தைப்பூச திருநாளில் விரதம் இருக்கப் போறீங்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்
இந்து மத பண்டிகைகளில் தைப்பூசத் திருநாள் மிகச்சிறப்பாக கொண்டாட கூடிய நாளாகும். அதாவது உலகம் தோன்றிய தினமே தைப்பூச திருநாளாக கொண்டாடப்படுவதாக சொல்லப்படுகிறது. ஆதலால் தை மாதம் தெய்வீகமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் தான் பூச நட்சத்திரமும் பௌர்ணமியும் ஒன்று சேர்ந்து வருகிறது.
இந்த தினத்தை தான் தைப்பூசமாகவும் கொண்டாடப்படுகிறது. மேலும் முருக பெருமான், சிவபெருமான், குருபகவான் என அனைத்து தெய்வங்களையும் வழிபாடு செய்து அவர்களுடைய அருளை பெறுவதற்கு மிகச்சிறந்த நாளாகவும் விளங்குகிறது.
அதிலும் குறிப்பாக இந்த நாளில் முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்தால் நிச்சயம் கேட்ட வரத்தை முருகப்பெருமான் வழங்குவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அப்படியாக 2026 ஆம் ஆண்டு தைப்பூசம் பிப்ரவரி 1 ஆம் தேதி வர இருக்கிறது.

இந்த நாள் முழுவதும் பூச நட்சத்திரம் இருப்பதால் காலை முதல் மாலை வரை முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்து உபவாசம் செய்யவேண்டும். விரதம் இருப்பவர்கள் காலை மற்றும் மத்திய வேளையில் பால் பழம் மட்டும் சாப்பிட்டு மாலை நேரத்தில் முருகன் ஆலயம் சென்று வழிபாடு செய்வது சிறந்த பலனை கொடுக்கும்.
முருக பக்தர்கள் பலர் தைப்பூச விரதத்தை 48 நாட்கள் இருப்பது வழக்கம். மார்கழி மாதத்தில் தொடங்கி தைப்பூசம் வரை விரதம் மேற்கொள்வார்கள். மேலும் அன்னை பார்வதி தேவி முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது இந்த நன்னாளில் தான்.

அதனால் இந்த நாளில் நாம் முருகப்பெருமானையும் அவருடைய வேலையும் வணங்குவது மிகச்சிறந்த பலனை கொடுக்கும் என்று சொல்கிறார்கள். மேலும், முருகப்பெருமான் அந்த ஞானவேலுடன் தான் அசுரவதம் புரிந்தார் என்பது வரலாறு.
ஆக, தைப்பூச தினத்தன்று முருகப்பெருமானையும் அவருடைய வேலையும் வழிபடுவதன் வழியாக தீய சக்திகள் நம்மை நெருங்காது. நீண்ட நாட்கள் இருக்கின்ற வறுமை விலகும். செல்வ செழிப்பு உண்டாகும் என்பது ஐதீகம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |