உலகில் வேறு எந்த ஒரு சிவாலயத்திலும் காண முடியாத அற்புதம்
திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சோழ நாடு காவிரி தென்கரையில் அமைந்துள்ள சிவாலயம் தென்குடித்திட்டை வசிட்டேசுவரர் கோயில் ஆகும்.
இங்கு தனிச்சன்னதியில் அமைந்துள்ளார் குருபகவான், சுவாமிக்கும் அம்பாளுக்கும் இடையே எல்லா இல்லச் சிறப்போடு நின்ற நிலையில் ராஜகுருவாக எழுந்தருளி இருக்கிறார்.
தல வரலாறு
திட்டை எனும் சொல் மேடு எனவும் பொருள்படும். பிரளய காலத்தில் இவ்வுலகம் நீரால் சூழப்பட்டபோது திட்டை மற்றும் சீர்காழி ஆகிய சிவதலங்கள் பாதிக்கப்படவில்லை.
உலகப் பிரளய காலத்தில் இப்பகுதிகள் திட்டாகத் தோன்றியபடியால் சீர்காழியை வட திட்டை எனவும் வசிஷ்டேஸ்வரர் கோயில் பகுதியை தென் திட்டை அல்லது தென்குடித்திட்டை எனவும் அழைக்கலானார்கள்.
இறைவன் சுயமாக வெளிப்பட்டு அருள் புரிந்தார் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
ஆலயத்தில் நிகழும் அற்புதம்
இத்திருத்தலத்தின் மூலவர் வசிஷ்டேஸ்வரரின் விமானத்தில் சந்திரகாந்தக் கல், சூரிய காந்தக்கல் வைத்து கட்டப்பட்டுள்ளது.
தினம் ஒரு கலையாக தேய்ந்து அழியும் சாபம் பெற்ற சந்திர பகவான், கைலாசநாதரை வணங்கி தவம் இருந்தார்.
சாபம் நீங்கப்பெற்று மூன்றாம் பிறையாக தன் சிரசில் சந்திரனை கைலாசநாதர் அணிந்து கொண்டார்.
இதற்கு நன்றிக்கடனாக காற்றில் இருந்து ஈரப்பதத்தை ஈர்த்து ஒரு நாழிகைக்கு ஒரு சொட்டாக இறைவனுக்கு நித்யாபிஷேகம் செய்கிறார்.
அதாவது 24 நிமிடங்களுக்கு ஒருமுறை இறைவன் மீது ஒரு சொட்டு விழுவதை இன்றும் கூட காணலாம், இது மிக அற்புதமான நிகழ்வாகும், உலகின் எந்த ஒரு சிவாலயத்திலும் இதை காண முடியாது.
அம்பாள்
இறைவி தெற்கு நோக்கி நின்ற வடிவில் காணப்படுகின்றார், கோவிலின் முன்னால் செப்பால் ஆன நந்தி மற்றும் பலிபீடம் உள்ளது.
அம்மன் சந்நிதிக்கு முன்பாக மேல் கூரையில் 12 ராசிகளுக்கும் ராசி சக்கரம் சிற்ப வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
அந்தந்த ராசிக்காரர்கள் தங்கள் ராசியின் கீழ் நின்று அம்மனைப் பிரார்த்திக்கும் போது அவர்களின் தோஷங்கள் நீங்குவதாக ஐதீகம்.
குரு பகவானிற்கு தெற்கு நோக்கி தனி கோயில் அமைக்கப்பட்டுள்ளது ராஜ குருவாக நின்ற நிலையில் அபய ஹஸ்த முத்திரையுடன் பக்தர்களுக்கு அருள் புரிகிறார்.
தீர்த்தம் இக்கோவிலின் முன்புறம் உள்ளது. சனி பகவானுக்கு பரிகாரம் செய்ய உகந்த கோவிலிலாகவும் இது விளங்குகின்றது.
பெண்களுக்கு ஏற்படும் மாங்கல்ய தோஷம் நீங்க இந்த அம்மன் அருளுவதால் மங்களாம்பிகை என போற்றப்படுகிறாள்.