ஸ்ரீ ரங்கம் பெருமாளுக்கு உடம்பு சரியில்லாமல் போன கதை தெரியுமா
சுற்றும் உலகத்தை அறிந்து, தன்னுள் வைத்திருப்பவர் தான் பெருமாள். நடக்கும் செயல் ஒவ்வொன்றுக்கும் பெருமாள் அவரே சாட்சி. அப்படியாக, ஒருமுறை ஸ்ரீ ரங்கனுக்கு உடல்நிலை சரி இல்லாமல் போனது.
அவரை பார்க்க சென்ற ராமானுஜர், பெருமாள் தைல காப்பு சாத்தி இருப்பதை பார்த்து கவலை கொண்டார். என்ன காரணத்தினால் பெரிய பெருமாள் துணியால் போர்த்தி படுத்து இருக்கிறார் என்று தெரியவில்லையே. உடம்புக்கு ஏதேனும் சௌகரியம் இல்லையோ என்று குழப்பி கொண்டு இருந்தார்.
உண்மையான பக்தியின் கண்களுக்கு சிலையில் உயிருடன் பெருமாள் தெரிவார். மற்றவருக்கு அது வெறும் கல் தானே. ராமானுஜரின் பதட்டம் எப்படி புரியும். ஸ்ரீ ராமானுஜர் மனம் பொறுத்து கொள்ளாமல், பெரிய பெருமாளை பார்த்து, ஏன், என்னாயிற்று உடம்பு சரி இல்லையோ என்று கேட்டு விட்டார்.
ஒவ்வொரு பக்தனின் மனோபாவத்துக்கு ஏற்று, பெருமாள் பழகுவார் அல்லவா? அவரே பேசுகிறார். ஆமாம், கொஞ்சம் சரி இல்லை தான் என்றார் பெரிய பெருமாள். "ஏன் இப்படி ஆனது?" என்று ஸ்ரீ ராமானுஜர் கேட்கிறார்.
பெரிய பெருமாளும், எனக்கு தயிர் சாதத்துடன், நெல்லிக்காயை வைத்து நிவேதனம் செய்து விட்டார்கள். நானும் பக்தன் அன்போடு கொடுத்தது அல்லவா? சாப்பிட்டு விட்டேன். அதனால், உடம்புக்கு கொஞ்சம் ஒத்துக்காமல் ஆகி விட்டது. ஜுரம் வந்து விட்டது" என்றாராம் பெரிய பெருமாள்.
அதாவது, ஸ்ரீ ரங்கராஜ்யம் நடத்தும் பெரிய பெருமாளுக்கு, தன் ரங்க ராஜ்யத்தில் அரச மருத்துவன் இல்லை என்று எண்ணி ராமானுஜர் மனதில் இப்படி ஒரு விஷயம் போட்டு வைக்கின்றாராம். ராமானுஜருக்கு பெரிய பெருமாள் தனுக்கு உடல் நிலை சரி இல்லை என்று சொல்லியதை கேட்டு மனம் பொறுக்காமல் கண்ணீர் வடித்து விட்டாராம்.
தாங்கள் ஒரு உடல் உள்ளவர் என்றால் மருத்துவரை கூட்டி வருவேன், உங்களுடைய அப்ராக்ருத திவ்ய சரீரத்துக்கு எந்த மருத்துவரை அழைத்து வந்து வைத்தியம் பார்ப்பேன் என்று கண்ணீர் விடுகிறார். ராமானுஜரை பார்த்து பெரிய பெருமாள், நமக்கு தான் மருத்துவர் இருக்கிறாரே என்றாராம்.
அப்படி என்றால், அவர் யார் என்று தாங்கள் தான் சொல்ல வேண்டும் எண்டு பெரிய பெருமாளை பார்த்து கேட்கிறார் ராமானுஜர்.பெரிய பெருமாளும், நம் சன்னதியில், தன்வந்திரி'யை பிரதிஷ்டை செய்யும். அவர் என்னை அடிக்கடி பார்த்துக்கொள்வார்" என்று பெரிய பெருமாள் சொன்னார்.
அப்படியாக, அன்றைய தினம் முதல் ரங்கனுக்கு என்ன பதார்த்தங்கள் தயார் செய்தாலும், அது ரங்கன் உடலுக்கு ஏற்பதாக இருக்குமா என்று தன்வந்திரி எதிரில் வைத்து, அவர் அனுமதித்த பின் தான், பெரிய பெருமாள் நிவேதனம் செய்வாராம்.
மேலும், தன்வந்திரி அனுமதித்த பதார்த்தங்களை மட்டும் தான், பெரிய பெருமாளுக்கு கொடுத்து வருகிறார்கள். இப்படி ஒரு முக்கியத்துவத்தை தன்வந்திரிக்கு பெரிய பெருமாள் கொடுத்துவிட்டார்.
அதாவது தன்வந்திரியின் பெருமையை உணர்த்தவும், ஸ்ரீ ராமானுஜரின் பக்தியை வெளிப்படுத்தவும் ரங்கன் செய்த ரசிக்கதக்க லீலை இது. அதோடு, தனக்கு மருத்துவன் என்று ரங்கன் வைத்திருக்கும் தன்வந்திரியும் அவர் தானே.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |