பால் பொழிந்ததால் பாலமலை
கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு குன்று பாலமலை ஆகும். கோயம்புத்தூரில் இருந்து மேட்டுப்பாளையம் போகும் வழியில் பெரியநாயக்கன்பாளையத்திற்கு மேற்கே 11 கிலோமீட்டர் தொலைவில் பாலமலை உள்ளது. இம்மலையின் மேலே ரங்கநாதருக்கு என்று ஒரு கோயில் சுமார் 500, 600 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.
ரங்கநாதரும் கோதை நாச்சியர்களும்
பால மலை ரங்கநாதர் கோயிலின் கருவறையில் பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கின்றார். பூங்கோதை நாச்சியாரும் செங்கோதை நாச்சியாரும் இரண்டு தனித் தனி சந்நிதிகளில் இடம் பெற்றுள்ளனர். மகா மண்டபத்தில் இருக்கும் ஊஞ்சலில் பள்ளி கொண்டுள்ள ரங்கநாதரின் அருகில் பூதேவியின் ஸ்ரீதேவியும் உள்ளனர்.
ராமானுஜர் பரமவாசுதேவர் மற்றும் காளிதாசருக்கு னு உப சந்நிதிகள் உண்டு. இப்பகுதியில் வாழும் வேளாண் குடியினருக்கு பாசனக் கால்வாய் வெட்டிக் கொடுத்த காளியண்ணன் அவர்களுக்கும் தனிச் சன்னதி உள்ளது.
பிள்ளை வரமருளும் பிள்ளையார்
கருவறையின் பின்புறத்தில் வைணவத்தில் தும்பிக்கையாழ்வார் என்று அழைக்கப்படும் விநாயகர் பூவரச மரத்தின் கீழ் எழுந்தருளியுள்ளார். பக்தர்கள் இம்மரத்தில் மாங்கல்ய பலம் வேண்டி மஞ்சள் கயிறு கட்டுகின்றனர். குழந்தை வரம் வேண்டுவோர் தொட்டில் கட்டுகின்றனர்.
காராம்பசு பால் சுரந்த ரகசியம்
காரை மரம் தலவிருட்சமாக விளங்குகின்றது. பத்ம தீர்த்தமும் பால் சுனையும் புனித தீர்த்தங்களாக உள்ளன. மலைப்பகுதி என்பதால் இங்கு இயற்கையான சுனை ஒன்று உள்ளது. நீரின் சுவை கருதி அதனை பால் சுனை என்று அழைக்கின்றனர். பால் என்ற பெயரிலேயே இம்மலை பாலமலை என்று அழைக்கப்படுகிறது.
ஒரு காலத்தில் இம்மலையில் ஆடு மாடு மேய்த்தவர்கள் ஒரே ஒரு பசு மாடு மட்டும் ஒரு மரத்தடியில் பால் சுரந்ததைக் கண்டு அவ்விடத்தை அகழ்ந்து பார்த்த போது அங்கு பெருமாளின் சிலை ஒன்று கிடைத்தது. அந்த பெருமாளுக்கு கோயில் கட்டி கருவறையில் பிரதிஷ்டை செய்தனர். பால் சுரந்த மலை என்பதால் இம்மலை பாலமலை எனப்பட்டது.
கோயிலின் அர்த்தமண்டபத்தில் கிழக்கு நோக்கி சக்கரத்தாழ்வாரும் அச்சிலையின் பின் பகுதியில் மேற்கு நோக்கி யோக நரசிம்மரும் உள்ளனர். பெருமாள் அலங்கார பிரியர் என்பதால் கருவறையில் இருக்கும் ரங்கநாதருக்கு ஆள் உயர மாலைகள் தினமும் சாத்தப்படுகின்றன. அவருக்கு நித்தமும் பட்டும் பீதம்பரமும் மாலையகளும் சார்த்துகின்றனர். இக்கோயிலில் பஞ்சராத்ர முறைப்படி மூன்று கால பூஜை நடைபெறுகின்றது
சித்ரா பௌர்ணமி
இக்கோயிலில் சித்ரா பௌர்ணமி மிகப் பெரிய விழாவாக கொண்டாடப்படும். அன்றைக்குத் பத்ம தீர்த்தத்தில் தெப்பத் திருவிழா நடைபெறும். தேரோட்டமும் அதே நாளில் சிறப்பாக நடக்கும். இது தவிர புரட்டாசி சனிக்கிழமைகளில் விசேஷ வழிபாடுகள் உண்டு.
கிருஷ்ண ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. இக்கோயில் காலத்தால் பிந்தியது எனினும் தல புராணக் கதைகள் நிறைய உள்ளன.
கதை 1
கோயில் கட்ட உதவிய வெடிப்பு ஒரு காலத்தில் கன்வ மகரிஷியின் வழியில் வந்த காளிதாச மகரிஷி என்பவர் இவ் ஊரில் குடில் அமைத்து தவம் செய்தார். இப்பகுதியில் காராம்பசு ஒரு ஒரு மரத்தடியில் தினமும் போய்ப் பாலை சுரந்தது.
அங்கு போய் மக்கள் பார்த்த போது ஒரு இறை பக்தருக்கு அருள் வந்து இங்கு நான், இனித் பூமிக்குள் இருக்கிறேன் எனக்கு இந்த இடத்தில் கோயில் கட்டி வணங்கி வாருங்கள் என்றார். அடுத்து, கீலக வருஷம் வைகாசி மாதம் 15 ஆம் தேதி இரவு 12 மணிக்கு திடீரென்று இப்பகுதியில் திடீரென வெடிச் சத்தம் கேட்டது.
பாறைகள் பாளம் பாளமாக வெடித்தன. அப்போது உங்கன கவுடர் வம்சத்தில் தோன்றிய ஒருவரின் கனவில் இறைவன் தோன்றி கன்னி மூலையில் மணல் நிறைய இருக்கிறது, ஈசானிய மூலையில் பாறை வெடித்துக் கிடக்கின்றது, அவற்றை எடுத்து எனக்குக் கோவில் கட்டுங்கள் என்றார்.
அதன்படி ரங்கநாதர் கோவில் கட்டப்பட்டது பின்பு உங்கன கவுடர் வழியில் தோன்றிய நஞ்சுண்ட கவுடர் என்பவர் அஸ்தகிரி, கோபகிரி கருடஸ்தம்பம் ஆகியவற்றை இங்குப் பிரதிஷ்டை செய்து வணங்கினார். பின்பு வனவிலங்கு அதிகாரியாக இருந்த முனியப்ப பிள்ளை கோவிலுக்கு ஒன்றரை கிலோ மீட்டர் உயரத்திற்கு படிக்கட்டுகளை அமைத்தார்.
கதை 2
கல்லாய் சபிக்கப்பட்ட தீயவள் விசுவாமித்திர மகரிஷி தவத்தில் இருந்த போது அவரது தவத்தை கலைக்க ரம்பா அவர் முன்பு நடனமாடினாள். அவளது தொந்தரவு தாங்க இயலாது அவளை கல்லாய்ப் போகும்படி ரிஷி சபித்தார். சில ஆண்டுகள் கழிந்ததும் வேறொரு முனிவரால் சபிக்கப்பட்ட ஒரு தேவ கன்னி கிருதசி என்ற பெயரில் ராட்சசியாக இந்த மலையில் அலைந்து திரிந்தாள்.
அவளும் விசுவாமித்திரருக்கு பெரிய தொந்தரவாக இருந்தாள். இதனால் தியானத்திலிருந்து கண் விழித்த விசுவாமித்திரர் அருகில் கிடந்த கல்லை எடுத்து அரக்கின் மீது எறிந்தார். அவர் எறிந்த கல் ரம்பை ரிஷியின் சாபத்தால் உரு மாறி கிடந்த கல்.
ராட்சசியும் கல்லும் எதிரே இருந்த குளத்தில் விழுந்தனர். பத்மதீர்த்தக் குளத்தில் விழுந்ததால் சாப விமோசனம் பெற்று இருவரும் தேவலோகம் திரும்பினர். பத்ம தீர்த்தம் என்று தற்போது அழைக்கப்படும் குளத்தின் பழைய பெயர் சக்கர தீர்த்தம் ஆகும்.
கதை 3
துரோகி பைத்தியம் ஆவான் சோம வம்சத்தைச் சேர்ந்த நந்த பூபாலன் என்ற மன்னன் சந்நியாசம் நாடி வனப்பிரஸ்த வாழ்க்கை மேற்கொள்ள காட்டுக்குச் செல்ல முடிவு செய்தான். தன் ஒரே மகனான இளவரசனை அமைச்சர் தர்ம குப்தரிடம் விட்டுச் சென்றான். இளவாசனும் மகுடாபிஷேகம் செய்து தர்மத்தின் வழியில் ஆட்சி செய்து வந்தான் ஒரு நாள் மன்னன் காட்டுக்கு வேட்டைக்கு சென்றான்.
தண்ணீர் தேடி தனியாக வெகு தூரம் வந்துவிட்டான். பொழுதும் இருட்டத் தொடங்கியது. அப்போது அங்கு ஒரு கரடி வருவதைப் பார்த்து மரம் ஒன்றில் ஏறி உட்கார்ந்து கொண்டான். அங்குத் திடீரென்று ஒரு சிங்கம் கரடியை அடித்துத் தின்னும் நோக்கில் வந்தது. இதைப் பார்த்ததும் கரடியும் மன்னன் இருந்த மரத்தில் ஏறிவிட்டது. சிங்கம் கீழேயே சுற்றி வந்தது.
இரவு வெகு நேரம் ஆனதும்
கரடிக்கும் மன்னனுக்கும் உறக்கம் கண்ணைச் சுழற்றியது. மன்னன் கரடியை பார்த்து 'எனக்குத் தூக்கம் வருகின்றது. நான் சற்று நேரம் உறங்குகின்றேன். நீ எனக்கு காவலாக இரு. பின்பு நீ உறங்கலாம். நான் உனக்குக் காவலாக இருப்பேன்' என்றான். கரடியும் ஒப்புக்கொண்டது.
மன்னன் உறங்கினான் இப்போது சிங்கம் கரடியைப் பார்த்து 'அந்த மனிதனை கீழே தள்ளிவிடு. நான் அவனை சாப்பிட்டு விட்டுப் போகிறேன். நீ பிழைத்துப் போ' என்றது. அதற்கு கரடி 'நான் அவ்வாறு செய்ய மாட்டேன். அது நம்பிக்கை துரோகம். நம்பிக்கை துரோகத்திற்கு பிராயச்சித்தமே கிடையாது.
நான் அந்தத் தவறை ஒருபோதும் செய்ய மாட்டேன்' என்று சொல்லிவிட்டது. மன்னன் சில மணி நேரம் உறங்கிவிட்டுக் கண்விழித்தான். கரடியைப் பார்த்து 'நீ இப்போது தூங்கு' என்றான். கரடி உறங்கத் தொடங்கியது. இப்போது சிங்கம் அவனைப் பார்த்து 'ஏ மானிடனே அந்த கரடியைக் கீழே தள்ளி விடு. நான் பசியாறிவிட்டுப் போகிறேன்.
நீ பிழைத்து போ: என்றது. மன்னன் யோசித்தான். இதுவும் நல்ல ஏற்பாடு தானே. சிங்கத்தின் பசி தீர்ந்தால் அது போய்விடும் அல்லவா! இங்கு நிற்காது, என்று எண்ணி கரடியை தள்ளி விட முயன்றான். ஆனால் கரடி கீழே விழவில்லை. மரத்தின் கிளையை பற்றிக் கொண்டு மேலே சென்று விட்டது.
அது நம்பிக்கை துரோகம் செய்த மன்னனைப் பார்த்து 'உனக்கு அறிவு இல்லையா? இப்படி உன்னை நம்பிக் கண்ணுறங்கிய என்னை கீழே தள்ளி விட பார்த்தாயே. நீ உன் புத்தி பிறழ்ந்து விட்டதா? நீ பைத்தியமா? நீ என்று சொல்லி 'நீ கிறுக்காகவே போ பைத்தியமாகவே திரி ' என்று சாபம் கொடுத்து விட்டது மன்னனுக்கு மெல்ல மெல்ல சித்தம் கலங்கியது.
பைத்தியம் ஆகிவிட்டான். இவனுக்கு சித்த சுவாதீனம் திரும்ப வேண்டும் என்று அரசரும் அமைச்சரும் ஜைமினி சித்தரிடம் அழைத்துச் சென்றனர். அவர் மலையில் உள்ள குளத்தில் தினமும் நீராடி வாருங்கள். பித்த நிலை மாறும்' என்றார்.
மன்னனை அந்தக் குளத்தில் அவன் தந்தையும் அமைச்சரும் ஒரு ஆண்டு காலம் நீராட வைத்தனர். அதன் பின்பு அவனுக்குப் பிடித்திருந்த பைத்தியம் விலகியது. இந்த குளமே நோய் தீர்க்கும் பத்ம தீர்த்தம் ஆகும்.
கதை 4
ராட்சதன் மனிதனாக மாறினான் வசிஷ்ட மகரிஷி கைலாயத்திற்குச் சென்று சிவபெருமானை கண்டு வணங்கித் திரும்பி வரும்போது விசுவாவசு என்ற மன்னன் என் மகன் தர்மாதன் தன் மனைவிகளுடன் பத்ம தீர்த்த குளத்தில் ஜலக்கிரீடையில் ஈடுபட்டிருந்தான். ரிஷி அவ்வழியே வருவதைக் கண்ட பெண்கள் கரையேறி அவரை வணங்கி நின்றனர்.
ஆனால் தர்மதன் குளத்தை விட்டு வெளியே வரவில்லை. அவரை வணங்கவும் இல்லை. வசிஷ்டருக்கு மன்னனது இச்செயல் கோபத்தை மூட்டியது. அதனால் அவர் அவனை ராட்சதனாக போகும்படி சபித்தார். அரசனின் மனைவிமார் வதிஷ்டரிடம் மன்னனுக்கு சாப விமோசனம் வேண்டி அவர் காலில் விழுந்து வணங்கினர்.
தக்க காலம் வரும்போது அவனுடைய சாபம் விலகும் என்று கூறிச் சென்று விட்டார். பல ஆண்டுகள் கழித்து காலவ முனிவர் இம்மலைப் பகுதியில் கடும் தவம் மேற்கொண்டார். அப்போது இங்கு வாழ்ந்த ராட்சதன் ஒருவன் காலவ மகரிஷிக்கு மிகவும் தொல்லை கொடுத்தான்.
அவர் நாராயணப் பெருமாளை அணுகி தனக்குத் தொந்தரவு கொடுத்து தன் தியானத்தையும் தவத்தையும் குறைக்கும் ராட்சதனை அழிக்கும்படி வேண்டினார். பெருமாளும் அவனை கொன்று அவன் ராட்சத குணத்தைத் தொலைத்து அவனை அமைதியான மனிதனாக மாற்றினார். துஷ்டர்கள் சாதுவாகஆறும் தலம் இத்திருத்தலம் ஆகும்.
வைணவமாக மாறிய பௌத்த மடம்
பாலமலை ரங்கநாதர் கோயிலில் உள்ள விநாயகர் வழிபாடு, பத்ம தீர்த்தம் மற்றும் சித்ரா பௌர்ணமி வழிபாடுகள் இத்திருத்தலம் இதற்கு முன்பு பௌத்தத் தலமாக இருந்ததை உறுதி செய்கிறது. பௌத்த மடாலயங்களில் மருத்துவ சிகிச்சை நடைபெற்றது. சித்த சுவாதீனம் இல்லாதவர்கள், பிள்ளை இல்லாதவர்களுக்கு இயற்கை முறையிலும் மருத்துவ முறையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
கௌதமர் சிறந்த நாயகர் என்ற பொருளில் வி நாயகர் எனப்பட்டார். சென்னை மியூசியத்தில் உள்ள அவரது செப்புத் திருமேனிகளும் இப்பெயரை உறுதி செய்கின்றன. பௌத்தக் கோயிலை வைணவ கோயிலாக மாற்றும்போது அங்கு ஏற்கெனவே இருந்த வி நாயகரை தும்பிக்கை ஆழ்வார் என்று பெயர் ஆற்றினார்.
சித்ரா பௌர்ணமி (தெப்பத் திருவிழா, தேரோட்டம்) விழா பௌத்தர்கள் தம் தெய்வத்துக்குக் கொண்டாடிய இந்திர விழாவின் மறு உருவாகும். சக்கரம் (சக்கர தீர்த்தம்) என்ற பெயர் தேவலோகத்தை ஆட்சி செய்த இந்திரனின் அதிகாரத்தைக் குறித்தது.
பத்மம் என்பது பௌத்த சமயத்தின் 'பத்மம் மணி ஹியும்' என்ற தாரக மந்திரத்தைக் குறித்தது. பத்மாசனம் புத்தரின் இருக்கை (ஆசன) முறை ஆகும். அவரது சிற்பங்களில் தாமரை மீது அவர் நின்ற கோலத்தையும் அமர்ந்த கோலத்தையும் காணலாம்.
பத்ம தீர்த்தம், சக்கர தீர்த்தம் என்ற பெயர்கள் பால மலையின் மேல் ஆரம்பத்தில் பௌத்த மதம் இருந்ததைத் தெளிவாக்குகின்றன. இங்கு பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவை இன்று மாற்றங்களைப் பெற்று ஸ்தல புராணக் கதைகளாக உலா வருகின்றன. இன்று இக்கோயில் சிறந்த வைணவத் தலமாக விளங்குகின்றது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |