த்தங்களுக்கு இணையாக மற்றோரு தீர்த்தம் இருக்கிறது. அதை பற்றி பார்ப்போம். உலகத்தில் தோன்றிய முதல் சிவன் கோயில் என்ற பெருமையை கொண்டது ராமநாதபுரம் அருகே உள்ள உத்திரகோசமங்கை அருள்மிகு மங்களேஸ்வரி அம்மன் உடனுறை மங்களநாதர் திருக்கோயில்.
இந்த கோயில் சுமார் ஆயிரத்து 100 ஆண்டுகள் பழைமையான கோயில் என்று சொல்லப்படுகிறது. இந்த கோயிலை ஆதி சிதம்பரம் என்றும் அழைப்பார்கள். இங்கு ஒவ்வொரு வருடமும் ஆருத்ரா தரிசனம் மிகவும் சிறப்பாக நடைபெறும்.
இப்படி, பல்வேறு அதிசியங்கள் நிறைந்த இக்கோயிலில் பல நூற்றாண்டுகளாக வற்றாமல் ஒரு தீர்த்தம் இருக்கிறது. அதாவது இந்த கோயில் அமைய பெற்று இருக்கும் பகுதியில் ஆதிகங்கை என்ற அக்னி தீர்த்த தெப்பக்குளம் இருக்கிறது.
மேலும், சிவனின் திருவிளையாடல் புராணத்தில் வரும், வலைவீசும் படலத்தில் சாபத்தால் மீனவப் பெண்ணாக இருந்த பார்வதி தேவியை சிவபெருமான் வலை வீசி மீன் (திமிங்கலம்) பிடித்து, மனதில் புகுந்து ஆட்கொண்ட நிகழ்வு நடந்த திருத்தலம் இந்த உத்திரகோசை மங்கை திருத்தலம் தான் என்று புராணங்கள் சொல்கிறது.
அந்த வகையில், இங்கு கடல் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. அதில் இப்பொழுது மழை தண்ணீருடன், கடல் தண்ணீர் நிறைந்த தெப்பக்குளம் இன்றும் இங்குள்ளது. பொதுவாக, கோயில் தெப்பக்குளங்களில் நல்ல தண்ணீர் இருப்பது வழக்கம். ஆனால் இங்கு கடலில் உள்ள உப்புத் தன்மையுடன் கூடிய உப்புத் தண்ணீரே உள்ளது.
எவ்வளவு கடும் மழை பெய்து குளம் பெருகினாலும் தண்ணீர் உப்பு தன்மையுடனேயே இருக்கிறது. இன்னொரு முக்கிய சிறப்பம்சமாக இங்குள்ள தெப்பக்குளத்து கரையில் அமைந்துள்ள 3,100 ஆண்டு பழைமையான இலந்தை மரத்தடியில் சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரான திருவாசகத்தை இயற்றிய மாணிக்கவாசகர் உள்ளிட்ட 1000 முனிவர்கள் தவம் இருந்தனர்.
அப்போது குளத்தில் அக்னி பிழம்பாக சிவபெருமான் தோன்றியதாகவும், அதில் மாணிக்கவாசகரைத் தவிர்த்து மற்ற 999 முனிவர்களும் தீயில் சேர்ந்து, சிவபெருமானுடன் முக்தியடைந்ததால் ஆதிகங்கை, அக்னி தீர்த்தமாக மாறியதாக தல புராணம் கூறுகிறது.
இவ்வளவு அற்புதங்களும் அதிசயங்களும் நிறைந்த இந்தத் தெப்பக்குளம் ராமேஸ்வரம் மற்றும் காசிக்கு நிகரான புனிதமான தீர்த்தமாக கருதப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவமழை இல்லாமல் வறண்டு போகும் சூழல் கூட உருவாகும்.
ஏன் சில ஆண்டுகள் தொடர் வறட்சியும் ஏற்பட்டது. அவ்வளவு இக்கட்டான வறட்சியிலும் தண்ணீர் வற்றி கண்ணப்படுமே தவிர்த்துஒருமுறை கூட இக்குளத்து தண்ணீர் முழுமையாக வற்றியது கிடையாது என்கின்றனர். அதோடு இந்தத் தெப்பக்குளத்தில் வாழக்கூடிய மீன்கள், நல்ல தண்ணீர் மற்றும் கடலில் வாழும் தன்மை கொண்டதாக இருப்பது ஆச்சரியத்தைத் தருகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |