திருவண்ணாமலை கிரிவலம் செல்பவர்கள் கவனத்திற்கு
நினைத்தாலே முக்தி தரும் இடம் என்றால் அது திருவண்ணாமலை தான். திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்து வர நமக்கு மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும், திருவண்ணாமலை செல்லும் பக்தர்கள் தவறாமல் கிரிவலம் செல்வார்கள்.
தினமும் பல்வேறு இடங்களில் இருந்து மக்கள் திருவண்ணாமலைக்கு கிரிவலம் வருவதுண்டு. அப்படியாக, நாம் கிரிவலம் செல்லும் பொழுது எந்தெந்த சித்தர்கள் திருவண்ணாமலையில் தற்போதும் இருக்கிறார்கள், அவர்களின் அருளை எவ்வாறு பெறுவது என்று பார்ப்போம்.
திருவண்ணாமலை சுற்றி பல சித்தர்கள் வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவர்கள் நம்முடைய கண்களுக்குத் தெரியாமல் அரூபமாக வாழ்ந்து வருவதாக பலரும் சொல்கிறார்கள். அதிலும் முக்கியமாக, பதினெட்டு சித்தர்களில் ஒருவரான இடைக்காடர் திருவண்ணாமலையில் தான் ஜீவசமாதி அடைந்துள்ளார்.
திருவிடை மருதூர், இடைக் காட்டூர் உள்பட பல இடங்களில் இடைக்காடர் ஜீவ சமாதி உள்ள போதிலும் திருவண்ணாமலையில் தான் அவரது பரிபூரண அருள் இருப்பதாக தெரிவிக்கிறார்கள். மேலும், திருவண்ணமலையில் கார்த்திகை மகா தீபம் மிகவும் விஷேசமான ஒன்றாகும்.
இந்த கார்த்திகை தீபத்தில் பங்கு கொள்ள பல கோடி மக்கள் வருகை தருவார்கள். காரணம், திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபத்தை ஒரு முறை கண்டு தரிசித்தாலே நாம் பிறவி பலன் அடையலாம் என்பது நம்பிக்கை.
மேலும், அங்கு ஏற்றப்படும் கார்த்திகை தீபத்தை கோடி முறை தரிசித்த பலனை பெற்ற ஒரே நபர் இடைக்காடர் சித்தர் தான். இவர் தான் ஈசனின் மகிமையைத் தெரிந்தவர் என்றே சொல்லலாம். இந்த இடைக்காடர் சித்தர் ஒவ்வொரு பௌர்ணமி காலங்களிலும் கிரிவலம் வருவதாக சொல்லப்படுகிறது.
இடைக்காடர் மட்டுமல்ல, மேலும் பல சித்தர்களும் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அதே போல் பலரும் தெரியாத சித்தராக வாத்தியார் அய்யா ஸ்ரீமுத்து வடுகநாதர் சித்தர் இருக்கிறார்.
இவருடைய ஜீவசமாதி அமையப் பெற்று இருக்கும் இடம் பலருக்கும் தெரிவதில்லை. திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ஸ்ரீவராகி தீர்த்தத்துக்கு தினமும் இவர் வந்து வழிபட்டு செல்வதாக கூறப்படுகிறது.
அதே போல், ஸ்ரீபெத்த நாராயண சித்தர் என்பவரும் பல நூற்றாண்டுகளாக திருவண்ணாமலையில் வாழ்ந்து வருவதாகவும், இன்றளவும் அவர் தன்னை யார் கண்களுக்கும் தன்னை காட்டி கொள்வது இல்லை என்று சொல்கிறார்கள்.
இவ்வாறு பல்வேறு சித்தர்கள் திருவாண்ணாமலையை சுற்றி கிரிவலம் வருவதாக சொல்லப்படுகிறது. நமக்கு வாழ்க்கையில் கட்டாயம் இந்த சித்தர்களின் அருளும் தேவை. ஆக நாம் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் பொழுது, இந்த சித்தர்களை மனதில் நினைத்து கொண்டு வலம் வந்தாலும் அவர்களின் அருள் நமக்கு கிடைக்கிறது.
மேலும், இவ்வளவு சக்தி வாய்ந்த பகுதியில் நாம் கிரிவலம் செல்லும் பொழுது மிகவும் பயபக்தியுடன் செல்ல வேண்டும். முடிந்த அளவு நம்முடைய ஆன்மா மேன்மை அடைவதற்கான வழியை நாம் தேட வேண்டும்.
இவ்வாறு எவர் ஒருவர் உண்மையான பக்தியுடன் கிரிவலம் செல்கிறார்களோ அவர்களுடன் சேர்ந்து சித்தர்களும் கிரிவலம் செல்வதாக சொல்லப்படுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |