முன் ஜென்ம பாவங்களை போக்கி சனி தோஷத்திலிருந்து நிவாரணம் பெற வேண்டுமா?
ஒருவருடைய வாழ்வில் ஏழு பிறவிகள் இருப்பதாக வேத சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
ஒருவன் அவனுடைய முற்பிறவியில் செய்த பாவங்களையும் இந்த பிறவியில் செய்த பாவங்களையும் போக்கும் தலமாக ஸ்ரீ மகுடேஸ்வரர் கோயில் உள்ளது.
இந்த கோயிலானது ஈரோடு மாவட்டத்தில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கொடுமுடியில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு மேலும் ஒர் சிறப்பம்சம் உள்ளது. அதாவது மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் இந்த கோயிலில் ஒன்றாக பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர்.
அழிக்கும் கடவுளான சிவபெருமானின் திருக்கல்யாணத்தை காண படைக்கும் கடவுளான பிரம்மாவும் காக்கும் கடவுளான விஷ்ணுவும் இந்த தலத்திற்கு வந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
இத்தகு சிறப்பம்சம் மிக்க கொடுமுடி ஸ்ரீ மகுடேஸ்வரர் கோயிலில் வரலாற்றையும் சிறப்புகளையும் தெரிந்துகொள்ளலாம்.
தல வரலாறு 1:
ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் இடையே யார் பெரியவர் என்ற பெரும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அவர்களுடைய பலத்தை காண்பிக்க இந்திரன் விதித்த விதிமுறைகளின் படி போட்டி தொடங்கியது. ஆதிசேஷன் மேரு மலையை இறுக்கமாக பற்றிக்கொள்ள வாயு பகவான் தன் முழு பலத்தையும் பயன்படுத்தி வேகமாக காற்றை செலுத்த, மேரு மலையின் ஒரு பகுதி சிறு சிறு துண்டுகளாக சிதறியது. அவ்வாறு சிதறி தென் திசையில் விழுந்த அனைத்து கற்களும் ஒவ்வொரு சிவலிங்கமாக மாறியதாகவும் அதுவே கொடுமுடி ஸ்ரீ மகுடேஸ்வரர் கோயில் என வரலாறு கூறுகிறது.
தல வரலாறு 2:
ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் இடையே யார் பெரியவர் என்ற பெரும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அவர்களுடைய பலத்தை காண்பிக்க இந்திரன் விதித்த விதிமுறைகளின் படி போட்டி தொடங்கியது. ஆதிசேஷன் மேரு மலையை இறுக்கமாக பற்றிக்கொள்ள வாயு பகவான் தன் முழு பலத்தையும் பயன்படுத்தி வேகமாக காற்றை செலுத்த, மேரு மலையின் ஒரு பகுதி சிறு சிறு துண்டுகளாக சிதறியது. இவ்வாறு மேரு மலை தகர்ந்தபோது, ஐந்து துண்டுகள் மணிகளாகச் சிதறி விழுந்தன. இவற்றில் சிவப்பு மணி விழுந்த இடம் திருவண்ணாமலையாகவும், மரகதம் விழுந்த இடம் திருஈங்கோய் மலையாகவும், மாணிக்கம் விழுந்த இடம் ரத்தினகிரி மலையாகவும், நீலமணி விழுந்த இடம் திருப்பொதிகை மலையாகவும் அமைந்தன. ஐந்தாவது துண்டாக வைரம் விழுந்த இடம் கொடுமுடியாக அமைந்தது. கொடுமுடி என்பதற்கு பெரிய சிகரம் எனப்பொருள். மலைச்சிகரமே மகுடலிங்கராக அமைந்துள்ளதால், கொடுமுடி தென் கைலாயம் என்ற பெயரைப் பெற்று திகழ்கிறது.
கோயில் அமைப்பு:
ஸ்ரீ மகுடேஸ்வரர் கோயிலானது காவிரி ஆற்றின் மேற்கு கரையில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. 640 அடி நீளமும் 484 அடி அகலமும் கொண்டுள்ளது. மும்மூர்த்திகளுக்கும் தனித்தனியாக மூன்று கோபுரங்களும், தனித்தனியாக மூன்று சன்னதிகளும் மூன்று வாயில்களும் அமைக்கப்பட்டுள்ளது.
கோயிலினுள் நுழைந்தவுடன் கொடிமரமும், நந்தீஸ்வரரும் காணப்படுகிறது. இந்த சன்னதியில் நவகிரகங்கள், தட்சிணாமூர்த்தி, சூரியன், 63 நாயன்மார்கள், முருகப்பெருமான் ஆகியோர் வீற்றிருக்கின்றனர். மேலும் கூடுதல் சிறப்பாக இந்த கோயிலின் மேற்கூரையில் ராசி சக்கரங்கள் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளன. சிவபெருமான் சன்னதியின் வலதுபுறத்தில் வடிவுடையம்மன் சன்னதி இடம்பெற்றுள்ளது. அம்பாள் சன்னதியின் உட்பிரகாரத்தில் வல்லப கணபதி, சோழீஸ்வரர், விசுவேசர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி ஆகியோர் காட்சியளிக்கின்றனர். இங்கு மகாலட்சுமிக்கு என தனி சன்னதியும் அமைக்கப்பட்டுள்ளது.
விநாயகர்:
வேப்ப மரமும், அரச மரமும் இணைந்திருக்கும் இடத்தில் முழு முதற் கடவுளான விநாயகர் காட்சியளிக்கிறார். இந்த விநாயகரை காவிரி ஆற்றில் ஓடும் தண்ணீரை கொண்டு அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணத்தடை விலகும். குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு விரைவில் மக்கட்பேறு உண்டாகும்.
வன்னி மரம்:
மகுடேஸ்வரர் கோயிலின் தல விருட்சமாக வன்னி மரம் அமைந்துள்ளது. இரண்டாயிரம் ஆண்டு பழமையான இந்த மரத்தின் ஒருபுறக்கிளை முழுவதும் முட்களுடன் காணப்படும் அதே வேளையில் மறுபுறம் உள்ள மற்றொரு கிளையில் முட்கள் இல்லாமல் தெய்வீகத்துடன் திகழ்கிறது. பிரம்மா வீற்றிருக்கும் வன்னி மரத்தினை பிரதட்சிணம் செய்வதன் மூலம் சனி, ராகு, கேது தோஷங்களில் இருந்து விடுபடலாம். பஞ்ச பாண்டவர்கள் இந்த தலத்திற்கு வந்திருந்த போது அவர்களுடைய ஆயுதங்களை வன்னி மரத்தில் மறைத்து வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. நான்கு கரங்களுடன் அட்சமாலை கமண்டலத்துடன் பிரம்மா இந்த வன்னி மரத்தில் காட்சியளிக்கிறார். இந்த மரத்தின் மேலும் ஒரு சிறப்புள்ளது. மரத்தின் இலையை தண்ணீரில் போட்டு வைத்தால் அந்த இலை பல நாட்களுக்கு வாடாமல் இருக்கும்.
தலப் பெருமை:
ஸ்ரீ மகுடேஸ்வரர் கோயிலின் தனித்துவம் என்னவென்றால் மும்மூர்த்திகளை ஒரே நேரத்தில் தரிசப்பதுடன் மும்முகம் கொண்ட பிரம்மாவையும் இங்கே தரிசனம் செய்யலாம். இந்த தலம் உருவாக ஆதிசேஷன் காரணமாக இருந்ததால் இங்கு நாகர் வழிபாடு மிகவும் விஷேசமாகும்.
அகத்தியர் உள்ளிட்ட பல முனிவர்களுக்கு சிவபெருமான் திருமண கோலத்தில் காட்சியளித்துள்ளார். வாலில் கட்டப்பட்ட மணியுடன் ஆஞ்சநேயர் கோரப்பல்லுடன் காட்சியளிக்கிறார்.
இத்திருத்தலத்தில் சனிபகவான் நின்ற நிலையில் அருள்பாலிக்கிறார். சனிபகவானின் சன்னதிக்கு நேரெதிராக அவருடைய வாகனமான காகம் இருக்கிறது. இந்த காகத்திற்கு முன்பு பக்தர்கள் எள் பொட்டலங்களை கொண்டு தங்களுக்கு தாங்களே தலைக்கு மேல் சுற்றி நெருப்பில் போடுகின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் அவர்களின் சனி தோஷம் நிச்சயமாக நீங்கும் என மக்கள் நம்புகின்றனர்.
பிரம்மன் வந்து வணங்கியதால் இந்த தலத்திற்கு பிரமபுரி என்றும் திருமால் பூஜித்ததால் ஹரிஹரபுரம் என்றும் கருடன் இந்த தலத்தின் இறைவனை பூஜித்து தேவலோகம் சென்று அமுதம் கொண்டு வந்ததால் அமிர்தபுரி என்றும் பெயர் பெற்றுள்ளது.
ஸ்ரீ மகுடேஸ்வரர் திருத்தலத்தில் காவிரி ஆறு, பிரம்ம தீர்த்தம், பரத்வாஜ தீர்த்தம், தேவ தீர்த்தம் என நான்கு தீர்த்தங்கள் உள்ளன.
இத்திருத்தலம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூன்று நாயன்மார்களால் பாடப்பட்டுள்ளது. தேவார பாடல்களில் இடம்பெறும் 274 சிவாலயங்களில் இத்திருத்தலம் 213-வது சிவாலயமாக உள்ளது.
சிறப்பம்சம்:
ஸ்ரீ மகுடேஸ்வரர் கோயிலில் அமைந்துள்ள சிவ லிங்கமானது சுயம்பு லிங்கமாகும். இங்கு அமைந்துள்ள சிவலிங்கத்திற்கு அகத்தியர் பூஜை செய்ததற்கு அடையாளமாக அவரது விரல் தடயங்கள் லிங்கத்தின் மீது காணப்படுகிறது. இதற்கு மற்றொரு வரலாறும் உள்ளது மறைந்திருந்த சிவலிங்கத்தை கண்டுபிடிக்கும் போது சிலையை பிடித்ததால் அந்த கை விரல்கள் பதிந்ததாகவும் கூறப்படுகிறது.
சிறப்பு பெயர்கள்:
கொங்கு நாட்டில் புலவர்களால் பாடப்பெற்ற ஏழு திருத்தலங்களில் ஒன்றாக இந்த ஸ்ரீ மகுடேஸ்வரர் கோயில் உள்ளது. இத்தகைய சிறப்புமிக்க கோயிலுக்கு பிரம்மபுரி, அரிகரபுரம், அமுதபுரி, கன்மாடபுரம், கறையூர், கறைசை, திருப்பாண்டிக் கொடுமுடி, அங்கவருத்தனபுரம், பாண்டு நகரம், பரத்துவாச க்ஷேத்திரம் என பல பெயர்கள் உள்ளன.
கல்வெட்டு ஆதாரங்கள்:
ஸ்ரீ மகுடேஸ்வரர் கோயிலுக்கு பாண்டிய மன்னர்கள் ஆண்டாண்டு காலமாக தங்களுடைய ஆதரவை அளித்துள்ளனர். அதன் காரணமாக இந்த தலம் திருப்பாண்டி கொடுமுடி என அழைக்கப்படுகிறது. இந்த கோயில் குறித்த குறிப்புகள் சுந்தர பாண்டியன் கேசரியின் ஆட்சி குறித்து கூறும் கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளது. மலையத்துவுஜ பாண்டியன், மாறவர்மன் சுந்தரபாண்டியன், பாண்டிய கேசரிவர்மன் போன்ற பாண்டிய மன்னர்கள் இக்கோயிலுக்கு நிலம், நகைகள் போன்றவற்றை தானமாக வழங்கியுள்ளதாகவும் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டிலேயே மும்மூர்த்திகளைக் கொண்ட ஒரே கோயில் என்ற பெருமையை பெற்ற இந்த தலத்திற்கு வந்து வழிபட்டால் பல மடங்கு ஆசிர்வாதங்கள் அளவில்லாமல் கிடைக்கும். இங்கு வரும் பக்தர்களின் முன் ஜென்ம பாவங்கள் கூட விலகி அவர்கள் தங்களை புது மனிதர்களாக உணர்வார்கள். நீங்களும் தமிழ்நாட்டிலோ அல்லது வெளி மாநிலங்களிலோ இருந்தால் ஒருமுறையாவது கொடுமுடி சென்று மும்மூர்த்திகளின் அருளோடு விநாயகர், சனி பகவான், மகாலட்சுமி அருளையும் பெற்று செல்லுங்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |