மகாபாரதம்: சகுனிக்காக பாண்டவர்களிடம் சண்டையிட்ட கிருஷ்ணர்
இந்த உலகம் அழிந்தாலும் மகாபாரதம் என்னும் பெருங்காவியம் அழியப்போவதில்லை. அத்தனை சிறப்புகள் கொண்ட மகாபாரதத்தில் நம் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள முடியும்.
அப்படியாக, மகாபாரதத்தில் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் நமக்கு ஒவ்வொரு விஷயங்களை உணர்த்துகிறது. அதில் பாரத போர் உருவாக முக்கிய காரணமாக இருந்தது சகுனி என்றே சொல்லலாம்.
இந்த சகுனியை பலரும் தீயவர் என்று தான் நினைத்து கொண்டு இருக்கின்றோம். ஆனால், பகவான் கிருஷ்ணர் போரின் முடிவில் சகுனிக்காக பாண்டவர்களிடம் சண்டையிடுகிறார். அதற்கு பின்னால் இருக்கும் காரணம் பற்றி தெரிந்து கொள்வோம்.
காலம் வேகமாகை ஓடியது சகுனி அவனின் தந்தையின் எண்ணப்படியே புத்தி சாதுரியத்தால் கௌரவர்களோடு உறவாடி, பாண்டவர்களை எதிரியாக்கி, பீஷ்மர் அவன் வலிமையால் காத்து நின்ற குலத்தினை வேறோடு அழித்து போர்க்களத்தில் தானும் மாண்டு போனான் சகுனி.
பிறகு அரண்மனைக்குள் போர் முடிந்த கைகளோடு, போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் மன குமுறல் நீங்கும் பொருட்டு பெரிய யாகம் நடத்தி கொண்டு இருந்தார்கள். அந்த சமயம் கிருஷ்ணர் அரண்மைக்குள் நுழைகிறார். கிருஷ்ணரை தர்மன் வரவேற்கின்றான்.
உள்ளே வந்த கிருஷ்ணர், யாகம் தொடங்கலாமே! அதோடு சொர்க்கத்தை அடைய அவரவர்க்குரிய பாகத்தை தயார் நிலையில் உள்ளது தானே, என்று கேட்டார் கிருஷ்ணர். அதற்கு அர்ஜுனன், எல்லாம் தயார் நிலையில் தான் உள்ளது கண்ணா. அந்த வரிசையில் முதலில் பீஷ்மர் பிறகு துரோணர் என்று தயராக இருக்கிறது. தங்கள் வருகைக்காகத்தான் காத்திருந்தோம் என்றான்.
யாகத்தில் முதல் வேண்டுதலில் யார் பெயரை சொன்னாய் அர்ஜுனா என்று கிருஷ்ணர் சந்தேகத்துடன் கேட்டார் . அதற்கு அர்ஜுனன் குலத்தின் தோன்றலுக்கு காரணமான பீஷ்மரின் பெயரில்தான் என்றான்.
இது போரில் வீர மரணம் அடைந்தவர்களுக்காக நடத்தும் யாகம் என்பதால் அதில் முதலில் சகுனியின் பெயர் தானே இருக்க வேண்டும் என்றார் கிருஷ்ணர். பாண்டவர்கள் அதிர்ந்து விட்டனர். அவர்கள் கிருஷ்ணர் வாயில் இருந்து இப்படி ஒரு செய்தி வரும் என்று எதிர்பார்க்கவே இல்லை.
அந்த கோபத்தில் பீமன் பற்களை கடித்துக்கொண்டு கதாயுதம் தூக்கினான் , அர்ஜுனனின் கை தானாக காண்டீபன் நோக்கிச் சென்றது, நகுலன் சகாதேவன் இருவருக்கும் கண்கள் சிவந்தன. ஆனால், அவர்களுக்கு எதிரில் கண்ணன் அமைதியாக சிரித்து கொண்டே , சக்ராயுதம் வரவழைத்தார். கண் இமைக்கும் முன் நடந்த அந்த சலனத்திற்காக யுதிதிஸ்டரன் ஓடி வந்து கிருஷ்ணன் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்க அந்த இடத்தில் சிறிது அமைதி நிலவியது.
பிறகு, பீமன் கண்ணனை பார்த்து, கண்ணா உனக்கு என்னாயிற்று? நாம் நடத்தும் யாகத்தில் முதல் பாகம் என்பது நாம் அளிக்கும் மிகப்பெரிய மரியாதை. அதை பாவி சகுனிக்கா முதலில் வழங்குவது? என்று கோப வார்தைகளை கொட்டினான்.
அதற்கு கிருஷ்ணர் சிறிதும் அசராமல் ஆம், இந்த முதல் பாகத்திற்கு தகுதியான ஒரே நபர் சகுனி மட்டுமே என்றார். என்ன? பீஷ்மரை விட சிறந்தவன் சகுனியா? நயவஞ்சகமே உருவானவனுக்கு வீரமரண மரியாதையா என்று கேட்டான் அர்ஜுனன்.
அதற்கு கிருஷ்ணர் சொல்கிறார், அர்ஜுனா வீரமரணம் என்பது போர்க்களத்தில் எதிரியுடன் நேருக்கு நேர் நின்று போராடி உயிர் விடுதல் அல்ல. தான் ஏற்று கொண்ட கொள்கையை அடைய தயங்காமல் பலவற்றை தியாகம் செய்து, எத்தனை இன்னல்களையும் கடந்து, தான் ஏற்று கொண்ட கடமை முடிந்தது என உயிர் துறப்பதே வீரமரணம் என்றார். அதனால், இதில் பீஷ்மரை விட சகுனியே உயர்ந்தவன் என்றார் கிருஷ்ணர்.
அதற்கு தர்மன், கண்ணா பீஷ்மரின் லட்சியம் வேண்டுமென்றால் நிறைவேறாமல் இருந்திருக்கலாம், ஆனால் போரில் பாண்டவர்கள் தோற்கவில்லை. அதே சமயம் எங்களை அழித்து விடவேண்டும் என்ற சகுனியின் லட்சியமும் ஜெயிக்கவில்லையே என்றான்.
அதற்கு கிருஷ்ணர், போரில் உடன்பிறந்தவர், உற்றார் உறவினர், பெற்ற பிள்ளைகள் என அனைவரையும் இழந்து நிற்கும் நீங்கள் இருந்தும் எதுவும் இல்லாதவர்களே. நடைப்பிணமாக வாழ தயாராகுபவர்கள். இன்று என் இருப்பு மட்டுமே உங்களை இருக்க செய்து இருக்கிறது. அதனால், உங்கள் மொத்த வாரிசுகளையும் அழித்த பின்பும் சகுனியின் ஆசை இன்னும் நிறைவேறவில்லை என்று நினைக்கிறீர்களா? என்று கேட்டார் கிருஷ்ணர்.
கிருஷ்ணர் சொன்ன தவிர்க்க முடியாத உண்மையை கேட்ட பாண்டவர்கள் வேதனை தாளாமல் தலை குனிந்து நின்றனர். கிருஷ்ணர் சொன்ன பதிலை தவறு என்று நிரூபிக்க அர்ஜுனன், கிருஷ்ணரை பார்த்து, அப்படிப் பார்த்தால் சகுனியின் இலட்சியம் எங்களை அழிப்பதைவிட துரியோதனனுக்கு வெற்றியைத் தேடித் தருவதில்தானே இருந்தது. அது நிறைவேறவில்லையே. கெளரவர்கள் அனைவரும் அழிக்கப்பட்டனரே என்றான்.
அதற்கு கிருஷ்ணர் சிரித்தபடியே, அர்ஜுனா எதை நினைத்து தன் வாழ்வை சகுனி ஆரம்பித்தானோ அதை முடித்த பிறகே உயிர் துறந்தான். சகுனிக்கு ஒருபுறம் நூறு எதிரிகள். இன்னொரு புறம் ஐந்து எதிரிகள். உங்கள் ஐவரை அழிப்பதாக கூறியே, பல செயல்கள் மூலம் தனது நூறு எதிரிகளை உங்கள் வழியாக அழித்தான். இன்று நீங்கள் நடைப்பிணமாக இருக்க காரணம் சகுனியே என்று மறந்து விடாதே அர்ஜுனா என்றார்.
கிருஷ்ணர் சொன்னதை கேட்டு மீண்டும் அதிர்ந்து போனார்கள் பண்டவர்கள். என்ன? கெளரவர்களை அழிப்பதே சகுனியின் இலட்சியமா? என்ன கண்ணா சொல்கிறாய் என்று மௌனத்தை கலைத்தார் திருதராஷ்டிரன்.
அதற்கு கிருஷ்ணர், கெளரவர்களை மட்டும் அல்ல உங்கள் ஒட்டுமொத்த குலத்தையும் வேரறுப்பது மட்டும் தான் சகுனியின் நோக்கம் இலட்சியம் எல்லாம் என்றார். அத்தனை பெரிய சபதம் தனி ஒரு ஆளாக சகுனியால் முடியாது என்பதால் கெளரவ பாண்டவர்களுக்கிடையே விரோதத்தை வளர்த்து அவனின் இலட்சியத்தை நிறைவேற்றிக் கொண்டான் என்றார் கிருஷ்ணர்.
ஆக , பாம்பல்ல சகுனி அடிபட்ட புலி. நேரம் பார்த்து பழிவாங்க காத்திருந்தான். நேரம் கைகூடியதும் அதை பயன்படுத்திக் கொண்டான் என்றார் கிருஷ்ணர். சகுனியின் கண் முன்னே உணவு இல்லாமல், பசியால் தவித்து ஒவ்வொருவராய் உயிர் விட்டதை பார்த்து துடித்து அவன், அதற்கு காரணமாக இருந்தவரின் குலத்தையே அழிக்க நினைத்து அதற்காகவே உயிர் வாழ்ந்தவன் சகுனி. அவன் உண்மையில் எல்லோரும் விட நல்லவனே என்றார் கிருஷ்ணர்.
மேலும், நடந்த சம்பவம் எனக்கும், பீஷ்மருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். அது இருக்கட்டும். நான் கூறியது போல் சகுனிக்கு முதல் பாகம் தரமுடியுமா? முடியாதா என்று கேட்டார் கிருஷ்ணர்.
கண்ணா கோபம் கொள்ளாதே! நீங்கள் சொல்லும் காரணம் எல்லாம் சரியாக இருந்தாலும், யாகத்தின் முதல் பாகத்தை எவருக்குமே தீங்கிழைக்காத, எவரிடத்தும் தவறு செய்யாத பீஷ்மரை விட்டு சகுனிக்கு தரச் சொல்வதை எங்கள் மனம் ஏற்கவில்லையே என்றார் தர்மர் அமைதியாக.
தர்மா, சகுனி உண்மையில் கெட்டவன் அல்ல. வீரனாக, நல்லவனாக ஒழுக்கத்தில் சிறந்தவனாக இருந்த சகுனியை இந்த நிலைமைக்கு ஆளாக்கியதே இந்த பீஷ்மர் தான் என்பதை அறிவாய் தானே என்றார் கிருஷ்ணர். சகுனியின் குடும்பத்தையே உங்கள் குலத்தின் பெருமை குறைந்துவிடக் கூடாது என்பதற்காக அழித்து மறைத்தவர் பீஷ்மர்தான் அறிவாயா?
அதில் தப்பிப் பிழைத்தவன் தான் சகுனி, அந்த சம்பவத்தால் அவனின் இயல்பை மாற்றி கொண்டான். இதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்டார் கிருஷ்ணர். பரந்தமா மன்னியுங்கள். நீங்கள் கூறி அதை மறுத்த அவப்பெயர் எங்களுக்கு வேண்டாம். இந்த யாகத்தின் முதல் பாகம் சகுனிக்கே தரப்படும் என்றான் சகாதேவன்.
அனைவரும் வேறு வழியின்றி ஒப்புக் கொண்டனர். யாகம் முடிந்து கிருஷ்ணர் விடைபெற்றார். அவரைப் பின் தொடர்ந்த சகாதேவன். பரந்தாமா, சகுனிக்காக பரிந்து பேச தாங்களே முன்வந்தது மிகுந்த ஆச்சரியம். இதற்கு கண்டிப்பாக வேறு காரணம் இருக்கும். அதை நான் தெரிந்து கொள்ளலாமா? அதுவும் சகுனியைக் கொன்றவன் என்ற உரிமையில் கேட்கிறேன் என்றான் பணிவுடன்.
அதற்கு கிருஷ்ணர் சகாதேவா, காலத்தின் மறு உருவம்தான் நீ. அதனால்தான் உனக்கு எதிர்காலம் அறியக் கூடிய ஜோதிடக்கலை எளிதாக வந்தது. சகுனியைக் கொன்றது நீயல்ல. அவன் இலட்சியம் முடிந்தவுடன் உன் வழியாக அந்த காலம் அவனை அழைத்துக் கொண்டது.
மேலும், இந்தப் பிரபஞ்சத்திலேயே அவன் அடுத்த என்ன செய்ய போகின்றேன், என்று அனுதினமும் என்னை மட்டுமே நினைத்து கொண்டு இருந்தவன் சகுனி ஒருவனே. அது பக்தி இல்லை என்றாலும், என்னையே நினைத்திருந்ததால் அவனும் என் பக்தனே. என்னுடைய ஒவ்வொரு அசைவிற்கும் பொருளறிந்தவன் சகுனி.
அவன் உயிரோடு இருக்கும் வரை என்னால் அவனுக்காக எதுவும் செய்ய முடியவில்லை. அவனை நான் ஏற்றுக் கொண்டதனால், யாகத்தின் முதல்பாகத்தை அவனுக்கு அளிக்க வைத்து பெருமைப் படுத்தினேன்.
அதனால், யாராக இருப்பினும், என்னை விரும்பி ஏற்று கொண்டாலும், விரும்பாமல் ஏற்று கொண்டாலும் அது முக்கியம் அல்ல. அவர்கள் என்னை ஏற்பது மட்டுமே முக்கியம். அதுபோதும் ஒருவனை ஆட்கொள்ள என்றார் கிருஷ்ணர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |