ஆடி அமாவாசை 2025: இந்த வருடம் எப்பொழுது? திதி கொடுக்க உகந்த நேரம் எது?
தமிழ் மாதங்களில் மிகவும் முக்கியமான மாதமாக ஆடி மாதம் இருக்கிறது. இந்த ஆடி மாதத்தில் பல்வேறு முக்கிய விசேஷங்கள் நிறைந்து உள்ளது. அதிலும் குறிப்பாக, ஆடி அமாவாசை மிக முக்கியமான நாளாகும்.
அதாவது, மாதந்தோறும் வருகின்ற அமாவாசை சிறப்பான தினம் என்றாலும், ஆடி மாதம் அமாவாசை, புரட்டாசி மாத மகாளயப்பட்ச அமாவாசை, தை மாத அமாவாசை ஆகிய மூன்று அமாவாசை தினங்கள் பிரசித்தி பெற்றவையாக கருதப்படுகிறது.
வழக்கமாக வரும் அமாவாசை நாட்களில் தங்களின் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க தவறியவர்கள் ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுத்தால், அவர்கள் அந்த ஆண்டு முழுவதும் அமாவாசை தினத்தில் முன்னோர்களை வழிபட்ட பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்த ஆண்டு ஆடி அமாவாசை வருகின்ற ஜூலை 24ஆம் தேதி அன்று வருகிறது. இந்த நாளில் முன்னோர்களுக்கு நீர் நிலைகளில் தர்ப்பணம் கொடுத்தால் அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெறலாம். அந்த நாளில் தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் அன்னதானம் செய்யலாம்.
அதேப்போல், ஆடி அமாவாசை நாளில் காகத்திற்கு படையல் போடுவதும் முன்னோர்களை மகிழ்ச்சியாக்கும் ஒரு முறை ஆகும்.
இந்த ஆண்டு ஆடி அமாவாசையின் திதி ஜூலை 23ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவு 2.28 மணிக்கு தொடங்கி, ஜூலை 24 ஆம் தேதி இரவு 12:40 மணிக்கு முடிகின்றது. அதனால் ஜூலை 24ஆம் தேதி அதிகாலை முதலே திதி கொடுக்கலாம்.
நாம் இந்த நாளில் மறக்காமல் திதி கொடுத்து முன்னோர்களை வழிபாடு செய்வதால் நமக்கு ஏற்பட்ட பித்ரு தோஷம் விலகி குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என்று ஜோதிடர்கள் சொல்கிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







