2026: 32 மாதங்களுக்கு ஒருமுறை வரும் பரம ஏகாதசி.. நாளை இதை செய்ய தவறாதீர்கள்
விரதங்களில் ஏகாதசி விரதம் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. அதாவது ஒரு வருடம் மொத்தம் 24 ஏகாதசிகள் வருகின்றன. சில ஆண்டுகள் 25 ஏகாதசிகள் வரை வருகிறது. இதில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஏகாதசியாக பரம ஏகாதசி விளங்குகிறது. அதாவது, ஒவ்வொரு ஆண்டும் வருகின்ற 24 ஏகாதசிகளில் வராத ஒரு ஏகாதசி தான் பரம ஏகாதசி.
காரணம், அதிக மாதத்தில் அதாவது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிக மாதத்தில் வரக்கூடிய ஏகாதசி அதனால் இதை அதிசயமான மற்றும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவும், பிற ஏகாதசிகளை விடவும் மிகவும் முக்கியமான ஏகாதசியாக நாம் அழைக்கின்றோம்.
இவ்வளவு அற்புதம் நிறைந்த ஏகாதசி நாளில் நாம் விரதம் இருந்து வழிபாடு செய்தால் முழு பலனையும் பெறலாம். அப்படியாக, பரம ஏகாதசி தினத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது என்று பார்ப்போம்.

பரம ஏகாதசி 2026 தேதி, நேரம் :
| பரம ஏகாதசி 2026 தேதி | ஜூன் 11 வியாழன் |
| ஏகாதசி திதி துவக்கம் | ஜூன் 10 இரவு 08.16 |
| ஏகாதசி திதி நிறைவு | ஜூன் 11 மாலை 06.29 |
பரம ஏகாதசி விரத சிறப்புகள் :
புராணங்களின் அடிப்படையில் செல்வத்தின் அதிபதியாக இருந்தவர் குபேர பகவான். இவர் பரம ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்து தேவர்களின் கருவூலத்தை நிர்வகிக்கக்கூடிய பதவியை பெற்றார். அதேபோல் தனது ராஜ்ஜியம், செழிப்பு குடும்பம் எல்லாவற்றையும் இழந்த ஹரிச்சந்திரன் மன்னரும் இந்த விரதத்தை அனுஷ்டித்து அவருடைய இழந்த குடும்பத்தையும் செல்வத்தையும் மீட்டெடுத்தார்.
பரம ஏகாதசி விரத பலன்கள் :
இந்த பரம ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்து பெருமாளையும் மகாலட்சுமி தாயாரையும் மனதார வழிபாடு செய்து விரதம் மேற்கொண்டால் அஸ்வமேத யாகம் செய்ததற்கு இணையான புண்ணியம் நமக்கு சேர்கிறது என சமய நூல்கள் சொல்கின்றன.
இந்த நாளில் பக்தி உடன் விரதம் இருந்து பெருமாளை வழிபாடு செய்தால் பெருமாளின் இருப்பிடமாக கருதக்கூடிய வைகுண்டத்தை அடையக்கூடிய பாக்கியம் நமக்கு கிடைக்கும் என பகவான் கிருஷ்ணரே அர்ஜுனனிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. மேலும், இந்த விரதம் மேற்கொள்வதால் மன அமைதியும் நேர்மறை ஆற்றலும் எதிரிகளால் சூழ்ந்துள்ள தொல்லைகளும் செல்வ வளமும் கிடைக்கும்.

பரம ஏகாதசி விரத முறை :
இந்த பரம ஏகாதசி தினத்தில் ஒருவர் தங்களுடைய உடல் நிலைக்கு ஏற்ப விரதம் இருந்து வழிபாடு செய்வது அவசியமாகும். உணவை தவிர்த்து தண்ணீர் மட்டும் குடித்து விரதம் மேற்கொள்ளலாம் அல்லது பழங்கள் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். இவ்வாறு இருக்க முடியாதவர்கள் ஒருவேளை உணவு எடுத்துக் கொண்டு விரதத்தை மேற்கொள்ளலாம்.
இந்த விரதம் மேற்கொள்பவர்கள் ஜூன் 10ஆம் தேதி இரவே உணவை தவிர்த்து விட வேண்டும். ஜூன் 11ஆம் தேதி அன்று காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து நீராடி பிறகு விரதத்தை தொடர வேண்டும்.
வீட்டில் உள்ள பெருமாள் படத்திற்கு முன்பாக நெய் தீபம் ஏற்றி பெருமாளுக்கு மஞ்சள் நிற மலர்களை சாற்றி மகாலட்சுமிக்கு சிவப்பு நிறம் மலர்களையும் சமர்ப்பித்து பெருமாளுக்கு பழங்கள் துளசி இனிப்புகள் நெய்வேத்தியமாக படைத்து ஆரத்தி எடுத்து வழிபாடு செய்ய வேண்டும். அதைவிட முக்கியமாக பெருமாளுக்கு உரிய "ஓம் நமோ பகவதே வாசுதேவாய" என்கின்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து வழிபாடு செய்வது அவசியமாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |