சகலவிதமான பாவங்களையும் தீர்க்கும் அற்புதமான தீர்த்தமலை-வரலாறும் சிறப்புகளும்
ராவணனால் சீதாப்பிராட்டி சிறை பிடித்து செல்லப்பட்டபோது இரண்டு இடங்களில் ராமர் அவருடைய கரங்களால் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்துள்ளார். அவற்றுக் ஒன்று ராமேஸ்வரம். மற்றொன்று தீர்த்தங்கள் அதிக அளவில் காணப்படும் தீர்த்தமலை. இந்த தீர்த்தமலையை குறித்தும் அது தோன்றிய வரலாறு குறித்தும் விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
தல அமைவிடம்:
தர்மபுரி மாவட்டத்தின் அரூர் அருகே தீர்த்தமலை அமைந்துள்ளது. தர்மபுரி பேருந்து நிலையத்தில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் இத்தலம் அமைய பெற்றுள்ளது.
தல வரலாறு:
வனவாசத்தின் போது ராமனோடு வனத்தில் இருந்த சீதையை, மானின் உருவத்தில் வந்த ராவணன் கடத்தி சென்று சிறை வைத்தான்.கடத்தி செல்லப்பட்ட சீதையை மீட்பதற்காக ராவணனுடன் ராமர் யுத்தம் செய்தார். யுத்தத்தில் ராவணனை வதம் செய்த பின்னர் ராமர் அயோத்தி புறப்பட்டார்.
செல்லும் வழியில் குறிப்பிட்ட பகுதியில் சிவ வழிபாடு செய்ய விரும்பிய ராமர் அதற்கான தீர்த்தத்தை காசியில் இருந்து கொண்டு வரும்படி அனுமரிடம் கூறினார். தீர்த்தம் கொண்டு வரச்சென்ற அனுமன் திரும்ப கால தாமதமானதால் ராமர், தனது பாணத்தை எடுத்து அங்கிருந்த மலை மீது எய்தார்.
ராமர் எய்த பாணம், பாறையில் பட்ட இடத்தில் இருந்து தீர்த்தம் உண்டானது. அந்த தீர்த்தத்தைக் கொண்டு ராமர், சிவபூஜையை நடத்தி முடித்தார். ராமரின் பாணத்தால் உருவான தீர்த்தம் என்பதால் இதற்கு ‘ராம தீர்த்தம்’ என்ற பெயர் உண்டானது. பூஜை முடிவுறும் தருவாயில் அனுமரும் காசியில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து விட்டார்.
தான் வருவதற்குள் ராமபிரான், தீர்த்தம் உண்டாக்கி பூஜையை நிறைவு செய்து விட்டதால், கோபம் கொண்ட அனுமன் தான் கொண்டு வந்த தீர்த்தத்தை வீசி எறிந்தார். அது ராம தீர்த்தத்தில் இருந்து இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் கரையில் விழுந்தது.
அது ‘அனுமந்த தீர்த்தம்’ என அழைக்கப்படுகிறது. அனுமந்த தீர்த்தத்தில் குளித்து விட்டு, இங்குள்ள ராம தீர்த்தத்தில் குளித்தால் மனிதனின் பாவங்கள் அனைத்தும் முழுமையாக நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
ராமரால் உருவாக்கப்பட்ட தீர்த்தம் அமைந்துள்ள மலையே தீர்த்தமலை என அழைக்கப்படுகிறது. இந்த பாறையில் இருந்து பல தீர்த்தங்கள் உருவாகியுள்ளன. இந்த இடமானது தீர்த்தம் கசியும் ‘தவசாகிரி தலம்’ எனவும் அழைக்கப்படுகிறது.
தல அமைப்பு:
இங்குள்ள இறைவனின் பெயர் ‘தீர்த்தகிரீஸ்வரர்’ என்பதாகும். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக இருந்து அருள்பாலிக்கிறார். ராம தீர்த்தத்தில் நீராடி தீர்த்தகிரீஸ்வரரை வழிபாடு செய்தால் மன நிம்மதி கிடைக்கும். மேலும் உடல்ரீதியான எந்த வித வியாதியாக இருப்பினும் அவை தீரும்.
இது தவிர குழந்தை வரம் மற்றும் குடும்ப ஒற்றுமை, சகல செல்வமும் கிடைக்கவும், கடன் தொல்லை தீர்வதற்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் பலரும் வந்து பிரார்த்தனை செய்து செல்கிறார்கள். இந்த தலத்தின் அடிவாரத்தில் ஒரு கோயில், மலைக்கு மேல் ஒரு கோயில் என இரண்டு கோயில்கள் உள்ளன. தீர்த்தமலையின் உச்சியில் சக்தி வாய்ந்த தெய்வமாகவும், தெற்கில் சிவபெருமான் வாழும் இடமாகவும் தீர்த்தகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயில் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாண்டிய மற்றும் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. கோயில் வளாகத்தில் குன்று அமைந்துள்ளது. இந்த குன்றிலிருந்து 50 அடி உயரத்தில் கால் அங்குல அளவிலான குழாயின் வழியே நீர் ஊற்றிக் கொண்டே இருக்கும். இதனுடைய சிறப்பு என்னவென்றால் கோடை மற்றும் மழை காலங்களில் குழாயின் வழியாக ஊற்றும் நீரின் அளவும் மாறாமல் இருக்கும்.
இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் அம்பாளின் திரு நாமம் ‘வடிவாம்பிகை’ என்பதாகும். இத்தல விநாயகர் ‘சித்தி விநாயகர்’ என்ற பெயருடன் அருள்பாலிக்கிறார். பவளமல்லி மரம் தலவிர்ட்ச மரமாக உள்ளது. திருமணம் நடைபெற வேண்டும் என பிரார்த்தனை செய்பவர்கள் இந்த தல விருட்சத்தில் மஞ்சள் கயிறு கட்டி வேண்டிக்கொள்கின்றனர்.
குழந்தை வரம் வேண்டுவோர், இங்குள்ள பெரிய புற்றை வழி படுவதோடு தல விருட்சத்தில் தொட்டில் கட்டி வேண்டுதல் செய்கின்றனர். அங்கு அமைந்துள்ள நாகப்புற்றை வணங்குவதன் மூலம் நாகதோஷம் நீங்குவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
மலைக்கு மேற்கே வாயு தீர்த்தமும் வருண தீர்த்தமும் அமைந்துள்ளன. கிழக்கில் இந்திர தீர்த்தம் அமைந்துள்ளது. வடக்கே அனுமந்த தீர்த்தமும், தெற்கே எம தீர்த்தமும் உள்ளன. மலையின் உச்சியில் வசிஷ்டர் தீர்த்தம் காணப்படுகிறது.
இப்படி தீர்த்தங்களால் சூழப்பட்ட அற்புதமான மலையாக விளங்கும் தீர்த்தமலை நோய் தீர்க்கும் தலமாகவும் விளங்குகிறது. இந்த மலை மீது ஏறி வந்து வழிபடும் பக்தர்கள், மூலிகை காற்றை சுவாசிப்பதால் நோய் நொடிகள் நீங்குவதாக கூறுகின்றனர்.
தல தீர்த்தங்கள்:
பல தீர்த்தங்கள் அமையப்பெற்றுள்ளதாலேயே இந்த தலமானது தீர்த்தமலை எனப்பெயர் பெற்றுள்ளது. அவற்றுள் சில முக்கியமான தீர்த்தங்கள் குறித்தும் அவற்றின் நன்மைகள் குறித்தும் தெரிந்துகொள்ளலாம்.
குமார தீர்த்தம்:
முருகனை தேவ சேனாதிபதியாக நியமித்த போது இந்த தீர்த்தத்தால் முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.முருகனுக்காக வழங்கப்பட்ட இத்தீர்த்தத்தை தெளித்துக் கொள்வதாலும் பருகுவதாலும் உயர்ந்த அறிவும் தெளிவான ஞானமும் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன.
அகத்திய தீர்த்தம்:
அகத்திய மாமுனிவரின் குன்ம நோய் நீங்க இறைவனால் அருளப்பெற்ற தீர்த்தமே அகத்திய தீர்த்தமாகும். தாமிர சத்தும் மூலிகைகளின் சக்தியும் கொண்ட இந்த தீர்த்தத்தை உடல்மேல் தெளித்துக் கொள்வதன் மூலமும் பருகுவதன் மூலமும் உடலில் உள்ள குன்ம நோய் (அல்சர்) நீங்கி வயிற்று வலியும் குணமடையும் எனக் கூறப்படுகிறது.
ராம தீர்த்தம்:
மரம் செடி கொடி இலைகளில் இருந்தும் பாறைகளில் இருந்தும் இறைவனால் வெளிப்படுத்தப்பட்ட அரிய தீர்த்தம் இது. ராமரால் உருவாக்கப்பெற்ற இந்த தீர்த்தத்தில் ஸ்ரீ ராம ஜெயம் எனக் கூறி உடல்மேல் தெளித்துக் கொள்வதாலும் பருகுவதாலும் சகல பாவங்களும் நீங்கும் எனக் கருதப்படுகிறது.
அனுமன் தீர்த்தம்:
அனுமான் காசி நீரை இந்த பகுதியில் தெளித்ததாக புராணம் தெரிவிக்கிறது. மேலும் இந்த பகுதியில் இருக்கும் பாறையில் இருந்து ஒரு நீரூற்று வருகிறது. இதன் தண்ணீர் மிக இனிப்பாக இருக்கும். இந்த நீரூற்று எப்போதும் வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கும். அனுமந்த தீர்த்தத்தில் குளித்து விட்டு இங்குள்ள ராம தீர்த்தத்தில் குளித்தால் பாவங்கள் நீங்கும் என்று புராணம் கூறுகிறது.
கௌரி தீர்த்தம்:
இது அன்னை வடிவாம்பிகைக்காக வழங்கப்பெற்றது. இத்தீர்த்தத்தை கொண்டு இறைவனை வழிபாடு செய்ததால் வடிவாம்பிகை அம்மன் இறைவனின் இடப்பாகத்தில் இடம் பெற்றாள் என புராணம் கூறுகிறது. இத்தீர்த்தத்தை தெளித்துக் கொண்டும் பருகியும் இறைவனையும் இறைவியையும் வணங்கினால் சகல தோசங்களும் நீங்கும்; இல்லறம் நல்லறமாக இருக்கும் என்றும் புராணம் கூறுகிறது.
அக்னி தீர்த்தம்:
அக்னி தேவனின் பெண்ணாசையால் ஏற்பட்ட பாவங்களைப் போக்கிய தீர்த்தம் இது. இதனால் உடலின் தட்பவெப்பம் சமமாகும். ஆஸ்துமா சம்பந்தமான நோய்கள் குணமாகும் எனக் கூறப்படுகிறது.
வேண்டுதல்களும் நேர்த்திக்கடன்களும்:
இந்த தலத்தில் வந்து வேண்டுதல் வைக்கும் பக்தர்கள் தங்களுடைய வேண்டுதல்கள் நிறைவேறியதும் கோயிலுக்கு வந்து, முடி எடுத்தல், காது குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்களை செலுத்துகின்றனர். அதோடு சுவாமிக்கு தேன், நல்லெண்ணெய், திரவிய பொடி, பால், தயிர், பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீறு, அரிசி மாவு, பழ வகைகள் போன்றவற்றால் அபிஷேகமும் செய்கின்றனர்.
ஒரு சிலர் தங்களின் வசதிக்கேற்ப சொர்ணாபிஷேகம் செய்வதும் உண்டு. இறைவனுக்கு வஸ்திரமும், அம்பாளுக்கு புடவையும் சாத்தியும் பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். ஒரு சில பக்தர்கள், தங்களது நேர்த்திக்கடனை அன்னதானமாக வழங்குகிறார்கள்.
வழிபாட்டு நேரம்:
தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக கோயில் திறந்து வைக்கப்படுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |