புரட்டாசி சனி பிரதோஷ வழிபாடு: இந்த விஷயம் செய்ய தவறாதீர்கள்
புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாட்டிற்குரிய மிக சிறந்த மாதமும். அதிலும் புரட்டாசி சனிக்கிழமை பல விசேஷங்கள் நிறைந்தது. அப்படியாக நாளை புரட்டாசி சனிக்கிழமையோடு சேர்ந்து பிரதோஷம் வர இருப்பதால் நாளை இரட்டிப்பு பலனை கொடுக்க கூடிய ஒரு விசேஷமான நாளாக அமைகிறது. அந்த வகையில் நாளை புரட்டாசி சனிக்கிழமை எவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும்? அந்த நாளின் சிறப்பு என்னவென்று பார்ப்போம்.
மனிதர்கள் வாழ்வில் பல நிலைகளைக் கடந்து பல விஷயங்களை கற்றுக் கொள்வதாக அமைகிறது. அப்படியாக சில நேரங்களில் பஞ்ச மகா பாவங்கள் அதாவது நம்முடைய சக்தியை மீறி ஒரு சில பாவங்கள் செய்ய நேர்கிறது.
அவ்வாறு செய்த பாவங்களிலிருந்து அவர்கள் விடுபட இந்த புரட்டாசி சனிக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய பிரதோஷ நாளை பயன்படுத்தி அவர்கள் வழிபாடு செய்தார்கள் என்றால் அவர்களுடைய பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை. அப்படியாக பஞ்ச மகா பாவங்கள் என்றால் என்ன? புரட்டாசி சனி பிரதோஷ நாளில் நாம் என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
பஞ்ச மகா பாவங்கள் :
1. பிரம்மஹத்தி:
ஒரு பிராமணரை கொலை செய்வது. அவர்களை ஏமாற்றுவது. ஒருவரின் அறியாமையாலும் ஆணவத்தாலும் ஒரு நபருடைய ஆன்மீக வாழ்வை ஆன்மீக புத்தகங்களை அழிப்பது போன்ற செயல்களை இவை குறிக்கிறது.
2. சுவர்ணஸ்தேயம்:
ஒருவர் அறியாமையின் காரணத்தால் தங்கத்தை திருடுவது. அதோடு ஆலயங்களில் இருக்கக்கூடிய பொக்கிஷங்கள் அல்லது ஒருவர் தர்ம காரியங்களுக்காக வைத்திருக்கக்கூடிய பொருட்களை திருடுவது போன்ற செயல்கள் செய்வதால் வரக்கூடிய பாவங்கள் ஆகும்.
3. சுராபானம்:
மனிதன் மது அருந்திவிட்டு அந்த மதுவின் போதையால் அவனை அறியாமல் செய்யக்கூடிய பாவங்கள் ஆகும்.
4. குரு துரோகம்:
நமக்கு ஏதேனும் ஒரு புதிய விஷயத்தை கற்றுக் கொடுப்பவர்கள் தான் நம்முடைய குரு. அப்படியான குருவை அவமதிப்பு செய்து, குரு நம்மிடம் ஏதேனும் ஒரு விஷயத்தை சொல்லி பகிர்ந்து கொள்ள கூடாது என்று சொல்லிய சத்தியத்தை மீறுவது அவர்களுக்கு துரோகம் செய்வதால் வரக்கூடிய பாவங்களாகும்.
5. இவர்களுக்குத் துணை போவது:
மேற்கண்ட நான்கு பாவங்களும் ஒவ்வொரு மனிதனும் தனியாக செய்யக்கூடிய பாவங்களாக இருக்கிறது. அப்படியாக இவர்கள் செய்யக்கூடிய பாவங்களில் யாரேனும் துணை செய்கிறார்கள் என்றாலும் அவர்களுக்கும் அந்த பாவம் சேர்கிறது.
இவ்வாறு மனிதன் ஏதேனும் ஒரு கால சூழ்நிலையில் அவனை அறியாமல் செய்யக்கூடிய பாவங்களில் இருந்து விமோசனம் பெறுவதற்கு இந்த புரட்டாசியில் வரக்கூடிய சனி பிரதோஷத்தில் சிவபெருமானையும் சனி பகவானையும் பெருமாளையும் வழிபாடு செய்தால் அவர்களுடைய பாவங்களுக்கு கிடைக்கக்கூடிய தண்டனையும் பாவங்களையும் மன்னித்து அருள் புரிவார்கள் என்பது நம்பிக்கை.
இந்த நாளில் அதிகாலை எழுந்து குளித்து சிவபெருமான் ஆலயம் சென்று முதலில் நந்தி பகவானை வழிபாடு செய்து பிறகு சிவபெருமானிடம்சரண் அடைந்து தான் தெரியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் விலகி தனக்கு மோட்சம் அருள வேண்டும் என்று மண்டையிட்டு வேண்ட அவருடைய கடைக்கண் பார்வை நமக்கு கிடைக்கும்.
பிறகு சனி பகவான் சன்னதிக்கு சென்று எள் தீபம் ஏற்றி சிவபெருமானுடைய பஞ்சாட்சர மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். அதாவது "ஓம் நமசிவாய" எனும் மந்திரத்தை அமைதியாக உச்சரித்து இறைவனே தெரிந்தும் தெரியாமலும், அறிந்தும் அறியாமலும் கால சூழ்நிலையால் சில கர்ம வினையின் காரணங்களால் ஒரு உயிரை நான் துன்புறுத்தி விட்டேன்.
அந்தப் பாவங்கள் நீங்கி எனக்கு நல்வாழ்வு அருள வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும். சனி பிரதோஷத்தில் ஈசனையும் சனீஸ்வரனையும் வழிபடுபவர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் உண்டாகும்.
முடிந்தவர்கள் இந்த நாளில் அன்னதானம் செய்யலாம். பிறருடைய பசியை, பிறருடைய வலியை போக்கக்கூடிய அவர்களுக்கு உதவியாக இருக்க கூடிய எந்த ஒரு நல்ல காரியங்களையும் இந்த நாளில் செய்யும் பொழுது நமக்கு இறைவனுடைய பரிபூரண அருள் கிடைத்து நம்முடைய பாவங்கள் விலகுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







