இழந்த பதவியை மீண்டும் பெற வேண்டுமா?இத்தல சிவனை ஒருமுறை வழிபாடு செய்யுங்கள்
அசுரர்களை அழிக்க தந்தை ஓட்டி வந்த தேரின் அச்சினையே முறித்த விநாயகரின் திருவிளையாடல் நடைபெற்ற திருத்தலத்தின் பெருமைகளை தெரிந்துகொள்ளலாம்.
தல அமைவிடம்:
அச்சிறுபாக்கம் ரயில் நிலையம் சென்னை எழும்பூர் - விழுப்புரம் ரயில் மார்க்கத்தில் அமைந்துள்ளது. சிறிய ரயில் நிலையம் என்பதால் அனைத்து ரயில்களும் இங்கு நிற்பதில்லை. எனவே, அச்சிறுபாக்கத்திற்கு முந்தைய ரயில் நிலையமான மேல்மருவத்தூரில் இறங்கி, அங்கிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள அச்சிறுபாக்கம் கோயிலை ஆட்டோவில் சென்றடையலாம்.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்தூர் கடந்து வரும்போது அச்சிறுபாக்கம் நிறுத்தம் வரும். அங்கு இறங்கி இடதுபுறம் பிரியும் சாலையில் சென்றால் சுமார் அரை கி.மீ. தொலைவில் கோயிலை அடையலாம். சென்னையில் இருந்து சுமார் 96 கி.மீ. தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது.
முப்புர அசுரர்களின் அழிவு:
வித்யுந்மாலி, தாருகாட்சன், கமலாட்சன் என்ற மூன்று அசுரர்கள் முறையே பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் ஆன மூன்று கோட்டைகளைக் கட்டி வாழ்ந்து வந்தனர். இந்தக் கோட்டைகள் விமானம் போல பறக்கும் வசதியுடன் இருந்தன.
இதன் மூலம் தேவர்களை இந்த அசுரர்கள் கொடுமைப்படுத்தி வந்தனர். அவர்களின் தொல்லையை தாங்க முடியாத தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். மூன்று அசுரர்களையும் அழிக்க சிவபெருமான் பூமியைத் தேராகவும், நான்கு வேதங்களை குதிரைகளாகவும், பிரம்மாவை சாரதியாகவும், சூரிய சந்திரர்களை சக்கரங்களாகவும் கொண்டு மற்ற உலகப் படைப்புகளை போர் வீரர்களாகவும் கொண்டு தேவர்களுடன் புறப்பட்டார்.
ஆனால், புறப்படுவதற்கு முன்பு முழுமுதற் கடவுளான விநாயகரை வணங்க மறந்துவிட்டனர். இதனால் தேரின் அச்சை விநாயகர் முறித்துவிட்டார்.
அச்சிறுபாக்கம் தல வரலாறு:
தேரின் அச்சு முறிந்ததற்கான காரணத்தை அறிந்த சிவன், விநாயகரை வேண்ட, அவரும் தேரின் அச்சை சரி செய்தார். அதன்பின் சிவபெருமான் திரிபுர அசுரர்களை அழித்தார். தேர் அச்சு முறிந்து நின்ற இடம் என்பதால் இத்தலம் அச்சு இறு பாக்கம் என்று அழைக்கப்பட்டு, பின்னர் மருவி அச்சிறுபாக்கம் என்று அழைக்கப்படுகிறது.
பாண்டிய மன்னனும் உடும்பு திருவிளையாடலும்: பாண்டிய மன்னன் ஒருவன் சிவதல யாத்திரை சென்று கொண்டிருந்தபோது, இத்தலத்தின் அருகே அவனது தேர் அச்சு முறிந்தது. பணியாளர்கள் சக்கரத்தை சரி செய்து கொண்டிருந்த போது, தங்க நிறமான உடும்பு ஒன்று சென்றதை மன்னன் கண்டான்.
தங்கத்தால் ஜொலித்த அந்த உடும்பைப் பிடிக்க மன்னன் சென்றான். உடும்போ, ஒரு சரக்கொன்றை மரத்தினுள் புகுந்து கொண்டது. காவலர்கள் மரத்தை வெட்டியபோது, ரத்தம் வெளிப்பட்டது. உடும்பு வெட்டுப்பட்டதாக நினைத்த மன்னன் மரத்தின் அடியில் தோண்டிப் பார்த்தான். எவ்வளவோ தேடியும் உடும்பு மட்டும் அகப்படவில்லை.
அன்றிரவில் மன்னனுக்கு காட்சி தந்த சிவன், உடும்பு மூலமாக தான் திருவிளையாடல் புரிந்ததை வெளிக்காட்டி, இவ்விடத்தில் சுயம்புவாக எழுந்தருளி இருப்பதை உணர்த்தினார்.
உமை ஆட்சீஸ்வரர் கோயில் தோற்றம்:
சிவபெருமானுக்கு அங்கேயே கோவில் கட்ட விருப்பம் கொண்டான் மன்னன். அப்போது அங்கு ‘திரிநேத்ரதாரி’ எனும் மூன்று கண்களை உடைய முனிவர் ஒருவர் வந்தார். தீவிர சிவபக்தரான அவரைப் பற்றி அறிந்து கொண்ட மன்னன், இத்தலத்தில் சிவாலயம் கட்டித்தரும்படி கூறிவிட்டு தனது யாத்திரையை தொடர்ந்தார்.
நெடுநாட்கள் கழித்து மன்னன் திரும்பி வந்தபோது கோவில் மத்தியில் நந்தி, கொடி மரத்துடன் ஆட்சிபுரீஸ்வரருக்கு ஒரு கருவறையும், அவருக்கு வலது பின்புற பிரகாரத்தில் ராஜகோபுரத்தின் நேரே உமை ஆட்சீஸ்வரருக்கு ஒரு மூலஸ்தானமும் கட்டி வைத்திருந்தார். (இக்கருவறையில் லிங்கத்திற்கு பின்புறம் பார்வதியுடன், சிவன் திருமணக்கோலத்தில் காட்சி தருகிறார்).
கோயில் அமைப்பின் சிறப்பு:
இதற்கு விளக்கம் புரியாத மன்னன் காரணம் கேட்டான். ‘உமை ஆட்சி செய்த ஈஸ்வரனே, உடும்பு வடிவாகி என்னையும் ஆட்சி செய்தார். எனவே, உங்களுக்கு காட்சி தந்த ‘உமை ஆட்சீஸ்வரருக்கு’ பிரதான வாசல் கொண்டு ஒரு கருவறையும், ‘எமை ஆட்சி செய்த ஈஸ்வரருக்கு’ பிரதான கருவறையுமாக வைத்து கோவில் கட்டினேன்’ என்றார் திரிநேத்ரதாரி.
அதனை மன்னனும் ஏற்றுக்கொண்டான். சுயம்பு லிங்கமாக இருக்கும் எமையாட்சீஸ்வரரே இங்கு பிரதானம். திருவிழாக்களும் இவருக்கே நடக்கிறது. ராஜகோபுரத்தில் இருந்து கொடிமரமும், நந்தியும் விலகியே இருக்கிறது.
பிரகாரத்தில் உள்ள சரக்கொன்றை மரத்தின் அடியில் “கொன்றையடியீஸ்வரர்” சன்னிதியில், சிவனை வணங்கிய கோலத்தில் திரிநேத்ரதாரி இருக்கிறார். இம்மரத்தில் சித்திரை மாத திருவிழாவின் போது மட்டும் பூக்கள் மலர்வது சிறப்பு.
கோயில் அமைப்பு:
ஐந்து நிலைகள் கொண்ட கிழக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் இக்கோயில் அமைந்துள்ளது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் நேரே உள் வாயில் உள்ளது. கோபுர வாயிலைக் கடந்தவுடன், கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவை நேராக இல்லாமல் சற்று வடக்கே அமைந்துள்ளன.
இங்குள்ள ஆட்சிபுரீஸ்வரர், உமையாட்சீஸ்வரர் என்ற இரண்டு மூலவர்கள் சந்நிதிகளும், இளங்கிளி அம்மை, உமையாம்பிகை என்ற இரண்டு அம்பாள் சந்நிதிகளும் தனித்தனியே அமைந்துள்ளன.
ஆட்சீஸ்வரர் சந்நிதி:
கோபுர வாயிலுக்கு நேரே உள்ள உள் வாயில் வழியாகச் சென்றால் வலதுபுறம் ஆட்சீஸ்வரர் சந்நிதி உள்ளது. இவரே இவ்வாலயத்தின் பிரதான மூலவர். சுயம்பு மூர்த்தியான இவர் லிங்க வடிவில் குட்டையான பாணத்துடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார்.
இவர் குடியிருக்கும் கருவறை வாயிலில் இருபுறமும் துவாரபாலகர்களாக சிவனால் வதம் செய்யப்பட்ட தாரகனும், வித்யுன்மாலியும் காணப்படுகின்றனர்.
தாரகனுக்கு அருகில் விநாயகரும், வித்யுன்மாலிக்கு அருகில் வள்ளி தெய்வானையுடன் முருகரும் உள்ளனர். கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். ஆட்சீஸ்வரர் சந்நிதியை சுற்றி வலம் வர வசதி உள்ளது.
உமையாட்சீஸ்வரர் சந்நிதி:
உள் வாயிலைக் கடந்து நேரே சென்றால் உமையாட்சீஸ்வரர் சந்நிதியை அடையலாம். கருவறை வாயிலில் இருபுறமும் அலமேலுமங்கை, ஸ்ரீனிவாசப் பெருமாள், பழனி ஆண்டவர், உற்சவ மூர்த்திகள், லட்சுமி துர்க்கை சரஸ்வதி, ஆறுமுகசாமி ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. கருவறைக்குள் உமையாட்சீஸ்வரர் கிழக்கு நோக்கி லிங்க உருவில் காட்சி தருகிறார்.
லிங்க உருவின் பின்புறம் பார்வதியுடன் சிவபெருமான் திருமணக் கோலத்தில் காட்சி தருகிறார். அகத்தியருக்கு தனது கயிலாய திருமணக் காட்சியை காட்டியருளிய தலங்களில் இத்தலமும் ஒன்று. எனவே இத்தலம் திருமண பிரார்த்தனைத் தலமாக கருதப்படுகிறது.அருகில் தெற்கு நோக்கிய உமையாம்பிகை திருஉருவச் சிலையும் உள்ளது.
சரக்கொன்றை மரமும் கொன்றையடி ஈஸ்வரரும்:
ஆலயத்தின் வடக்கு வெளிப் பிராகாரத்தில் தலவிருட்சமான சரக்கொன்றை மரம் உள்ளது. அதன் அடியில் கொன்றையடி ஈஸ்வரர் சந்நிதி உள்ளது. அருகில் நந்திகேஸ்வரரும், சிவனை வணங்கியபடி திரிநேத்ரதாரி முனிவரும் உள்ளனர்.
பாண்டிய மன்னன் ஒருவனுக்கு இத்தலத்தில் சரக்கொன்றை மரத்தடியில் காட்சியளித்த சிவபெருமான், தனக்கு இவ்விடத்தில் ஒரு ஆலயம் எழுப்பச் சொல்ல, மன்னன் அங்கு வந்த திரிநேத்ரதாரி முனிவரிடம் ஆலயம் கட்டும் பொறுப்பை ஒப்படைத்தான்.
திரிநேத்ரதாரி முனிவரும், தன்னையும், மன்னனையும் ஆட்கொண்ட இறைவனுக்கு, இரு கருவறைகள் கொண்ட இக்கோயிலைக் கட்டினார். கோயிலைக் கண்ட மன்னன் இரு சந்நிதிகள் அமைந்திருப்பது கண்டு முனிவரிடம் விவரம் கேட்டான்.
முனிவரும் அரசரை ஆட்கொண்ட இறைவனுக்கு உமையாட்சீஸ்வரர் சந்நிதியும், தன்னை ஆட்கொண்ட இறைவனுக்கு ஆட்சீஸ்வரர் சந்நிதியும் அமைத்தேன் என்று மறுமொழி தந்ததாக வரலாறு கூறுகிறது.
இளங்கிளி அம்மை சந்நிதி:
வடக்கு வெளிப் பிராகாரத்தின் வடகிழக்கு மூலையில் இத்தலத்தின் பிரதான அம்பாள் இளங்கிளி அம்மை தனி சந்நிதியில் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் தரிசனம் தருகிறாள்.
அச்சுமுறி விநாயகர்:
சிவபெருமானின் தேர் அச்சை முறித்த விநாயகர் அச்சுமுறி விநாயகர் என்ற பெயருடன் கோயிலுக்கு வெளியே தனி சந்நிதியில் மேற்கு நோக்கி அமர்ந்து காட்சி தருகிறார். புதிய செயல்கள் தொடங்குவதற்குமுன் இவ்விநாயகரிடம் வேண்டிக்கொண்டால், அச்செயல் தடையின்றி நடைபெறும் என்பது நம்பிக்கை.
அருணகிரிநாதர், இவ்விநாயகரை தரிசித்துவிட்டு விநாயகர் துதி பாடி பிறகுதான் திருப்புகழ் பாடத் தொடங்கினார் என்பதிலிருந்தே இவ்விநாயகரின் பெருமையை உணரலாம். விநாயகர் துதியில் “முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம் அச்சது பொடி செய்த” என்று தல வரலாற்றைக் குறிப்பிடுகிறார்.
தல பெருமைகள்:
ஆட்சிபுரீஸ்வரரை வழிபட்டால் நல்ல வேலை, வேலை உயர்வு, வேலையில் ஆட்சி செய்யக்கூடிய பதவி ஆகியவை கிட்டும் என்பது நம்பிக்கை. அமாவாசை தோறும் இவ்வாலயத்தில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு இறைவனை வழிபட தொழிலில் ஏற்படும் தடைகள், ஜென்ம வினைகள், தோஷங்கள் ஆகியவை நீங்கும்.
பூஜைகள்:
தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 29-வது தலம். சித்திரையில் 10 நாட்கள் பிரம்மோற்சவம், பவுர்ணமியில் விசேஷ பூஜைகள் நடக்கிறது. ஆட்சிபுரீஸ்வரரிடம் வேண்டிக்கொண்டால் ஆட்சி செய்யும் வாய்ப்பு, ஆளுமைத் திறன், பதவி உயர்வு கிடைக்கும் என்பதும், சுவாமி அட்சரம் எனும் எழுத்தின் வடிவமாக இருப்பதால் கல்வி, வேள்விகளில் சிறக்கலாம் என்பதும் நம்பிக்கை.
இங்கு அமாவாசை தோறும் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. இதில் கலந்துகொண்டால் தோஷங்கள், ஜென்ம வினைகள், தொழில் தடைகள், மனக் குழப்பங்கள் நீங்கும் என நம்புகின்றனர்.
பிரார்த்தனை நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூஜைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் பக்தர்களின் வழிபாட்டிற்காக கோயில் திறந்திருக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |