மகாபாரதம்: போரில் அர்ஜுனனின் தேர் ஏன் பற்றி எரிந்தது தெரியுமா?
பாரத போர் முடிந்துவிட்டது. கிருஷ்ண பகவான் தேரில் அமர்ந்தபடியே இருக்கும் அர்ஜுனனிடம் போர் தான் முடிந்து விட்டதே! இனியும் ஏன் நின்று கொண்டிருக்கிறாய்? தேரை விட்டு இறங்கு என்றார். அதற்கு அர்ஜுனன் நீ தான் என்னை போரில் வெற்றி பெற செய்தாய்.
அதனால் வெற்றி பெற்றவனை தேரோட்டி தான் கைப்பிடித்து இறக்கி விட வேண்டும் என்ற சம்பிரதாயம் இருக்கிறதே! அதை மறந்து விட்டாயா? நீ அப்படி செய்வதும் எனக்கு பெருமை தானே கிருஷ்ணா? ஆனால் நீயோ என்னைக் கீழே இறங்கு என்று ஆணையிடுகிறார். இது என்ன நியாயம் கண்ணா என்கிறார் அர்ஜுனன்.
ஆனால் கிருஷ்ணர் அர்ஜுனன் சொன்ன எந்த வார்த்தைகளையும் காதல் எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக கீழே இறங்கு அர்ஜுனா என்று கண்டிபுடன் சொல்லிவிட்டார். அதைக் கேட்டு மிகுந்த வருத்தத்துடன் கீழே இறங்குகிறார் அர்ஜுனன்.

அப்பொழுது, கிருஷ்ணர் அர்ஜுனனிடம் தேரின் பக்கத்தில் நிற்காதே சற்று தள்ளி நில் என்று அதட்டலுடன் சொல்கிறார். அர்ஜுனனால் கிருஷ்ண பகவானுடைய அதட்டலை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
ஏன், பாரதப்போரில் வெற்றி பெற்ற மகிழ்ச்சி கூட மனதில் இருந்து நீங்கிவிட்டது. எதுவும் புரியாதவனாய் தள்ளி நின்றான் அர்ஜுனன். வாடிய முகத்துடன் நின்ற அர்ஜுனனை பார்த்து புன்னகைத்த கிருஷ்ணன் தேரில் இருந்து குதித்து ஓடிச் சென்று அர்ஜுனனை கட்டி அணைத்துக்கொண்டார்.
மேலும், கிருஷ்ண பகவான் தேரை விட்டு குதித்த அந்த கணமே தேர் தீப்பற்றி எரிந்து போனது. கிருஷ்ணர் அர்ஜுனனிடம் பார்த்தாயா தேர் எரிகிறது. அதனால்தான் உன்னை கீழே இறங்கச் சொன்னேன் எஎன்றார்.
அர்ஜுனன் அதிர்ச்சியில் தேர் ஏன் எரிந்தது என்று எதுவும் புரியாதவனாய் கேட்கின்றான்? அதற்கு கிருஷ்ணர், அர்ஜுனா போர் புரியும் பொழுது கௌரவர்கள் உன் மீது பல அஸ்திரங்களை ஏவினார். அவற்றின் சக்தி அளவிட முடியாததாக இருந்தது.

இவ்வளவு நேரம் தேரில் நானும், தேர் கொடியில் அனுமனும் இருந்து அதை தடுத்துக் கொண்டிருந்தோம். அதனால் தான் அந்த சக்திகள் எல்லாம் வலிமையற்று இருந்தன. தேரை விட்டு நான் குதித்தும் தேர்கொடியில் இருந்த ஹனுமனும் புறப்பட்டு விட்டார்.
அஸ்திரங்களின் சக்தி தலை தூக்கியது. அதனால் தேர் பற்றி எரிய தொடங்கிவிட்டது. ஆனால், இந்த உண்மை புரியாமல் நீயோ போரில் வெற்றி பெற்ற உன்னை கவுரவிக்கவில்லை என்று வருத்தப்பட்டு கொண்டிருக்கிறாய்.
பார்த்தாயா அர்ஜுனா!வெற்றி பெற்றதும் நான் என்னும் ஆணவம் உனக்கு வந்துவிட்டது. இங்கு மனிதருடைய ஆணவம் அழிவிற்கு வழி வகுக்கும் என்பதை மறந்து விடாதே என்று அறிவுரை கூறினார் கிருஷ்ணர்.
அதோடு, கிருஷ்ணர் சொன்ன அறிவுரையில் தேர் பற்றி எரிந்தது போல் அர்ஜுனனின் ஆணவமும் பற்றி எரிந்து சாம்பலானது. ஆக இறைவன் நமக்கு எந்த காரணமும் இல்லாமல் கஷ்டம் தருவதில்லை என்பதை நமக்கு தெளிவாக உணர்த்துகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |