ஜாதகத்தில் இந்த 3 இடங்களில் கேது பகவான் இருந்தால் துன்பத்தை தருவாரா?
ஜோதிடத்தில் ஞானக்காரகன் என்று அழைக்கப்படும் கேது பகவான் அவர் இருக்கும் வீட்டை பொறுத்து அந்த ஜாதகர் அவர்களுக்கான பலனை பெறுகிறார்கள். அப்படியாக கேது பகவான் 4, 5, 8 ஆகிய இடங்களில் இருந்தால் அந்த ஜாதகருக்கு எந்த மாதிரியான நன்மைகள் தீமைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.
1. யாருக்கெல்லாம் கேது பகவான் அவர்களுடைய லக்னத்தில் இருந்து நான்காம் வீட்டில் இருக்கிறாரோ அந்த ஜாதகர் உடைய தாய்க்கும் இவர்களுக்கும் சமயங்களில் அதிகப்படியான சண்டைகளும் கருத்து வேறுபாடுகளும் உண்டாகும்.
மேலும் அந்த ஜாதகருக்கு தாய் வழி உறவினர்களால் அவ்வளவு எளிதாக உதவிகளும் ஆறுதலும் கிடைக்காது. தாய் வழி உருவுகளால் சமயங்களில் அவர்கள் சங்கடங்களையும் சந்திப்பார்கள். மேலும் தாய் வழி சொந்தங்கள் வழியே இவர்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காமல் மன அழுத்தத்திற்கு ஆளாகவும் நேரும். பெரும்பாலும் தங்களுடைய வாழ்க்கையை கடமைக்காக வாழ்வதாகவே வாழ்வார்கள்.
2. யாருக்கெல்லாம் கேது பகவான் லக்னத்தில் இருந்து ஐந்தாம் இடத்தில் இருக்கிறாரோ அவர்களின் குழந்தைகளுக்கு இவர்கள் எவ்வளவு உழைத்து அன்பு காட்டினாலும் அதை அந்த குழந்தைகளால் புரிந்து கொள்ள முடியாத நிலை இருக்கும். ஐந்தாம் இடத்தில் கேது பகவான் இருப்பவர்களுக்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு இருக்கும்.
இவர்கள் தெய்வ வழிபாடு அல்லது ஆலய வழிபாடுகளுக்காக அதிகமான பணத்தை செலவிடுவார்கள். ஐந்தாம் இடத்தில் கேது பகவான் இருப்பவர்கள் பெரும்பாலும் தங்களுடைய வாழ்க்கையை ஆன்மீக பாதையில் செலுத்த விரும்புவார்கள்.
3. யாருக்கெல்லாம் கேது பகவான் எட்டாம் இடத்தில் இருக்கிறாரோ அவர்களுக்கு இந்த வாழ்க்கையை எப்படியாவது கடமையை செய்து வாழ்ந்து முடித்து விட வேண்டும் என்று விரக்தி மனப்பான்மை இருக்கும். எட்டாம் இடத்தில் கேது பகவான் இருப்பவர்கள் அதிகமான ரகசியங்களை மறைத்து வைத்திருக்கக் கூடிய நபராக இருப்பார். இவர்கள் அவ்வளவு எளிதாக பிறரிடம் சிரித்து மனம் விட்டு பேசும் நபராக இருக்க மாட்டார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







