நோய் தீர்க்கும் காவல் தெய்வம் சமயபுரம் மாரியம்மன்
திருச்சிக்கு வடக்கே 15 கிலோ மீட்டர் தொலைவில் சமயபுரத்தில் எழுந்தருளியிருக்கும் மாரியம்மன் சர்வ வல்லமை படைத்தவளாக நோய் தீர்க்கும் தாயாக காவல் காக்கும் கடவுளாக கோடிக்கணக்கான பக்தர்களால் வணங்கப்பட்டு வருகின்றாள்.
சமயபுரம் கொள்ளிடம் நதிக்கு வடக்கே பதினோரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கண்ணனூர், கண்ணபுரம், விக்ரமபுரம், மாகாளிபுரம் என்ற பல பெயர்கள் இவ்வூருக்கு உண்டு. கண்ணனூர் ஹொய்சள மன்னன் வீர சோமேஸ்வரன் ஆட்சியில் தலைநகரமாக விளங்கிற்று.
இவ்வூரில் செல்லாயி அம்மன் கோவில், உஜ்ஜயினி மாகாளியம்மன் கோவில், போஜிஸ்வரன் கோவில் ஆகியவை உள்ளன. இவை எல்லாவற்றையும் விட மாரியம்மன் கோவில் மிகுந்த சிறப்பும் செல்வாக்கும் பெற்றுள்ளது.
பிறந்த வீட்டுச் சீர்
மாரியம்மன் ஆண்டுதோறும் தை பூசத்தன்று காவிரி நதிக்கரைக்குப் சென்று தன் தமையனைச் சந்திப்பாள். ஸ்ரீரங்கத்தில் இருந்து ரங்கநாதர் தங்கைக்கு அலங்காரச்சீர் கொண்டு வந்து கொடுப்பார். அன்றைக்கு ஸ்ரீரங்கம் ஊரில் இருக்கும் குடும்பங்கள் திருமணம் செய்து கொடுத்த தங்கள் மகள்களுக்கு சீர் கொண்டு போய் கொடுப்பார்கள்.
தைப்பூசத்திற்கு முன்பு பத்து நாள் திருவிழா நடக்கும் தைப்பூசம் அன்று கண்ணாடி பல்லக்கில் அம்மன் புறப்பட்டு வட காவிரிக்கு வந்து திருவரங்கத்தின் ரங்கநாதரிடம் சீர் பெற்று இரவு முழுக்க அங்கேயே ஆற்றங்கரையில் தங்கியிருந்து பின்பு அதிகாலையில் தன் கோவிலுக்கு வருவாள்.
விடிய விடிய அன்று மக்கள் கூட்டம் காவிரி நதிக்கரையில் அம்மனைப் பார்க்க வரும். பக்தர்கள் கட்டுச் சோறு கட்டிக் கொண்டு வந்து குடும்பத்தோடு தை மாத முழு நிலா அன்று நிலவின் ஒளியை ரசித்து பக்தி மார்க்கத்தில் மூழ்கித் திளைத்து வீடு திரும்புவார்கள்.
புலம்பெயர்ந்த அம்மன்
ஆதியில் மாரியம்மன் வைஷ்ணவி தேவியாக ஸ்ரீரெங்கத்தில் இருந்தாள். அதன் உக்கிரம் தாங்க இயலாமல் அவளை அங்கிருந்து அகற்ற முடிவு செயதனர். இப்போது இனாம் மாரியம்மன் என்று அழைக்கும் இடத்தில் கொண்டு வந்து வைத்து இளைப்பாறினர். பின்பு அங்கிருந்து தற்போது கோயில் கொண்டுள்ள இடத்தில் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்துள்ளனர்.
கோயில் வரலாறு
விஜயநகர மன்னன் இங்கு படையெடுத்து வரும்போது கண்ணனூரில் எழுந்தருளியிருக்கும் மாரியம்மன் வணங்கி இப்போரில் வெற்றி பெற்றால் அம்மையே உனக்கு பெரிய கோவில் கட்டுவேன் என்று வேண்டிக் கொண்டான்.
அவன் வெற்றி பெற்றதும் அவனது பிரதிநிதியாக திருச்சியை ஆட்சி செய்து வந்த விஜய் ரங்க சொக்கநாதனால் 1706 இல் அம்மனுக்குப் பெரிய கோவிலைக் கட்டினார். கண்ணனுர் மாரியம்மன் காலப்போக்கில் சமயபுரம் மாரியம்மன் ஆகிவிட்டாள்.
அம்மனின் தோற்றம்
மாரியம்மன் சிலை சுதையினாலும் மூலிகையினாலும் ஆனது. எனவே இதற்கு அபிஷேகம் கிடையாது. இங்கு மாரியம்மன் எட்டு கைகளும் சர்ப்பக் குடையும் காலில் அசுரர்களை மிதித்த படியும் காட்சியளிக்கின்றாள். அம்மன் கோபமாக இல்லாமல் அமைதி தவழும் முகத்துடன் விளங்குகின்றாள்.
ஒரு காலை மடித்து ஒரு காலைத் தொங்கவிட்டு லலிதாசனத்தில் அரசியாக வீற்றிருக்கின்றாள். தலைக்கு மேலே ஐந்து தலை நாகம் குடை விரித்து இருக்கின்றது. எட்டு கைகளிலும் கத்தி உடுக்கை தாமரை மலர் திரிசூலம் கபாலம் பாசம் காண்டீபம் காண்டாமணி ஆகியவற்றை ஏந்தி இருக்கின்றாள்.
இச்சிலை கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. உற்சவ மூர்த்திக்கு அபிஷேகங்கள் உண்டு. 1991 ஆம் ஆண்டு உற்சவர் சிலையை ஜி பாலமுருகன் ஜி முரளி குமார் என்ற சகோதரர்கள் தானமாக வழங்கினர்
நேர்த்திக்கடன்
சமயபுரத்தில் மாவிளக்கு எடுத்தல், தீச்சட்டி எடுத்தல் போன்ற அம்மனுக்குரிய நேர்த்திக்கடன்கள் அதிக எண்ணிக்கையில் நிறைவேற்றப்படுகின்றன சிலர் பச்சை மூங்கிலில் மஞ்சள் துணியில் தூளி கட்டி அதில் குழந்தையைப் படுக்க வைத்து கோவிலை மூன்று சுற்று சுற்றி வருகின்றனர்.
குழந்தைக்கு நோய் சுகமாக வேண்டும் என்று வேண்டிக் கொண்டவர்கள் இத்தகைய நேர்ச்சையை செய்கின்றனர். சமயபுரம் அம்மனை வேண்டிக் கொண்டால் அறுவை சிகிச்சைகள் தவிர்க்கப்பட்டு விடும். நோய் குணமாகும் என்று நம்பிக்கை நெடுங்காலமாக நிலவுகின்றது.
தலைமுடி காணிக்கை அளிப்பவர்கள் இங்கு அதிகம். ஆண், பெண் வேறுபாடின்றி அம்மனுக்குத் தங்கள் தலை முடியைக் காணிக்கை ஆக்குகின்றனர். குறிப்பிட்ட சில குடும்பத்தினர் தொடர்ந்து முடி நீக்கும் இத்திருப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வேம்பின் சிறப்பு
சமயபுரத்தில் தலவிருட்சமாக வேப்பமரம் இருக்கின்றது. இவ்வேப்ப மரத்தில் பெண்கள் தங்கள் முந்தானையைக் கிழித்து ஒரு கல்லை வைத்து குழந்தை தொட்டில் போல கட்டி விடுகின்றனர். குழந்தை பேறு இல்லாதவர்கள் இதை ஒரு நேர்ச்சையாக செய்து அம்மனை வேண்டிக் கொள்கின்றனர்.
குழந்தை பிறந்ததும் இதை நீக்கிவிடும் மரத்திலிருந்து நீக்கி விடுகின்றனர். மாங்கல்ய பெரு வேண்டுவோர் மஞ்சள் கயிறு காட்டுகின்றனர். தீர்த்தமாக மாரி தீர்த்தம் இருக்கின்றது. ஆடி வெள்ளிகளில் இங்கு நிறைய பக்தர்கள் வந்து இறைவியை வணங்கிச் செல்கின்றனர்.
சித்திரைத் தேர்
சித்திரையில் தேர்த் திருவிழா நடைபெறுகின்றது. சித்திரை மாசம் தேர் திருவிழா விழாவின்போது திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலில் இருந்து அம்மனுக்கு பிரசாதம் கொண்டு வரப்படுகின்றது
பச்சை பட்டினி விரதம்
சமயபுரத்தில் முக்கியமான நிகழ்வு அம்மன் உலக நன்மைக்காக பட்டினி கிடந்து விரட்ஜ்ம் இருக்கும் நிகழ்வாகும். மாசி கடைசி ஞாயிறு அன்று தொடங்கி பங்குனி கடைசி ஞாயிறு வரை அம்மன் விரதம் இருக்கும் நாட்களாகும். அந்தக் காலங்களில் அம்மனுக்கு நைவேத்தியம் கிடையாது. அவள் உலக நன்மைக்காக விரதம் இருப்பதால் அவளுக்கு இளநீர், பால் போன்றவை நைவேத்தியமாக படைக்கப்படுகின்றது.
பூச் சொரிதல் விழா
மாசி மாதத்தின் கடைசி ஞாயிறு அன்று பூச்சொரிதல் விழா நடைபெறும். அன்று முதல் அம்மன் பச்சை பட்டினி விரதம் மேற்கொள்வாள். அன்று பக்தர்கள் மேளதாளத்துடன் கூடை கூடையாகப் பூக்களைக் கொண்டு வந்து அம்மனுக்குப் படைக்கின்றனர் கருவறையில் அம்மன் கழுத்து வரை பூக்கள் குவிந்து விடும்.
கோயில் திறப்பு
இக்கோயில் காலை அதிகாலையில் திறக்கப்பட்டால் இரவு ஒன்பதரை மணிக்குத்தான் அடைக்கப் படுகின்றது. தினமும் நான்கு வேளை பூஜை நடைபெறுகின்றது. தொடர்ந்து பக்தர்களின் வருகை இருந்து கொண்டே இருப்பதால் கோயிலை இடையில் பூட்டி வைப்பது கிடையாது.
பௌத்த கோயில்
சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆரம்பத்தில் பௌத்த கோவிலாக இருந்தது என்பதற்கு அங்கு முடி காணிக்கை வழங்குதல், தன்னை வருத்தும் நேர்த்திக்கடன்கள் செய்தல், சமயம் மற்றும் கண்ணனுர் என்ற பெயர்கள், நதிக்கரையில் பௌர்ணமி அன்று மக்கள் ஒன்றாக கூடி கட்டுச்சோறு உண்டு மகிழ்தல் ஆகியவை ஆதாரங்களாக உள்ளன.
சமயம் என்பது பௌத்த சமயக் கலைச் சொல்லாகும். இச்சொல் பௌத்த துறவிகள் தங்களுடைய மத நெறிகளைப் பின்பற்ற வேண்டும் என்பதைக் குறிக்கிறது.பௌத்த சமயம் செல்வாக்குப் பெற்றுள்ள ஜப்பானில் சொன்மையா என்றும் சீனாவில் சான் மேயே என்றும் இச்சொல் இன்றும் பொருள் மாறாமல் வழங்குகின்றது பின்னர் இச்சொல் வேறு பல மதங்களிலும் வேறு பல பொருள்களில் வழங்கியது.
பல ஊர்களில் புத்தர் கோயில்கள்
திருச்சி தஞ்சாவூர் பகுதிகளில் பௌத்த சமயம் மிகுந்த செல்வாக்கு பெற்று விளங்கியது. இந்திரனுக்கு கோவில் இருந்த ஊர்கள் கண்ணனூர், கண்ணபுரம், என்று தற்போது வழங்கப்படுகின்றன. சங்கமங்கலம், புத்தமங்கலம், போதிமங்கலம் ,கும்பகோணம், திருவலஞ்சுழி, பட்டீஸ்வரம், பொன் பற்றி, புத்தக்குடி, உறையூர் கோட்டப்பாடி, மயூரப்பட்டணம், நாகப்பட்டினம் போன்ற ஊர்களில் இருந்த புத்தருக்கு கோவில்கள் இருந்தததை மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் தன் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
தாரா சிலைகள் வைத்தல்
கண்ணனூர், சங்கமங்கை, புன்னைநல்லூர், பட்டீஸ்வரம் போன்ற ஊர்களில் இருக்கும் பெண் தெய்வங்கள் ஆரம்பத்தில் பௌத்த பெண் தெய்வம் ஆகும். பௌத்த சமயத்தில் தாரா பெண் புத்தராகப் பல ஊர்களிலும் தெய்வமாக வைத்து வழிபடப்பட்டாள்
. தாராவில் தாரா வகைகள் உண்டு. கண்ணனூரில் எழுந்தருளி இருப்பவள் மஞ்சள் தாரா. இவள் அமைதியான தோற்றம் உடையவள். அரசி போல லலிதாசனத்தில் ஒரு காலை மடித்து ஒரு காலை தொங்கவிட்டு அமர்ந்திருக்கிறாள். பச்சை தாரா என்பவள் பச்சைக்காளி ரூபமாக உக்ர ரூபத்தில் வழிபடப்பட்டாள். வெள்ளை தாரா சரஸ்வதியாக பேர் பெற்றாள்.
தலைமுடி காணிக்கை
பௌத்தர் கோவில்கள் இருந்த இடங்களில் மட்டுமே இன்றைக்கும் தலைமுடி காணிக்கையாக கொடுக்கும் பழக்கம் இருந்து வருகின்றது . புத்த துறவிகள் தங்கள் தலையைத் தாங்களே மொட்டை அடித்துகொள்வது அவர்களின் சமய நெறியாகும்.
புத்த மடாலயங்களுக்கு சிகிச்சைக்காகவும் இந்திரன், தாரா போன்ற தெய்வங்களை வணங்க வந்த பொது மக்களும் துறவிகளைப் போல முடி காணிக்கை செலுத்தி தம்மை வருத்தும் நேர்த்திக் கடன்களை மேற்கொண்டனர். மற்ற இந்து தெய்வக் கோவில்களில் தலைமுடி காணிக்கை கொடுக்கும் பழக்கம் கிடையாது.
கடுமையான சமயப் பயிற்சிகள்
பட்டினி கிடப்பது, அலகு குத்திக் கொள்வது, தீச்சட்டி எடுப்பது, பூக்குழி இறங்குவது போன்ற கடும் பயிற்சிகள் பௌத்த துறவிகளிடம் காணப்பட்டன. இவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை இவற்றைச் செய்வது அவர்களின் சமய நெறிமுறைகளில் ஒன்றாக இருந்தது.
பின்னர் புத்தர் மீது பக்தி கொண்ட பொதுமக்களும் இத்தகைய சடங்குகளை நேர்ச்சையாக செய்யத் தொடங்கினர். புத்தர் வழிபாடு மறைந்த பிறகும் கூட வழிபாட்டுச் சடங்குகளை பின்பற்றி வந்த மக்கள் பிடிவாதமாக அவற்றை விட்டு விடாமல் தொடர்ந்து பற்று உறுதியோடு தொடர்ந்து செய்தனர். தெய்வங்களின் பெயர் மாறினாலும் தங்கள் வழிபாட்டுச் சடங்குகளை பொது மக்கள் மாற்றிக் கொள்ளவில்லை.
நோய் தீர்க்கும் காவல் தெய்வங்கள்
பௌத்தர்களை முதன் முதலில் பெரிய பெரிய சிலைகளைத் தங்கள் கோவில்களில் வைத்தனர் புத்தருக்கு மிகப்பெரிய சிலைகள் வைக்கப்பட்டன. தாராவுக்கும் அவலோகதீஸ்வரருக்கும் பெரிய சிலைகள் வைக்கப்பட்டன. செப்புத் திருமேனிகளும் உருவாக்கப்பட்டன.
பெரிய தங்க புத்தர் சிலையை உடைத்து ஸ்ரீரங்க கோயிலின் திருமதில் கட்டியதாக குரு பரம்பரை எடுத்துரைக்கின்றது. நாகப்பட்டினத்தில் 300க்கும் அதிகமான புத்தர் சிலைகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன. எனவே புத்தர் கோயிலில் தெய்வச்சிலைகள் நான்கு கைகள் ஆறு கைகள் மூன்று முகம் என்று பல உருவங்களில் இருந்தன.
தாரா சிலைகள் ஒரே முகத்துடன் பல கைகளுடன் தண்டனை கொடுக்கும் காவல் தெய்வங்களாக ஆயுதங்களை ஏந்தி இருந்தன. வசுதாரா சிலைகள் சில தாமரை மலர்களைப் பிடித்த படி காட்சியளித்தன. பௌத்த மடங்களில் மருத்துவ சேவை நடந்ததனால் இங்குள்ள பௌத்த ஆண், பெண் தெய்வங்கள் நோய் தீர்க்க வல்ல தெய்வங்களாகப் போற்றப்பட்டன.
அவ்வாறே கண்ணனூர் என்ற சமயபுரத்தில் எழுந்தருளியிருக்கும் மாரியம்மன் மக்களை நோயில் இருந்து காக்கும் கடவுளாக காவல் தெய்வமாக இருந்து வருகிறார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |