மன்னர் காவல் தெய்வமான கதை-வியப்பூட்டும் மதுரை பாண்டி கோயில் இரகசியம்
மதுரை தூங்கா நகரம் என்று சொல்லுவார்கள்.மதுரையில் மீனாட்சி அம்மனுக்கும் மல்லிகை பூவுக்கும் பெயர் பெற்றது.இருந்தாலும் மதுரையில் பலராலும் போற்றி வணங்க கூடிய ஒரு முக்கியமான இடம் ஒன்று இருக்கிறது.அது தான் மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில்.
இவர் தான் மதுரை மட்டும் அல்லாமல் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள மக்களின் துயர் தீர்த்து பாதுகாத்து வருகிறார். இந்த பாண்டி முனீஸ்வரர் கோயில் மதுரையில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் சிவகங்கை ரிங்ரோட்டில் அமைய பெற்று உள்ளது.
இக்கோயில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான கோயிலாக கருதப்படுகிறது.இந்த பாண்டி முனீஸ்வரர் தான் தீராத கஷ்டம்,அநியாயத்தை தீர்த்து மக்களின் துயர் துடைப்பவராக இருக்கிறார்.நாம் இப்பொழுது இந்த பாண்டி முனீஸ்வரர் யார்?இவரின் வரலாறு மற்றும் அற்புதங்கள் பற்றி பார்ப்போம்.
வரலாறு
தமிழ் நாட்டில் பிறந்த அனைவர்க்கும் ஏன் இந்தியாவில் பிறந்த அனைவருக்கும் கண்ணகியின் வரலாறு நிச்சயம் தெரிந்து இருக்கும்.இந்த பாண்டி முனீஸ்வரன் கதையும் அங்கு இருந்து தான் தொடங்குகிறது.
காவிரிப் பூம்பட்டினத்தை சேர்ந்த கோவலன் கண்ணகியை திருமணம் செய்து இருவரும் காதலை பகிர்ந்து கொண்டு அன்பான தம்பதியினராக வாழ்ந்து வந்தனர்.
இதற்கிடையில் கோவலன் தடம் புரண்டு ஆடலரசி மாதவி என்ற பெண்ணோடு மோகம் கொண்டு தன்னுடைய காதல் மனைவியான கண்ணகியை மறந்து கோவலன் மனைவியிடம் கூட எதுவும் சொல்லாமல் ஆடலரசி மாதவி உடன் சென்று அவளுடனே வாழ தொடங்கினார்.
கண்ணகி பல ஆண்டு காலம் தன்னுடைய கணவன் மீண்டும் என்னை வந்து அடைவார் என்ற நம்பிக்கையில் தவமாக தன் பாதி உயிரை பிடித்து கொண்டு வாழ்ந்து வந்தார்.ஒரு முறை மாதவி இந்திர விழாவில் கானல் வரி பாடலை பாடினாள்.
அதனுடைய உட்பொருளை தவறாகப் புரிந்து கொண்ட கோவலன், மாதவியை தன்னை ஏமாற்றிவிட்டாள் என்று உணர்ந்து,கண்ணகியிடம் பல ஆண்டு காலம் கழித்து மறுபடியும் சென்றான்.கோவலன் தன்னுடைய பணம் செல்வம் எல்லாம் இழந்து வந்த நிலையில் அவன் வணிகம் செய்யும் பொருட்டு கண்ணகியுடன் மதுரைக்கு சென்றான்.
அங்கு கண்ணகியின் சிலம்பை விற்று வர வேண்டி,மதுரை கடைவீதிக்கு சென்றான். அதே சமயம் மதுரை நாட்டு அரசன் மனைவி பாண்டிமாதேவியின் காற்சிலம்பை திருடிய பொற் கொல்லன் தேடி அரசகுல ஆட்கள் வர அவன் தான் தப்பிக்க அங்கு இருந்த கோவலன் மேல் பொய்ப் பழி சுமத்தினான்.
இதை மன்னனும் எந்த ஒரு விசாரணையும் இன்றி கொல்லப்பட்டார். நீண்ட நேரமாக தன்னுடைய கணவன் வராமல் துயரில் துடித்த கண்ணகிக்கு தன் கணவன் கொல்ல பட்ட செய்தி வருகிறது.
அதனை அறிந்து உடனே தன்னுடைய கால்சிலம்பை எடுத்து கொண்டு நியாயம் கேட்க அரண்மனைக்கு வருகிறாள் கண்ணகி.அப்பொழுது தன்னுடைய கணவனுக்கு நடந்த அநீதியை கேட்கிறாள் கண்ணகி.அதற்கு மன்னன் “கள்வனை கொலை செய்வது கொடுங்கோல் அல்ல, அதுவே அரச நீதி” என்று மன்னன் கூறினான்.
அதற்கு மறுவாதமாக கண்ணகி மிகவும் சினம் கொண்டு தங்கள் செய்தது தவறு என்று நிரும்பிக்க அவர் என் கணவர் விற்பதற்காக எடுத்து வந்திருந்த கால்சிலம்பு, மாணிக்க பரல்களை உடையது” என்றாள். அதற்கு அரசன் “என் மனைவி கால்சிலம்பில் முத்து பரல்கள் உள்ளன” என்றான்.
இதனை தொடர்ந்து கோவலனிடம் கைப்பற்றிய சிலம்பு உடைக்கப்பட்டது. அப்போது அதில் மாணிக்கப்பரல்கள் இருந்தன.அதிர்ந்து போன பாண்டிய மன்னன் தான் சரியாக விசாரிக்காமல் தவறு இழைத்து விட்டோம் என்று வருந்தினார்.
பொன் தொழில் செய்யும் கொல்லனின் பொய்யுரை கேட்டு, அறநெறி தவறிய நான் அரசன் அல்ல, நானே கள்வன். என் வாழ்நாள் அழியட்டும்” என்றபடி மயங்கி விழுந்து இறந்தான் மன்னன்.அதன்பிறகு பாண்டிய மன்னனின் ஆத்மா, சிவபெருமானை அடைந்தது.
அப்போது, “நீதிக்காக உயிரை நீத்த நீ மீண்டும் மானிடப் பிறவி எடுத்து உன் பிறவிக்கடன் தீர்ப்பாய்” என்று சிவபெருமான் ஆசீர்வதித்தார்.இதனை கேட்ட மன்னன் எனக்கு மீண்டும் மானிட பிறவி வேண்டாம்.மானிடர்கள் என்னை பூஜித்து அவர்களின் துயர் தீர்த்து தீய சக்திகளை வெல்லவும் தீயவர்களை தண்டிக்கவும் நம்பியவர்களுக்கு துணையாக இருக்கவும் வரம் வேண்டும் என்று கேட்க சிவன்பெருமான் அதன் படியே ஆகட்டும் என்று வரம் கொடுத்தார்.
பிறகு மதுரை மானகிரி கிராமத்தில் இறைவனை நோக்கி தவம் இருந்த பாண்டிய நெடுஞ்செழியன், அப்படியே கல்லாக மாறி பூமிக்குள் மறைந்தார். இந்நிலையில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பாக வள்ளியம்மாள்- பெரியசாமி என்ற தம்பதியினர் தங்களுடைய புழைப்புக்காக கரூரில் இருந்து மதுரை வந்தனர்.
வழியில் இருட்டி விட்டதால், மாட்டுத்தாவணி அருகே உள்ள மானகிரியில் இருவரும் தங்கினர்.அப்போது வள்ளியம்மாள் கனவில் முனிவர் தோன்றி, “நான் மதுரையை ஆண்ட பாண்டிய நெடுஞ்செழியன். கண்ணகியின் கணவன் கோவலனுக்கு அநீதி இழைத்த பாவத்துக்காக மறுபிறவி எடுத்து உள்ளேன்.
அந்த பாவத்தின் நிவர்த்திக்காக இதே இடத்தில் ஈசனை நோக்கி 8 அடி மண் ணுக்குள் தியானம் செய்து வருகிறேன், என்னை மீட்டு எடுத்து வழிபட்டால், தங்களுடைய குடும்பத்தை சீரும் சிறப்பு மாக வாழ வைப்பேன்” என்று கூறி மறைந்து இருக்கிறார்.
அதன் அடிப்படையில் ஊர்ப்பெரியவர்கள் ஒன்று கூடி வள்ளியம்மாள் கனவில் சாமி சொன்ன இடத்தைத் தோண்டியபோது, அங்கே மிரட்டும் விழிகள், முறுக்கிய மீசை, அடர்ந்து நீண்ட ஜடாமுடியோடு சுவாமி சிலை சம்மணம் இட்ட தவக்கோலத்தில் கிடைத்தது.
பிறகு ஊர் மக்கள் அனைவரும் பாண்டி முனீஸ்வரரை வணங்கி வந்தனர்.வெட்ட வெளியில் இருந்து அருள்பாலித்து வந்த பாண்டி முனிவரர் மீண்டு கனவில் தோன்றி நான் வெயில் மழையில் நினைந்து கொண்டு இருக்கின்றேன் என்று சொல்ல அடுத்த நாளே பனை ஓலையால் குடிசை அமைத்து, அங்கு பாண்டி முனீஸ்வரரை பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்தனர்.
பிறகு வருடம் கடந்து இப்பொழுது பாண்டி முனீஸ்வரர் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு மகா மண்டபம் கட்டப்பட்டு மிகப்பெரிய கோவிலில் அருள்பாலித்து வருகிறார்.
பாண்டி முனீஸ்வரரின் வழிபாடு
முனிவர் வேடத்தில் தவம் இருந்ததால் முனீஸ்வரன் என்றும் பாண்டிய மன்னன் தான் முனீஸ்வரனாக இவ்விடம் வந்துள்ளேன் என்று அருள் வந்து ஆடிய பெரியசாமி கூறியதாலும் அன்று முதல் இக்கோயில் தெய்வம் பாண்டி முனீஸ்வரர் என்றழைக்கப்பட்டார்.
காவல் தெய்வம் என்றால் கையில் அறிவால் போன்ற ஆயுதங்களோடு காட்சி கொடுக்கும் ஆனால் இங்கு பாண்டி முனீஸ்வரர் பத்மாசனமிட்டு யோக நிலையில் கிழக்கு நோக்கி அமர்ந்து உள்ளார். பாண்டி முனீஸ்வரர் கோவிலில் தினமும் காலை, மாலை இருவேளையும் பூஜை நடை பெறுகிறது.
பூஜையின்போது எப்போதும் மக்கள் கூட்டம் நிறைந்து இருக்கும்.பாண்டி முனீஸ்வரரை மதுரை மட்டுமல்லாது தேனி, விருதுநகர், திண்டுக்கல், கரூர், திருச்சி, மதுரை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் குல தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.
மேலும் இக்கோயிலில் இந்த கோவிலில் விநாயகர், சமய கருப்ப சாமி, ஆண்டிச்சாமி, சுப்பிரமணியருக்கு தனி சன்னதிகள் உள்ளன.மக்கள் இங்கு வீற்றி இருக்கும் பாண்டி முனீஸ்வரருக்கு வெண்ணிற ஆடை சாத்தி,பால்,மணமிகு தைலம், சந்தனம், ஜவ்வாது, பொங்கல் மற்றும் தேங்காய் பழம் போன்றவைகளை கொண்டு வந்து வழிபடுகின்றனர்.
இங்குள்ள சமய கருப்பசாமிக்கு ஆடு மற்றும் கோழிகளை பலியிட்டும் சாராயம், சுருட்டு போன்றவற்றை படைத்தும் வழிபடுகின்றனர்.இக்கோயிலில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் ஒவ்வொரு சுதந்திர தினத்திலும் ஆயிரக்கணக்கானோர் அமர்ந்து சமபந்தி விருந்தாக உணவுண்ணும் ‘ஒற்றுமைத் திருவிழா’ நடைபெறும்.
இதில் பல நூறு மக்கள் பெறுவார்கள்.பண்டி முனீஸ்வரர் கோயிலில் செவ்வாய் வெள்ளி கிழமை மட்டும் அல்லாது தினம்தோறும் மக்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர்.ஆதலால் இங்கு எப்பொழுதும் திருவிழா கோலமாக காட்சி அளிப்பது சிறப்பம்சம் ஆகும்.
வேண்டுதல்
மக்கள் தங்கள் குடும்பத்தில் ஏற்படும் கஷ்டம்,தங்களுக்கு நடக்கும் அநீதி போன்ற விஷயங்களுக்கு இவரை வந்து வணங்குகின்றனர்.மேலும் தங்கள் வீட்டில் சுபகாரியங்கள் நடக்கவும் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவும் மக்கள் வேண்டுதல் வைக்கின்றனர்.
தங்கள் நினைத்த காரியம் நிறைவேறிய உடன், நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.இங்குள்ள சமயகருப்பு எனும் தெய்வத்துக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் 1,500 ஆடுகளுக்கும் குறையாமல் நேர்த்திக்கடனாக பலி கொடுக்கப்படும்.
கிராமத்தில் இருந்து வருபவர்கள் தங்களின் சொந்தபந்தங்களை அழைத்து வந்து கறி விருந்து கொடுப்பார்கள்.மேலும் பாண்டிமுனீஸ்வரருக்கு என்று கேடாய் வெட்டுவதில்லை அருகில் இருக்கும் சமயகருப்பு எனும் தெய்வத்தின் முன்பாக பலி கொடுக்கும் வழக்கம் உள்ளது.
பண்டி முனீஸ்வரருக்கு பொங்கல், பால், பன்னீர்தான் விருப்பமான பொருட்கள். தங்கள் வேண்டுதலை கவலைகளை நியாயமாக நிறைவேற்றி கொடுப்பதால் இவர் பல குடும்பங்களுக்கு குல தெய்வமாகவே இருக்கிறார்.
இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் இந்துக்கள் மட்டும் இல்லாமல் எல்லா மதத்தினரும் இங்கு வந்து செல்கின்றனர். மேலும் இவர் அங்கு இருக்கும் தெய்வபக்தி அதிகம் இருக்கும் மக்களின் கண்களுக்கு தென்படுகிறார் என்று சொல்கின்றனர்.
ஆக நீதிமான் ஆன பாண்டி முனீஸ்வரரை முழுது மனதோடு வேண்டிக்கொள்ள பாண்டி முனீஸ்வரரின் அருளால் அவர்கள் வாழ்க்கையில் நினைத்த காரியம் நடக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |