பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ அருளும் அபிராமியம்மன் பதிகம்
பொதுவாக ஒருவரை வாழ்த்தும் பொழுது பதினாறு பெற்று பெருவாழ்வு வாழ்க என்று சொல்லி வாழ்த்துவது உண்டு.அப்படியாக அந்த 16 செல்வங்கள் என்ன?அதை நாம் எப்படி பெறுவது என்பதை இந்த பதிகம் கூறுகிறது அதை பற்றி பார்ப்போம்.
பாடல்
கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி! அபிராமியே!
விளக்கம்
1.கலையாத கல்வி (வெற்றிக்கு வழிகாட்டக் கூடிய கல்வி)
2.குறையாத வயது (நீண்ட ஆயுள்)
3.கபடு வராத நட்பு (நம்பிக்கையான நல்ல நண்பர்கள்)
4.குன்றாத வளமை (வளமான வாழ்க்கைக்குத் தேவையான பொருள்)
5.குன்றாத இளமை (உழைப்புக்குத் தளராத உடல் வலிமை)
6.கழுபிணி இல்லா உடல் (நோயற்ற வாழ்க்கை)
7.சலியாத மனம் (கலங்காத மனத்திண்மை)
8.அன்பகலாத மனைவி (மாறாத அன்பைச் செலுத்தும் மனைவி)
9.தவறாத சந்தானம் (அறிவு, ஆற்றல், ஒழுக்கம், ஆயுள் இவற்றில் தவறி விடாத குழந்தைகள்)
10.தாழாத கீர்த்தி (மென்மேலும் வளரக்கூடிய பொருளும் புகழும்)
11.மாறாத வார்த்தை (வாய்மை)
12.தடைகள் வராத கொடை (இல்லையென்று சொல்லாத உதவி)
13.தொலையாத நிதியம் (சிக்கனம், சேமிப்பு பழக்கம்)
14.கோணாத கோல் (நேர்மையும் திறமையும் கொண்ட குடும்ப நிர்வாகம்)
15.உதவி பெரிய தொண்டரோடு கூட்டு (பெருமக்கள் தொடர்பு)
16.துய்ய நின்பாதத்தில் அன்பு (இறை நம்பிக்கை) இந்தப் பதினாறுக்கும் அப்பால் உன் தொண்டர்களை (பக்தர்களை) என்றும் பிரியாத கூட்டு. இவற்றை அருள வேண்டும், அபிராமியே!
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |