திருப்பதி செல்லும் பக்தர்களே உஷார்- தெரியாமல் இதில் சிக்கிக்கொள்ளாதீர்கள்
உலகில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாக திருப்பதி ஏழுமலையான் ஆலயம் இருக்கிறது. இங்கு உலகில் பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்கிறார்கள். அப்படியாக, திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வது என்பது அவ்வளவு எளிது இல்லை, காரணம் பக்தர்கள் கூட்டம் எப்பொழுதும் நிறைந்தே காணப்படும்.
அதனால் பக்தர்களின் வசதிக்கு ஏற்ப இலவச தரிசனம், சிறப்பு தரிசனம் என திருக்கோயில் ஏற்பாடு செய்து இருக்கிறார்கள். சமயங்களில் சுவாமியை பலமணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலையும் இருக்கிறது.
அப்படியாக, யாருக்குத்தான் சுவாமியை வெகு விரைவில் அதுவும் மிக அருகில் தரிசனம் செய்யும் ஆசை இருக்காது. இந்த ஆசையை பயன்படுத்தி திருப்பதியில் ஒரு மோசடி நடந்து இருக்கிறது. அதாவது ஏழுமலையானை தரிசனம் செய்யும் டிக்கெட்களை கள்ள மார்க்கெட்டில் வியாபாரம் செய்து ஒரு வருடத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் மோசடி நடந்து இருப்பதாக சொல்கிறார்கள்.
சமீபத்தில் மும்பையை சேர்ந்த பக்தர் அவரின் நான்கு நண்பர்களுடன் சேர்ந்து சுவாமி தரிசனம் செய்ய சென்று இருக்கிறார்கள். அவரகள் விஐபி பிரேக் தரிசன டிக்கெட் கிடைக்காத காரணத்தினால் இடைத்தரகர்கள் மூலம் டிக்கெட் ஏற்பாடு செய்ய முடிவு செய்து இருக்கிறார்கள்.
அந்த வேளையில் திருப்பதி அருகே உள்ள சந்திரகிரியில் ராக் ஸ்டார் ஈவண்ட் என்ற பெயரில் நிகழ்ச்சிகளை நடத்தி வரும் நிறுவனம் ஒன்றை அணுகி அசோக் ரெட்டி என்பவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விஐபி பிரேக் தரிசன டிக்கெட் வாங்கி கொடுக்குமாறு கேட்டு உள்ளனர்.
அப்பொழுது 5 விஐபி பிரேக் தரிசன டிக்கெட் வாங்கி தர வேண்டும் என்றால் அதற்கு 4 லட்சத்தி 1750 ரூபாய் பணம் ஆகும் என்று சொல்லி இருக்கிறார். மும்பை பக்தரோ ஸ்வாமியை நேரில் சென்று தரிசனம் செய்தால் போதும் என்ற எண்ணத்தில் அந்த நபர் கேட்கும் பணத்தை வங்கி கணக்கின் வழியாக கொடுத்து இருக்கிறார்.
ஆனால் வங்கியில் பணம் சேர்ந்த பிறகு அசோக் ரெட்டி என்பவர் தன்னுடைய செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார். மும்பை பக்தர்கள் எப்படியாவது அந்த நபரை பார்த்து டிக்கெட் வாங்கி விடலாம் என்று முயற்சி செய்து இருக்கிறார். ஆனால் அசோக் ரெட்டி கிடைக்கவில்லை.
பிறகு தாங்கள் ஏமாற்றம் அடைந்ததை உணர்ந்து மும்பை பக்தர்கள் தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகளிடம் அளித்த புகார் அளித்தனர். விசாரணையின் பொழுது அசோக் ரெட்டி ஏமாற்றியதை விஜிலன்ஸ் அதிகாரிகள் உறுதி செய்து அவரை தேடி பிடித்து அசோக் ரெட்டியின் தொலைபேசி மற்றும் வங்கி கணக்குகளை கைப்பற்றினர்.
அவர் கணக்குகளை ஆராய்ச்சி செய்து பார்த்த பொழுது ஒரு வருடத்தில் அசோக் ரெட்டி ஒரே ஆண்டில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் தரிசன டிக்கெட் கள்ள சந்தை வியாபாரத்தில் அவர் சம்பாதித்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிறகு விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார் நீதிபதியின் உத்தரவின் பெயரில் அசோக் ரெட்டியை சிறையில் அடைத்தனர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







