சபரிமலைக்கு முதல் முறை மாலை அணிபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
கார்த்திகை மாதம் ஐயப்பனுக்கு மாலை அணிய உகந்த மாதம் ஆகும்.ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை முதல் நாளிலே மாலை அணிய தொடங்குவார்கள்.அப்படியாக இந்த வருடம் முதல் முறை மாலை அணியவேண்டும் என்று நினைத்தவர்களுக்கு பல சந்தேகம் உருவாகும்.
நாம் இப்பொழுது முதல் முறை மாலை அணியும் ஐயப்ப பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் மற்றும் விரதம் இருக்கும் முறை பற்றி பார்ப்போம்.
ஐயப்பனுக்கு முதல் முறை மாலை அணிபவர்களை கன்னி சாமி என்று அழைப்பார்கள்.அவர்கள் மாலை அணியும் முன் வீட்டில் பெரியவர்களிடம் அனுமதி பெற்று ஒரு குருசாமியை ஆலோசித்து பின் தான் மாலை அணிய வேண்டும்.
மாலை அணியும் பொழுது உறுதியான கம்பியால் செய்யப்பட்ட துளசி மணி மாலையை வாங்கி, காய்ச்சாத பசும்பாலில் ஒரு நாள் முழுவதும் போட்டு வைத்து, பிறகு அதை எடுத்து சுத்தமான நீரில் கழுவி நன்கு துடைத்த பிறகு வீட்டில் உள்ள ஐயப்பன் படத்திற்கு அல்லது சுவாமி படத்தில் மாட்டி வைக்க வேண்டும்.
பிறகு மாலை அணியும் நாளில் அதை எடுத்துச் சென்று கோவிலில் சாமி பாதத்தில் வைத்து குருசாமி முன் மண்டியிட்டு, மாலை அணிந்து கொள்ள வேண்டும். குருசாமி இல்லாத பட்சத்தில் தாயையே கடவுளாக நினைத்து அவரிடம் மண்டியிட்டு மாலை அணிந்து கொள்ளலாம்.
இருந்தாலும் ஒரு குருசாமியின் ஆலோசனை கிடைப்பது அவர்கள் விரதம் மேற்கொள்ள அவர்களை வழிநடத்த வாய்ப்பாக இருக்கும். முதல் முறை மாலை அணியும் கணிசாமிகள் கருப்பு நிற உடை தான் அணியவேண்டும்.அவர்கள் காலில் செருப்பு அணியக்கூடாது.
அலுவலகம் செல்லுபவர்கள் தவிர்க்க முடியாத சூள்நிலை ஏற்பட்டால் அவர்கள் மட்டும் அணிந்து கொள்ளலாம். கட்டாயம் மாலை அணிந்தவர்கள் காலை, மாலை இருவேளையும் குளித்து விட்டு ஐயப்பனுக்கு பூஜை செய்து வழிபட்ட பிறகே உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
எளிமையான உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். கசப்பான பாகற்காய், அகத்திக்கீரை, வாழைக்காய் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது.
மேலும் மிக முக்கியமாக மாலை அணிந்தவர்கள் தனியாக ஒரு விரிப்பு விரித்து தரையிலேயே படுத்து உறங்க வேண்டும்.அவர்கள் உடுத்தும் துணிகளை அவர்கள் தான் துவைக்க வேண்டும்.
மாலை அணிந்தவர்கள் தங்களை அழகுபடுத்திக்கொள்ளும் எந்த விஷயத்திலும் ஈடுபடக்கூடாது.அதாவது முடி வெட்டுவது, முக சவரம் செய்வது, நகம் வெட்டுவது போன்றவற்றை செய்யக் கூடாது.
அவர்கள் முக்கியமாக எந்த ஒரு துக்க நிகழ்ச்சி மற்றும் தீட்டு வீட்டிற்கு செல்ல கூடாது.தவிர்க்க முடியாத சூழ்நிலையால் அவர்கள் செல்ல வேண்டும் என்றால் மாலையை கழட்டி வைத்து செல்லலாம்.அவ்வாறு ஒரு முறை மாலை கழட்டும் சூழல் ஏற்பட்டால் அவர்கள் மீண்டும் அடுத்த ஆண்டு தான் மாலை அணிந்து கொள்ள முடியும்.
விரதம் இருக்கும் காலங்களில் ஏதாவது ஒரு நாள் வீட்டில் ஐயப்ப பூஜை நடத்தி, ஐயப்ப சாமிகளை அழைத்து அன்னதானமும் வழங்க வேண்டும். மாலை அணிந்தவர்கள் எல்லோரும் ஐயப்பனாக கருதி அவர்களை சாமி என்று தான் அழைக்க வேண்டும்.
வீட்டில் உள்ள பெண்களுக்கு மாதவிடாய் காலம் ஏற்பட்டால் அவர்கள் சமைக்கும் உணவுகளை சாப்பிட கூடாது.முடிந்தால் பெண்கள் அந்த கால கட்டங்களில் தனி அறை இருந்தால் அவர்கள் அதில் தங்கி கொள்ளலாம்.
மாலை கழற்றும் முறை
மாலை அணையும் பொழுது எவ்வாறு விஷயங்களை கடைபிடிகின்றமோ அதே போல் மாலை கழட்டும் பொழுதும் அவர்கள் சில முக்கியமான விஷயங்கள் கடைபிடிக்க வேண்டும்.அதாவது மலைக்கு சென்று விட்டு, மீண்டும் வீட்டிற்கு திரும்பிய பிறகு கோவிலுக்கு சென்று அல்லது வீட்டில் தாயின் கைகளாலேயே மாலையை கழற்றி வேண்டும்.
கழற்றிய மாலையை மீண்டும் பாலில் போட்டு ஒருநாள் வைத்திருந்த பிறகு, அதை கழுவி சுத்தம் செய்து, துடைத்து பத்திரமாக வைத்திருந்து, அடுத்த ஆண்டு பயன்படுத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் புதிய மாலை வாங்கி அணிய வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. ஒரு மாலையை எத்தனை முறை வேண்டுமானாலும் அணியலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |