தொட்டது எல்லாம் வெற்றியாகும் நேரம் எது தெரியுமா?
இலங்கை வேந்தன் ராவணனின் மனைவி மண்டோதரி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள்.
எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என்ற நிலையில் ராவணன் அசுர குருவான சுக்ராச்சாரியாரை சந்தித்தான். ‘யாராலும் வெல்ல முடியாத வீரமும் அழகும் கொண்டவனாக எனது மகன் இருக்க வேண்டும்.
அதற்கு என்ன செய்ய வேண்டும்?’ என யோசனை கேட்டான். ‘கிரகங்கள் அனைத்தும் ஒரே ராசியில் இருக்கும் நேரத்தில் பிறந்தால் எல்லா சிறப்பும் கொண்டதாக குழந்தை இருப்பான்’ என்றார் சுக்ராச்சாரியார்.
உடனே வானில் சுழலும் கிரகங்கள் அனைத்தையும் பிடித்து சிறையில் அடைத்தான் ராவணன். ஒரே அறையில் இருந்த கிரகங்கள் செய்வதறியாமல் சிரமத்துக்கு ஆளாயினர்.
மேலும், ராவணனுக்கு யோசனை கூறிய சுக்ராச்சாரியரை கடிந்து கொண்டனர். ‘நாங்கள் அனைவரும் ஓரிடத்தில் இருப்பதால் உலக இயக்கம் தடைபடுமே’ என்று வருந்தினர். அதேநேரத்தில், மண்டோதரிக்கு பிரசவ வலி ஏற்பட்டாலும் குழந்தை பிறக்கவில்லை.
இந்த செய்தி கிரகங்களின் காதுக்கு எட்டியதும், அதற்கும் தாங்களே காரணம் என்று ராவணன் தண்டிப்பானோ என்ற பயத்தில் ஆழ்ந்தனர்.
அப்போது சனீஸ்வரர் சுக்ராச்சாரியாரிடம், ‘இந்த சிக்கலில் இருந்து விடுபட வேண்டுமானால் கிரகங்களுக்கு இணையான ஒரு புதியவனை சிருஷ்டிக்க வேண்டும்.
அவன் உருவாகும் அதே நேரத்தில் மண்டோதரிக்கு சுகப்பிரசவம் நடந்தால் எல்லாம் நன்மையாக நடக்கும்’ என்றார். அதையடுத்து, சிறையில் இருந்தபடியே சனீஸ்வரர் விசேஷ ஆற்றலை வெளிப்படுத்தி தனது மனைவி ஜேஷ்டா தேவிக்கு ஒரு மகன் பிறக்கும்படி செய்தார்.
அவனுக்கு, ‘குளிகன்’ எனப் பெயரிட்டனர். குளிகன் பிறந்த நேரத்தில் மண்டோதரிக்கும் அழகான ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவன் மாவீரனாக திகழ்வான் என்பதை உணர்த்தும் வகையில் இடியும் மின்னலுடன் பெரும் மழை பெய்தது. அதனால் அவனுக்கு, ‘மேகநாதன்’ என பெயரிட்டான்ராவணன்.
இளமைப் பருவத்தில் மேகநாதன் தவப்பலத்தால் பிரம்மாவிடம் இருந்து பல அபூர்வ அஸ்திரங்களை பெற்று இந்திரனையே வென்றதால் இந்திரஜித் எனப் பெயர் பெற்றான்.
இந்திரஜித், குளிகன் இருவரும் பிறந்தசுப நேரமே குளிகை எனப்படுகிறது. ராவணனிடம் இருந்து விடுவிக்க செய்ததால் நவகிரகங்கள் குளிகனை பாராட்டினர்.
தினம் பகலும் இரவிலும் ஒரு நாழிகை நேரம் குளிகனுக்காக ஒதுக்கிக் கொடுத்தனர். அந்த நேரத்தை, ‘காரிய விருத்தி நேரம்’ என்றும், இதில் தொடங்கும் நல்ல செயல்களால் குடும்பமே செழிக்கும் என்றும் ஆசியளித்தார். சுக்ராச்சாரியர், ’குளிர்ந்த தன்மையை கொண்ட இவன் ஒவ்வொரு நாளிலும் நல்ல செயல்களை நடத்துவதற்காகவே உருவாக்கப்பட்டவன்.
சனிக்கிழமையில் மாலை நேரத்தில் குளிகனை வழிபடுவது சிறப்பு. சனீஸ்வரனை வழிபடும்போது குளிகனையும் மனதில் நினைக்க வேண்டும்’ என்றார். குளிகை நேரத்தில் செய்யும் செயல் திரும்பத் தொடரும் என்பதால் இறப்பு சடங்குகள் உள்ளிட்ட அசுப நிகழ்ச்சிகளை இந்த நேரத்தில் நடத்தக் கூடாது.
குளிகை நேரத்தில் நல்லதை செய்தால் தொட்டது தொடங்கும்.
இனி, வார நாட்களில் குளிகை நேரத்தைக் காண்போம்.
ஞாயிற்றுக்கிழமை: பிற்பகல் 3 முதல் 4.30 மணி வரை.
திங்கட்கிழமை: பிற்பகல் 1.30 முதல் 3 மணி வரை.
செவ்வாய்க்கிழமை: பகல் 12 முதல் 1.30 மணி வரை.
புதன்கிழமை: காலை 10.30 முதல் 12 மணி வரை.
வியாழக்கிழமை: காலை 9 முதல் 10.30 மணி வரை.
வெள்ளிக்கிழமை: காலை 7.30 முதல் 9 மணி வரை.
சனிக்கிழமை: காலை 6 முதல் 7.30 மணி வரை.
இந்த நேரங்களில் நாம் எந்த சுப காரியங்கள் செய்தாலும், வீடு மற்றும் நகை வாங்கினாலும் அது மென்மேலும் பெருகி வாழ்க்கையில் இன்பம் பயக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |