கோணி பைக்குள் சிவபெருமான்: சுவாரசிய சம்பவம்
சிவன் என்றாலே ஆனந்தம் தான். சிவ பக்தர்கள் எல்லாருக்கும் வாழ்க்கையில் மகிழ்ச்சி என்னவென்று கேட்டால் நமச்சிவாய என்று சொல்வதும், அதை கேட்பதும் எம்பெருமானை கண்ணால் பார்த்து ரசித்து மகிழ்வதும் மட்டுமே என்பார்கள்.
அப்படியாக ,வியாபாரியான சிவபக்தர் ஒருவர் சிவன் கோவிலுக்கு செல்லாமல் சிவபெருமானை வணங்காமல் உணவு உண்ண மாட்டேன் என்று வாழ்ந்து வந்தார்
அப்படி இருக்க ஒருநாள் தன் வியாபாரத்திற்காக அவர் தன் மைத்துனருடன் காட்டு வழியாக வெளியூர் பயணம் செல்ல நேரிட்டது.
அப்பொழுது சற்று களைப்பு காரணமாக ஓரிடத்தில் இருவரும் ஓய்வு எடுத்து மறுநாள் செல்லலாம் என்று தங்கினார் .
அவரது மைத்துனர் காலையில் சீக்கிரம் எழுந்து அருகில் சிவன் கோயில் ஏதேனும் இருக்கிறதா? என்று பார்க்க எதுவும் இல்லை உடனே அவருக்கு கவலை, ஐயோ! தன் மாமா சிவபெருமானை வணங்காமல் உணவு உண்ணமாட்டாரே என்று நினைத்து வருத்தம் கொள்ள, அவருக்கு ஒரு யோசனை தோன்றியது.
அதாவது, அவரிடம் இருந்த சாக்கு ஒன்றில் மண்ணை நிரப்பி சிவலிங்கம் போல் செய்து பூக்களால் அலங்கரித்து ஓர் இடத்தில் வைத்தார், பார்ப்பதற்கு சிவலிங்கம் போலவே இருந்தது
உடனே தனது மாமா எழுந்த உடன் அவர், மாமா பார்த்தீர்களா உங்கள் அதிஷ்டம் இந்த காட்டுக்குள் சிவலிங்கம் இருக்கிறது.
நீங்கள் சிவபெருமானை வணங்காமல் சாப்பிட மாட்டீர்கள் அல்லவா? உங்களுக்காவே சிவன் இங்கேயும் இருக்கிறார், வாருங்கள் நாம் குளித்து விட்டு சிவலிங்கத்தை தரிசனம் செய்து விட்டு, பின் கட்டு சாதம் சாப்பிடலாம் என்று சொல்ல,
மாமாவும் சந்தோஷமாக சரி என்று காலை கடன் முடித்து குளித்து விட்டு சிவ லிங்கத்தை மனதார வழிபட்டு கட்டு சாதம் சாப்பிட்டு தங்கிய இடத்தில் இருந்து கிளம்பிவிட்டனர்
மைத்துனருக்கு மனதில் சந்தோசம் தன் மாமா சிவனையும் வணங்கிவிட்டார் காலை உணவும் சாப்பிட்டு முடித்தார் என்று.
ஆனால், போகும் வழியில் தன் மாமாவிடம், மாமா நாம் இப்பொழுது சிவ தரிசனம் செய்தோம் அல்லவா அந்த லிங்கம் உங்களுக்காகவே நான் சாக்கு பையில் மண் நிரப்பி செய்தேன் உங்களுக்காக செய்தேன். என்னை மன்னித்துவிடுங்கள்!!! என்று சொல்ல மாமா அதை நம்பாமல், பொய் சொல்லாதே? நான் உண்மையில் பரமேஸ்வரனையே சிவலிங்க வடிவில் தரிசித்து மகிழ்ந்தேன்.
மைத்துனரும் சரி, நம்பவில்லை என்றால் என்னுடன் வாருங்கள் என்று அவர் சாக்கு பையில் உருவாக்கிய சிவலிங்கத்தை பார்க்க செல்ல அங்க உண்மையில் சிவலிங்கமாக எழுந்தருளி இருந்தது.
அதாவது லிங்கத்தை அங்கு இருந்து நகற்ற முடியவில்லை, இதை கண்டு இருவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.
உண்மை பக்திக்கு கடவுள் எப்பொழுதும் துணை இருப்பார், பல அதிசயங்கள் நிகழ்த்துவார் என்பதற்கு இந்த கதையும் ஒரு சாட்சி.
இந்த சம்பவம் நடந்த இடம் திருப்பூர் மாவட்டம் சேவூர் அருகிலுள்ள கூழைய கவுண்டன் புதூர். இங்கு மொக்கணீஸ்வரர் கோயில் உள்ளது. அதாவது மொக்கணி என்பதற்கு சாக்குப்பை என்று பொருள்.