கிளியினால் கண்டுபிடிக்கப்பட்ட இந்தியாவின் மிக முக்கியமான கோயில் எது தெரியுமா?
திருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோயில் 108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மை திருத்தலமாக திகழ்கிறது. சோழ நாட்டு திருப்பதிகளில் முதன்மை தலமாக திகழும் திருவரங்கம் கோயிலானது பூலோக வைகுண்டம் என அழைக்கப்படுகிறது.
காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்ட தீவில், ஏழு சுற்று மதில்களுக்குள் திருவரங்கம் அரங்கநாத கோயில் அமைந்துள்ளது. திருமண பாக்கியம், குழந்தை வரம், கல்வி, ஞானம், தொழில் விருத்தி, செல்வம் எனக் கேட்ட அனைத்து வரங்களையும் அருளும் ரங்கநாதப் பெருமான் கோயிலை குறித்து முழுமையாக தெரிந்துகொள்ளலாம்.
தல அமைவிடம்:
அருள்மிகு திருவரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருச்சியில் இருந்து 7.9 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள இந்த கோயிலுக்கு செல்வதற்கு திருச்சியில் இருந்து ஏராளமான பேருந்து வசதி உள்ளது. திருச்சி வழியாக செல்லும் ரயில்களும் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்கின்றன.
தல அமைப்பு:
ஏறத்தாழ 156 ஏக்கர் பரப்பளவில் நாட்டிலேயே மிகப்பெரிய கோயில்களில் ஒன்றாக திகழ்கிறது. வெளிப்புறச் சுற்று மதிலின் அளவு 950 x 816 மீட்டர். ஒன்றுக்குள் ஒன்றாக ஏழு சுற்று மதில்கள் அமைக்கப்பட்டுள்ளன. மையப் பகுதியில் அரங்கநாதசுவாமி கோயில் உள்ளது. திருவரங்கம் கோயில் தெற்கு நோக்கிய வண்ணம் அமைந்துள்ளது.
அரங்கநாதரின் கருவறை விமானம் நீள்வட்ட வடிவில் தங்கத்தால் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் நான்கு திசைகளில் இருந்தும் வெளிப்புறம் நோக்கிச் செல்லும் வகையில் சுற்று மதில்களில் ஒரே வரிசையில் கோபுர வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இராசகோபுரத்தோடு கூடிய பிரதான வாயில் தென் புரத்தில் அமைந்துள்ளது. ஸ்ரீரங்கத்தில் ஓடும் காவிரி ஆற்றுக்கு நடுவே இருக்கும் தீவு ஆகிய அரங்கத்தில் இறைவன் கோவில் கொண்டுள்ளதால் “திருவரங்கம்” என இத்தலம் அழைக்கப்படுகிறது. இக்கோவிலின் இறைவனாகிய பெருமாள் ரங்கநாயகர் எனவும் தாயார் ரங்கநாயகி எனவும் அழைக்கப்படுகிறார்கள்.
நவ தீர்த்தங்கள்:
சந்திர புசுகரணி
வில்வ தீர்த்தம்
சம்பு தீர்த்தம்
பகுள தீர்த்தம்
பலாச தீர்த்தம்
அசுவ தீர்த்தம்
ஆம்ர தீர்த்தம்
கதம்ப தீர்த்தம்
புன்னாக தீர்த்தம்
தெற்கு இராசகோபுரம்
ரங்கநாதசுவாமி கோயில் இராசகோபுரம்:
400 ஆண்டுகளுக்கு முன் கோயில் தென்புறத்தில் நாயக்க மன்னர்களால் ஆரம்பிக்கப்பட்டு, முற்றுப்பெறாத தெற்கு இராசகோபுரம், அகோபில மடத்தின் 44-வது சீயர் அழகிய சிங்கரின் முயற்சியால் கட்டுமான பணிகள் 1979-ல் தொடங்கி 8 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்று 13 நிலைகளுடனும், 13 கலசங்களுடன் 236 அடி உயரத்தில் 1987 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.
அம்மா மண்டபம்
திருச்சி திருவரங்கம் காவிரி ஆற்றங்கரையில் அம்மா மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்துசமயத்தின் புனிதச் சடங்குகளுள் ஒன்றான நீத்தார் கடன் இப்பகுதியில் அதிகம் நடத்தப்படுகிறது.
அனைத்துமே ஏழு:
அனைத்துமே 7 என்ற பெருமையை இத்தலம் கொண்டுள்ளது.7 பிராகாரம், 7 மதில்கள், ஸ்ரீதேவி, பூதேவி, துலுக்க நாச்சியார், சேரகுலவல்லி நாச்சியார், கமலவல்லி நாச்சியார், கோதை நாச்சியார், ரங்கநாச்சியார் என ஏழு தாயார்கள், 7 உற்சவம், 7 திருவடி சேவை, 7 கண்டுகளிக்கும் சேவை என ஏகப்பட்ட 7 அதிசயங்கள் ஸ்ரீரங்கத்தில் உள்ளன. அதில் முக்கியமான 7 அதிசயங்கள் இன்றும் ஆச்சர்யத்தைக் கொடுப்பவை. அவை,
1. வளரும் நெற்குதிர்கள்
2. அசையும் கொடிமரம்
3. ஸ்ரீராமாநுஜரின் திருமேனி
4. தேயும் அரங்கனின் செருப்புகள்
5. அரங்கனின் ஜொலிக்கும் திருக்கண்கள்
6. ஐந்து குழி மூன்று வாசல்
7. ரங்க விமானம்
அரங்கநாத பெருமாள் கோயிலில் ஏழு ஆச்சாரியார்களுக்கும் என தனி சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. அவை, ராமானுஜர், பிள்ளை லோகாச்சாரியார், திருக்கச்சி நம்பி, கூரத்தாழ்வான், வேதாந்த தேசிகர், நாதமுனி, பெரியவாச்சான் பிள்ளை.
ஸ்ரீரங்கம் ஆலயத்தில் உள்ள தாயார் சன்னிதியில் வருடத்திற்கு ஏழு உற்சவங்கள் நடைபெறுகின்றன. அவை, கோடை உற்சவம், வசந்த உற்சவம், ஜேஷ்டாபிஷேகம், நவராத்திரி, ஊஞ்சல் உற்சவம், அத்யயன உற்சவம், பங்குனி உத்திரம். ஸ்ரீரங்கம் அரங்கநாத பெருமாள் கோயிலில் வருடத்திற்கு ஏழு முறை மட்டுமே பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருள்வார்.
அந்த விழாக்கள், விருப்பன் திருநாள், வசந்த உற்சவம், விஜயதசமி, வேடுபறி, பூபதி திருநாள், பாரிவேட்டை , ஆதி பிரம்மோற்சவம். சந்திர புஷ்கரணியில் ஆறு முறை, கொள்ளிடத்தில் ஒருமுறை என மொத்தம் ஏழு முறை, ஸ்ரீரங்கப் பெருமாள் தீர்த்தவாரி கண்டருள்கிறார்.
விருப்பன் திருநாள்-சித்திரை, வசந்த உற்சவம்-வைகாசி, பவித்ரோற்சவம்-ஆவணி, ஊஞ்சல் உற்சவம்- ஐப்பசி, அத்யயன உற்சவம்-மார்கழி, பூபதி திருநாள்-தை, பிரமோற்சவம்-பங்குனி. வருடத்திற்கு ஏழு முறை மட்டுமே அரங்கநாத பெருமாள் கோயிலை, விட்டு வெளியே எழுந்தருளுவார். சித்திரை, வைகாசி , ஆடி, புரட்டாசி, தை ,மாசி, பங்குனி.
ஸ்ரீரங்கம் பெரிய பெருமாள் திருமுக மண்டலம் உள்ள தென் திசையில் 7 கோபுரங்கள் உள்ளன. அவை, நாழிகேட்டான் கோபுரம், ஆர்யபடால் கோபுரம், கார்த்திகை கோபுரம், தெற்கு கட்டை, கோபுரம்-I, தெற்கு கட்டை கோபுரம்-II, ராஜகோபுரம்.
தல வரலாறு:
புராணங்களின் படி ராவணன் வதத்திற்கு பின்பு அயோத்தியின் மன்னனாக ஸ்ரீராமர் முடிசூடும் விழாவிற்கு வருகை தந்த விபீஷணனுக்கு, ஸ்ரீ நாராயணனின் சிறிய சிலையை ராமர் பரிசளித்தார். அதை பெற்றுக்கொண்டு இலங்கைக்கு திரும்பும் வழியில் இறைவழிபாடு செய்ய விரும்பிய விபீஷணன், இடையன் உருவில் இருந்த விநாயகரிடம் நாராயணனனின் சிலையை கொடுத்து, அதை எக்காரணம் கொண்டும் கீழே வைக்கக்கூடாது எனக் கூறி காவேரி நதியில் நீராட விபீஷணன் சென்றார் .
விபீஷணன் வருவதற்கு நேரம் ஆகியதால் அச்சிலையை விநாயக பெருமான் கீழே வைத்து சென்று விட்டார். அங்கு வந்த விபீஷணன் நாராயணனின் சிலை கீழே வைக்கப்பட்டிருப்தை அறிந்து, அதை கையில் எடுப்பதற்கு முயற்சி செய்தார். அப்போது நாராயணன் அசரீரியாக தான் இங்கே இருக்க விரும்புவதாக விபீஷணனிடம் கூறினார்.
விபீஷணனுக்கு வாக்களித்தவாறு இலங்கை நாடு இருக்கும் தெற்கு திசையை பார்த்தவாறே தான் வீற்றிருப்பதாகவும் கூறினார். அப்போது இப்பகுதியை ஆண்ட தர்ம வர்ம சோழன் ரங்கத்தாருக்கு ஆலயம் எழுப்பினான். சில காலங்களில் காவிரி நதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் கோயிலில் ஆற்றுமணலில் முழுமையாக புதைந்து போனது.
பின்னாளில் ஆட்சிக்கு வந்த சோழ மன்னன் ஒருவன், ரங்கநாதரின் கோவில் எங்கிருக்கிறது என்பதை தினந்தோறும் ஆற்றுப்பகுதிக்கு வந்து தேடலானான். அப்படி ஒரு முறை அங்கு வந்த போது ரங்கநாதர் ஆலயம் மணலில் புதைந்து போவதற்கு முன்பு ரங்கநாதருக்கு செய்யப்படும் பூஜையின் போது வேதியர்கள் ஓதிய மந்திரங்களை, அக்கோயில் வளாகத்தில் இருந்த மரத்தில் வசித்த கிளி ஒன்று நன்கு கவனித்தபடியால் அம்மந்திரங்களை மீண்டும் மீண்டும் உச்சரித்து கொண்டிருந்தது.
இதை வைத்து புதைந்த கோயில் இருக்கும் இடத்தை அந்த மன்னன் கண்டுபிடித்து மீண்டும் சீரமைத்து கட்டியதால் ‘கிளிச்சோழன்’என அந்த மன்னன் அழைக்கப்பட்டலானான்.
தல சிறப்புகள்:
திருவில்லிபபுத்தூரில் பிறந்து கோதை என அழைக்கப்பட்ட ஆழ்வார்களில் ஒரே பெண்ணான ஆண்டாள் இந்த தலத்தில் அரங்கநாதருடன் ஐக்கியமானாள். இந்த கோவிலின் இறைவனான ஸ்ரீ ரங்கநாதர் ஸ்ரீதேவியாகிய லட்சுமி மற்றும் ஆண்டாளுடன் காட்சியளிக்கிறார்.
கோயிலின் மூலவரான அரங்கநாதர் மீது தீவிர பக்தி கொண்ட டில்லி சுல்தானின் மகள் இக்கோவிலுக்கு வந்து ரங்கநாதனை தரிசித்த போது, அங்கேயே தன் உடலை நீத்து ரங்கநாதனருடன் ஐக்கியமானாள். எனவே அவள் “துலுக்க நாச்சியார்” என அழைக்கப்பட்டு இன்றளவும் மக்களால் வழிபடப்படுகிறாள்.
ஆதிசேஷனின் அவதாரமாக கருதப்படும் ஸ்ரீ ராமானுஜரது திருவுடல் 900 ஆண்டுகளுக்கும் மேலாக பச்சை கற்பூரம் சாற்றி பாதுகாக்கப்படுகிறது. 5000 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இந்த கோயில் பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது.
சோழர்கள், பாண்டியர்கள், ஹொய்சளர்கள், விஜயநகர பேரரசர்கள் என பல அரச வம்சங்களால் இக்கோயில் சீரமைக்கப்பட்டுள்ளது. 14-ம் நூற்றாண்டில் டில்லி சுல்தான்களால் ரங்கநாதர் கோயில் சூறையாடப்பட்டது.
இந்திய கோயில்களிலேயே மிக உயரமான அரங்கநாதர் கோயிலின் கோபுரமானது 1987-ம் ஆண்டு அனைவரின் முயற்சியாலும் கட்டி முடிக்கப்பட்டது.
இங்கு அமைக்கப்பட்டுள்ள கம்பராமாயண மண்டபத்தில் கவிச்சக்ரவத்தி கம்பன் தன் “கம்பராமாயணத்தை” அரங்கேற்றம் செய்தபோது நரசிம்ம மூர்த்தியால்பாராட்டப்பெற்றார்.
இங்கிருக்கும் சக்ரத்தாழ்வார் சன்னதியில் வழிபட்டால் நம்மை அண்டி இருக்கும் துஷ்ட சக்திகள், துரதிர்ஷ்டங்கள் மற்றும் நோய் நொடிகள் நீங்குவதாக கூறப்படுகிறது.
மிகச்சிறந்த சிற்பங்களை கொண்ட இக்கோயில் ஐ .நா. சபையின் யுனெஸ்கோ அமைப்பால், பாரம்பரியம் மற்றும் கலாச்சார முக்கியத்துவம் மிக்க இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தல விழாக்கள்:
மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசி தினத்தில் கோயிலின் சொர்க்க வாசல் திறக்கப்படும். அதில் பங்கேற்று வழிபட பல லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவது இதன் சிறப்பம்சமாகும். வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய 10 நாட்கள் ரா பத்து என்றும், அடுத்து வரும் 10 நாட்கள் பகல் பத்து எனக் கூறப்பட்டு இந்த விழாக்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
தல வழிபாட்டு நேரம்:
காலை 6.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை
மதியம் 2.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |