தெரியாமல் செய்த பாவங்கள் விலக 2025 முடியும் முன் செய்ய வேண்டிய 5 முக்கிய பரிகாரங்கள்
மனிதர்களாகிய நமக்கு எப்பொழுதுமே ஒரு புது வருடம் பிறக்கப் போகிறது என்றால் நிச்சயம் நம் மனதில் ஒரு ஆனந்தம் உண்டாகும். காரணம் நம்மை அறியாமல் நம்முடைய ஆழ்மனதில் புது வருடம் நிச்சயம் நமக்கு ஒரு நல்ல மாற்றத்தையும் தொடக்கத்தையும் கொடுக்கும் என்ற ஒரு நம்பிக்கையில் தான்.
மேலும், நிறைய நபர்கள் இந்த புது வருட தொடக்கத்தில் தாங்கள் சில விஷயங்களை மாற்றிக்கொள்ள வேண்டும், புதிதான ஒரு விஷயங்களை வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும் என்று நிறைய தீர்மானங்கள் எடுப்பார்கள்.
அந்த வகையில் ஆன்மீக ரீதியாக நாம் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் விலகவும், புதிதாக ஒரு ஆன்மாவாக உருவெடுத்து புதிய வருடத்திற்குள் நாம் நுழைவதற்கு சில முக்கியமான பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள்.
அப்படியாக நாம் இந்த 2025 ஆம் ஆண்டு முடிவதற்கு முன் நம்முடைய கர்ம வினைகள் விலக செய்ய வேண்டிய முக்கியமான 5 பரிகாரங்களை பற்றி பார்ப்போம்.

1.மன்னித்தல்:
மன்னிப்பது என்பதும் ஒரு மிகச் சிறந்த பரிகாரம் தான். காரணம் நம் மனதில் கோபமும் விரத்தியும் இருந்து கொண்டே இருக்கும் பொழுது அவை நம்முடைய ஆன்மாவின் ஆற்றலை குறைத்துக் கொண்டிருக்கும். ஆக உங்களை வாழ்நாளில் யாரேனும் மிகுந்த துன்பத்திற்கு தள்ளி இருக்கிறார்கள் என்றால் அந்த துன்பத்திலிருந்து விடுபடுவதற்கு நீங்கள் செய்ய வேண்டிய ஒரே ஒரு பரிகாரம் அவர்களை மன்னிப்பது மட்டுமே.
ஆக உங்களை காயப்படுத்தியவர்களின் பெயரை ஒரு காகிதத்தில் எழுதி அதை எரித்து விடலாம். இவ்வாறு செய்யும் பொழுது நம் மனதில் இருக்கக்கூடிய பாரம் குறையும். இதுவும் நம்முடைய கர்ம வினைகள் மற்றும் நம்முடைய ஆன்மாவை சுத்தம் செய்வதற்கான ஒரு முக்கிய வழியாகும்.
2. விளக்கு ஏற்றுதல்:
உங்களுடைய மனதில் நீண்ட நாட்களாக ஏதேனும் ஒரு மன அழுத்தம் சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் நீங்கள் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் தினமும் விளக்கேற்றி வழிபாடு செய்யுங்கள்.
காரணம் நாம் விளக்கேற்றும் பொழுது அந்த ஒளியை நேராக பார்க்கக்கூடிய நிலை வருகிறது. அந்த ஒளியானது நம்முடைய ஆன்மாவை சுத்தம் செய்து நம்மை மீண்டும் ஜனனிக்க வைக்கக்கூடிய ஒரு தன்மை பெற்றிருப்பதால் நாம் தினமும் விளக்கேற்றி வழிபாடு செய்யும்போது நிச்சயம் அதற்கான பலனையும் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தையும் பெறலாம்.
3. உடைந்த பொருட்களை அகற்றுதல்:
ஒவ்வொரு வருடமும் முடியும் முன் கட்டாயமாக நாம் அந்த வருடம் என்ன செய்தோம் என்று ஒரு முழுமையான பரிசீலனை செய்வது அவசியம் ஆகும். நல்லதாக இருக்கட்டும் கெட்டதாக இருக்கட்டும் முழுமையாக பரிசீலனை செய்து நமக்கு எந்த விஷயங்கள் வாழ்க்கைக்கு தேவை? எந்த விஷயங்கள் கட்டாயமாக நம் வாழ்க்கைக்கு தேவை இல்லை என்று இந்த வருடம் முடியும் முன் அதை அகற்றி விடுவது நல்லது.
அது மனிதர்களாக இருக்கட்டும் இல்லை நம் வீடுகளில் இருக்கக்கூடிய உடைந்த பொருட்களாக இருக்கட்டும் தேவையானவை வைத்து கொண்டு, தேவை இல்லாத விஷயத்தை அகற்றி விடுங்கள். காரணம் நாம் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு சூழ்நிலையில் நமக்கு எவ்வளவு பிடித்திருந்தாலும் அது நம்மை உடைக்கக் கூடியதாக இருந்தாலும் அல்லது அது ஏற்கனவே உடைந்து நிலையில் இருந்தாலும் அதை அகற்றி விடுவது தான் நாம் முன்னோக்கி செல்வதற்கான ஒரு நல்ல வழி வகையாகும். இதுவும் ஒரு முக்கியமான பரிகாரம் ஆகும்.

4. சேவை செய்தல்:
நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால் நீங்கள் ஒருவரை சிரிக்க வைத்து பாருங்கள். காரணம் எப்பொழுதும் நமக்குள்ளேயே நிறைய உணர்வுகளை நாம் வைத்து புலம்பி கொண்டிருக்கிற நேரத்தில் நாம் நமக்கு நம்முடைய துன்பச் சிறையில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்றால் தேடிச் சென்று ஒருவருக்கு உதவி செய்யுங்கள்.
அந்த உதவியானது அந்த நபருக்கு உணர்வுகளாக இருக்கக்கூடிய ஒரு உதவிகளாக இருக்கலாம் அல்லது பணம், உணவுகள் பொருட்கள் என்றுஅவர்களுக்கு எந்த ஒரு உதவியாக இருந்தாலும் நீங்கள் அதை செய்யும் பொழுது உங்களுடைய மனதில் இருக்கக்கூடிய பாரம் பாதியாக கழிவதை நீங்கள் காணலாம்.
ஆக, உங்களின் நெருங்கிய நபர்களுக்கு நீங்கள் நன்றி சொல்லும் வகையில் ஏதேனும் ஒரு பரிசுகளை கொடுங்கள் அல்லது நீங்காத மன வருத்தத்தில் இருப்பவர்களுக்கு ஒரு ஆறுதலான வார்த்தை சொல்லிப் பாருங்கள் நிச்சயம் உங்களுக்குள் ஒரு புதிய மாற்றம் பிறக்கும்.
5. இறைவழிபாடு:
இறைவழிபாடு என்பது நாம் இறைவனிடம் சென்று "எனக்கு அதைக்கொடு! எனக்கு இதை சரி செய்து கொடு!" என்று கேட்பதில்லை. இறை வழிபாடு என்பது நம்மை ஒருநிலை செய்து இந்த பிரபஞ்சத்தோடு தொடர்பு கொள்ளக்கூடிய ஒரு அற்புதமான நிலையாகும்.
ஆக, இந்த 2025 ஆம் ஆண்டு முடிவதற்கு முன் நீங்கள் தியானம் செய்ய பழகுங்கள். உங்களை நீங்கள் அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். ஆன்மீகப் புராணங்களைக் கற்று தெரிந்து கொள்ள முயலுங்கள். இவ்வாறு செய்யும் பொழுது வாழ்க்கை என்ன என்பது உங்களுக்கு ஒரு அற்புதமான நிலையில் புரியவரும்.

ஆக கர்ம வினை என்பது ஒரு மனிதனை துன்பத்திற்கு ஆளாக்கி அவர்களை பிறகு பக்குவ நிலைக்கு கொண்டு வர செய்யக்கூடிய ஒரு அற்புதமான ஆசிரியர் ஆகும். இந்த உலகம் என்பது ஒவ்வொரு மனிதனும் சரியாக வாழவேண்டும் என்று வழி நடத்துவதற்காகவே இயங்கிக் கொண்டிருக்கிறது. யாரையும் எதற்கும் தண்டிக்க வேண்டும் என்று இந்த ஒரு பிரபஞ்சமும் காத்திருக்கவில்லை.
ஆக தவறுகள் செய்தால் தான் நாம் ஒரு தவறுகளில் இருந்து பல உண்மைகளை அறிந்து கொள்ள முடியும். ஒருவர் தெரியாமல் செய்கின்ற தவறின் வழியாக கற்றுக் கொள்ளக்கூடிய பாடம் ஏராளமாக இருந்தாலும் மீண்டும் அந்த தவறுகளை செய்யாமல் பார்த்துக் கொள்வது தான் ஒரு மனிதனுடைய பக்குவம்.
அதனால் நம்முடைய கர்ம வினைகள் குறைய செய்த பாவங்கள் மறைய இவ்வாறான வழிபாடுகளை 2025 ஆம் ஆண்டு முடிவதற்கு முன் செய்து பார்ப்போம். நிச்சயம் வருகின்ற வருடம் ஒரு நல்ல தொடக்கமாகவும் நல்ல மாற்றங்களோடும் நம்மை அணுகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |