நாளை(17-07-2025) ஆடி முதல் நாள் வீடுகளில் எவ்வாறு வழிபாடு செய்யவேண்டும்?
தமிழ் மாதங்களில் ஆடி மாதம் மிகவும் முக்கியமான மற்றும் தெய்வங்களுடைய வழிபாட்டிற்கு உகந்த மாதம் ஆகும். அதிலும் குறிப்பாக ஆடி மாதம் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்மன் வழிபாட்டிற்கு உரிய விஷேச நாளாகும்.
மேலும், ஆடி பிறப்பு நாளில் கோயில்களில் முக்கிய வழிபாடாக தேங்காய் சுடுதல் நடக்கும். அதாவது, இனிப்பு கலந்த தேங்காயை தீயில் சுட்டு, பின்னர் கடவுளுக்கு படைத்து பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுப்பார்கள். இது குடும்பத்தில் ஏற்பட்ட கஷ்டங்கள் விலகி மகிழ்ச்சியும் நிம்மதியும் கொடுக்கும் என்பது நம்பிக்கை.
இந்த ஆண்டு ஆடி மாதம் ஜூலை 17ம் தேதி வியாழக்கிழமை பிறக்கிறது. வியாழக்கிழமை குரு பகவானுக்கு உரிய மங்களகரமான நாளாகும். அன்றைய நாள் இந்த ஆடி மாதம் பிறப்பது மிகவும் சிறப்புக்குரியதாகும்.
அதனால், நாம் முதல் நாளே வீடுகளை சுத்தம் செய்து வழிபாடு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வைத்துக்கொள்ள வேண்டும். மேலும், ஆடி முதல் நாள் அதிகாலை எழுந்து வீட்டில் உள்ள சுவாமி படத்திற்கு மஞ்சள், குங்குமம் தொட்டு வைத்து, அழகிய மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.
பிறகு, வீட்டில் விளக்கேற்றி வைத்து, அம்பிகைக்கு பிரியமான வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம் ஆகியவற்றை படைக்க வேண்டும். அன்று வீட்டில் விளக்கேற்றி வைத்து, அம்பிகைக்கு பிரியமான வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம் ஆகியவற்றை படைக்க வேண்டும். நைவேத்தியமாக சர்க்கரை பொங்கல், பாயசம் என ஏதாவது ஒரு இனிப்பு செய்து வழிபாடு செய்வது சிறந்த பலன் அளிக்கும்.
ஆடி முதல் நாள் குலதெய்வ வழிபாட்டிற்கு உரிய சிறந்த நாளாகும். அதனால், முதல் நாள் குலதெய்வத்தை மனதார வழிபாடு செய்து பிறகு அம்பிகையை மனதார நினைத்து வழிபாடு செய்யவேண்டும்.
அதோடு மிக முக்கியமாக அன்றைய தினம் நமக்கு தெரிந்த அம்பிகையின் மந்திரம், ஸ்லோகம் ஆகியவற்றை சொல்லி வழிபாடு செய்வது நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். எதுவும் தெரியாதவர்கள் அபிராமி அந்தாதி படிக்கலாம்.
அப்படியாக, ஆடி மாதம் நாம் வீடுகளில் வழிபாட்டிற்கு உரிய நேரமாக காலை 5 மணி முதல் 6 மணி வரை, 8 மணி முதல் 10.30 மணி வரை ஆகும். காலை நேரத்தில் வழிபாடு செய்ய முடியாதவர்கள் கட்டாயம் மாலை நேரத்தில் வழிபாடு செய்யலாம்.
அன்றைய தினம் தேய்பிறை அஷ்டமியும் இணைந்து வருவதால் மாலை 06.30 மணிக்கு பிறகு தான் அஷ்டமி திதி துவங்குகிறது அதனால் 7 மணிக்கு பிறகு ஆடி மாத வழிபாட்டினை செய்யும் போது கால பைரவரை சேர்த்து வழிபடலாம்.
இவ்வாறு செய்தால் நாம் அம்பிகையின் அருளையும், கால பைரவர் அருளையும் சேர்த்து பெறலாம். ஆக, இந்த ஆடி மாதம் மிகவும் சக்தி வாய்ந்த மாதமாகும். இந்த மாதத்தில் தவறாமல் அம்பிகையை வழிபாடு செய்து அம்மனின் முழு அருளைப்பெறுவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |