2026: பங்குனி உத்திரம் எப்பொழுது? அன்று என்ன செய்ய வேண்டும்?
நம்முடைய இந்து மத பண்டிகைகளில் மிக முக்கியமான வழிபாட்டு நாட்களில் பங்குனி உத்திரம் ஒன்று. அதாவது பங்குனி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமியும் உத்திரம் நட்சத்திரமும் இணைந்து வரக்கூடிய இந்த நாளை தான் பங்குனி உத்திரமாக நாம் கொண்டாடுகின்றோம்.
இந்த நாள் முருகப்பெருமானுக்குரிய மிகவும் முக்கியமான வழிபாட்டு நாளாக மட்டுமல்லாமல் குலதெய்வ வழிபாடுகள் செய்வதற்கும் மிகவும் உகந்த நாளாக இருக்கிறது. மேலும் முருகப்பெருமான் இந்திரனின் மகளான தேவானையை திருமணம் செய்து கொண்டது இந்த நாளில் தான் என்பது புராணங்கள் சொல்கின்றன.

அதுமட்டுமல்லாமல் சிவன் பார்வதி, ஸ்ரீராமர் சீதை, ரங்கநாதர் ஆண்டாள் என பல தெய்வீக திருமணங்கள் இந்த பங்குனி உத்திரம் நாள் அன்று தான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் நமக்கு பல்வேறு பலன்கள் கிடைக்கிறது. அப்படியாக 2026 ஆம் ஆண்டு பங்குனி உத்திரம் எப்பொழுது என்று பார்ப்போம்.
| பங்குனி உத்திரம் 2026 தேதி | ஏப்ரல் 01 புதன் |
| உத்திரம் நட்சத்திரம் ஆரம்பம் | மார்ச் 31 மாலை 03.20 |
| உத்திரம் நட்சத்திரம் நிறைவு | ஏப்ரல் 01 மாலை 04.17 |
| பெளர்ணமி ஆரம்பம் | ஏப்ரல் 01 காலை 07.38 |
| பெளர்ணமி நிறைவு | ஏப்ரல் 02 காலை 07.57 |
இந்த பங்குனி உத்திரம் அன்று சிறப்பு பூஜைகள் விரதம் வழிபாடுகள் செய்தால் கட்டாயம் நம் வாழ்க்கையில் சந்திக்கின்ற தடைகள் விலகும். அதோடு குடும்ப வாழ்க்கையில் ஒற்றுமை நிலவும், நம்முடைய விருப்பங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.
இந்த நாளில் தங்களுடைய வேண்டுதல்கள் நிறைவேற பலரும் காவடி எடுத்தும் மொட்டை அடித்தும் முருகப்பெருமானுக்கு நேர்த்திக்கடன் நிறைவேற்றுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதோடு பங்குனி உத்திரம் அன்று திருமணம் சொத்துக்கள் வாங்குவது, வீடு கிரகப்பிரவேசம் செய்வது போன்று சுப நிகழ்ச்சிகள் நடத்துவதும் மிகவும் சிறப்பானதாக உள்ளது.

இந்த வழிபாடு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் வழிபாடு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. நீண்ட நாட்கள் திருமண வரன் தேடியும் திருமணமாகாத ஆண் பெண் இருவரும் பங்குனி உத்திரம் அன்று சிறப்பு பூஜைகளும் வழிபாடு செய்தால் கட்டாயம் அவர்களுக்கு நினைத்த வாழ்க்கை துணை கிடைக்கும்.
பங்குனி உத்திரம் அன்று முருங்கப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளாக இருப்பதால் அன்றைய நாள் நெய் தீபம் ஏற்றி வைத்து விரதம் இருந்து பஞ்சாமிர்தம் அபிஷேகம் மற்றும் பால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்வது என்பது நம் வாழ்க்கையில் சுபிட்சத்தை உண்டாக்கும்.
அதோடு "ஓம் சரவணபவாய நமஹ" என்ற மந்திரத்தை உச்சரித்து வழிபாடு செய்தால் நிச்சயம் நம் வாழ்க்கையில் உள்ள தடைகள் யாவும் விலகும். முடிந்தவர்கள் "ஓம் சரவணபவ" என்ற மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்யலாம் அல்லது முடிந்தவர்கள் 108 முறை அந்த மந்திரத்தை எழுதி வழிபாடு செய்தாலும் நிச்சயம் அவர்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றம் கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |