திருமணம் எதற்காக செய்கின்றோம்? ஒருவருக்கு திருமணம் எப்பொழுது நடக்கும்?
நம்முடைய வாழ்க்கையில் படிப்பு வேலை எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறதோ அதை போல் திருமணமும் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. நாம் திருமணத்தை உரிய நேரத்தில் செய்வதே சிறந்தது ஆகும். அப்படியாக, ஒருவர் திருமணம் எதற்கு செய்ய வேண்டும்? மேலும் திருமணம் ஒருவருக்கு ஜாதக ரீதியாக எப்பொழுது நடக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.
ஒரு மனிதன் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் பொழுது அவனுக்கு இந்த வாழ்க்கையை பற்றிய ஒரு புரிதல் உண்டாகும் என்றாலும் திருமணம் செய்து துணையுடன் அன்போடு இருந்து குழந்தைகளை பெற்று வாழும் பொழுது உலகத்தின் உண்மை நிலையை அறிந்து கொள்கிறார்கள், புதிய மனிதனாக அவர்கள் மாறுகிறார்கள்.
இதை திருஞானசம்பந்தரும் "பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே" என்று தேவாரத்தில் சிவனை போற்றுகிறார். இந்த உலகம் என்பது பல ஊர்களாலும் நாடுகளாலும் பிரிந்து இருந்தாலும் இறைவன் சன்னதியில் உலகம் என்பது ஒன்றுதான். நாம் அவர்களுடன் நலமோடு வாழ வேண்டும்.
உலகத்தில் உள்ள உயிர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு இல்லாதவர்களுக்கு உதவி செய்து தேவைகளை பூர்த்தி செய்து விட்டுக் கொடுத்து வாழ வேண்டும். அதாவது உலகெங்கும் அமைதி நிலவ வேண்டும் என நமக்கு வேதம் வலியுறுத்துகிறது.
தனி மனிதனாக இருக்கும் பொழுது சிந்தனையில் தெளிவு உண்டாகும், புரட்சிகரமான சிந்தனைகள் உண்டாகும், ஆன்மீக சிந்தனை வளரும். ஆனால் திருமண பந்தத்தில் இணையும் பொழுது கணவன் மனைவி சொந்தம் என்று வாழ தொடங்கும் பொழுது அவர்களுக்கு இடையே தான் என்ற "சுயம்" சற்று இறங்கி விட்டுக் கொடுத்து செல்லக்கூடிய ஒரு பக்குவம் கிடைக்கிறது.
இதனால் மனித உறவுகளில் பகை, வெறுப்பு, பொறாமை போன்ற சிந்தனைகள் நீங்கி அன்பு கருணை பாசம் விட்டுக் கொடுத்தல் போன்ற நல்ல பண்புகள் வளர்கிறது. இந்த உயர்நிலையை ஒருவர் அடைய வேண்டும் என்றால் நிச்சயமாக திருமண பந்தத்தில் இணைவது அவசியமாக இருக்கிறது.
முக்கியமாக ஒரு மனிதன் அவனைப் பற்றி நன்றாக புரிந்து கொள்வதற்கு இந்த திருமண பந்தம் முக்கியமாக இருக்கிறது. இந்த திருமண பந்தம் என்பது நம் வாழ்க்கையை அடுத்த கட்டத்தை நோக்கி நகற்றி செல்லக்கூடிய பாலமாக அமைகிறது.

ஜோதிட ரீதியாக எப்பொழுது திருமணம் நடக்கும்:
"பருவத்தே பயிர் செய்" என்பது ஆடி பட்டம் விதைப்பதற்காக மட்டுமல்ல நம்முடைய மன வாழ்விற்கும் இது மிகவும் பொருத்தமானதாக இருக்கும். இதை "சுபஸ்ய சீக்கிரம்" என்று குறிப்பிடுவர். திருமணத்திற்காக பெற்றோர்கள் அவர்கள் குழந்தைகளின் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு ஜோதிடரை பார்க்கச் செல்வார்கள்.
அதாவது என் பிள்ளைக்கு வியாழ நோக்கம் வந்துவிட்டதா என்று அவர்கள் கேட்பதை நாம் பார்த்திருப்போம். அதாவது ஒரு ஒரு ராசிக்கு 5, 7, 9 ஆகிய இடங்களில் குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுது அவரது சுப பார்வை உண்டாகும்.அந்த நேரத்தில் முயற்சி செய்தால் கட்டாயம் திருமணம் நடக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |