ஊர் மக்களின் சந்தேகம் தீர நடக்கும் சடங்கு
நம்முடைய இந்து மதத்தில் செய்யும் சடங்குகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பார்கள். மேலும், அந்த சடங்கிற்கு பின்னால் நிறைய காரணமும் இருக்கிறது. அப்படியாக, கணவன் இறந்த நேரத்தில் செய்யும் ஒரு முக்கியமான சடங்கை பற்றி பார்ப்போம்.
திருமணம் ஆகி 8 ஆண்டு காலத்தில் 4 வயது பெண் குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் கணவன் இறந்து விடுகிறார். அப்பொழுது மதிய வேளையில் இறுதிச் சடங்கு நடந்து கொண்டிருக்க, வீட்டின் உள்ளே உற்றார் உறவினர்கள் அழுது கொண்டு இருக்கிறார்கள்.
அந்த சமயத்தில் திடீரென ஒரு பாட்டி இடக்கையில் சொம்பு தண்ணீருடனும் வலது கையில் உதிரிப்பூக்களுடனும் வெளியே வருகிறாள். அந்த பாட்டியை பார்த்ததும் மேளம் நிறுத்தப்பட்டது. அங்கு சுற்றி நின்று கொண்டு இருந்த உறவினர்கள் அமைதியாகி விட்டார்கள்.
கிழவி ஒரு உதிரிப்பூவை சொம்பு தண்ணீரில் இட்டாள். கூட்டம் இன்னும் அமைதியை தழுவியது. பின்னர் இரண்டாவது பூவை போட்டாள். கூட்டம் ஒரு அனுதாப ஒலியை எழுப்பியது. பாட்டி மூன்றாவது பூவைப் போட்டாள். கூட்டம் அதே போல் இன்னும் அனுதாப ஒலி எழுப்பியது.
பின்பு பாட்டி சொம்பை எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்று விட்டாள். அதை பார்த்து கொண்டு இருந்த சிலர் ஏன் இவ்வாறு செய்கிறார்கள் என்று கேட்டார்கள். அதற்கு அங்கு இருந்தவர் சொல்கிறார் இறந்தவரின் மனைவி 3 மாத கர்ப்பிணி பெண்ணாக இருக்கிறாள்.
அதை ஊருக்கு அறிவிக்கும் விதமாக இதை செய்கிறார்கள் என்று சொல்கிறார். அதற்கு அந்த நபர், அதை ஏன் இப்பொழுது ஊருக்கு தெரிவிக்க வேண்டும் என்று கேட்கிறார். அதற்கு அந்த நபர் 7 மாதம் கழித்து குழந்தை பிறக்கும் பொழுது, குழந்தைக்கு யார் தகப்பன் என்ற கேள்வி வந்துவிடக்கூடாது என்பதற்காக இவ்வாறு செய்கிறார்கள் என்று சொல்ல, கேள்வி கேட்ட நபர் அதிர்ந்து போனார்.
அதாவது ஏழு மாதம் கழித்துப் பிறக்கப்போகும் குழந்தைக்கு இன்று இறந்து போனவர் தான் தந்தை என்று ஊரும் உலகும் அறிந்து கொள்ளவே இந்த சடங்கு என்றார்கள்.
பிறக்கும் குழந்தைக்கும், அந்த பெண்ணிற்கும் எந்த ஒரு களங்கம் உண்டாகி விடக்கூடாது என்று நம் முன்னோர்கள் இந்த சடங்கை செய்தார்கள். இதில் இருந்து நம்முடைய பண்பாடும் சாஸ்திரங்களும் எவ்வாறு நம் வாழ்வியலோடு தொடர்பு கொண்டு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |