முருகனின் ஏழாம் படை வீடு எங்கு இருக்கிறது தெரியுமா?
முருகன் கலியுக வரதன் ஆறுபடை வீடுகளில் கோயில் கொண்டவன்.அவனின் ஒவ்வொரு படை வீட்டின் பெருமையும் வரலாற்றையும் சொல்ல ஒரு ஜென்மம் போதாது,அப்படியாக காடுகளில் சூழ்ந்து அழகான மரம் செடி கொடிகள் கொண்ட மருதமலையில் கோயில் கொண்டு இருக்கும் முருகனின் 7ஆம் படை வீடு மிகவும் பிரசித்தி பெற்றது.
மருத மலை மாமணியே முருகையா என்று பட்டு ஓடாத கடைகளை இன்றும் நாம் காலையில் காணமுடியாது.அப்படியாக முருகனை வழிபாடு செய்ய எண்ணற்ற நன்மைகள் கிடைக்கிறது.இப்பொழுது மருதமலை முருகன் கோயிலின் வரலாற்றையும் அற்புதங்களையும் பற்றி தெரிந்து கொள்வோம்.
கோயிலின் அமைப்பு
கோயமுத்தூர் நகரில், மேற்குத் தொடர்ச்சி மலையின் சரிவில் மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. மரங்களில் மருத மரங்கள் அதிகம் காணப்படுவதால் இம்மலைக்கு மருத மலை என்று பெயர் வந்தது.இக்கோயில் 1200 பழமை வாய்ந்தது.
இக்கோயில் சுமார் 741 மீட்டர் உயரத்தில் ஏழு நிலை இராஜகோபுரத்துடன் அழகுற அமையப் பெற்றுள்ளது.கோயிலுக்கு செல்ல 837 படிகள் உள்ளது. இக்கோயில் பற்றிய சிறப்புகளை பேரூர் புராணம், திருப்புகழ் மற்றும் காஞ்சிப் புராணங்களில் மிக அழகாய் சொல்லப்பட்டு இருக்கிறது.
மருதமலை சுப்பிரமணிய சுவாமி மருதாசலபதி, மருதப்பன், மருதமலையான், மருதமலை முருகன், மருதாசலமூர்த்தி என பல பெயர்களால் போற்றித் துதிக்கப்படுகிறார். மலையடிவாரத்தின் படிக்கட்டுப் பாதை தொடக்கத்தில் சுயம்புவாக தோன்றிய விநாயகர் சந்நதி அமைந்துள்ளது.
இந்த விநாயகரின் அமைப்பு மிகவும் வித்தியாசமானது மற்றும் அழகானது. இதுபோன்ற விநாயகப் பெருமானை வேறு எந்த தலத்திலும் தரிசிக்க இயலாது.இந்த விநாயகரை வழிபட்டு மலையேறினால் 18 படிகளைக் கொண்ட 'பதினெட்டு படி' உள்ளது.
மேலும் மருதமலை முருகன் கோயிலுக்குப் படிக்கட்டுகளின் வழியாகச் செல்லும்போது இடும்பனுக்கென அமைந்துள்ள தனி சந்நதியைக் காணலாம். இந்த இடும்பனை வணங்கினால் குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஒரே பிரகாரத்துடன் அமைந்துள்ள இத்திருக்கோயிலில் மகாமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை என முறைப்படி அமைந்துள்ளன.
கோயில் வரலாறு
கருவறையில் அழகே வடிவாக முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். கருவறைக்கு முன்னால் முருகப்பெருமானை நோக்கிய வண்ணம் அவருடைய வாகனம் மயில் நின்றிருக்கிறது. அதற்குப் பின்னால் பலிபீடமும் கொடிமரமும் அமைந்துள்ளன.
இக்கோயில் மூலஸ்தானத்தில் மருதமலையில் முருகனின் அருள் பெற்ற பாம்பாட்டி சித்தர் வடிவமைத்த சிலையே வைத்து வழிபாடு செய்யப்படுகிறது.பழனி மலையில் உள்ள முருகரை போல இரண்டு கரங்களுடன் வலது கரத்தில் தண்டத்துடன் இடது கையை இடுப்பில் வைத்தபடி தண்டபாணியாக காட்சி கொடுக்கிறார்.முருகப்பெருமான் காலில் தண்டை அணிந்திருக்கிறார்.
இவருக்கு ராஜஅலங்காரம்,விபூதி காப்பு,சந்தன காப்பு என்று தினமும் மூன்று வித பூஜைகள் நடைபெறுகிறது.மேலும் முருக பெருமானுக்கு விஷேச நாட்களில் வெள்ளி காப்பும் கிருத்திகை தைப்பூசம் நாளில் தங்கக்காப்பும் அணிகிறார்.
இவரை அவராகவே அர்த்தஜாம பூஜையில் தரிசிக்க முடியும்.அந்த பூஜையின் பொழுது ஆபரணம் கிரீடம் என்று எதுவும் இல்லாமல் வேட்டி மட்டும் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதன் அருகே தனி சந்நதியில் வலம்புரி விநாயகர் அருட்பாலிக்கிறார். மருதமலை கோயிலில் ஆதிமூலஸ்தானம் அமைந்துள்ளது.
இங்கு வள்ளி தெய்வானையோடு அருள்புரியும் முருகப்பெருமானை முதலில் வழிபட்டு பின்னர் பஞ்சமுக விநாயகரை தரிசித்து அதன் பிறகு மூலவரை வணங்க வேண்டும். பின்னர் பட்டீஸ்வரர், மரகதாம்பிகை, வரதராஜப் பெருமாள், நவகிரக சந்நதி என வழிபட வேண்டும்.
இதைத் தொடர்ந்து பாம்பாட்டி சித்தர் சந்நதிக்குச் சென்று அவரை வணங்கிவிட்டு பின்பு சப்த கன்னியரை வழிபட வேண்டும் என்பது ஐதீகம். மருதமலைக் கோயிலின் தென்புறத்தில் அமைந்துள்ள படிக்கட்டுகள் வழியாக கீழே இறங்கி கிழக்கு திசை நோக்கிச் சென்றால் அப்பகுதியில் பாம்பாட்டி சித்தர் சந்நதியைக் காணலாம்.
இத்திருக்கோயிலில் அமைந்துள்ள சப்தகன்னியர் சந்நதிக்குப் பின்புறம் வற்றாத ஊற்று ஒன்று அமைந்துள்ளது. எப்போதும் நீர் சுரந்து கொண்டேயிருக்கும் இந்த ஊற்றுத் தண்ணீரைக் கொண்டு தான் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
மருதமலை முருகன் கோயிலில் உள்ள விநாயகர் சந்நதியின் பின்புறத்தில் ஒன்றாக பின்னிப் பிணைந்தபடி பழமையான ஐந்து மரங்களைக் காணலாம். இதனை 'பஞ்ச விருட்சம்' என்றழைக்கிறார்கள். அதிசயமான இந்த மரத்தில் குழந்தை வரத்துக்காக வேண்டிக்கொள்ளும் பெண்கள் தொட்டில் கட்டுகின்றனர்.
பாம்பாட்டி சித்தர் சன்னதி
இக்கோயிலில் பாம்பாட்டி சித்தர் வழிபாடும் வெகு சிறப்பாக இருக்கும்.இவருடைய சன்னதி மலைப்பாறைக்கு மத்தியில் குகையில் பாம்பாட்டி சித்தர் சன்னதி அமையப்பெற்று இருக்கிறது. இவர் வலது கையில் மகுடியும் இடது கையில் தடியும் வைத்து காட்சி கொடுக்கிறார்.
மலையில் முருகப்பெருமானுக்கு பூஜை முடிந்த பிறகு தினமும் இவருக்கு பூஜை நடைபெறுகிறது.மேலும் இவருக்கு ஒரு பாத்திரத்தில் பால் வைப்பதாகவும் அந்த பால் மறுநாள் குறைந்து காணப்படுவதாக சொல்லப்படுகிறது.
அதாவது பாம்பாட்டி சித்தர் தான் இங்குள்ள முருக பெருமானை வடிவமைத்தார் என்பதால் அவர் இன்றும் தினமும் முருக பெருமானுக்கு வந்து பால் கொண்டு பூஜை செய்வதாக மக்கள் நம்புகின்றனர்.
மேலும்,பாம்பாட்டி சன்னிதியில் இருக்கும் பாறையில் நாக வடிவம் ஒன்று இருக்கிறது.பாம்பாட்டி சித்தருக்கு முருக பெருமான் நாக வடிவிலே காட்சி கொடுத்ததாக சொல்ல படுகிறது.ஆதலால் இந்த நாக வடிவத்தை முருகப்பெருமானாக பாவித்து பூஜை செய்து வழிபாடு செய்கின்றனர்.
இதன் பின்புறம் பீடம் போன்ற அமைப்பில் மூன்று வடிவம் இருக்கிறது.அதை சிவன்பெருமானாகவும் பார்வதி தேவியாகவும் கணபதியாகவும் பாவித்து வழிபடுகின்றனர்.
பொதுவாக முருகப்பெருமான் தான் சிவனுக்கும் அம்பாளுக்கும் நடுவில் இருந்து காட்சி கொடுப்பார்.ஆனால் இங்கு விநாயகர் இருவருக்கும் நடுவில் இருந்து காட்சி கொடுப்பது விஷேசம்.
விபூதி பிரசாதம்
மேலும்,இங்கு இருக்கும் பாம்பாட்டி சித்தருக்கு ஆடம்பரமாக அலங்காரம் செய்வது இல்லை.விபூதி காப்பு செய்து காவி உடை அணிவித்து அலங்காரம் செய்கின்றனர்.
மனிதன் வாழும் காலத்தில் ஆடம்பரத்தில் ஈடுபாடு இல்லாமல் எளிய வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் இந்த அலங்காரம் செய்யப்படுகிறது.மேலும் இவர் சன்னதியில் கொடுக்கும் விபூதியை தோஷம் போக்கும் சக்தி படைத்தது என்று சொல்கிறார்கள்.
மேலும் மருதமலை முருகனிடம் நீண்டகாலமாக திருமணம் கைகூடாமல் இருப்பவர்கள் வந்து சுவாமிக்கு பொட்டுத்தாலி, வஸ்திரம் போன்றவற்றை சமர்ப்பித்து கல்யாண உற்சவத்தை நடத்தினால் விரைவில் முருகப்பெருமான் அருளால் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.
மேலும் குழந்தைப் பேறு இல்லாதவர்கள் தம்பதி இருவருமாக வந்து இக்கோயிலுக்கு தொடர்ந்து ஐந்து வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு செய்தால் குழந்தைப் பேறு கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |