சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற 108 விளக்கு பூஜை
அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது.
மூலவரான மாரியம்மன் எட்டு கைகளுடன், தலை மாலை கழுத்தில், சர்ப்பக் கொடையுடன், ஐந்து அசுரர்களின் தலைகளைத் தன் காலால் மிதித்து தனது சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் படி இருக்கிறார்.
செவ்வாய், வெள்ளி கிழமைகளிலும் சித்திரைத் தேர்த்திருவிழா, ஆடி வெள்ளி, பூச்சொரிதல் விழா போன்ற விழாக்காலங்களிலும் கூட்டம் அதிகமாகிறது.
ஆடி மாதத்தில் எல்லா வெள்ளிக் கிழமைகளிலும் குறிப்பாக ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
மேலும் இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று மாலை 6 மணிக்கு மேல் விளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம்.
அந்தவகையில், ஆவணி மாத பௌர்ணமியான நேற்று பிற்பகல் 3 மணிக்கு விளக்கு பூஜை நடைபெற்றது.
உற்சவர் அம்மன் மண்டபம் முன்பு நடைபெற்ற இந்த பூஜையில் மொத்தம் 108 பெண்கள் கலந்து கொண்டனர்.
விளக்கு பூஜையில் கலந்துகொண்ட பெண்களுக்கு பித்தளை காமாட்சி அம்மன் விளக்கு, குங்குமம், மஞ்சள், தாலி கயிறு, கண்ணாடி வளையல், பூக்கள், புடவை உள்ளிட்ட 22 பொருட்கள் வழங்கப்பட்டன.
மேலும், விளக்கு பூஜையைத் தொடர்ந்து உற்சவர் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







