பித்ரு தோஷம் போக்கும் வல்லநாட்டுச் சித்தர் சிவன் கோயில்

By பிரபா எஸ். ராஜேஷ் Jul 04, 2025 08:00 AM GMT
Report

திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடிக்குப் போகும் வழியில் பாறைக்காட்டில் உள்ள சிவன் கோவில் வல்லநாட்டு சித்தர் எழுப்பிய சிவன் கோவிலாகும். இக் கோவிலில் வேண்டும் வரம் கிடைக்கும். எப்போதும் அன்னதானம் நடந்து கொண்டே இருக்கும். இக்கோவிலுக்கு வருவோருக்கு வயிற்றுப் பசியும் உடல் நோயும் மனக் கவலையும் நீங்கும்.  

சிவன் கோயிலில் வல்ல நாட்டு சித்தர் ஏற்றி வைத்த ஏழு தீபங்கள் நந்தா விளக்காக இன்றும் எரிந்து கொண்டிருக்கின்றன. அங்கு  இவர் தாய் தந்தையார் சமாதியும் சித்தப்பா சின்னம்மா மனைவி ஆகியோரின் சமாதிகளும் உள்ளன. இவர் மணிகண்டன் என்ற யானையை வளர்த்து வந்தார். அந்த யானையின் உயிர் அடங்கிய போது அதுவும் இங்கேயே புதைக்கப்பட்டது  

பித்ரு தோஷம் போக்கும் வல்லநாட்டுச் சித்தர் சிவன் கோயில் | Vallanadu Siddhar Temple

 பிறப்பும் வளர்ப்பும்:

சாது சிதம்பர சாமிகள் என்று அனைவராலும் போற்றப்படும் வல்லநாட்டுச் சித்தர் நெல்லை மாவட்டத்தில் வல்லநாடு என்ற ஊரைச் சேர்ந்தவர் இவர் வள்ளலாரின் வழிவந்த சித்தர் ஆவார். இவர் மூன்றாம் வகுப்பு வரை படித்துவிட்டு பின்பு ஆடு மேய்த்து வந்தார். தினமும் தன் தாய் தந்தையரை வணங்கி 108 தோப்புக்கரணங்கள் போட்டுவிட்டு பின்பு தன்னுடைய அன்றாட செயல்களை செய்யத் தொடங்குவார்.

   1922 ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் இருபதாம் நாள் ஐப்பசி மாதம் அமாவாசை அன்று சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த வல்ல நாட்டுச் சித்தருக்கு இவருடைய பெற்றோர் இவருக்கு லட்சுமி என்ற பெண்ணைத் திருமணம் செய்து வைத்தனர். ஆனால் திருமணத்தில் வாழ்வில் ஈடுபாடு இல்லாத இவர் அன்றிரவே தன் மனைவியைப் பிரிந்து சென்று விட்டார்.  

மாளிகைபுரத்து அம்மன் கோயில்: சபரிமலை ஐயப்பனுடன் இணைந்த அருள்!

மாளிகைபுரத்து அம்மன் கோயில்: சபரிமலை ஐயப்பனுடன் இணைந்த அருள்!

அன்னதானமும் கொலை முயற்சியும்:

வள்ளலாரின் அன்பு நெறியைப் பின்பற்றும் இவர் இளம் வயது முதல் அன்னதானம் செய்யத் தொடங்கினார். மறவர் குலத்தில் பிறந்த இவர் தினமும் அன்னக்காவடி எடுத்து வீதி வீதியாகச் சென்று அரிசி வாங்கி சமைத்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்து வந்தார்.

இதனை இவர் சாதியினர் விரும்பவில்லை. தன் சாதிக்கு இழுக்கு ஏற்படுத்துகிறார் என்ற நோக்கத்தில் இவரைக் கொல்லவும் அவர்கள் துணிந்தனர். அவர்கள் இரவில் இவரது அறைக்குள் கொலை செய்யும் நோக்கத்துடன் நுழைந்த போது இவர் தன் உடம்பை ஒன்பது துண்டுகளாகப் பிரித்துக் கிடத்தி நவ யோகம் என்ற யோகத்தில் ஆழ்ந்திருந்தார்.

அதனைக் கண்டு அஞ்சி கொல்லப்போனவர்கள் திரும்பி வந்து விட்டனர். மறுநாள் காலை ஆற்றில் குளித்து விட்டு வந்த சித்தர் தன்னைக் கொல்ல வந்தவர்களைப் வழியில் பார்த்து 'என்ன சாமி நேற்று நீங்கள் நினைத்தது நடக்கவில்லையா' என்று கேட்டார். அவர்கள் அரண்டு போயினர்.

பித்ரு தோஷம் போக்கும் வல்லநாட்டுச் சித்தர் சிவன் கோயில் | Vallanadu Siddhar Temple

கோயில்களும் பூசையும்:  

பக்தி இயக்கக் காலத்திற்குப் பிறகு சைவ வைணவ சமயங்களின் பேரெழுச்சியால் தோன்றிய புதிய சைவ வைணவக் கோவில்களில் பார்ப்பனர்கள் பூசாரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்கள் சமஸ்கிருதத்தில் ஸ்லோகங்களையும் மந்திரங்களையும் சொல்லி பிரார்த்தனை செய்தனர்.

இவ்வாறு  குடும்ப விழாக்களிலும் கோவில் விழாக்களிலும் சமஸ்கிருத மொழியைப் பயன்படுத்தியதால் மக்களுக்கு சமஸ்கிருத மந்திரங்களும் சாமிகளும் அந்நியமாகிப் போயின. 

தமிழில் வழிபாடு:

சம்ஸ்கிருத மொழி பயன்பாட்டை வெறுத்த அருட்திரு இராமலிங்க வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை என்ற தமிழ் மந்திரத்துடன் ஜோதி வழிபாட்டை வலியுறுத்தினார். இறைவன் ஒளி வடிவானவன் அவனுக்கு உருவம் தேவையில்லை என்று மக்களிடம் கருத்துப் பரப்பி வந்தார்.

வள்ளலார் வழியைப் பின்பற்றி வந்த வல்லநாட்டுச் சித்தரும் கோயில் விழாக்களையும் குடும்ப விழாக்களையும்  தமிழில் நடத்தினார். இவருடைய அடிச்சுவட்டைப் பின்பற்றுகிறவர்கள் தான் இன்றைக்கும் கோவில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும், தமிழில் பூசைகள் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர் .  

திருமண வரமருளும் வெள்ளலூர் சிவன் கோயில்

திருமண வரமருளும் வெள்ளலூர் சிவன் கோயில்

விளக்குப் பூசை:

வல்ல நாட்டு சித்தர் குடும்ப விழாக்களையும் கோயில் விழாக்களையும் வள்ளலாரின் சன்மார்க்க நெறியில் நடத்தினார். முதலில் கோ பூஜை நடத்துவார். பின்பு கணபதி பூசை விநாயகர் அகவல் சொல்லி நடத்துவார். அதனைத் தொடர்ந்து 108 அல்லது 1008 என்று விளக்குப் பூசை நடத்துவார். தமிழ் வழி பூசையில் ஆர்வம் கொண்ட இவர் தமிழில் பக்திப் பாடல்களை பாடுவார்.

தேவாரம், திருவாசகம், சிவபுராணம், திவ்ய பிரபந்தம், அருட்பெருஞ்ஜோதி அகவல், விநாயகர் அகவல் போன்ற தமிழில் உள்ள பக்திப் பாடலை பாடுவார்.   விளக்குப் பூசையின் போது  வல்லநாட்டுச் சித்தர் விமோசனம் என்ற பெயரில் அருள் வாக்கு எடுத்துரைப்பார்.

தீராத வியாதிகளைத் தீர்த்து வைத்தார் உலகெங்கும் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக மிகப்பெரிய அளவில் அன்னதானங்களையும் விளக்கு பூசைகளையும் நடத்தினார். இவர் விளக்கு பூசை செய்யும் இடங்களில் தண்ணீரில் விளக்கு எரியச் செய்தார்.  

பித்ரு தோஷம் போக்கும் வல்லநாட்டுச் சித்தர் சிவன் கோயில் | Vallanadu Siddhar Temple

யானையும் பாம்பும்:  

இவர் சதுரகிரி மலைக்குச் சென்றபோது அங்கு ஒரு ஒற்றைக்கொம்பன் யானையுடன் நட்புக் கொண்டார். யானயின் மத்தகத்தின் மீது விளக்கேற்றினார். வல்லநாட்டு சித்தர் பல அதிசயங்களை செய்து காட்டினார் நாகப்பாம்பும் இவரும் ஒரே கலசத்தில் உணவருந்தினர். சதுரகிரியில் இருந்து ஒரு வெள்ளை யானையை தன் இருப்பிடத்திற்கே வரவழைத்துக் காட்டினார்.

  பாம்பும் சித்தரோடு நட்புறவாக இருந்தது. சிறுவயது முதல் இவர்  தன் தந்தையார் செய்து வந்த மருத்துவத் தொழிலில் ஆர்வம் காட்டினார். ஒரு நாள் அவருடைய அப்பா வெளியூருக்கு சென்று இருந்த போது பாம்பு தீண்டிய ஒரு நபரை இவர்களின் மருத்துவக் குடிலுக்கு தூக்கிக் கொண்டு வந்தனர்.

பாம்புக் கடி விஷத்தை இவரே இறக்கி சுகப்படுத்தினார். அன்று முதல் இவர் எல்லோராலும் சிறந்த மருத்துவர் என்று போற்றப்பட்டார்.  ஒரு முறை உடுக்கன் பாளையம் என்ற ஊரில் ஆறுமுக கவுண்டர் தோட்டத்தில் இவர் 1008 விளக்கு பூசை செய்து கொண்டிருந்தபோது அங்கு ஒரு கருநாகம் வந்து கூடியிருந்த 15000 பேரில் யாருக்கும் எவ்வித தொந்தரவும் நேராத வகையில் ஓரமாக ஊர்ந்து சென்று பூசை நடக்கும் இடத்திற்கு மேலே போய் சுருண்டு படுத்துக்கொண்டது.

இந்தப் பூசைக்கு வளையாபதி சாமி, மைனர் சாமி, பச்சை வேட்டி சாமி, திருவலம் சாமி போன்ற பல சாமிகள் வந்திருந்தனர். அனைவரும் இந்த அதிசயத்தைக் கண்டு வணங்கினர். நாக உருவில்  வந்திருப்பவர் மிகப்பெரிய யோகி, என்று வல்லநாட்டு சித்தர் மக்களிடம் தெரிவித்தார். உடனே பீர் முகமது பாடிய  

உற்றவர் பாதம் உணர்ந்திடு நாளில் ஒரு பொருளைப்
பற்றிடு வேறு பழக்கறியா வானுலகில்
கற்றவரோடு கலந்துரு வேளையில், அவனுக்குச்
சித்தனும் பாம்பும் மாறாகத் தரிசிப்பேனே
என்ற பாடலைப் பாடினார்.

மறுநாள் அவருடைய சிஷ்யர்கள் நேற்று நாகமாக வந்தவர் யார் என்று கேட்டபோது அவர் ஐயாயிரம் வருடத்திற்கு முன்பு ஐவர் மலையில் ஒரு சுனை அருகில் வாழ்ந்த சித்தர் என்று தெரிவித்தார்  

மருதமலை முருகன் கோயில்: ஒரு ஆன்மீகப் பயணம்

மருதமலை முருகன் கோயில்: ஒரு ஆன்மீகப் பயணம்

உயர் சாதியினர் கொடுமை:

வல்லநாட்டு சித்தர் பல அதிசயங்களை செய்து வந்த காலத்தில் அவருக்கு உயர் சாதியினனால் பல கொடுமைகளும் இழைக்கப்பட்டன. வல்லநாட்டு சித்தர் மறவர் இனத்தைச் சேர்ந்தவர். ஆனால் அவர் சாதி மத வேறுபாடு இன்றி மக்களின் மனக் கவலைகளையும் நோய்களையும் தீர்த்து வைத்தார்.ஆனால் உயர் சாதியினர்  இவருக்கு மிகுந்த தொல்லை கொடுத்து வந்தனர்

  ஒரு நாள் மாடு மேய்த்தபடி செருப்புக் காலுடன் வந்த சித்தர் உயர் சாதியினரின் தெருவுக்குள் தன்னை மறந்து நுழைந்துவிட்டார். இதை கண்டதும் உயர் சாதிக்காரர் ஒருவர் அவரை கண்டபடி திட்டிவிட்டார். அன்று இரவே அவருடைய மனைவியைப் பாம்பு கடித்து விட்டது.

பாம்பின் விஷத்தை இறக்க இவரிடம் தான் தூக்கிக் கொண்டு வந்தனர்  'உன்னைth திட்டியவரின் மனைவி.  நீ அவளைக் காப்பாற்றாதே' என்று ஊரார் இவருக்கு துர்ப்போதனை செய்தனர். ஆனால்  இவரோ 'நான் ஒரு மருத்துவன்.

நோயாளி யார் எவர் என்று நான் பார்க்கக் கூடாது. நோயைத் தீர்ப்பது தான் என் கடமை' என்று சொல்லி விஷத்தை இறக்கினார். அதன் பின்னர் உயர்சாதியினரும் அவரை சித்தர் என்று ஏற்றுக் கொண்டனர்.  

குஷ்டரோகிகள் குணமடைந்தனர்:

வல்லநாட்டு சித்தர் குஷ்டரோகிகளை குணமாக்குவதில் வல்லவர். பொதுவாக குஷ்டரோகிகள் பாவம் செய்தவர்கள் என்று அக்காலத்தில் அவர்களை ஊரை விட்டு குடும்பத்தை விட்டு விலக்கி வைத்து விடுவார்கள். ஆனால் சித்தரோ அவர்களின் நோயை இரண்டு மூன்று நாட்களிலேயே குணப்படுத்தி விடுவார் என்று நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.

வேலூர் திரௌபதி அம்மன் கோயில்: மகாபாரதத்தின் பக்திமயமான மையம்

வேலூர் திரௌபதி அம்மன் கோயில்: மகாபாரதத்தின் பக்திமயமான மையம்

சமாதியில்:

வல்ல நாட்டு சித்தர் அடங்கிய சமாதியில் இன்றும் பக்தர்கள் குருபூஜை செய்து வருகின்றனர்.  

சிவ சூரியன்:

வல்லநாட்டுச் சித்தர் தான் கட்டிய பாறைப்பட்டி  சிவன் கோவிலில் முதன் முறையாக நவகிரகப் பிரதிஷ்டை செய்தார். இதனால் இச் சிவன் கோவில் மக்கள் மத்தியில் பிரசித்தி பெற்றது. இங்கு மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சூரிய ஒளி சிவன் மீது பட்டு வணங்கிச் செல்வதைப் பார்க்கலாம்.

இத்தகைய சிவனை சிவ சூரியன் என்றும்  கோயில்களை பாஸ்கர க்ஷேத்திரம் என்ரம் அழைப்பர். இங்கு சூரிய தோஷம், பித்ரு தோஷம் உள்ளவர்கள் தொடர்ந்து வந்து வணங்கிச் செல்ல அத் தோஷம் நீங்கும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.



+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US