தினம் ஒரு திருவாசகம்
சிரிப்பார் களிப்பார் தேனிப்பார் திரண்டு திரண்டு உன் திருவார்த்தை,
விரிப்பார் கேட்பார் மெச்சுவார் வெவ்வேறு இருந்து உன் திருநாமம்,
தரிப்பார்`பொன்னம்பலத்து ஆடும் தலைவா' என்பார் அவர் முன்னே
நரிப்பு ஆய நாயேன் இருப்பேனோ? நம்பி! இனித்தான் நல்காயே!
விளக்கம்
உன்னிடத்திலுற்ற காதலினாலும், நீ தரும் பேரானந்த அனுபவத்தினாலும் தேனுண்டுக் களித்த வண்டுபோல் மயங்கியும், அவ்வனுபவ இனிமையில் திளைத்தும், உன் திருவடியின்பம் கிடைத்த மகிழ்வில் சிரித்தும், பரவசத்தால் தன்னிலையற்று வீழ்ந்து புரண்டும், உன்னருளால் உற்ற பக்குவத்தன்மையால் வெவ்வேறு இறையனுபவ நிலைக்கு ஆட்பட்டு, அவ்வனுபவத்தினூடாக இவன் இத்தன்மையன் என குறிக்கும்படியாக இறைவனுக்குப் பேர்சூட்டி, அந்தப் பெயர்களை நெஞ்சில் எப்பொழுதும் நீங்காதவாறு தரித்துத் தியானித்தும், உனது அருளின் திறத்தை, உனது திருவடிகளின் பெருமையை, நீ நல்கும் பேரின்பப் பெரும்பொருள் பருகிச் சுவைத்த இனிப்பை வாயாற விரித்துரைத்தும், அவ்விதம் அன்பர் விரித்துரைப்பதைக் காதாறக் கேட்டும், ஆகாவென அள்ளூறிப் புகழ்ந்தும், அரனே! சிவமே! பரமே!
பொன்னம்பலத்தில் ஆடும் எங்கள் தலைவா! என்று பல்வேறு விதமாய் உன் எண்ணிறந்த திருநாமங்களை மனமுருகிச் சொல்லிப் புகழ்ந்தும் பேரானந்தத்தில் திளைத்தின்புறும் மாசிலா மனமுடைய எளிய பழ அடியார்கள் முன்னிலையில், இவை ஏதும் பெற்றறியாத இந்த நாயேன், பசுமந்தையில் புகுந்த நரியைப் போல் உனது பெரும் பக்தனெனக் காட்டிக்கொள்ளும் தந்திரத்தனாய் இருத்தல் முறையோ?! அழகோ?! இனியேனும் எமக்கு இரங்கி, கருணையொடு அருள்தருவாய் பெருமானே!
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |