திருமணமும் தொழிலும் அருளும் திருப்பாசூர் வாசீஸ்வரர் கோவில்
இக்கோவில் கொங்கு நாட்டு திருத்தலங்களில் 16வது தலமாகும். அப்பர் சம்பந்தர் சுந்தரர் பாடிய தேவார திருத்தலமும் ஆகும். திருவள்ளூர் மேற்கே 5 கிலோ மீட்டர் தொலைவில் திருப்பாசூர் அமைந்துள்ளது. இத்திருத்தலம் மூர்த்தி தலம் திருத்தம் விருட்சம் தவம் ஆகிய ஐந்து அம்சங்களுடன் கூடிய புராணப் பெருமை பெற்ற திருத்தலம் ஆகும். தன்காதலி உடனுறை வாசீச்வரர் கோயிலுக்கு நிறைய கதைகள் உள்ளன.
கருவறைக் கடவுளர்
திருப்பாசூர் கோவிலின் கருவறைநாதர் பாசூர்நாதர், பசுபதீஸ்வரர், வாசிஸ்வரர் எனப்படுவார். அம்மன் பசுபதி நாயகி, மோகனாம்பாள், பணைமுலை நாச்சியார் என்று பல பெயர்களில் அழைக்கப் பெறுவார். கருவறையில் சுயம்புலிங்கத்தை சுற்றி சதுர வடிவ ஆவுடையார் அமைந்துள்ளது.
கருவறைக்கு வலப்பக்கமாக அம்பாள் தனிச் சந்நிதி கொண்டுள்ளாள். இவ் இருவர் சந்நிதிகளுக்கும் இடையில் விநாயகரும் வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியரும் தனித்தனி சந்நிதிகளில் காட்சி தருகின்றனர்.
விருட்ச மகிமை
திருப்பாசூர் வாசீஸ்வரர் கோவிலின் தலவிருட்சம் மூங்கில் மரம். மூங்கில் புதரில் தினமும் பசு பால் சொரிவதைக் கண்ட மக்கள் அங்கு அகழ்ந்து பார்த்தபோது கிடைத்த சிவலிங்கமே கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
தீர்த்த மகிமை
திருப்பாசூர் வாசீஸ்வரர் கோவிலில் சோம தீர்த்தம், சோழ தீர்த்தம், மங்கல தீர்த்தம் என்று மூன்று தீர்த்தங்கள் உள்ளன.
பாடல் பெற்ற தலம்
திருப்பாசூர் வாசீஸ்வரர் கோவில் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூன்று பேரும் பதிகம் பாடிய திருத்தலமாகும். இவர்கள் தவிர பரணதேவர், பட்டினத்துப் பிள்ளையார், சேக்கிழார் ஆகியோரும் இறைவனைப் பாடி போற்றி உள்ளனர் அம்பிகையும் திருமாலும் சந்திரனும் தன்காதலி உடனுறை வாசீச்வரரை வணங்கி விமோசனம் பெற்ற திருத்தலமாகும்.
பிரிந்தவர் கூடும் புண்யத்தலம்
திருப்பாசூரில் அம்பாள் சிவனை வழிபட்டுத் திருமணம் செய்து கொண்டதனால் பிரிந்திருக்கும் தம்பதியர், குடும்பத்தினர், பெற்றோர் பிள்ளைகள் போன்றோர் இக்கோவிலுக்கு வந்து வழிபட்டால் பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.
கதை ஒன்று
சோழ மன்னன் இக்காட்டை அழித்து மக்களை இங்குக் குடியேற்ற முயற்சி செய்தான். அப்போது ஒரு மூங்கில் புதரை வெட்டி அகற்றிய போது அங்குச் செங்குருதிப் பாய்ந்து ஓடியது. அந்தப் புதரை வெட்டிய கருவியின் பெயர் வாசு என்பதாகும்.
உடனே அந்த இடத்தை அகழ்ந்து பார்த்தபோது அங்கு ஒரு சிவலிங்கம் வாசியால் வெட்டுப்பட்டு இருப்பதை அறிந்தனர். பின்பு மன்னன் தன் தவறுக்கு வருந்தி அந்த சிவலிங்கத்தை அங்கேயே பிரதிஷ்டை செய்து சிவன் கோவிலை எழுப்பினான்.
காயம்பட்ட சொர சொரப்பான் லிங்கம்
சிவலிங்கத்தின் மீது வாசி என்ற கருவி பட்டதனால் ஏற்பட்ட தடயங்களை இன்றைக்கும் காணலாம். காயம்பட்ட கொத்து பட்ட சிவலிங்கங்கள் இதுபோல பல கோவில்களிலும் உண்டு. அங்கும் இத்தகைய கதைகள் வழங்குகின்றன.
இங்கே உள்ள சிவலிங்கத்தில் மேற்புறத்திலும் பக்கவாட்டிலும் ஆக இரண்டு இடங்களில் வெட்டுக்காயம் தெரிகின்றது. மேலும் மூங்கில் புதரில் இருந்து வெளிப்பட்டதால் மூங்கில்கள் உரசிய சொரசொரப்புட் தன்மையும் லிங்கத்தின் மேற்பகுதியில் காணப்படுகின்றது. இங்கே லிங்கத்திற்கு எண்ணெய் காப்பு செய்வது கிடையாது.
உச்சிக்கால பூசையின் மகிமை
திருப்பாசூர் வாசீஸ்வரர் கோவிலின் கருவறைநாதரை உச்சிக் காலத்தில் தரிசித்தால் மிகவும் சிறப்பு என்று தலபுராணம் கூறுகின்றது. மதுரை மீனாட்சியை பள்ளியறை பூசையின் போதும் குருவாயூர் அப்பனை அதிகாலை நிர்மல்ய பூஜையின் போதும் தரிசிக்க வேண்டும். அது போல் வாசிச்வரரை உச்சிக்கால் பூசையின் போது வந்து வணங்கினால் நினைத்தது நிறைவேறும்.
கதை 1
சமண சைவப் பூசல்
சமண, பௌத்தர்களோடு முரண்பட்டு வாதத்தில் தோற்கடித்து அவர்களை நாக்கறுத்தும், கழு ஏற்றிக் கொன்றும், கடுமையாகத் தண்டித்தும் சைவ வைணவ சமயத்தினர் நாட்டை விட்டே வெளியேற்றினர்.
இவ்வாறு சைவ சமயம் செல்வாக்குப் பெற்ற போது இங்கிருந்த பழைய கோயில் ஒன்று சிவன் கோவிலாக மாற்றப்பட்டபது. அதற்கு சமயப் பூசல் பற்றிய கதை ஒன்று ஸ்தல புராணத்தில் பதிவாகியுள்ளது.
2.கரிகால் சோழன் கதைகள்
அ.பாம்பைக் கொன்ற நந்தி சமண சமயத்தை இழித்துப் பேசிய கரிகால் சோழன் மீது சமணர்கள் பாம்பை ஏவினர். ஆனால் சிவபெருமான் அந்த பாம்பைத் தன்னுடைய நந்தியம்பெருமானை கொண்டு தடுத்துவிட்டார். இக்கதையை அப்பர் எழுதிய தாண்டகம் எடுத்துரைக்கின்றது.
ஆ. காளிக்கு விலங்கு போட்ட கதை
கரிகாட் சோழனைப் பற்றிய இன்னொரு கதையும் கோவிலின் தல புராணக் கதைகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இங்குப் பண்டைய பூர்வகுடியினரின் குல தெய்வமான பிடாரியை (பிற்காலத்தில் இவளைக் காளி என்றனர்) வணங்கி வந்த குறுநிலமன்னன் ஒருவன் கரிகாலனுடன் போர் செய்தான். அப்போது அம்மன்னனுக்குத் துணையாக காளி / பிடாரி/ கொற்றவை வந்து நின்றது.
எதிர்த்துப் போரிட்ட கரிகாலனால் கொற்றவையை வெற்றி பெற முடியவில்லை. அவன் மனம் சோர்ந்து போனது. சிவபெருமானை நினைத்து தனக்கு வெற்றி அளிக்கும்படி வேண்டினான். உடனே சிவபெருமான் நந்தி தேவரை துணைக்கு அனுப்பினார்.
நந்தி தேவர் காளி தேவியை உற்றுப் பார்த்ததும் காளிதேவி அடங்கிப் போனாள். உடனே அவள் கையில் விலங்கு போட்டு அவளைச் சிறையில் அடைத்து விட்டனர். கரிகால் சோழன் வெற்றி பெற்றான். இந்தக் கதையும் தல புராணத்தில் உள்ளது.
இ. பாம்பாட்டி கதை
கரிகாற்சோழனைப் பற்றி இன்னொரு கதையும் உண்டு. கரிகால் சோழனின் பகைவர்கள் அவனைக் கொன்று அழிக்க பெரிய நாகப் பாம்பு ஒன்றைக் குடத்துக்குள் இட்டு அவன் இருப்பிடத்தில் வைத்தனர். அவனுடைய சிவ பக்திக்கு இரங்கிய சிவபெருமான் பாம்பாட்டியாக வந்து மன்னனை பாம்பிடமிருந்து காத்தார்.
இந்தக் கதைக்கு ஆதாரமாக கோயிலின் வெளி பிரகாரத்தில் உள்ள நூற்றுக்கால் மண்டபத்தின் முன்பு விலங்கிட்ட காளியின் சிற்பம் உள்ளது. புதிய சமயங்கள் வரும்போது பழைய தெய்வங்கள் சக்தியற்றவை, வழிபடு தகுதியற்றவை என்று கதை சொல்வது சமய நடைமுறைகளில் ஒன்று. இரண்டாம் கரிகால் சோழனால் இக்கோவில் சிவன் கோவிலாக உருவமைக்கப்பட்டது
விநாயகர் சபை
திருபாசூர் வாசிச்வரர் கோவிலில் ஏராளமான விநாயகர்கள் உள்ளனர். இங்கு விஷ்ணு பிரதிஷ்டை செய்வதாக சொல்லப்படும் 11 விநாயகர்களைக் கொண்ட விநாயகர் சபை உள்ளது. தமிழகத்தில் அன்னச் சாவடி என்ற ஊரில் ஒன்பது விநாயகர் கொண்ட விநாயகர் சபை உண்டு.
திருமணத் தடை நீக்கும் திருத்தலம்
திருபாசூர் விநாயகர் சபையில் உள்ள பதினோரு விநாயகருக்கும் மாலை வேளையில் தேங்காய், பழம், அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டால் வேண்டும் வரம் கிடைக்கும். இந்த விநாயகர் சபை மகாவிஷ்ணு வழிபட்ட விநாயகர் சபை என்பதால் திருமணத் தடை நீங்கும்.
புத்திர தோஷம் உள்ளவர்களுக்கு சத் புத்திரர்கள் பிறப்பார்கள். எந்த பிரச்சினையாக இருந்தாலும் மூன்றே மாதத்தில் சரியாகும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாகும்.
கல்வெட்டு கூறும் தகவல்கள்
திருப்பாசூர் வாசீஸ்வரர் கோவிலில் 16 கல்வெட்டுகள் உள்ளன. அவை மன்னர்கள் இக்கோவிலுக்கு வழங்கிய நிவந்தங்களைத் தெரிவிக்கின்றன. ராஜராஜ சோழன் கோயில் பூசைக்காக 47 பொற்காசுகளையும் நந்தா விளக்கேற்ற 32 பசுக்களையும் முரசு வாத்தியம் சுமந்து செல்ல ஒரு எருதுவையும் அளித்தான் என்று கல்வெட்டு கூறுகின்றது.
ஒரு தேவதாசி கோயில் திரு ஆபரணத்திற்காக 30 பொற்காசுகளும் கோயில் நைவேத்தியத்திற்காக ஒரு நாளைக்கு இரண்டு படி அரிசியும் கொடுத்ததாக இன்னொரு கல்வெட்டு தெரிவிக்கின்றது. காளிங்கராயன் பத்து விளக்குகள் தொடர்ந்து எரிய 78 பொற்காசுகள் கொடுத்துள்ளான். வீரகம்பன்ன நாயக்கன் தனது தோட்டத்தையே கோவிலுக்குத் தர்மமாக எழுதி வைத்துள்ளான்.
கதை 3
தன் காதலி பெயர்க் காரணம்
பார்வதி தேவி தன் கணவனின் சொல்லை மீறி தன் தந்தை தட்சன் நடத்திய யாகத்திற்கு சென்றதனால் சிவன் அவளைப் பூலோகத்தில் போய் மானுட பிறப்பெடுக்கும்படி சபித்தார். பார்வதி பூலோகத்தில் வந்து இத்திருத்தலத்தில் இறைவனை நினைத்து அருந்தவம் இயற்றினாள். அவளது தவத்தின் உறுதியை அறிந்த சிவபெருமான் தன் காதலிக்கு திருக்காட்சி கொடுத்து ஆட்கொண்டார்.
எனவே இங்கு எழுந்தருளியிருக்கும் அன்னையின் பெயர் தன் காதலியாகும். இவளுக்கு மோகனாம்பாள், பணை முலை (பெரிய மார்புடை) நாச்சியார் என்ற பெயர்களும் உண்டு. தன் காதலி அம்மனைத் தொடர்ந்து வழிபட தம்பதியருடைய தாம்பத்தியம் சிறக்கும். ஒற்றுமை உயரும்.
சிறப்பு வழிபாடுகள்
மற்ற சிவன் கோவில்களில் இருப்பதை போலவே வாசிஸ்வரருக்கும் மகா சிவராத்திரி அன்று மிகச் சிறப்பான பூசை நடைபெறும். அன்று பஞ்சபூத உற்சவமும் உண்டு. மாத சிவராத்திரிகளிலும் சோமவாரங்களிலும் வழக்கமான சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
திருக்கல்யாணம்
திருப்பாசூர் வாசீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பத்து நாள் திருவிழா பெரிய விழாவாக நடைபெறும். அப்போது தீர்த்தவாரி சிறப்பாக நடக்கும். இவ்விழாக்களுக்கு மக்கள் பெருவாரியாக வந்து இறைவனை வணங்கி செல்வர்.
கதை 4
விநாயகரை சிவன் வழிபட்ட கதை
பௌத்தக் கோவில்கள் இருந்த இடத்தில் சிவன் கோவில்கள் கட்டப்படும் போது அங்கு யானை முகத்துடன் கூடிய கௌதம புத்தர் சிலைகளை கணபதி சிலைகளாக மக்கள் ஏற்றுக்கொள்ள சில புதிய கதைகளை கூறுவது உண்டு. அவ்வாறாக இங்கு ஒரு கதை நிலவுகின்றது.
இக்கதை சிவபெருமானின் திரிபுரம் எரித்த கதையுடன் ஒரு சிறிய பிற்சேர்க்கை ஆகும். இரும்பினாலும் தங்கத்தினாலும் வெள்ளியினாலும் கோட்டை கட்டி அட்டூழியங்கள் செய்து வந்த மூன்று அசுரர்களின் ஆணவத்தை ஒழிக்க சிவபெருமான் தேரேறி போருக்குப் புறப்பட்டார்.
அவசரத்தில் புறப்பட்ட சிவபெருமான் விக்கினங்கள் தீர்த்து வைக்கும் விநாயகமூர்த்தியை வழிபடாமல் சென்றுவிட்டார். திரிபுரத்தை அழித்து திரிபுராந்தகராக வெற்றி வாகை சூடி திரும்பிய சிவபெருமானைத் தடுத்து நிறுத்தி விநாயகர் ஏன் என்னை வணங்காமல் சென்றீர் என்று கேட்டார்.
தன் தவறை உணர்ந்த சிவபெருமான் ஒன்றுக்கு பதினொன்றாக விநாயகர்களைச் செய்து இவ்விடத்தில் ஸ்தாபித்து விநாயகர் சபையை உருவாக்கினார். ஒரே ஏகாதச விநாயகர் வழிபாட்டைத் தொடங்கி வைத்தார்.
கதை 5
பாலாஜிக்கு வழிகாட்டிய விநாயகர்
திருபாசூர் வாசிஸ்வரர் கோயிலில் உள்ள பதினோரு விநாயகர்களின் சிறப்பை உணர்த்தும் வகையில் மற்றொரு கதையும் வழங்குகிறது. திருப்பதியில் வெங்கடேச பெருமாள் தன் திருமணத்திற்கு குபேரனிடம் வாங்கிய கடனை அடைக்க வழி தெரியாமல் திண்டாடிய போது திருப்பாசூர் வந்து விநாயகர் சபை வழிபாட்டை மேற்கொண்டார்.
இங்கு வந்து 11 விநாயகர் இடமும் தன்னுடைய ஆற்றாமையைக் கூறி அழுது வேண்டியதும் விநாயகரின் ஆலோசனையால் கல்யாண கடனை அடைக்க அவருக்கு வழி பிறந்தது. திருப்பதி வெங்கடேச பெருமாளிடம் பாசூர் விநாயகர் குபேரன் கடனை அடைக்க இயலாத காரணத்தை எடுத்துரைத்தார்.
பெருமாள் மச்ச அவதாரம் எடுத்து அசுரர்களை கொன்ற போது அவருக்கு கடும் தோஷம் ஏற்பட்டது. அதனால் அவருக்கு வரமாகக் கிடைத்திருந்த 16 வகை செல்வங்களும் 11 வகை செல்வங்களை இழந்துவிட்டார். இனிப் பெருமாளிடம் இருப்பது ஐந்து வகை செல்வங்கள் மட்டுமே.
அதைக் கொண்டு அவரால் குபேரனின் கடனை அடைக்க இயலாது. எனவே இழந்த 11 வகை செல்வங்களையும் மீண்டும் பெற இங்குள்ள விநாயகர் சபையின் 11 விநாயகர்களையும் 11 தேங்காய் பதினோரு பழம் 11 அருகம்புல் மாலை 11 நெய் தீபம் கொண்டு மூன்று மாதங்கள் தொடர்ந்து வணங்கி வந்தார். அதன் பின்பு அவரது கடனை அடைக்க வழி பிறந்தது.
விநாயகர் துதியின் பலன்
தொழிலில் நஷ்டம், கடன் தொல்லை, வரவுக்கு மீறிய செலவு போன்ற துன்பங்களால் அவதிப்படுவோர் திருப்பாசூர் வாசீஸ்வரர் கோயிலில் உள்ள விநாயகர் சபையின் 11 விநாயகர்களை தொடர்ந்து வழிபட்டு வந்தால் கதிரவனைக் கண்ட பனி போல அவர்களின் துன்பங்கள் காணாமல் போய்விடும். விநாயகர் சபை வழிபாடு இழந்த செல்வத்தைத் திரும்பப் பெற்றுத் தரும்
கதை 6
தாழம்பூ உச்சியில் ஏறிய கதை
பிரமனும் பெருமாளும் சிவபெருமானின் அடிமுடி தேடிய போது பிரம்மன் சிவனின் தலை முடியின் உச்சியைக் கண்டதாகத் தாழம்பூவை பொய் சாட்சி சொல்லும்படி கூறினார். தாழம்பூவும் பொய் சாட்சி கூறியது. இதனால் சிவபெருமான் கோபம் கொண்டு பிரம்ம தேவனுக்கு கோவிலோ பூசையோ கிடையாது என்று சாபமிட்டார். அதுபோல தாழம்பூவை கோவில்களிலும் பூசைகளிலும் வைக்கக் கூடாது என்றும் சாபம் இட்டார்.
சிவபெருமானின் சாபம் கேட்டு அஞ்சிய தாழம்பூ தன் தவறை உணர்ந்து விட்டதாகச் சொல்லி கெஞ்சி மன்றாடியது. தாழம்பூவின் கண்ணீருக்கு இரங்கிய சிவபெருமான் மகா சிவராத்திரி அன்று மட்டும் தன் உச்சியில் தாழம் பூவை வைத்து வழிபட அனுமதி கொடுத்தார்.
இக்கோவிலில் மகா சிவராத்திரி நாளில் சிவபெருமானின் உச்சியில் தாழம் பூவை வைத்து பூஜை செய்கின்றனர். இப் பூசையை காண்பவர்களுக்கு ஆணவம் மாயை கருமம் என்ற மும்மலங்களும் நீங்கி சிவன் அருள் கிட்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |