ஒரு பவுன் தங்க விலைக்கு ஏலம் போன முருகப்பெருமானின் எலுமிச்சை பழம்
கலியுக வரதனாக போற்றப்படும் முருகப்பெருமான் பக்தர்களுக்கு நொடிப்பொழுதில் துயரை தீர்க்கக் கூடியவராக இருக்கிறார். அதேபோல், பக்தர்களும் முருகப்பெருமானுக்காக எதையும் செய்யக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.
அந்த வகையில் திருவெண்ணைநல்லூர் அருகே இருக்கக்கூடிய முருகப்பெருமான் கோவிலில் முருகப்பெருமான் வேலில் சொருகப்பட்ட எலுமிச்சை பழம் ஒரு லட்சத்து 43 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது பக்தர்களின் கவனத்தை பெற்றுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த ஒட்டநந்தல் கிராமத்தில் இரட்டை குன்றின் மீது ரத்தினவேல் முருகன் ஆலயம் அமைந்திருக்கிறது. கருவறையில் மட்டுமே இருக்கின்ற கோவிலில் பங்குனி உத்திர திருவிழா மிகச்சிறப்பாக 9 நாட்கள் நடத்தப்படுவது வழக்கமாக இருக்கிறது.

தினமும் வேலில் சொருகப்படும் எலுமிச்சை பழங்கள் இடும்பன் பூஜையில் வைத்து பங்குனி உத்திர திருவிழாவின் பொழுது நள்ளிரவு ஏலம் விடப்படும். அதன் அடிப்படையில் நேற்றிரவு 11 மணிக்கு ஊரில் இருக்கக்கூடிய முக்கியஸ்தர்களின் முன்னிலையில் எலுமிச்சை பழங்கள் ஏலம் விடப்பட்டது.
இதில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், திருமண தடை கொண்டவர்கள், குடும்பத்தில் மன அமைதியும் நிம்மதியின்மை சந்தித்து கொண்டு இருப்பவர்கள் மற்றும் வியாபாரத்தில் கஷ்டத்தை சந்தித்துக் கொண்டிருப்பவர்கள் என பல்வேறு நபர்கள் இந்த எலுமிச்சை பழம் ஏலம் எடுக்கும் விழாவில் கலந்து கொண்டனர்.

அப்படியாக, எலுமிச்சை பழம் முதல் நாள் 45000 க்கும் இரண்டாம் நாள் 15000 என ஒன்பது எலுமிச்சை பழங்கள் மொத்தம் ஒரு லட்சத்து 43 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.
ஏலத்தில் சென்னை திருச்சி, புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து எலுமிச்சை பழத்தை ஏலத்திற்கு எடுத்து சென்றனர். முருகப்பெருமானின் வேலில் குத்திய எலுமிச்சை பழத்தை வீடுகளில் அல்லது வியாபாரம் செய்யக்கூடிய இடங்களுக்கு எடுத்துச் செல்லும் பொழுது அவர்களுடைய குடும்பத்தில் மன மகிழ்ச்சியும் வியாபாரத்தில் நல்ல பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |