மறைந்த ஆன்மாக்களுக்கு முக்தி வழங்கும் தில தர்ப்பனேஸ்வரர்
சோழநாட்டில் காவிரி ஆற்றின் தென்கரையில் உள்ள 276 பாடல் பெற்ற சிவத் தலங்களில் தில தர்ப்பனேஸ்வரர் கோவில் 58 வது சிவத்தலமாகும். இங்கு சிவபெருமான் சுயம்புவாக இருக்கின்றார். சிவலிங்கத்தை யாரும் செய்து வைத்து வழிபடவில்லை.
இறந்து போன ஆன்மாக்களுக்கு முக்தி வழங்கி அருள் பாலிக்கின்றார். பித்ருக்களுக்கு அமாவாசை தோறும் முறையாக பித்ருக் கடன் செய்யாதவர்கள் ஆண்டு திதி கொடுக்காதவர்கள் எந்த நாளிலும் எந்த மாதத்திலும் இங்கு வந்து சிறப்பு வழிபாட்டுக்கு செய்து பித்ரு தோஷத்தைப் போக்கலாம்.
இக்கோயில் சிறந்த பரிகார ஸ்தலமாகும். இங்கு எழுந்தருளியிருக்கும் சிவபெருமானின் பெயர் முத்தீஸ்வரர் அம்பாளின் பெயர் சொர்ணவல்லி அல்லது பொற்கொடி அம்மன்.
அமைவிடம்
தில தர்ப்பனேஸ்வரர் கோவில் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பாய்கின்ற உத்தர வாகினி என்று அழைக்கப்படும் அரிசலாற்றின் கரையில் அமைந்துள்ளது. திலம் என்றால் எள். எள்ளைக் கொண்டு தர்ப்பணம் செய்யும் கோயில் தில தர்ப்பனேஸ்வரர் கோவில் ஆகும்.
இதன் பழைய பெயர் மதிமுத்தம். பௌத்தர் காலத்தில் இது சந்திர தியானம் நடைபெற்ற கோயிலாக இருந்தது. பின்பு சிவன் கோயிலானதும் இறைவனுக்கு முதலில் மதிமுத்திச்வரர் என்றும் பின்பு வெறும் முத்திஸ்வரர் என்றும் பெயர் வழங்கியது. திருஞானசம்பந்தர் மதி முத்தம் என்றே பழைய பெயரால் அளிக்கின்றார்.
சைவமயமாதல்
மந்தாரை மரத்தின் கீழே சிவபெருமானின் சிறிய சந்நிதி அமைந்துள்ளது. கிபி எட்டாம் நுற்றாண்டுக்குப் சூரியனும் சந்திரனும் ஒரே நேரத்தில் வந்து வழிபட்ட தலமாக சைவ சமயத்தில் நம்பப்படுவதால் அமாவாசை தர்ப்பணத்திற்கு ஏற்ற கோவிலாக உள்ளது.
கருவறைக்கு எதிரே உள்ள மகா மண்டபத்தில் 63 நாயன்மார்களின் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இறந்தோருக்கு செய்யும் வழிபாடு ஆண்டாண்டு காலமாக மனித வரலாற்றில் நிகழ்ந்து வருகின்றது. இறந்தோரை நினைத்து அவர் இறந்த நாளை அன்று (திதி) அன்று அவருக்குப் படையல் வைப்பது பெரும்பாலோரின் வழக்கமாகும்.
இன்னும் சிலர் முக்கிய ஸ்தலங்களுக்குச் சென்று திதி கொடுக்கின்றனர். ஆற்றங்கரை (திருப்பூவனம் - வைகை), கடற்கரை (ராமேஸ்வரம்), அருவிக்கரை (பாபநாசம்) போன்ற நீர் நிலைகளில், திதி கொடுக்கின்றனர்.
பித்ரு பரிகார ஸ்தலங்கள்
இறந்தோர் வழிபாட்டுக்கென்று சிறப்பான சில கோயில்களும் தமிழகத்தில் உண்டு. இந்தியாவில் காசி, கயா, ராமேஸ்வரம், திரிவேணி சங்கமம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, சில தர்ப்பணபுரி ஆகிய செல்லும் தர்ப்பண ஸ்தலங்கள் ஆகும்.
இவற்றில் நான்கு தலங்கள் தமிழ்நாட்டில் இருப்பதே இறந்தோர் வழிபாடு ஆதி காலம் தொட்டு தமிழ்நாட்டில் நடந்து வருவதையும் இவ்வழிபாடு மக்களிடம் பெற்றிருக்கும் செல்வாக்கையும் உணர்த்தும். காசி கயா செல்ல வசதி இல்லாதவர்கள் சிலதர்ப்பணபுரிக்குச் செல்லலாம்.
குடும்பத்தில் இறந்து போன முன்னோருக்கு குறிப்பிட்ட நாளன்று திதி கொடுக்க மறந்து விட்டாலும் அந்த நாளில் வெளியூர்களில் இருக்க வேண்டி இருந்தாலும் திதி கொடுக்க உடல்நிலை ஒத்துழைக்காவிட்டாலும் ஆடி அமாவாசை தை அமாவாசை மஹாளயா அமாவாசை போன்ற நாட்களில் கொடுக்கலாம்.
அந்த நாட்களிலும் கொடுக்க இயலவில்லை என்றால் எப்போது வேண்டுமானாலும் பித்ரு தோஷ ஸ்தலங்களுக்குப் போய்சிறப்பு வழிபாடுகள் செய்யலாம்.
எள்ளும் கடுகும்
திலம் என்றால் எள். இறந்தவருக்கு எள்ளும் தண்ணியும் தெளிப்பது என்பது தமிழர் மரபு. வடநாட்டில் கடுகைத் தெளிப்பார்கள். இறந்த ஆவி இரவில் கடுகைப் பொறுக்கிக் கொண்டே வீட்டுக்கு வருவதற்குள் விடிந்து விடும்.
விடிந்து விட்டால் இறந்த ஆவி இப்பூமியில் தங்காது என்பது நம்பிக்கை. ஆதி கால மனிதர்கள் இருட்டுக்கும் இறப்புக்கும் கருப்பு நிறதுக்கும் அச்சம் காரணமாகத் தொடர்புபடுத்தினர். அத்தொடர்பு இந்த தொழில் நுட்ப யுகத்திலும் தொடர்கிறது.
இறந்தோர் இங்கே வரக்கூடாது
எள் தெளித்தல் என்பது இறந்த பின்பு எவராக இருந்தாலும் மீண்டும் தன் வீட்டிற்குள் வரக்கூடாது, வந்தால் அது குடும்பத்திற்கு நல்லது கிடையாது. விபத்து திடீர் ஆபத்து போன்றவற்றை உண்டாக்கும் என்று மக்கள் நம்புவதற்குக் காரணம் இறந்தவர்கள் ஆவியாக வலம் வருவர்.
அப்போது அவர்களுக்கு மீவியற்கை ஆற்றல் அல்லது அமானுஷ்ய ஆற்றல் இருக்கும். . பின்பு அவர்கள் ஆவிகளோடு இணைந்து ஆவி உலகத்தில் இருப்பார்கள். ஆவிகளுக்கு பல அமானுஷ்ய சக்திகள் உண்டு. அவை நமக்கு நல்லதும் செய்யும் கெட்டதும் செய்யும்.
அவை நம் வீட்டிற்குள் வரக்கூடாது. நம் வீட்டை சுற்றியும் தெரியக்கூடாது. அவை சாந்தமடைந்து அவற்றின் கர்ம வினைப்படி மோட்சத்துக்கோ நரகத்திற்கும் போய்விட வேண்டும். பூலோகத்தில் திரியக்கூடாது. இறந்தவர்கள் ஆன்மாக்கள் இங்கு எப்போதும் வரக்கூடாது என்பதற்காகவே அவர்கள் இறந்த நாட்களில் மட்டும் அழைத்து பிண்டம் வாசித்து காகங்கள் மூலமாக அவர்கள் சாப்பிட்டதை அறிந்து அவர்களிடம் ஆசி பெற்றதாக மகிழ்ந்து அவர்களை (ஆவிகளை) அனுப்பிவிடுகிறோம்.
மற்ற நாட்களில் அவர்கள் பூமிக்கு , குடும்பத்தினரிடம் வரக் கூடாது. இதனால் இறந்தவர்களுக்கு 16 ஆண்டுகள் மோட்ச தீபம் ஏற்றுவர். இந்த மோட்ச தீபம் இறந்தவருக்கு மோட்சத்துக்கு போக வழி காட்டும் என்பது நம்பிக்கை.
கதைகள்
சிலதர்ப்பனேஸ்வரர் தலத்துக்குப் பல கதைகள் உண்டு.
கதை 1
இராவணன் சீதையை தூக்கிச் சென்ற போது ஜடாயு என்ற பறவை வடிவுடைய நல்ல உள்ளம் படைத்தவர் கொடுஞ்செயலை தடுத்து நிறுத்த முயன்றார். ஆனால் 'முப்பத்து முக்கோடி வாழ்நாளும் முயன்றுடை பெருந்தவமும்' கொண்ட இராவணன் ஜடாயுவை வெட்டிக் கொன்று வீழ்த்தி விட்டான்.
இராமன் சீதையைத் தேடி வரும் போது இத்தகவலை அறிந்து தன் தந்தை தசரதனுக்கு தன்னால் ஈமக்கடன்கள் செய்ய இயலவில்லை. பரதனே த்தைக்குரிய இறுதிச் சடங்குகளை செய்தான். இப்போது தன் தந்தை ஸ்தானத்திலிருந்து தனக்கு உதவிய ஜடாயுவுக்கு அவருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டி தர்ப்பணம் செய்ய வேண்டும் என்று உறுதி பூண்டு இங்கே அரசிளாற்றில் நீராடி தன் தந்தை தசரதனுக்கும் ஜடாயு பறவைக்கும் பித்ரு கடன் நிறைவேற்றினான்.
கதை 2
ஒருமுறை கைலாயத்தில் சிவன் பார்வதி ஆனந்தத் தாண்டவத்தை அனைவரும் ரசித்துக் கொண்டிருந்த வேளையில் வாயுதேவனின் அருளால் ஊர்வசியின் ஆடை சற்று விலகியது . அவளது அழகைக் கண்டு ரசித்த பிரம்மதேவன் அவள் மீது ஆசை கொண்டான்.
இதைக் கண்ட சிவபெருமான் பிரம்மாவை பூலோகத்தில் பிறந்து மனிதனாக வாழ்ந்து அவதிப்படும்படி சாபமமிட்டார். விமோசனம் வேண்டிய பிரம்மனுக்கு சிலதர்ப்பணபுரியில் சென்று தவம் செய்யும்படி கூறினார். பிரம்மதேவன் பூலோகத்துக்கு இறங்கி வந்தான்.
சிவபெருமான் பெயரால் இவ்வூரில் ஓர் ஆலயத்தை அமைத்து ஓர் குளத்தை வெட்டி அந்தத் தீர்த்தத்தில் தினமும் குளித்து சிவபெருமானை பூசித்து வந்தான் இதனால் அவனது பாவம் நீங்கி முக்தி பெற்றான். இக்கோவில் பிரம்மதேவன் கட்டிய கோவில் என்பதால் மேலும் சிறப்புடையதாகிறது. இங்கு உள்ள தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் என்று அழைக்கப்படுகின்றது.
கதை 3
நற்சோதி என்ற மன்னன்தான் தான் வழங்கும் பிண்டத்தை பித்ருக்குள் நேரடியாக வந்து தன்னிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். அதுவரை பித்ரு பூசை செய்வதை நிறுத்த மாட்டேன் என்று சொல்லி ஒவ்வொரு கோவிலாக செய்து கொண்டே வந்தான்.
திலதர்ப்பணபுரி வந்ததும் அவனுடைய பித்ருக்கள் நேரில் பிண்டத்தை பெற்றுக் கொண்டனர். எனவே பித்ரு தர்ப்பணம் செய்வதற்கு ஏற்ற சிறப்புடைய கோயிலாக இக்கோயில் விளங்குகிறது. இந்த கோவிலில் எந்த நாளும் வந்து செய்யலாம்.
கதை 4
வைகுண்டத்தில் ஒரு நாள் திருமாலும் திருமகளும் ஆனந்தமாய் பேசிக் கொண்டிருந்த வேளையில் வாலகில்லியர் எனபடும் குள்ளர்கள் அங்கு வந்து திருமாலைத் தரிசித்தனர். அக் குள்ளர்களைப் பார்த்து திருமகள் சிரித்தாள்.
உடனே அவர்கள் திருமகளின் மீது கோபம் கொண்டு இனி உனக்கு வைகுண்டத்தில் இடமில்லை. பூலோகத்திற்கு போ என்று சபித்தனர். திருமகளும் இந்த தலத்திற்கு இறங்கி வந்து இங்கு சக்கர தீர்த்தத்தை உண்டாக்கினாள். அதன் கரையில் வைகாசி பவுர்ணமி அன்று சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தாள்.
பின்பு தினமும் இந்தத் தீர்த்தத்தில் குளித்து விட்டு சிவபெருமானை நோக்கிப் பன்னிரு ஆண்டுகள் கடும் தவம் இருந்தாள். அதன் பின்பு முக்தீஸ்வரர் அருளைப் பெற்று வைகுண்டத்திற்கு திரும்பிச் சென்றாள்.
கோயில் விவரங்கள்
தீர்த்தங்கள் ஆறு திலதர்ப்பணபுரியில் ஆறு தீர்த்தங்கள் இருப்பதும் ஒரு தனிச் சிறப்பாகும். அவை தேவி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், சந்திர தீர்த்தம், சக்கர தீர்த்தம், வசிஷ்ட தீர்த்தம் மற்றும் அரிசிலாறு ஆகியன. இங்கு ராமர், லட்சுமணர், சூரியன், சந்திரன், யானை, சிங்கம் திருஞானசம்பந்தர், சேக்கிழார் ஆகியோர் வழிபட்டுச் சென்றனர்.
மற்ற தெய்வங்கள்
தில தர்ப்பனீஸ்வரர் கோயில் இருக்குமிடத்தில் முதலில் 'கந்துடைப் பொதியிலாக' பௌத்தக மடாலயம் இருந்ததால் அங்கு லிங்கம் மட்டுமே இருந்தது. இந்துப் பரிவார தெய்வங்கள் இல்லை. அவற்றைப் பின்னர் சேர்ததனர்.
சிவன் சந்நிதி கோஷ்டங்களில் அழகிய துர்க்கை, பெருமாள் போன்ற புதிய தெய்வச் சிலைகளை வைத்தனர். நாயக்கர் ஆட்சி காலத்தில் பல சிவன் கோயில்களில் பெருமாள் சந்நிதியும் புதிதாகச் சேர்த்தனர். அதனால் இங்கு மூன்று கோலங்களிலும் பெருமாளைத் தரிசிக்கலாம்.
அழகன் / பெருமாள் சந்நிதி
தில தர்ப்பனீஸ்வரர் கோவிலில் பெருமாளும் எழுந்தருளி உள்ளதால் இத்தலத்தை ஹரிசேத்திரம் என்பர். பிரம்மனால் இக்கோயில் எழுப்பப்பட்டதால் பிரம்ம நாயகம் என்றும் அழைக்கின்றனர். இங்குள்ள பெருமாளுக்கு பெயர் அழகர், அழகு நாதர் என்பன. . இங்கு மூன்று கோலத்தில் பெருமாள் எழுந்தருளியுள்ளார்.
சிவ பூஜை செய்யும்போது இராமராகவும் சிவன் சந்நிதியின் கோஷ்டத்தில் லிங்கோத்பவர் இருக்குமிடத்தில் நின்றகோலத்தில் நாராயணனாகவும் தனிச் சந்நிதியில் அமர்ந்த கோலத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் வடக்கு நோக்கியும் காட்சி அருளுகின்றார்.
முருகன் சந்நிதி
சில தர்ப்பணபுரீஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் ஆறுமுகன் அல்ல. பன்னிரு கரங்கள் இல்லை. ஒரு முகமும் நான்கு கைகளும் கொண்டு வள்ளி தெய்வானையோடு காட்சி தருகிறார்.
எட்டுக் கை துர்க்கை
திலதர்ப்பணபுரீஸ்வரர் கோவிலின் பிரகாரத்தில் அஷ்டபுஜ துர்க்கை இடது காலை பின்னோக்கி வைத்து சந்நிதி கொண்டுள்ளாள். அவளது காலுக்கு கீழே மகிஷாசுரனும் அவளுக்கு பின்னே சிம்ம வாகனமும் உண்டு
ஆதி விநாயகர்
தில தர்ப்பனீஸ்வரர் கோயிலில் விநாயகர் வெகு பிரசித்தம். விநாயகருக்குரிய எந்த அடையாளமும் இல்லாத ஒருவரை விநாயகர் என்று இங்கு அழைக்கின்றனர். இங்குள்ள விநாயகர் யானை முகமில்லாமல் மனித முகத்துடன் காட்சியளிக்கின்றார். எனவே இவரை ஆதி விநாயகர் எனகின்றனர்.
இவருக்குப் பானை வயிறு கிடையாது. கையில் முறிந்த தந்தம் இல்லை. நான்கு கரங்கள் இல்லை. தலையில் மகுடம் இல்லை. மூஷிக வாகனமும் இல்லை. அமர்ந்திருக்கும் கோலமமும் வேறு. வலது காலைத் தொங்கவிட்டு இடது காலை மடித்து லலிதாசனத்தில் அமர்ந்திருக்கின்றார்.
லலிதாசனம் என்பது ஆனந்தமாக அமர்ந்திருக்கும் ஆசனம் ஆகும். இவரது வலது கை அருள் தரும் அபய ஹஸ்தமாக இருக்கின்றது. இடது கரத்தை தன் இடது காலின் மீது வைத்திருக்கிறார். இவரை நரமுக விநாயகர் என்றும் சுட்டுவர்.
சங்கடஹர சதுர்த்தி
இக்கோயில் சந்திர தியான சுதலமாகவும் இருந்து. இங்கு தனி விநாயகரும் இருப்பதால் சங்கடஹர சதுர்த்தி அன்று இங்கு சிறப்பு பூசைகள் நடைபெறும். அந்நாளில் இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து வணங்குகின்றனர். சதுர்த்தி சந்திர தியானத்திற்கு உரிய நாள்.
அன்று விரதம்.இருப்போர் இரவில் சந்திரனை தியானம் செய்த பின்பே விரதம் விட வேண்டும். இங்குள்ள இறைவனுக்கு மதி முத்தர் என்ற பெயர் ஆரம்பத்தில் வழங்கியது. பின்னர் முத்தர், முத்தீஸ்வரர் ஆனார்.
தலவிருட்சம்
இங்கு தல தலவிருட்சம் மந்தாரை ஆகும். இதனால் இறைவனை மந்தாரவனேஸ்வரர் என்றும் அழைக்கின்றனர். மரகதசலேஸ்வரர் என்ற பெயரும் உண்டு.
பாடல் பெற்ற தலம்
சைவ சமயக் குரவர்களில் திருஞானசம்பந்தர் இத்தலத்தின் இறைவன் மீது பாடிய பதிகத்தை இரண்டாம் திருமுறையில் காணலாம். அவர் இத்தலத்தை மதி முத்தம் என்று அழைக்கின்றார்.
புரவி எழும் மணி.பூண்டு இயங்கும் கொடித்தேரினான்
பரவி நின்று வழிபாடு செய்யும் பரமேட்டி ஊர்
விரவி ஞாழல் விரிகோங்கு வேங்கை சுரபுன்னைகள்
மரவம் மௌவல் மலரும் திலதை மதி முத்தமே
(திருஞானசம்பந்தர் தேவாரம் 275)
'தேன் பிலிற்றும் மதி முத்தமே'
'அழகார் மதிமுத்தமே',
'அருள் பேணி நின்ற மதிமுத்தமே'
'அரிசில் சூழ்ந்த மதி முத்தமே'
'திலதை மதி முத்தமே'
:வழிபாடு செய்யும் மதிமுத்தமே'
என்று பாடல்தொறும் மதிமுத்தம் என்றே குறிப்பிட்டுள்ளார்.
மதி- மதிமுததம் - முத்திச்வரர்
இக்கோவில் மதிமுற்றம் என்று பவுத்தர்கள் காலத்தில் அழைக்கப்பட்டு. திருஞானசம்பந்தர் காலத்தில் மதி முத்தம் ஆகியிருக்கலாம். இது ஒரு சந்திர தரிசனக் கோவில் ஆகும். பௌத்த சமயம் செல்வாக்குடன் இருந்த காலத்தில் சந்திர தியானம் நடைபெற்ற ஆலயம் ஆகும். ஆலயம் என்பது பவுத்தர்களின் தியான மடத்தைக் குறித்தது.
பௌத்த துறவிகள் தங்கியிருந்த மடங்களும் தியானம் செய்த ஆலயங்களும் ஒரே இடத்தில் இருந்தன. துறவிகள் ஆலயங்களில் மருத்துவ சேவையும் செய்தனர். அருகிலேயே மூலிகைத் தோட்டம், (பூந்தோட்டமும்) அமைத்தனர். இதை ஆராமம் (உபவனம்) என்றனர்.
இதுவே பின்னர் நந்தவனம், பிருந்தா வனம் - துளசி வனம் எனப்பட்டது. இவை அனைத்தும் சேர்ந்தது தான் மடாலயம். திலதர்ப்பனீஸ்வரர் கோயிலுக்கு வெகு அருகில் பூந்தோட்டம் என்ற ஊர் உள்ளது. முற்காலத்தில் இத்தோட்டம் வரை பௌத்த மடாலயம் இருந்திருக்கும்.
சந்திரன்- ரோகிணி
மக்கள் சந்திர வழிபாட்டைத் தொடர்ந்து செய்வதற்காக புதிய கதையும் வழிபாட்டு முறைகலும் தோன்றின. ரோகினி நட்சத்திரத்தன்று பிரம தீர்த்தத்தில் நீராடி இக்கோயிலில் பூசை செய்தால் வாழ்வில் நன்மை பெருகும். மகிழ்ச்சி உண்டாகும். செல்வம் தழைக்கும். இன்னும் பல நன்மைகள் ஏற்படும். காரணம், ரோகினி சந்திரனுக்கு பிரியமான மனைவி ஆவாள்.
அந்நாளில் இக்கோவிலில் சந்திரனை வழிபட வேண்டும். இவ்வழிபாட்டுக்கும் பித்ரு சாபத்துக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. தற்போதுள்ள ஸ்தல புராணக் கதையில் சந்திரன் வழிபட்ட கோவில் என்பதால் பலரும் இங்கு இவ்வழிபாட்டை செய்கின்றனர்.
இங்குள்ள ஒரு தீர்த்தம் சந்திர தீர்த்தம் எனப்படுகிறது. ஒளிச் சுடரைப் பார்த்து ஆழ்நிலை தியானம் செய்வது போல இரவில் சந்திரனைப் பார்த்தபடி இருப்பது சந்திர தியானம் ஆகும். இளஞ்சூரியனைப் பார்த்துக் காலையிலும் மாலையிலும் சூரிய நமஸ்காரம் செய்வது போல பவுத்த சமயத்தில் சந்திரனைப் பார்த்தும் தியானம் செய்தனர்.
சந்திர தியானத்தின் சுவடுகளை சங்கடஹர சதுர்த்தி விரதத்தில் காண்கிறோம். ஜப்பானில் பவுத்த சமயத்தினர் இன்றும் moon viewing என்ற பெயரில் வீட்டுக்குள் இருந்தபடியே ஜன்னல் வழியே சந்திரனைப் பார்த்தபடி அமர்ந்து தியானம் செய்கின்றனர்.
இன்று திலததர்ப்பனீஸ்வரர் கோயில் பித்ரு தோஷம் போக்கும் புண்யஸ்தலம் ஆகும். இறந்தோருக்கு தர்ப்பணம் கொடுக்காதவர்கள் எந்த நாளிலும் இக்கோவிலுக்குப் போய் அப்பாவத்தை போக்கி பிராயச்சித்தம் தேடலாம்
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |