மனிதனின் ஆயுளை குறைக்கும் 6 முக்கிய விஷயங்கள்- தவறியும் இதை மட்டும் செய்துவிடாதீர்கள்
மனிதனின் வாழ்க்கை அவன் மனம் போகும் போக்கில் வாழ்வது அல்ல. இந்த பிரபஞ்சம் நிறைய விதிகளை வைத்திருக்கிறது. அந்த விதிகளுக்கு கட்டுப்பட்டு வாழ வேண்டியது ஒரு மனிதனின் கடமை ஆகும். அந்த கட்டுப்பாட்டை மீறி ஒருவன் செயல்படும் பொழுது பிரபஞ்சம் அவனுக்கு பல வகைகளில் நிறைய பாடங்களையும் துன்பங்களையும் கொடுத்து அவனுக்கு உலக வாழ்க்கையின் உண்மையை புரியச் செய்கிறது.
அப்படியாக மனிதன் அவனுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு அங்கமாக அவனுடைய ஆயுள் இருக்கிறது. அந்த வகையில் அவனுடைய ஆயுளை அழிக்கக்கூடிய ஒரு ஆயுதமாக ஆறு வாள்கள் இருப்பதாக சொல்கிறார்கள். அவை என்னவென்று பார்ப்போம்.
1.அதிக கர்வம்:
மனிதனுக்கு இருக்கவே கூடாது முதல் விஷயங்களில் ஒன்று கர்வம். இந்த கர்வம் ஒரு மனிதனை மிகப்பெரிய அளவில் அழித்து விடுகிறது. அதாவது ஒரு மனிதனின் கர்வம் "தான் உயர்ந்தவன், நான் மட்டும்தான் செயலில் சிறந்தவன் என்ற ஒரு எண்ணத்தை கொடுக்கிறது" அந்த எண்ணம் அவர்களை பலவகையான தவறுகளை செய்ய தூண்டுகிறது.
சக மனிதர்களை மதிக்காத நிலையை உண்டு செய்கிறது. பிறகு அந்த எண்ணமே அவர்களுக்கு ஆயுதமாக திரும்பி அவர்களை முழுமையாக அழித்துவிடும் நிலையில் கொண்டு விடுகிறது. ஆதலால் மனிதன் உயர்வு நிலையில் வாழ வேண்டும் என்றால் அவனுக்கு துளி அளவும் கர்வம் என்ற ஒரு சிந்தனை இருக்கக் கூடாது.
2.அதிகம் பேசுதல்:
நாம் பல இடங்களில் பார்க்கக் கூடிய ஒரு விஷயமாக இருப்பது "அதிகம் பேசாமல் இருப்பவனை இந்த உலகம் பெருமளவில் மதிக்கிறது"என்று. இதற்கு காரணம் அதிகம் பேசுபவன் அவனை அறியாமல் பல விஷயங்களை அவன் பேசி விடுகிறான். பிறகு அவன் பேசிய விஷயங்கள் அவனுக்கு எதிராக சில நேரங்களில் திரும்புகிறது.
அதனால் அவன் வீண்வாக்குவாதம் செய்யக்கூடிய நிலை உருவாகிறது. பிறகு அந்த வாக்குவாதம் வீண் வம்புகளையும் எதிரிகளையும் உருவாக்கி அவனுக்கு நிம்மதியின்மையை கொடுக்கிறது. அதனால் நாம் எப்பொழுதும் எதை பேச வேண்டும் என்று அறிந்து தீர ஆராய்ந்து பிறருடைய மனம் புண்படாதவாறு பேசுவது அவசியம். இல்லையென்றால் நாம் பேசும் வார்த்தைகளே நமக்கு ஆயுதமாக திரும்பி நம்மை தாக்கக்கூடும்.
3.தியான மனப்பான்மை:
தியானம் என்பது நம்முடைய மனதை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவும் ஒரு முக்கியமான கருவி ஆகும். ஆனால் பலராலும் இங்கு தியானம் செய்ய முடிவதில்லை. காரணம் அவர்கள் எண்ண அலைகள் ஓய்வின்றி ஓடிக்கொண்டே இருக்கிறது. அதை அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கு விரும்பாதவர்களாக இருக்கிறார்கள்.
அவ்வாறு எவருடைய சிந்தனை கட்டுப்பாடு இன்றி சிந்தித்துக் கொண்டு ஓடிக்கொண்டே இருக்கிறதோ அவர்களுக்கு துன்பம் என்ற ஒரு நிலை எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. ஆதலால் நாம் சிறிது நேரம் ஆவது தியானத்தில் அமர்ந்து உலகையும் நம்மையும் அறிய முற்படும் பொழுது நமக்கு பல விஷயங்கள் புரிந்து கொள்ள முடியும். அந்த புரிதலால் நாம் பல விஷயங்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள உதவுகிறது.
4. கோபம்:
மனிதனாக பிறந்த எல்லோருக்கும் கோபம் என்று ஒரு உணர்வு இயல்பாக வரக்கூடிய ஒரு விஷயம்தான். ஆனால் அந்த கோபம் எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பது மிக மிக முக்கியமாக இருக்கிறது. சமயங்களில் நம்முடைய சொந்தங்கள் தான் என்று நம் உரிமையாக நாம் கோபப்பட்டு விட்டாலும் நடந்த நிகழ்வுகளை கடந்து நாம் போகமடைந்ததை அவர்கள் பெரிதாக சுட்டிக் காண்பித்து நம்மை வருந்த செய்து விடுவார்கள்.
அதோடு நம்முடைய கோபம் நம்முடைய உறவினர்களை விட்டு தனித்திருக்க செய்து விடுகிறது. அது மட்டும் இல்லாமல் சிலர் கோபத்தின் பொழுது வார்த்தைகளிலும் அவர்களுடைய செயல்களிலும் எல்லை மீறி என்ன செய்கின்றோம் என்று புரியாமல் நிறைய விஷயங்கள் செய்து விடுகிறார்கள். அவை பல நேரங்களில் தவறாக முடிந்து விடுவதையும் நாம் பார்க்க முடிகிறது.
ஆதலால் கோபத்தை நாம் குறைத்துக் கொண்டு எவரையும் உதாசீனம் செய்யாமல் பழக கட்டாயம் எல்லோரும் நம்முடன் பயணித்து நமக்காக துணை நிற்பார்கள். இல்லையென்றால் அந்த கோபம் தான் நம்மை அழிக்கக்கூடிய முதல் ஆயுதமாக மாறிவிடும்.
5.சுயநலம்:
மனிதனுக்கு கட்டாயமாக இருக்க வேண்டிய ஒரு விஷயம் சுயநலம். இந்த சுயநலமானது நம்முடைய முன்னேற்றத்திற்காக இருக்க வேண்டுமே தவிர சுயநலத்துடன் தீய எண்ணங்கள் சேரக்கூடாது. அதாவது சுயநலத்தோடு தீய எண்ணங்கள் சேரும்பொழுது "தான் மட்டும் சிறப்பாக வாழ வேண்டும்" என்ற எண்ணத்தில் பிறரை அடிமையாக செய்து, பிறரை துன்புறுத்தி பிறரை அவமானப்படுத்தி, பிறரை அழித்து நிறைய விஷயங்கள் சாதிக்கும் நிலை உருவாகும்.
ஆதலால் நம்முடைய சந்தோஷம் மட்டுமே என்ற ஒரு சுயநலத்தில் பல நபர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகவும், பல நபர்களுடைய சந்தோசம் அழிவதற்கான நிலை இருக்கக் கூடாது. மேலும் சுயநல எண்ணம் ஒருவனுக்கு அதிகரித்துக் கொண்டே போகிறது என்றால் அவன் பல தீமைகளை செய்ய நேரலாம். அந்த தீமைகளால் அவள் ஒரு நாள் கட்டாயமாக ஒரு அழிவு நிலைக்கு தள்ளப்படுவான்.
6. நம்பியவர்களுக்கு துரோகம்:
மனிதனுடைய வாழ்க்கையே நம்பிக்கை நிறைந்ததாக தான் இருக்கிறது. ஒரு மனிதனுக்கு நம்பிக்கை தான் உந்துகோலாக இருந்து அவனை முன்னேறச் செய்கிறது. அப்படியாக நம்முடன் பழகும் சக மனிதருக்கு ஒரு நம்பிக்கையை விதைத்து பாருங்கள், அந்த நாள் இனிமையாக இருக்கும். ஆனால் அதுவே நாம் மேற்கண்ட சொன்ன ஐந்து விஷயங்களும் கொண்டு ஒரு மனிதன் செயல்படும் பொழுது அவனை அறியாமல் அவனை அழிக்க கூடிய கடைசி ஆயுதமாக "துரோகம்" என்ற ஒரு ஆயுதத்தை அவன் கைகளில் எடுக்கும் நிலை உருவாகிறது.
அதாவது கர்வம், அதிகம் பேசுதல், தியான மனப்பான்மை இல்லாமல் இருத்தல், கோபம், சுயநலம் இவை அனைத்தும் ஒரு மனிதனுக்கு இருக்கிறது என்றால் அவன் கட்டாயமாக பிற மனிதனுடைய மனதை புரிந்து கொள்ளும் நிலையில் இருக்க மாட்டான். அவன் புத்தியானது ஒரு நிலையான தன்மையில் இருப்பதில்லை.
அந்த தீய எண்ணங்களின் உச்சகட்டமாக நம்பியவர்களுக்கு துரோகம் செய்யும் நிலை உருவாகிறது. அப்படியாக இந்த துரோகம் என்ற ஒரு நிலையை மனிதன் அவன் வாழ்க்கையில் செய்ய துணிந்து விட்டான் என்றால் அவன் செய்த துரோகத்திற்காக ஒவ்வொரு நாளும் பதில் அளிக்கக்கூடிய ஒரு நிலைக்கு தள்ளப்படுவான். அந்த நிலையானது முற்றிலுமாக அவனை துன்பத்தில் வதைக்க கூடிய ஒரு விஷயமாக இருக்கும்.
ஆக நீண்ட ஆயுள் என்பது இறைவன் நமக்கு கொடுக்கக்கூடிய ஒரு வரம் என்றாலும் நம்முடைய வாழ்க்கையை நாம் தான் அழகாக அமைத்துக் கொண்டு, அந்தப் பயணத்தை நாம் சுகமாக மாற்றிக்கொள்ள வேண்டும். இவ்வாறாக நாம் பயணம் செய்யும் வழியில் பல தீய ஆயுதங்களைக் கையில் எடுத்துக் கொண்டு செல்லும்பொழுது அந்த ஆயுதங்களே நமக்கு ஆயுளை குறைக்கக்கூடிய அழிக்கக்கூடிய எமனாக மாறும். அதனால் நல்லதை நினைப்போம், நன்றாக பழகுவோம், இறைவனை துதிப்போம், நன்மையை பெறுவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







