சகல நன்மைகள் அருளும் பச்சைமலை பாலமுருகன்
தமிழ்நாட்டில் கோபிசெட்டிபாளையத்தில் பச்சமலையின் உச்சியில் இருக்கும் ஞான தண்டாயுதபாணி கோவில் கோவிலில் முருகன் பாலமுருகனாகக் காட்சி தருகின்றார். இங்கு உலக அதிசயமாக செந்தில் ஆண்டவருக்கு 40 அடி உயர சிலை நிறுவப்பட்டுள்ளது.
பச்சை மலை பசுமையாகக் காட்சி தரக்கூடிய செடி கொடிகள் நிறைந்த மலை அல்ல. பாறையாகக் காட்சி தரும் மலை ஆகும். இக்கோயிலுக்கு ஒரு ஸ்தல வரலாறு உண்டு. பொதுவாக கொங்கு நாட்டு கோயில்களில் துர்வாசர் முக்கிய நபராக இடம்பெற்றுள்ளனர்.
துர்வாச முனிவர் ஒரு முறை சிவபூஜைக்கு இடம் தேடி அலைந்தார். அப்போது மொடச்சூர் என்ற ஊர் அவருடைய ஞானதிருஷ்டியில் சிறந்த இடமாகத் தோன்றியது. அங்கு சென்று தம் தவத்தைத் தொடங்கியதும் அவர் மனம் ஒருநிலைப்படவில்லை.
உடனே முருகனை நினைத்துத் தம் மனதுக்குள் வேண்டினார். அப்போது அவர் மனதில் பச்சை மலை தோன்றியது. அம்மலையில் முருகன் அவருக்குக் காட்சியளித்தார். அதன் பின்பு துர்வாசர் பச்சை மலைக்கு வந்து பாலமுருகனை மேற்கு நோக்கி பிரதிஷ்டை செய்தார் .
பச்சை மலை முருகன் கோயில் அதிகமான பக்தர்கள் வராத கோவிலாக ஆரம்பத்தில் இருந்தது. 1956இல் குப்புசாமி கவுண்டர் என்பவரின் கனவில் முருகன் அசரீரியாகத் தன் கோயிலை புதுப்பித்து வழிபாடுகளை தொடர்ந்து செய்யும்படி தெரிவித்தார்.
அதன் பிறகு 1980 வரை குப்புசாமி கவுண்டர் அவர்கள் கோயில் திருப்பணிகளைத் தொடர்ந்து செய்து வந்தார். அதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் திருப்பணிகளைச் செய்து வருகின்றனர். இத் திருப்பணிகளுக்குப் பிறகு இக்கோவில் ஒரு முழு கோவிலாக மாறியது.
மரகதாசலேஸ்வரர் என்ற பெயரில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மரகதவல்லி என்ற பெயரில் அம்பாளுக்கு தனி சந்நிதி அமைக்கப்பட்டது. மற்ற தெய்வங்களும் இங்கு சாந்நித்தியம் பெற்றன. வித்யா கணபதி கிழக்கு நோக்கி உள்ளார்.
தெற்கு நோக்கி முருக பக்தர் அருணகிரிநாதர் இருக்கின்றார். ஞான தண்டாயுதபாணி கோவில் மலை மேல் இருப்பதால் இக்கோவிலைச் சென்றடைய 181 படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்படிகளில் வள்ளி திருமணக் காட்சிகள் சுதை சிற்பங்களாக அழகுறக் காட்சி அளிக்கின்றனர்.
கோவிலின் ஐந்து நிலை கோபுரம் கோபிசெட்டி பாளையத்தின் எந்தப் பகுதியில் இருந்து பார்த்தாலும் தெளிவாகத் தெரியும் படி உயரமாக உள்ளது.பச்சை மலை பாலமுருகன் கோவிலில் ஏழு கால பூஜை நடைபெறுகின்றது.
பொதுவாக ஆறு கால பூஜை நடைபெறும் . இங்கு ஏழு கால பூஜை நடைபெறுகின்றது. ஒவ்வொரு நாளும் மாலை 6:30 மணிக்குத் தங்கமயில் மீது முருகன். வலம் வருவார். அதன் பிறகு தங்கத் தேரில் திரு உலா வருவார். பின்பு அர்த்த ஜாம பூஜை நடைபெறும்.
அப்போது திருமுருகன் வெள்ளை உடை உடுத்து இருப்பார். ஒரு மணி நேரம் தமிழ் இலக்கியத்தில் திருமுருகாற்றுப்படை முதல் வேறு பல பக்தி இக்கியங்களில் இருந்து முருகன் பாடல்கள் பாடப்படும். இக்கோவிலில் தினை மாவும் ஞானப்பாலும் பிரசாதமாக வழங்கப்படும். பச்சை மலை முருகன் கோயிலில் முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை தோறும் சத்ரு சம்ஹார பூஜைகள் நடைபெறுகின்றன.
சஷ்டி திதி மற்றும் கிருத்திகை நடட்சத்திரஸத்தன்று சண்முகா அர்ச்சனை நடைபெறுகிறது. வைகாசி விசாகத்தன்று லட்சார்ச்சனை நடைபெறும். பங்குனி உத்திரம் இங்கு மூன்று நாள் விழாவாக வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
முதல் நாள் முருகனுக்கு சிவப்பு சாத்தி சிவ ரூபமாகவும் அடுத்த நாள் வெள்ளை உடை சார்த்தி பிரம்ம ரூபமாகவும் மறுநாள் பங்குனி உத்திரத்தன்று பச்சை சாத்தி விஷ்ணு ரூபமாகவும் முருகனைக் கொண்டாடுகின்றனர்.முருகன் இங்கு மும்மூர்த்தியாக தன் பக்தர்களுக்கு சிவப்பு, வெள்ளை, பச்சை நிறங்களில் உடை உடுத்தி காட்சியளிக்கின்றார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |