திருமணத்தில் தொடர் தடைகளா? அகர முத்தாலம்மனை ஒருமுறை வழிபாடு செய்தால் போதும்
முத்தாலம்மன் ஆதிசக்தி, அட்சய பாத்திரம் ஏந்தியபடி அகரம் என்ற ஊரில் கோயில் கொண்டிருக்கிறாள். முத்தாலம்மன் கோவில் திண்டுக்கல்லில் இருந்து கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், தாடிக்கொம்பு அருகில் குடகனாற்றின் மேற்கு கரையில் அமைந்துள்ளது.
அகரம் முத்தாலம்மன் சிறப்பு:
பெரும்பாலான முத்தாலம்மன் கோயில்களில் பீடமே பிரதானமாக இருக்கும். திருவிழா காலங்களில் மட்டுமே மண்ணால் உருவாக்கப்படும் சிலைகள் பயன்படுத்தப்படும். ஆனால், அகரம் கோயிலில் அம்மன் சிலா திருமேனியில் காட்சி தருகிறாள்.
கருவறையில் அருளும் அம்மன்:
கருவறையில் முத்தாலம்மன் இச்சா, கிரியா, ஞான சக்திகளாக அருள்கிறாள். கைகளில் அட்சய பாத்திரம் ஏந்திய மூன்று கன்னியராக நின்ற நிலையில் அம்மன் அருள்பாலிக்கிறார்.
தல வரலாறு:
சுமார் 500 ஆண்டுகளுக்குமுன், ஆந்திர மன்னர் ஒருவரிடம் கணக்கராகப் பணிபுரிந்தவர் அதிவீர சக்கரராயர். அம்பாளின் பக்தரான இவர், முத்தியாலு என்ற அம்மனை இஷ்ட தெய்வமாக வழிபட்டு வந்தார். ஒரு பெட்டியில் அம்பிகைக்கான அலங்காரப் பொருள்கள் மற்றும் பூஜைப் பொருள்களை வைத்து, தினமும் பூஜை செய்து வந்தார்.
நாணயமும் நேர்மையும் மிகுந்த இவரின் செயல்பாடுகள், உடன் பணிபுரிந்த சிலருக்குச் சிக்கலாக இருந்து வந்தன. ஒருமுறை, வரி வசூல் செய்துவிட்டு தாமதமாக வீடு திரும்பிய சக்கர ராயர், பூஜையில் லயித்துவிட்டார். அப்போது, எதிர்பாராத விதமாக வசூல் கணக்குச் சுவடி தீப்பற்றிக் கொண்டது.
பூஜை முடிந்ததும் அதைக் கவனித்தவர் அதிர்ச்சி அடைந்தார். ஆனால், பணம் மட்டும் நெருப்பில் எரியாமல் இருந்தது. மறுநாள் மன்னரிடம் வசூல் தொகையை ஒப்படைத்துவிட்டு, நடந்த விபத்தைப் பற்றி விவரித்தார்.
ஆனால், சக்கர ராயரின் எதிரிகள் இதுதான் தக்க தருணம் என்று அவருக்கு எதிராக வாதிட்டு மன்னரின் மனத்தை மாற்றினர். பண வசூலில் மோசடி செய்துவிட்டார் என்று சக்கர ராயர் மீது குற்றம் சுமத்தினர். மன்னருக்கும் சந்தேகம் எழுந்தது. ஒரு வார காலத்துக்குள் கணக்கை எழுதி ஒப்படைக்கும்படி சக்கர ராயருக்கு உத்தரவிட்டார்.
சுவடியில் இருந்தவை, நீண்ட நெடுநாள்களாகப் பதிவு செய்யப்பட்ட கணக்கு விவரங்கள். அவற்றை ஒரே வாரத்தில் மீண்டும் எழுதித் தருவது இயலாத காரியம். இதனால் மனம் கலங்கிய சக்கர ராயர், முத்தியாலு அம்மனிடமே முறையிட்டார்.
தன் மீதான அவப் பெயர் நீங்கும் வரை அன்னம் - தண்ணீர் சாப்பிட மாட்டேன் எனச் சொல்லி, அம்பிகையின் திருமுன் அமர்ந்துகொண்டார். அப்போது ஓர் அசரீரி ஒலித்தது. “தெற்கு நோக்கிப் பயணப்படு. நான் சொல்லும் இடத்தில் என்னை வைத்து வழிபடு’’ என்றது அசரீரி.
அதன்படியே அம்பாளையும் பூஜைப் பெட்டியையும் தூக்கிக்கொண்டு, தெற்கு நோக்கிப் புறப்பட்டார் சக்கர ராயர்.இந்த நிலையில், குறித்த காலத்தில் கணக்கை ஒப்படைக்காத சக்கர ராயரைத் தேடி ஆள் அனுப்பினார் மன்னர். சக்கர ராயரின் வீட்டுக்கு வந்த வீரர்கள் அதிர்ந்தனர்.
அங்கே தீபம் ஒன்று சுடர்விட்டுக்கொண்டிருக்க, அருகில் கணக்குச் சுவடிக் கட்டுகள் இருந்ததைக் கண்டனர். அவற்றை எடுத்துச் சென்று மன்னனிடம் ஒப்படைத்தனர். சுவடிகளை ஆராய்ந்தபோது, சக்கர ராயர் எழுதிவைத்த கணக்குகள் அனைத்தும் மிகச் சரியாக இருந்தன.
தவறு உணர்ந்த மன்னர், சக்கர ராயர் எங்கு இருந்தாலும் அவரைத் தேடி அழைத்து வரும்படி ஆள்களை அனுப்பிவைத்தார். சக்கர ராயரோ அதற்குள் துங்கபத்ரா நதியைக் கடந்து இருந்தார்.
அங்கு வந்து சேர்ந்த மன்னரின் ஆள்கள், எதிர்கரைக்கு அப்பால் சக்கர ராயர் நடந்து செல்வதைக் கவனித்தனர். அவரைக் கூவி அழைத்து, மன்னரின் விருப்பத்தைத் தெரிவித்தனர்; மீண்டும் வரும்படி கேட்டுக் கொண்டனர்.
கோவில் அமைப்பு:
இந்த கோவிலின் கருவறையில் ஞானா சக்தி (அறிவு), கிரியா சக்தி(செயல்), இச்சா சக்தி (ஆசை) ஆகிய மூன்று அம்சங்களில் கையில் அட்சய பாத்திரங்களுடன் நின்ற கோலத்தில் மூன்று உருவங்களில் எழுந்தருளி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.
2005-ம் ஆண்டிற்கு முன்னர் சுதையால் செய்யப்பட்ட மூன்று அம்மன் சிலைகள் இருந்ததை பாரம்பரிய வழக்கப்படி அம்மனின் உத்தரவினை கேட்டு கற்சிற்பங்களாக மாற்றி அமைக்கப்பட்டது. கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், முகப்புமண்டபம் என பிரகாரங்கள் அமைந்துள்ளன.
மேலும் இக்கோவிலின் கருவறையில் அம்மனை வழிபட்ட குருமாமுனிவரின் ஜீவ சமாதியும், அவருடைய பண்டாரப்பெட்டியும் உள்ளது. அம்மனுக்கு செய்யும் அனைத்து பூஜைகளும் குருமாமுனிவருக்கும், பண்டாரப்பெட்டிக்கும் செய்யப்படுகிறது.
இக்கோவிலின் சுற்றுப்பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் ஐந்து முகங்களைக்கொண்டு எழுந்தருளியுள்ள சுரலிங்கேஸ்வரருக்கு தனி சன்னதி, ஞானம் தரும் விநாயகர், விசாலாட்சி அம்மன், வடமேற்கு மூலையில் பாலமுருகன், மகாலட்சுமி, துர்க்கை, வடகிழக்கு மூலையில் நவகிரகங்களுக்கு என தனித்தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இன்னும் பல சன்னதிகள்:
கோவிலில் சுரலிங்கேஸ்வரர், ஞானம் தரும் விநாயகர், விசாலாட்சி அம்மன், பாலமுருகன், மகாலட்சுமி, துர்க்கை, நவகிரகங்களுக்கு தனித் தனி சன்னதிகளும் உள்ளன.
திருவிழா நெறிகள்:
திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் முதல் செவ்வாய்க்கிழமையை கணக்கிட்டு நடத்தப்படுகிறது. அம்மனின் உத்தரவை கேட்டு திருவிழா நடத்தப்படும். அம்மனின் உத்தரவு கிடைக்கும் பட்சத்தில் ஐப்பசி மாதம் முதல் செவ்வாய்க்கிழமையை அடிப்படையாக கொண்டு அதற்கு முந்தைய 10-ம்நாள் ஞாயிற்றுக்கிழமை இரவு திருவிழா பாரம்பரிய அடிப்படையில் சாட்டுதல் நடைபெறும்.
மறுநாள் முதல் அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை வரை 7 நாட்களும் இரவு 8 மணிக்கு உற்சவர் மற்றும் அம்மனின் பண்டாரப்பெட்டி சன்னதியிலிருந்து கிளம்பி கொலுமண்டபத்திற்கு எழுந்தருள்வார். அதனைத்தொடர்ந்து புராண நாடகங்களும் நடைபெறும்.
உற்சவ காலத்தில் எழுந்தருளும் அம்மன் பிறப்பு மண்டபத்தில் சர்க்கரை மூட்டை, களிமண் உள்ளிட்ட பல பொருட்களைக்கொண்டு விழா சாட்டப்பட்ட 6-ம்நாள் வெள்ளிக்கிழமை உருவாக்கப்படுகிறது. பிறப்பு மண்டபத்தில் உருவாக்கப்பட்ட அம்மன் கண்திறப்பு மண்டபத்திற்கு எடுத்து செல்லப்பபடுவார்.
கண்திறப்பு விழா
அம்மனின் கண்திறப்பு விழா, ஆயிரம்பொன் சப்பரத்தில் பல்லாயிரக்கணக்காண பக்தர்களின் முன்னிலையில் நடக்கிறது. அம்பிகை கொலுமண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களின் நேர்த்திக்கடன்களை ஆற்றி வரங்களை அருள்கிறாள்.
வேண்டுதல்களும் நேர்த்திக்கடன்களும்:
குழந்தை பாக்கியம் பெற்றோர் குழந்தைகளை கரும்பு தொட்டிலில் தங்களது குழந்தைகளை தூக்கிவந்தும் நேர்த்தி கடனை செலுத்துவர். மேலும் அம்மனின் அருளால் தங்களது விவசாயத்தில் கிடைத்த கம்பு, சோளம், நெல், மக்காசோளம், வாழைப்பழம் உள்ளிட் விவசாய பொருட்களை சூறையிட்டும், கை, கால் சுகம் அடைந்தோர் மண்ணால் செய்யப்பட்ட உடல் உறுப்பு மண்பொம்மைகளை காணிக்கையாக அளித்தும், சேத்தாண்டி வேடம் அணிந்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.
அன்று நள்ளிரவு அம்மன் புஷ்ப விமானத்தில் எழுந்தருளி வாணக்காட்சி மண்டபத்திற்கு எழுந்தருள்வார்.மறுநாள் நண்பகல் வரை அங்கு எழுந்தருளும் அம்மன், பின்னர் சொருகுபட்டை சப்பரத்தில் எழுந்தருளி பல்லாயிரக்கணக்காண பக்தர்களின் மத்தியில் உலா வந்து பூஞ்சோலையில் எழுந்தருள்வார்.
குறிப்பாக அம்மனின் பாதத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட எலுமிச்சை பழத்தை தின்று, பூஜிக்கப்பட்ட மஞ்சளை உடலில் பூசி குளித்து வந்தால் குழந்தைப்பேறு கிடைக்கும். இங்கு எழுந்தருளியுள்ள விநாயகருக்கு தேங்காய் மாலை சாத்தி வழிபட்டால் திருமணத்தடை நீங்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |