தீரா நோயையும் குணப்படுத்தும் வெட்டுவானம் எல்லையம்மன்.. முழு உடல்நலம் பெற ஒருமுறை சென்று வாங்க
கேட்ட அனைத்தையும் அருள்வாள் அன்னை. நாம் கேட்காமலே நமக்கு தேவையானவற்றை அளிக்கும் அன்னையை பல இடங்களில் பல வடிவங்களில் வணங்கி வருகிறோம். நோய் வந்தால் மருத்துவரை தேடி ஓடும் அதே நேரத்தில் கடவுளையும் வணங்க தவறுவதில்லை.
அவ்வாறு ஒவ்வொரு வேண்டுதல்களுக்காகவும் நாம் ஒவ்வொரு கோயிலுக்கு செல்வோம். முந்தைய பதிவுகளில் நாம் பார்த்திருப்போம், குழந்தை பேற்றுக்காக பூங்காவனத்தம்மன் கோயில், சனி தோஷம் விலக தேவிப்பட்டினம் கோயில் என தனித்தனி கோயில்கள் குறித்து நாம் தெரிந்துகொண்டோம்.
ஆனால் இப்போது நாம் பார்க்கவிருக்கும் கோயில் மணப்பேறு, மக்கட்பேற்றுடன் மருத்துவரால் கைவிடப்பட்ட நோயாளிகளை கூட காக்கும் சக்தி வாய்ந்த தலமாக அமைந்துள்ளது.
தல அமைவிடம்:
இத்தகைய பல சிறப்புகளை கொண்ட கோயிலாக வெட்டுவானம் எல்லையம்மன் கோயில் திகழ்கிறது. இந்த கோயிலானது வேலூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், வேலூரில் இருந்து மேற்கே 23 கி.மீ. தொலைவில், ஜவ்வாது மலைச்சாரலிலும், பாலாறு நதிக்கரை ஓரத்திலும் நடுநாயகமாக அமைந்துள்ளது.
ரயில் மூலம் செல்ல விரும்புவோர் சென்னை சென்ட்ரல் ரயில் வழித் தடத்தில் இருந்து குடியாத்தம் ரயில் நிலையம் வந்தடைந்து, அங்கிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள இக்கோயிலை வந்தடையலாம்.
தலவரலாறு 1:
ஜமதக்னி என்ற முனிவரும், அவரின் மனைவியான ரேணுகாதேவியும் சிவன், பார்வதி அம்சங்களாக அவதரித்து வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு விசு, விசுவாஸ், விஸ்வரூபன், பரஞ்ஜோதி, பரசுராமன் என ஐந்து புதல்வர்கள் இருந்தனர். இவர்களில் பரசுராமனே கடைக்குட்டியாக இருந்தார்.
அருகில் இருந்த நதிக்கு சென்று மண்ணை எடுத்துக் கொண்டு வந்து குடம் செய்து நீர் மொண்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள் ரேணுகாதேவி. ஒரு சமயம் ஆற்றிற்குச் சென்று மணலால் குடம் செய்து ஆற்றில் நீர் மொண்ட போது, தண்ணீரில் கந்தர்வன் ஒருவனின் முகம் பிரபதிபலித்தது.
பார்த்த மாத்திரத்தில் அந்த கந்தர்வனின் உருவம் அவளது மனதை ஆட்கொண்டது. ரேணுகை அந்த வசீகரத்தில் மூழ்கிடவே, அவளின் சக்தி வீணாக, குடம் ஆற்றோடு கரைந்து போனது. இதனால் அச்சமுற்று சுயநினைவிற்கு வந்த ரேணுகை, தன் தவறை உணர்ந்தாள்.
அவளால் மீண்டும் மணலால் குடம் செய்ய இயலவில்லை. வெறுங்கையோடு ஆசிரமம் திரும்பினாள். ஜமதக்னியிடம் விலங்கு விரட்டியதால் குடம் தவறி விழுந்து விட்டதாகப் பொய் கூறினாள். அவளின் பொய்யைத் தன் ஞானத்தால் உணர்ந்த முனிவர், தன் பிள்ளைகளை அழைத்தார்.
ரேணுகை செய்த குற்றத்திற்கு தண்டனையாக அவளின் தலையை வெட்டுமாறு பணித்தார். முதல் நான்கு மகன்களும் மறுத்துவிட்டனர். அதனால் கோபம் கொண்ட முனிவர் அவர்களைச் செடி கொடிகளாக மாறும்படிச் சபித்தார். கடைசி மகனான பரசுராமனிடமும் அதே உத்தரவை இட்டார்.
மறுப்பேதும் இன்றி பரசுராமன் தன் தந்தையிடம் இரண்டு வரங்களைக் கேட்டார். அவரும் தருவதாக ஒப்புக் கொண்டார். இதையடுத்து பரசுராமன் தன் தாய் என்றும் பாராமல், கையில் கோடரியோடு ரேணுகையைத் துரத்தினார்.
உயிர் பயத்தால் ஓடிய ரேணுகை, அருந்ததியப் பெண்ணைக் கட்டியணைத்துத் தன்னைக் காக்கும்படி வேண்டி நின்றாள். அதற்குள் அங்கு வந்த பரசுராமன் தன் கையில் இருந்த கோடரியால் வீச, அது இருவரின் தலையையும் துண்டித்தது.
தன் தாயின் தலையைக் கையில் ஏந்தியபடி ஜமதக்னி முன் நின்ற பரசுராமன், தான் கேட்க விரும்பிய வரங்களைக் கேட்டார். அந்த வரங்களின் மூலம் தன் தாயின் உயிரை மீட்டதோடு தன்னுடைய சகோதரர்களையும் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்தான் பரசுராமன்.
இருபெண்களின் தலை வெட்டுப்பட்ட ஊரே ‘வெட்டுவானம்’ என வழங்கப்பட்டது. இந்த ரேணுகையே வெட்டுவானம் தலத்தின் மூலநாயகியாக திகழ்கிறார்.
தல வரலாறு 2:
வெட்டுவானம் வழியே புண்ணிய தீர்த்த மாக ஓடிய நதியில் கால்வாய் சீரமைப்பு பணி நடைபெற்று வந்தது. விவசாயி ஒருவர் மண் வெட்டியால் அகலப்படுத்தியபோது ஒரு கல் மீது மண்வெட்டி தட்டியது. இதனால் அதிலிருந்து ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது.
அதனைக் கண்ட விவசாயி மயங்கி விழுந்தான். அப்போது அசரீரி குரல் ஒலித்தது. ‘இத்தலத்து தெய்வமான எல்லையம்மன் நான். இவ்வளவு காலம் பூமியில் மறைந்திருந்த நான் வெளிப்படும் நேரம் வந்துவிட்டது. என்னை பிரதானமாக வைத்து ஆலயம் எழுப்புங்கள்’ என அந்த குரல் கூறியது.
இவ்வூரில் அம்மன் வெட்டுண்டதால் இத்தலம் வெட்டுவானம் ஆனது. ஊர்மக்கள் ஒன்று கூடி எல்லையம்மனுக்கு அழகிய கோயில் ஒன்றை எழுப்பினர்.
தல அமைப்பு:
தேசிய நெடுஞ்சாலையில், வெட்டுவானம் ஊரின் சாலையோரம் கோயில் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய ஐந்துநிலை ராஜகோபுரமும், அதனையொட்டி அழகிய மண்டபமும், எழிலான திருக்குளமும், குளத்தின் மேற்புறம் புற்றும், வேம்பு மரமும் ஒருங்கே அமைந்துள்ளன.
ஆலயத்தில் நுழைந்து இடதுபுறம் நாகர் சிலையின் பீடத்தில் பழமையான வேம்புமரம் தலமரமாக அமைந்துள்ளது. கோயிலின் தென்மேற்கே அலங்கார மண்டபம் அமைந்துள்ளது. தென்மேற்கில் உற்சவ மண்டபமும், வடமேற்கில் தீபம் ஏற்றும் அட்ட நாக தீப மண்டபமும் அமைந்துள்ளன.
நடுநாயகமாக அன்னை வெட்டுவானம் எல்லையம்மன், கருவறையில் கழுத்தளவு மேனியளாக, அழகிய அகன்ற கண்கள் கொண்டு அருள்காட்சி வழங்குகின்றாள். அன்னை எல்லையம்மன் என்று வழங்கப்பட்டாலும், இவளின் புராணப் பெயர் ரேணுகாதேவியாகும்.
தல சிறப்புகள்:
இத்தலத்தின் அம்மன் அவளை வேண்டி வருவோருக்கு மணப்பேறும் மக்கட்பேறும் அருள்கிறாள். அதோடு மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகளையும் காப்பாற்றும் அன்னையாக வெட்டுவானம் எல்லையம்மன் திகழ்கிறாள்.
கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அருமருந்துகளாக அம்மனின் அபிஷேக மஞ்சள் நீரும், தல மரத்து வேப்பிலையும், புனிதமான குங்குமமும் பிரசாதங்களாக அளிக்கப்படுகின்றன. செவ்வாய்க்கிழமைகளில் காலை 8 மணி முதல் 9 மணி வரை நாகதோஷ நிவர்த்தி பூஜையில் கலந்துகொண்டு அனைத்துவித நாக தோஷங்களில் இருந்தும் விடுபடலாம்.
உடல் நலிவுற்றவர்கள் இங்கு விற்கப்படும் மண் பொம்மைகளை வாங்கி காணிக்கை செலுத்துகின்றனர். விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு வரும் நோய்களுக்கு வேண்டிக் கொண்டு அவை குணம் பெற்ற பின்பு, விலங்கு பொம்மைகளைக் காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.
அழகிய திருக்குளம்:
கோயிலின் நேர் எதிரே அழகிய படிகள் கொண்ட சதுர வடிவிலான திருக்குளம் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது. எப்போதும் நீர் நிறைந்து காணப்படும் இத்திருக்குளத்தின் படிகளில், லட்ச தீப விழாவின் போது விளக்கேற்றி வழிபடும் காட்சி, மனதை கவர்ந்திடும். இத்திருக்குளமே தலத் தீர்த்தமாக அமைந்துள்ளது.
விழாக்கள்:
அம்மனுக்கு ஆடி மாதம் முழுவதுமே விழா நடைபெறுகிறது. ஆடி முதல் வெள்ளிக்கிழமையில் இருந்து ஏழு வெள்ளிக்கிழமைகளில் விழாக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.
வழிபாட்டு நேரம்:
காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் அம்மனை தரிசனம் செய்யலாம். வெள்ளிக்கிழமைகளில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்ந்து அம்மனை தரிசனம் செய்யலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |