திருவல்லா மகாவிஷ்ணு சுதர்சன மூர்த்தி திருக்கோவில்
கேரளாவில் பந்தனம் திட்டா மாவட்டத்தில் மணிமாலா நதிக்கரையில் மகாவிஷ்ணு நின்ற கோலத்தில் சேவை சாதிக்கும் திருக்கோவில் உள்ளது. இப் பெருமாளுக்கு நேர் எதிரே கருடன் காணப்படவில்லை. 54 அடி உயர கருட ஸ்தம்பம் சற்று தொலைவில் இருக்கின்றது.
இரண்டு இறக்கைகளையும் விரித்த படி பெருமாளை ஏற்றிக் கொண்டு பறப்பதற்குத் தயாராக நிற்கும் கருட ஸ்தம்பம் ஒரே கருங்கல்லில் செதுக்கப்பட்டது. இக்கோவிலில் சுதர்சன மூர்த்தி முக்கிய வழிபடு தெய்வமாக விளங்குகிறார். திருவல்லா திருத்தலம் நம்மாழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலமாகும்.
108 வைணவ திருத்தலங்களில் திருவல்லாவும் ஒன்று. இதன் விமானம் சதுரங்க கோல விமானம் ஆகும். கண்ட கர்ண தீர்த்தம் மற்றும் பம்பை தீர்த்தம் என்று இரண்டு தீர்த்தங்கள் உள்ளன. திருமகள் திருமாலின் மார்பில் உறைந்திருப்பதால் இறைவன் திருவாழ் மார்பன் என்றும் ஸ்ரீவல்லவன் என்றும் கோலபிரான் என்றும் அழைக்கப்படுகிறார்.
ஸ்ரீ வல்லபப் பெருமாளை பற்றி கருட புராணத்திலும் மச்ச புராணத்திலும் குறிப்புகள் உண்டு. இங்கு செல்வத் திருக்கொழுந்து நாச்சியார் மற்றும் வாத்சல்ய தேவி என்ற பெயரில் இரண்டு நாச்சியார்கள் பெருமாள் அருகே உள்ளனர். செல்வக் கொழுந்து நாச்சியார் பெரிய பிராட்டி என்றும் அழைக்கப்படுவார்.
கதகளி நேர்ச்சை
ஸ்ரீவல்லப பெருமாள் கோவிலில் தினமும் கதகளி நடனம் நடைபெறும். இங்குக் கதகளி நடனம் நடத்துவதாக பக்தர்கள் நேர்ந்து கொள்கின்றனர். இங்குக் கதகளி கற்பிக்கும் கலாச்சேத்திரமும் உண்டு. இதில் நடனம் படிக்கும் மாணவர்கள் இக்கோவிலில் தினமும் கதகளி நடத்துவர்.
பிரசாதம்
திருவல்லபப் பெருமாள் கோவிலின் பிரசாதம் சற்று வினோதமானது. பாக்கு மட்டையில் வெண் சாதமும் உப்பு மாங்காவும் பெருமாளுக்கு நெய்வேத்தியமாக படைக்கப்படுகின்றது. பிரசாதமும் பாக்கு மட்டையில் வைத்தே வழங்கப்படுகிறது. விதவிதமான வாழைப்பழங்கள் இங்கே இறைவனுக்கு படைக்கப்பட்டு பிரசாதமாகவும் வழங்கப்படும்.
மாசி மாதப் பூசத் திருவிழாவென்று சுமார் பன்னீராயிரம் வாழைப்பழங்கள் இங்கு வந்து குவியும்.துர்வாசர் இக் கோயிலுக்கு வந்த போது படத்தி பழம் என்ற வாழைப்பழத்தை இறைவனுக்குப் படைத்தார். அன்று முதல் இந்த வகை வாழைப்பழமே இறைவனுக்கு படைக்கப்படுகின்றது.
மார்பு தரிசனம்
பொதுவாக கேரளத்துக் கோயில்களில் பெண் தெய்வங்களுக்குக் கூட மார்பை மூடி சேலை உடுத்துவது கிடையாது. திருவல்லாவில் கோயில் கொண்டுள்ள பெருமாள் பிரம்மச்சாரி என்பதால் மேலாடை உடுத்தக் கூடாது என்ற சமூக வழக்கத்தின்படி கருவறையில் அவர் திறந்த மார்புடன் தோன்றுவார். அவர் திருவாழ் மார்பன் என்பதால் அவரது திறந்த மார்பைப் பார்க்கும்போது திருமாகளையும் தரிசித்த பாக்கியம் கிடைக்கும்.
பெண்களுக்கு அனுமதி இல்லை
திருவல்லாவில் பெருமாள் பிரமசாரியாக சேவை சாதிப்பதால் இங்கு பெண்களுக்கு அனுமதி இல்லை.
கோவில் வரலாறு
மன்னன் சேரமான் பெருமாள் ஆட்சியில் இக்கோவில் பௌத்தக் கோவிலாக இருந்தது. இங்கு தர்மசக்கரம் வழிபடு பொருளாக இருந்தது. பின்பு பல நூற்றாண்டுகள் கழித்து இங்கு ஸ்ரீ வல்லபப் பெருமாளின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
சேரமான் பெருமாள் மன்னரின் மனைவி தீவிர விஷ்ணு பக்தை ஒரு நாள் அவளது கனவில் கருட வடிவில் வந்த திருமால், சுதர்சன சக்கரம் இருக்கும் இடத்தில் தன்னுடைய சிலை புதைந்திருப்பதாகக் கூறி அதனை எடுத்து கோவிலில் வைக்கும்படி கூறினார்.
அரசி மன்னரிடம் இத்தகவலை தெரிவிக்கவும் எட்டடி உயர சிலை புதைந்திருப்பதைக் கண்டெடுத்து கிழக்கு நோக்கி அச்சிலையைப் பிரதிஷ்டை செய்தனர். இச்சிலையின் தலையைப் பார்ப்பவரால் காலை பார்க்க இயலாது காலை பார்க்கும்போது முகத்தை பார்க்க இயலாது அத்தகைய சிறப்பு அம்சமுடைய வகையில் இச்சிலையை பிரதிஷ்டை செய்தனர்.
பௌத்தர்களின் தர்மச் சக்கரம் சுதர்சன மூர்த்தியாக வணங்கப்படுகிறது. இம் மாற்றத்திற்கு ஒரு ஸ்தல புராணக் கதையும் உண்டு.
வேத பாடசாலை
கேரளாவில் வடக்கே இருந்து அதிக எண்ணிக்கையில் பிராமணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பௌத்தர்களோடு வாதம் இட்டு அவர்களை வெளியேற்றினார். பல ஊர்களை அவர்களுக்கு மன்னன் பிரம்மதேயமாக (இலவசமாக) வழங்கினான். அவ்வாறு வழங்கப்பட்ட ஊர்களுள் ஒன்று சங்கரமங்கலம். இங்கு 3000 பிராமணர்கள் குடியேற்றப்பட்டதும் ஆயிரம் மாணவர்கள் படிக்கும் வேதசாலைகள் நிறுவப்பட்டன.
நூற்றுக்கும் அதிகமானோர் வேதம் கற்பிக்கும் ஆசிரியர்களாகப் பணி புரிந்தனர். பௌத்தர்களுடன் வாதிட்டு வென்று மன்னர் மூலமாக அவர்களுக்குக் கொலை தண்டனைபெற்றுத் தந்தனர். . மன்னரின் ஆதரவை இழந்த பௌத்தர்ர்கள் தம் செல்வாக்கு குறைந்ததால் முற்றிலுமாக இங்கிருந்து வெளியேறி விட்டனர்.
ஊரும் பேரும்
சங்கமங்கை என்பது இந்திராணியைக் குறிக்கும். எனவே இவ்வூர் முதலில் சங்க மங்கை என்று அழைக்கப்பட்டு பின்னர் வைதிக மரபுக்கு ஏற்ப சங்கர மங்கலம் ஆகியிருக்கும். துகளன் ஆட்சியின் கீழ் இருக்கும்போது இப்பெயர் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் சங்கரமங்கலம் என்ற இந்த கிராமம் முன்பு மல்லிகா வனம் என்று அழைக்கப்பட்டது.
இங்கு மூவாயிரத்திற்கும் அதிகமான பிராமணர்கள் வசித்தனர். அப்போது இங்கு அரசனாக இருந்தவன் சிவ பக்தனான துகளன். அவன் திருமால் பக்தர்களுக்கு அதிக தொல்லை கொடுத்தான். இதனால் பலர் இங்கிருந்து குடி பெயர்ந்து வேறு ஊர்களுக்கு சென்று விட்டனர். பௌத்தர்களிடம் வென்று பெற்ற ஊரை சிவபக்தனான மன்னனிட.ம் இழந்தனர்.
சைவ வைணவப் பூசல்
கதை 1
இவ்வூரில் ஏராளமான பிராமணர்கள் வந்து குடியேற்றப்பட்டதும் இங்கு ஆயிரம் மாணவர்கள் படிக்கும் வேதசாலைகள் நிறுவப்பட்டன நூற்றுக்கும் அதிகமானோர் வேதம் கற்பிக்கும் ஆசிரியர்களாக இருந்தனர் பௌத்தர்களின் செல்வாக்கு குறைந்ததும் அவர்கள் முற்றிலுமாக வெளியேறி விட்டனர் சமண, பௌத்த சமயங்களுக்கும் சைவ, வைணவ சமயங்களுக்கும் இடையிலான பூசல் குறைந்ததும் சைவமும் வைணவமும் தமக்குள் சண்டையிட்டன.
நாராயண பட்டாத்திரி என்பவரும் அவர் மனைவி ஸ்ரீதேவி அந்தர்ஜனமும் தொடர்ந்து திருமால் பக்தர்களாக இருந்து கோவிலுக்குத் தினமும் போய் திருமாலைச் சேவித்து வந்தனர். ஒரு நாள் பட்டாத்திரி அவர்கள் காலமானார்.
பட்டாத்திரியின் மனைவி சங்கரமங்கலத்து அம்மை (சங்கரோத்தம்மை) மட்டும் ஏகாதசி விரதம் இருந்து அதிகாலையில் பெருமாள் கோவிலுக்குப் போய் விரதம் இருந்தவர்களுக்கு துவாதசி விரதம் விட அன்னதானம் செய்வார்.
பின்னர் தன் வீட்டுக்கு வந்து அவர் விரதம் விடுவார், கணவர் இறந்ததும் விதவையான இந்தப் பெண்ணிடம் உணவைப் பெற (அன்னதானம் பெற) விஷ்ணு பக்தர்கள் தயங்கினர். அப்போது ஒரு பிரம்மச்சாரி அங்கு வந்து தனக்கு உணவிடுமாறு வேண்டினார்.
பிரம்மசாரிக்கு உணவிட்ட கதை
சங்கர மங்கலத்தன்மை உணவிடும்படி தன்னிடம் கேட்ட பிரம்மச்சாரியை அருகிலுள்ள ஆற்றில் குளித்து விட்டு வா என்றாள். அந்த ஆற்றில் மன்னன் துகளன் விஷ்ணுபக்தர் எவரையும் குளிக்க விடமாட்டான். அவர்கள் குளித்துவிட்டு விஷ்ணு சேவை செய்வது அவனுக்கு பிரியம் இல்லாத செயலாகும்.
ஆனால் இந்த பிரம்மச்சாரி துகளனைக் கொன்று சக்கராயுதத்தை ஆற்றில் கழுவி விட்டு வந்தான். சக்ராயுதம் இப்போது வழிபடு பொருளாயிற்று. பிரம்மச்சாரியை வீட்டுக்கு அழைத்து அவருக்கு அம்மையார் உணவு படைத்தார்.
அப்போது அவர் அம்மா 'நீங்கள் விரதம் விட வைத்திருக்கும் உப்பு மாங்காய் எனக்கு கொடுங்கள்' என்று கேட்டார். அந்த அம்மையாரும் பாக்கு மரத்து இலையில் கொஞ்சம் உப்பு மாங்காய் வைத்து கொடுத்தார். அதன் பிறகு பிரம்மச்சாரியாக வந்தவர் ஸ்ரீ வல்லபப் பெருமாளே என்பதை சங்கரமங்கலத்தம்மை உணர்ந்து கொண்டார்.
அன்று முதல் சங்கரமங்கலத்தில்உள்ள ஸ்ரீவல்லப கோவிலில் பாக்கு மரத்தின் இலையில் சாதமும் உப்பு மாங்காயும் நைவேத்தியமாகப் பெருமாளுக்குப் படைக்கப்படுகின்றது
திருநீறு பிரசாதம்
மார்கழி திருவாதிரை திருவிழா இங்கு நடைபெறும் போது மன்னன் துகளன் வணங்கி வந்த சிவபெருமான் இக்கோவிலுக்கு வந்தார். அன்று முதல் திருநீறு இக்கோவிலில் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. அத்துடன் சந்தனமும் வழங்கப்படும்.
மன்னன் துகளன் வணங்கி வந்த சிவலிங்கம் மலை உச்சியில் அவனது அரண்மனை இருக்கும் துகளச்சேரிக்கு அருகில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இக்கோவில் துகளச்சேரி மகாதேவன் கோவில் என்று இன்றும் அழைக்கப்படுகின்றது.
சைவ வைணவப் பூசல்
கதை 2
சைவ வைணவப் பூசலை உணர்த்தும் வகையில் இன்னொரு கதையும் இங்கு வழங்குகின்றது சிவபக்தனாக இருந்த கந்தகரன் என்பவன் சிவபெருமானுக்கு நரபலி கொடுக்கத் துணிந்தான். அப்போது தனக்கு நரபலி கூடாது என்று அவனுக்குக் கட்டளையிட்டு சாந்த சொரூபியாக இருக்கும் திருமாலை வணங்குமாறு கூறினார்.
சிவபெருமானின் வார்த்தையை கேட்ட அவன் திருவல்லாவுக்கு வந்து பெருமாளைத் தரிசித்து ஓம் நமோ நாராயணாய என்ற அட்டெழுத்து மந்திரத்தைத் தினமும் சொல்லி அவரை வணங்கி வந்தான் தீவிர வைணவப் பக்தனாக மாறிவிட்ட இவன் ஓம் நமசிவாய என்ற சிவனது மந்திரம் தன் காதில் விழக்கூடாது என்பதற்காக இரண்டு காதுகளிலும் சிறிய மணிகளை கட்டிக் கொண்டான். இவ்வாறு தீவிர வைணவனாக மாறிய ஒரு சிவபக்தனின் கதையும் இங்கு வழங்குகின்றது.
கோயில் விழாக்கள்
மற்ற பெருமாள் கோவில்களில் நடைபெறுவது போல இங்கும் வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, பிரம்மோற்சவம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது
உத்ர ஸ்ரீ பலி
வடக்கே இருந்து முப்பெரும் தேவியர் உத்தர ஸ்ரீ பலி அன்று மங்களகரமான திருநாள் என்று முடிவு செய்து ஸ்ரீவல்லபரையும் சுதர்சன மூர்த்தியையும் தரிசிக்க கோவிலுக்குள் வருவர். அன்று மட்டும் வடக்கு வாசல் தேவியர் வருகைக்காக திறக்கப்படும்.
ஏகாதசி பெருவிழா
ஒவ்வொரு மாதமும் ஏகாதசி என்று திருவல்லா கோவிலில் சிறப்பு பூசனைகள் நடைபெறும். கார்த்திகை மாதத்தின் கைசிக ஏகாதசி மிகவும் சிறப்பு வாய்ந்த திருநாளாகும்.
மாசிப் பூச உற்சவம் மாசி
மாதம் பத்து நாள் திருவிழா நடக்கும். பத்தாவது நாளான பூச நட்சத்திரத்தன்று இவ்விழா ஆராட்டுடன் நிறைவு பெறும்.
மார்கழி திருவாதிரை
சிவபெருமானுக்கு உரிய திருவாதிரை திருநாளும் இக்கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படும். மார்கழி மாதம் திருவாதிரை கொண்டாடும்போதும் சித்திரை மாத முதல் நாளான விசு திருநாளின் போதும் பெண்கள் இக்கோவிலுக்குள் வந்து போகலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |