பூதம் கட்டிய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?
உருவம் இல்லாத சிவபெருமானையும் அவரிடம் மன்னிப்புக்கோர வந்த அம்பிகையை வழிபட வேண்டுமா... அப்போ இந்த கோயிலுக்கு ஒருமுறை வாங்க! ஆவுடையார் கோயில் அதன் தல அமைப்பினால் சிறப்பு பெற்று விளங்குகிறது.
இந்த கோயில் ஆதி கயிலாயம் என அழைக்கப்படும் அளவிற்கு பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது. திருவாசக பாடல்களின் திருப்பெருந்துறை என குறிப்பிடப்பட்டுள்ள ஆவுடையார் கோயில் பற்றி இப்போது முழுமையாக தெரிந்துகொள்ளலாம்.
தல அமைந்துள்ள இடம்:
புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள இக்கோயிலானது அறந்தாங்கிக்கு தென்கிழக்கில் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இலக்கிய நூல்களில் சிவபுரம், பூலோக கயிலாயம், குருந்தவனம் எனப் பெயர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊருக்கு நடுவில் தெற்கு நோக்கி அமைந்துள்ள கோயிலை சுற்றி நான்கு வீதிகள் அழகாக அமைந்துள்ளன. கோயிலுக்குள் மூன்று பிரகாரங்களும் வாயிலில் அமைந்துள்ள ராஜகோபுரம் ஏழுநிலைகளையும் கொண்டு விளங்குகிறது.
இங்குள்ள இறைவன் உருவம் இல்லாமல் அரூபமாக வழிபடப்படுகிறார். எனவே இந்த கோயிலானது மற்ற சிவன் கோயில் அமைப்புகளில் இருந்தும் சிறு தெய்வ வழிபாடுகளில் இருந்தும் முற்றிலும் வேறுபட்டு திகழ்கிறது. இது சிற்பக்கலைக்கும் கட்டிடக்கலைக்கும் புகழ்பெற்ற சிவஸ்தலமாகும்.
ஆத்மநாத சுவாமி கோயிலில் மூலவர் சன்னதியில் ஆவுடையார் பீடம் மட்டும் இடம் பெற்றிருப்பதால், இந்த கோயிலும், கோயில் அமைந்துள்ள ஊரும், ஆவுடையார் கோயில் என்ற சிறப்பான பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த ஊரின் பழம்பெயர் திருப்பெருந்துறை என்பதாகும்.
தல வரலாறு:
கோயில் அமைந்துள்ள இடமானது குருந்தவனம் என அழைக்கப்பட்ட காலத்தில் பதஞ்சலி முனிவர் உள்ளிட்ட பல முனிவர்கள் தவம் செய்து கொண்டிருந்தபோது சிவபெருமான் இவர்களுக்கு காட்சியளித்துள்ளார். அதில் பேரானந்தம் அடைந்த முனிவர்கள் திருநடனக் காட்சியை காணும் பாக்கியத்தையும் வேண்டினார்கள்.
அப்போது சிவபெருமான் சிதம்பரத்திற்கு வந்து திருநடனக் காட்சியை காணுங்கள் எனக் கூறி மறைந்தார். முனிவர்களும் தேவர்களும் சிதம்பரம் சென்று திருநடனக் காட்சியை கண்டு பேரானந்தம் அடைந்தனர்.
முனிவர்களுக்கு ஆத்மநாதர் காட்சி தந்த இடத்தில் ஆத்மநாதராகிய சிவபெருமானின் கோயில் அமைந்துள்ளது. அனைத்து ஆத்மாக்களுக்கும் நாதராய் திகழ்வதால் ஆத்மநாதர் என கூறப்படுகிறார்.
தல அமைப்பு:
கோயிலின் முன்புறம் திருவாவடுதுறை ஆதீனப் பெயர்ப் பலகை அமைக்கப்பட்டுள்ளது. எதிரில் பயன்படுத்தாத நிலையில் குளமொன்று உள்ளது. சாலையில் இருந்து கோவிலுக்குள் நுழைவதற்கு முன்பாக மண்டபத்தின் மேற்புறம் குருந்தமர உபதேசக்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
மண்டபத்தில் மேற்புறக் கொடுங்கையின் மேலே ஒரு குரங்கும் (கீழ்நோக்கியவாறு), ஒரு உடும்பும் (மேல் நோக்கியவாறு) செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அலைபாயும் குரங்கு மனத்தை அடக்கி, ஆத்மநாதரின் திருவடியில் உடும்புப் பிடிபோல நிறுத்தி அவருடைய திருவடிகளைச் சிக்கென பிடித்து, உய்வுபெற வேண்டுமென்னும் எண்ணத்துடன் உள்ளே செல்க என்று நமக்கு உணர்த்துவது போல இது அமைந்துள்ளது. இதனை தொடர்ந்து ரகுநாத பூபால மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
மூலவர் சிறப்பு:
ஆத்மநாதரே இங்கு மூலவராக இருக்கிறார். அனைத்து சிவன் கோயில்களிலும் சிவலிங்க திருமேனியானது பாணம், சக்தி பீடம், பிரம்ம பீடம் என மூன்று பகுதிகளாக காணப்படும். ஆனால் இந்த கோயிலில் சக்தி பீடம் மட்டுமே உள்ளது.
அதற்கு மேலே குவளை ஒன்று சாத்தப்பட்டுள்ளது. சக்தி பீடத்தில் ஒளி வடிவில் ஆத்மநாதர் அருள்பாலிக்கிறார். உருவம் இல்லாத அரூபமாக இறைவன் காட்சி அளிக்கிறார். சக்தி பீடம் மட்டுமே இருப்பதால் சக்தியே பிரம்மத்தை வெளிப்படுத்துகிறது என்ற தத்துவம் வெளியாகிறது.
ஆத்மநாதரின் கருவறைக்கு நேர் பின்புறத்தில், நாலுகால் மண்டபத்தில், ஆத்மநாதர் யோகாசன மூர்த்தியாகவும், அவருக்கு எதிரில் மாணிக்கவாசகர் உபதேசம் பெறுவது போலவும், சிற்பங்கள் உள்ளன. இங்கு தீபாராதனை செய்யும் தட்டை வெளியில் கொண்டு வருவதில்லை.
ஏனெனில் சிவனே ஜோதி வடிவமாக இருக்கிறார். அவரை வணங்குவதே தீபத்தை வணங்கியதற்கு ஒப்பானதே. எனவே, தீபாராதனையை கண்ணில் ஒற்றிக் கொள்ள வெளியில் கொண்டு வருவதில்லை.
மூன்று தீபங்கள்:
மூலவர் சிவபெருமான் இங்கு அரூபமாக இருப்பதால் அவரது மூன்று கண்களை குறிக்கும் விதமாக மூன்று தீபங்களை ஏற்றியுள்ளனர்.
ஆவுடையார் கோயில் மூலஸ்தானத்தில் சிவனுக்கு பின்புறத்தில் வெள்ளை, சிவப்பு, பச்சை ஆகிய மூன்று நிறங்களில் தீபங்கள் ஏற்றப்பட்டுள்ளன. வெள்ளை நிறம் சூரியன், சிவப்பு அக்னி, பச்சை நிறம் சந்திரனை குறிக்கும் வகையில் ஏற்றப்பட்டுள்ளன.
குதிரைச்சாமி:
பஞ்சாட்சர மண்டபத்தில் உள்ள சிவனை குதிரைச்சாமி என்று அழைக்கிறார்கள். மாணிக்கவாசகருக்காக, சிவன், குதிரைகளுடன் மதுரைக்கு சென்று குதிரைகளை அரிமர்த்தன பாண்டிய மன்னனிடம் ஒப்படைத்தார். குதிரை மீது சென்ற சிவன், இக்கோயிலில் பஞ்சாட்சர மண்டபத்தில் இருக்கிறார்.
இவரை, குதிரைச்சாமி என மக்கள் அழைக்கிறார்கள். குதிரைக்குகீழே நரிகளும் உள்ளன. இவருக்கு "அசுவநாதர்' என்ற பெயரும் உண்டு.
மாணிக்கவாசகர்:
பொதுவாக மக்கள் கோயிலுக்குள் வழிபட செல்லும் போது மூல ஸ்தானத்திற்கு சென்று மூலவரை வழிபட்ட பின்னர், முதல், இரண்டாவது, மூன்றாவது பிரகாரங்களை சுற்றி வருவதை போல இந்த கோயிலில் மூலவராக இருக்கும் ஆத்மநாதரை வழிபட்டு திரும்பிய பின்னர் முதலில் இருப்பது மாணிக்கவாசகரின் உற்சவ மூர்த்தியாகும்.
சிவபெருமனை இத்தலத்தில் வழிபட்ட முனிவர்கள் மாணிக்கவாசகரை வேண்டி கொண்டதற்கு இணங்க ஆத்மநாதர் கோயிலை கட்டியதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. உருவமற்ற சிவபெருமானின் உருவத்தை குறிக்கும் வகையில் இத்தலத்தில் சிவபெருமான் திகழ்கிறார்.
யோகாம்பிகை:
மாணிக்கவாசகரை தொடர்ந்து நாம் காண்பது அம்பிகை கருவறையாகும். அம்பிகை கோயில் கருவறையில் அம்பிகையும் அருவுருவமாக காட்சியளிக்கிறார். இங்கே ஒரே ஒரு யோக பீடம் மட்டுமே காணப்படுகிறது. எனவே இந்த கோயிலில் உள்ள அம்பிகை யோகாம்பிகை எனவும் சிவ யோக நாயகி எனவும் போற்றப்படுகிறார்.
தட்சனின் யாகத்திற்கு சிவனை மீறிச் சென்றதற்காக மன்னிப்பு பெறுவதற்காக, அம்பாள் இந்த தலத்தில் அரூப வடிவில் தவம் செய்தாள். எனவே, இங்கு இருக்கும் அம்பாளுக்கும் விக்ரகம் இல்லை. அவள் தவம் செய்த போது, பதிந்த பாதத்திற்கு மட்டுமே பூஜை நடக்கிறது.
இந்த பாதத்தை பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக, கண்ணாடியில் பாதம் பிரதிபலிக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவளது சன்னதி எப்போதும் அடைத்தே இருக்கும் என்பதால், சன்னதி முன்புள்ள ஜன்னல் துவாரம் வழியாகத்தான் மக்கள் பாதத்தை தரிசிக்க முடியும்.
குருந்தமர உபதேசக் காட்சி:
யோகாம்பிகையைத் தரிசித்து விட்டு வலமாக வரும்போது சுவரில் உள்ள சிவபுராணத்தையும் திருவாசகப் பாடற்பகுதிகளையும் படித்தவாறே வலம் வர முடியும். அடுத்த தரிசனம் தல விசேடக் காட்சியான குருந்தமர உபதேசக் காட்சி.
கல்லில் வடித்துள்ள குருந்த மரம் கீழே இறைவன் குரு வடிவில் அமர்ந்திருக்க எதிரில் மாணிக்கவாசகர் பவ்வியமாக இருந்து உபதேசம் பெறும் காட்சி வடிக்கப்பட்டுள்ளது. ஆனித் திருமஞ்சன நாளிலும் மார்கழித் திருவாதிரையிலும் மாணிக்கவாசகருக்கு உபதேசித்த காட்சி உற்சவம் நடைபெறுகிறது.
தல விருட்சம்:
இந்த கோயிலின் தல விருட்ச மரமாக குருந்த மரங்கள் உள்ளன. கோவிலில் தியாகராஜ மண்டபத்துக்கு அருகே வடமேற்கு மூலையில் வெளி மதில் சுவரை ஒட்டியதுபோல் அமைந்துள்ள திருமாளி கைப்பத்தியில் இரண்டு குருந்தை மரங்கள் காணப்படுகின்றன.
உருவற்ற சிவபெருமான் குருந்த மர வடிவில் அருவுருவமாக காட்சியளிக்கிறார். அதாவது லிங்க வடிவில் காட்சியளிக்கிறார். குருந்தமரத்தையும் சிவனாகக் கருதுவதால், கார்த்திகை சோமவாரத்தில் இந்த மரத்தின் முன்பாகவே, 108 சங்காபிஷேகம் நடக்கிறது
புழுங்கல் அரிசி நைவேத்தியம்:
தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் பூஜைகள் நடைபெறும்போது பச்சை அரிசியிலேயே அமுது படைத்து நைவேத்தியம் செய்வார்கள். ஆனால் இந்த கோயிலில் 6 கால பூஜைகளுக்குமே புழுங்கல் அரிசியால் மட்டுமே அமுது படைக்கப்படுகிறது.
அதோடு பாகற்காய் கறியும், கீரையும் சேர்த்துப் படைக்கப்படுவதும் இங்கு மட்டுமே. அதனை சிவபெருமானும் விரும்பி சாப்பிட்டார் என்பதாலேயே ஆத்மநாதருக்கு புழுங்கல் அரிசி சாதம் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.
அடுப்பில் இருந்து இறக்கப்பட்ட சாதத்தை அப்படியே சுவாமி சன்னதி முன் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள படைக்கல்லில் கொட்டப்படுகிறது. தொடர்ந்து சன்னதி கதவுகள் சாத்தப்பட்டு சிறிதுநேரம் கழித்த பின்னரே மீண்டும் நடை திறக்கப்படுகிறது.
கோயில் சிறப்பு:
பொதுவாக சூரிய, சந்திர கிரகணங்களின்போது கோயில்களின் பூஜை செய்யப்படுவதில்லை. ஆனால், ஆவுடையார் கோயிலில் கிரகண நாட்களிலும் ஆறு கால பூஜை நடைபெறுகிறது. தொடக்கம் முடிவு அல்லாத அருவ வடிவ சிவனுக்கு சிவபூஜை எந்த காரணத்தாலும், தடைபடக் கூடாது என்பதற்காகவே இந்த பூஜை நடைபெறுகிறது.
குரு இருக்குமிடத்தில் சிஷ்யர்கள், மரியாதை கொடுப்பதற்காக அவர் முன்பு அமராமல் நின்று கொண்டிருப்பார்கள். இக்கோயிலில் ஆத்மநாதருக்கு மரியாதை செய்யும் விதத்தில், மாணிக்கவாசகர், சொக்க விநாயகர், முருகன், வீரபத்திரர் ஆகிய அனைவரும் நின்ற கோலத்திலேயே இருக்கின்றனர்.
ஆவுடையார் கோயிலில் நவக்கிரக சன்னதி இல்லை. ஆனால், நவக்கிரக தூண்கள் வைக்கப்பட்டுள்ளன. முதல் தூணில் ராகு, கேது, 2வது தூணில் சனி, வியாழன், சுக்கிரன், செவ்வாய், மூன்றாவது தூணில் உஷா, பிரத்யூஷா, சூரியன், புதன், நான்காம் தூணில் சந்திரன் உள்ளனர்.
அருகிலுள்ள 2 தூண்களில் காளத்தீஸ்வரர், கங்காதேவி ஆகியோர் உறைந்துள்ளனர். முக்தியை அடைவதற்கான பிரதான மூன்று நிலைகளான சச்சிதானந்த நிலை அமைப்பில் இக்கோயில் உள்ளது. "சத்' அம்சமாக கோயில் மகா மண்டபமும், "சித்' அம்சமாக அர்த்தமண்டபமும், "ஆனந்த' மயமாக கருவறையும் இருப்பது இந்த கோயிலின் விசேஷமாகும்.
பூதம் கட்டிய கோயிலா?
ஆவுடையார் கோயிலை பூதம் கட்டியதாக இந்த பகுதி மக்களிடையே நம்பிக்கை உள்ளது. மிகப்பெரிய பாறை களைக் கொண்டு வந்து தூண்கள் அமைத்தும், சிலைகள் வடித்தும் கொடுங்கை(தாழ்வாரம்) கூரைகளை இணைத்தும் மதில் சுவர்கள் கோபுரங்கள் எழுப்பியும் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளாதால் இந்த கோயிலை பூதம் தான் கட்டியதாக மக்கள் நம்புகின்றனர். ஏனெனில் இத்தகைய பணிகளை மனிதர்களால் செய்ய முடியாது என்பதால் தான் மக்கள் இதனை உறுதியாக நம்புகின்றனர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |