திருமணத் தடை நீக்கும் மாதேஸ்வரன் மலைக் கோவில்
மாதேஸ்வரன் மலைக் கோவில்
கர்நாடகாவில் உள்ளது. இக்கோவில் பெங்களூரில் இருந்து 210 கிலோமீட்டர் மைசூரில் இருந்து 140 கிலோ மீட்டர் கொள்ளேகால் என்ற இடத்திலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக இம்மலை வழங்குகின்றது.
கோயில் ஒன்று கதை இரண்டு
மாதேஸ்வரன் கோயிலுக்கு இரண்டு வரலாறுகள் உண்டு. ஒன்று கண்ணப்ப நாயனார் கதை, மற்றொன்று சிறிது மாற்றப்பட்ட ஐயப்பனின் கதை.
ஆரம்பத்தில் கண்ணப்பனும் அவன் வழிமரபினரும் வணங்கி வந்த சிவலிங்கத்தை சைவ சமயத்தின் ஒரு பிரிவான லிங்காயத்துகள் கர்நாடகாவில் தனிப்பெரும் செல்வாக்கும் பெற்றதும் ஐயப்பனின் கதையை மாதனின் கதையாக மாற்றி கோயிலை மாதேஸ்வரன் கோயில் ஆக்கினர். மலை வாழ் மக்களின் கோயில் அனைத்துத் தரப்பினரரும் வந்து வணங்கும் கோயில் ஆயிற்று.
கதை கதையாம் காரணமாம்
மாதேஸ்வரன் கோயிலுக்கு இரண்டு கதைகள் வந்ததற்கு மதப் பிரச்சாரமே காரணம் ஆகும். அனைத்து சாதியினரும் தொழில் பிரிவினரும் சைவத்தில் இணையலாம் என்பதை மக்களுக்கு உணர்த்தவே பெரிய புராணம் இயற்றப்பட்டது.
இப்புரணத்தில் மலை வேடரான கண்ணப்பன் கதையை சேக்கிழார் சேர்த்தார். அடுத்து, பௌத்த சமயம் கேரளத்தில் பரவிய காலத்தில் மலை வாழ் மக்களின் பூர்விக தெய்வங்களைச் செயலற்றவர்கள் என்று பிரச்சாரம் செய்து ஒழிக்கவே பவுத்தத் துறவிகள் திபெத் நாட்டில் வழங்கிய பத்மசாம்பவன் கதையைக் கொஞ்சம் மாற்றி இங்கு மாதன் கதை ஆக்கினர்.
மாதன் கதையை லிங்காயத்துகள் சைவசமயக் கதையாக மாற்றினர். கண்ணப்பன் வண்ங்கிய சுயம்புலிங்கத்துக்கு தான் மாதன் கோயில் கட்டி வழிபட்டான். இன்று கண்ணப்பன் பேர் மறைந்து மாதன் பெயரால் மதேஸ்வரன் என வழிபடப்படுகின்றது.
கண்ணப்பன் கதை
மாதேஸ்வரன் கோயிலின் நிறுவனர்களும் பூசாரியும் கண்ணப்ப நாயனார் வழி மரபினர் என்பது வரலாறு. சேக்கிழார் இயற்றிய பெரிய புராணத்தில் கண்ணப்ப நாயனார் வரலாறு இடம்பெற்றது. இவர் திண்ணப்பன் என்ற பெயருடைய ஒரு மலைவாழ் வேடனாவார்.
இவர் தான் வேட்டையாடும் விலங்கு மற்றும் பறவைகளின் இறைச்சியைச் சுட்டு அதன் சுவையான பகுதியைத் தின்று பார்த்து சுவை உள்ளது என்று தெரிந்தால் மட்டும் அங்கு ஒரு மரத்தின் அடியில் தானாக முகிழ்த்திருந்த சுயம்புலிங்கத்திற்கு படைப்பார்.
அதற்கு முன்பு அவர் அருகில் இருக்கும் சுனை ஒன்றில் வாய் நிறைய தண்ணீரை எடுத்துக்கொண்டு சிவலிங்கத்தின் அருகில் போய் அதற்கு அபிஷேகம் செய்வது போல் தலையில் உமிழ்வார். அதன் பின்பு சுவையான இறைச்சியை சிவலிங்கத்தின் முன்பு வைப்பார். அங்கு இருக்கும் காட்டு புஷ்பங்களைப் பறித்து சிவலிங்கத்துக்கு அர்ச்சனை செய்வார். தினமும் இவர் இப்படி செய்து கொண்டே இருந்தார்.
அந்தணர் பூசை
கண்ணப்பன் வணங்கும் சுயம்புலிங்கத்துக்கு ஒரு அந்தணர் தினமும் அபிஷேக ஆராதனைகள் செய்வது வழக்கம். அவருக்கு சிவலிங்கத்தின் முன்பு இறைச்சியும் எச்சில்நீரும் கோபத்தைத் தூண்டியது. ஆத்திரமும் வெறுப்பம் வந்தது.
தினமும் அவற்றைச் சுத்தம் செய்துவிட்டு தான் கொண்டு வந்த சுத்தமான குடத்து நீரை சிவலிங்கத்தின் மீது ஊற்றி அபிஷேகம் செய்வார். தான் மலையடிவாரத்தில் இருந்து பறித்து வந்த மணமுள்ள மலர்களால் இறைவனுக்கு அர்ச்சனை செய்வார். பொங்கல், கல்கண்டு, பழங்கள் கொண்டு வந்து சிவனுக்கு படைத்தார்.
திண்ணப்பனின் வேண்டுதல்
ஒரு நாள் சிவன் முன்பு இறைச்சியை வைத்து உண்பது யார் என்று பார்க்கக் காத்திருந்தார். ஒரு புதரின் பின்னே மறைந்து நின்றார் வழக்கம் போல திண்ணன் அங்கு வந்து தன் வாய் நிறைய இருந்த தண்ணீரை சிவலிங்கத்தின் மீது உமிழ்ந்து அதை சுத்தப்படுத்திவிட்டு பின்பு தான் தின்று ருசி பார்த்த சுவையான இறைச்சியை சிவபெருமான் முன்பு படைத்தான்.
பின்பு அங்கிருந்த இலை மற்றும் பூக்களைப் பறித்து 'இறைவா என்னை காப்பாற்று, எனக்கு தினமும் தேவையான உணவைக் கொடு, நல்ல பலத்தைக் கொடு, தினமும் உன்னை வந்து பார்த்துப் பேசும் வாய்ப்பைக் கொடு' என்று என்று தனக்கு வேண்டியவற்றை மட்டும் இறைவனிடம் சொல்லி சொல்லி அந்த இலைகளையும் மலர்களையும் சிவபெருமான் மீது தூவினான்.
சிவன் கண்ணில் வடிந்த ரத்தம்
திண்ணன் லிங்கத்தின் ஒரு கண்ணில் இருந்து ரத்தம் வடிந்ததைக் கண்டான். அவன் மலைவாழ் இனத்தைச் சேர்ந்தவன் அல்லவா! கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்ற கொள்கையில் வாழ்பவன்.
ஒரு கண் காயப்பட்டு ரத்தம் வடிகிறது என்றால் அதை எடுத்துவிட்டு பதிலுக்கு இன்னொரு கண்ணை வைத்து விடலாம் என்ற நம்பிக்கையில் தன்னிடமிருந்து அம்பை எடுத்து தன் கண்ணைத் தோண்டி சிவனின் ரத்தம் வடிந்த கண்ணில் அப்பினான். இரத்தம் நின்று விட்டது அவனுக்கு ஒரே மகிழ்ச்சி தன் கண்ணும் பார்வையும் போனது கூட கவலை இல்லை. சிவனுக்கு கண்ணில் ரத்தம் நின்றது அவனுக்கு மன நிம்மதியைக் கொடுத்தது.
இனி நீ கண்ணப்பன்
சிவன் கண்ணில் ரத்தம் வடிவது நின்றதும் அப்பாடா என்று திண்ணன் கிளம்பும் வேளையில் லிங்கத்தின் இன்னொரு கண்ணில் இருந்து ரத்தம் வழிந்தது. உடனே அவன் தன்னுடைய இன்னொரு கண்ணையும் தோண்டினான். சிவபெருமான் காட்சி கொடுத்து 'திண்ணப்பா நிறுத்து.
இனி நீ திண்ணப்பனல்ல எனக்கு கண்ணப்பிய கண்ணப்பன்' என்றார். அதனால் பெரிய புராணத்தில் இவர் கண்ணப்ப நாயனார் என்று அழைக்கப்பட்டார். மாதேஸ்வர மலையில் திண்ணப்பனின் உறவினர்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களே வாழ்கின்றனர். அவர்களும் திண்ணப்பனின் வழியைப் பின்பற்றி இங்கு உள்ள சுயம்புலிங்கத்தை வழிபட்டு வருகின்றனர்.
ஆதிஜாம்பவர்
கண்ணப்பன் கதை லிங்காயத்துப் பிரிவினரால் கொஞ்சம் மாற்றப்பட்டத்தில் மலை வேடன் லிங்காயத் மாதனாகி விட்டான். இது இன்னொரு வரலாறு.. லிங்காயத்து சைவப் பிரிவில் ஆதி ஜாம்பவர் குடியில் உத்தர ராஜம்மாவுக்கும் சந்திரசேகரமூர்த்திக்கும் பிறந்தவன் பெயர் மாதன்.
இவன் லிங்காயத் பிரிவினரின் சித்தூர் மடத்திலும் குந்தூர் மடத்திலும் சிறுவயதில் இருந்து வளர்ந்தான். பெரியவரானதும் அவர் தென்பகுதிக்கு பயணப்பட்டு மைசூருக்கு வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றேன்
மலை மாதேஸ்வரன் சரிதா
மலை மாதேஸ்வர சரிதா என்ற நாட்டுப்புறக் கதைப்பாடல் மாதன் வரலாற்றை எடுத்து இயம்புகின்றது. இப்பகுதியில் மக்கள் வணங்கி வந்த எல்லா கடவுளர்களையும் ஸ்ராவண என்ற பூதம் பிடித்து ஏழு மலைகளில் தனித்தனியாக கட்டி வைத்தது.
அந்தத் தெய்வங்களை விடுவித்தவர் மலை மாதேஸ்வரர் என்ற தெய்வக் குழந்தை ஆகும். ஏழு தெய்வங்களையும் விடுவித்து அவற்றை வணங்கி வந்த மக்களுக்கே மாதன் திருப்பிக் கொடுத்தார். இக்கதை ஒரு பௌத்த கதையாகும்.
ஏழு பூதங்களை வென்ற கதை
திபெத் நாட்டில் உள்ள பௌத்த சமயத்தின் ரிம்போச்சே எனப்படும் பத்மசம்பவரின் கதையோடு மாதனின் கதை ஒத்துக் காணப்படுகிறது. பத்மஸ் என்பவர் பூட்டான் மாநிலத்தில் வாழ்ந்தவர். . இவர் அங்கு ஏழு மலைகளில் இருந்த ஏழு பூதங்களை புலி மீது ஏறிச்சென்று வென்றார்.
இங்கு பூதங்கள் என்று குறிப்பிடப்படுவன அங்குள்ள மக்கள் வணங்கிய நாட்டுப்புறத் தெய்வங்களாகும். அதாவது அவர்கள் தங்கள் குலத்தில் இறந்து போன முன்னோரைத் தெய்வங்களாக வழிபட்டு வந்தனர். அந்த தெய்வங்களை அடித்து துரத்தி விட்டு பௌத்த சமயத்தை நிறுவியவர் பத்ம சாம்பவர்.
இவர் புலி மீது வந்து இறங்கிய இடம் தான் புலி குகை விகாரை. பூடானில் சொல்லப்படும் இதே கதை தான் இங்குக் கர்நாடகாவிலும் சொல்லப்படுகிறது.
மூன்று மாதன் கோயில்கள்
ஏழு மலைகளில் ஒன்று மேட்டூருக்கு மேலே இருக்கும் மாதேஸ்வரன் மலையாகும். இம்மலைக்குத் தமிழர்கள் ஏராளமாகச் சென்று வணங்குகின்றனர். ஈரட்டி, தாமரைக்கரை, தேவர்மலை என்ற மூன்று பகுதிகளில் மாதேஸ்வரனுக்கு 3 ஆலயங்கள் அங்கே வாழும் மக்களால் தனித்தனியாக கட்டப்பட்டுள்ளன. ஆதியில் சாலூர் மடத்தின் பொறுப்பில் இருந்த இவ்வாலயங்களை இன்று அரசு நிர்வாகம் செய்து வருகின்றது.
புலிக்குகை விகாரை
மாதேஸ்வரன் கோவில் 19ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம். அதற்கு முன்பு இப்பகுதியில் பௌத்த கோயிலான புலிக்குகை விகாரை இருந்துள்ளது. பௌத்த விகாரகளில் தலை முடி காணிக்கை கொடுக்கும் பழக்கமும் உடலை வருத்தி அங்கப்பிரதட்சணம் செய்யும் பழக்கமும் நெருப்பு சார்ந்த வழிபாடுகளும் இருந்தன.
இவ் வழிபாடுகள் மதேஸ்வரன் கோயிலிலும் தொடர்கின்றன. வைதிக மரபு சார்ந்த கோயில்களில் இத்தகைய நேர்ச்சைகள் கிடையாது. இங்கு மக்கள் மொட்டை போடுகின்றனர். அங்க பிரதட்சணம் செய் கின்றனர்.
ஐயப்பனும் மாதனும்
மாதேஸ்வரன் கோவிலுக்கு இன்னொரு கதையும் உண்.டு இக்கதை அருகிலுள்ள வடகேரளத்தைச் சார்ந்த ஐயப்பனின் கதையோடு தொடர்புடையது. ஐயப்பன் காட்டுக்குப் போய் புலிப்பால் எடுத்துக்கொண்டு புலியில் ஏறி வந்த நிகழ்ச்சி மாதன் கதையிலும் உண்டு.
மாதன் என்ற ஒரு தெய்வச் சிறுவன் புலி மீது ஏறி நிறைய விஷப் பூச்சிகளை கூடையில் சுமந்து கொண்டு வருவதாக இங்கு ஒரு கதை வழங்குகிறது. எனவே விஷப் பூச்சி கடிக்கும் இக்கோயில் சிறந்த தீர்வாகிறது.
பூலோகம் வந்த மாதன்
மாதன் என்ற சிறுவன் சிவன் கோயில் கட்டி வழிபட வேண்டும் என்று தேவலோகத்தில் இருந்து பூலோகத்திற்கு வந்தான். . அவனை இங்கிருந்த சித்தாந்த தேசிகர் என்னும் சாது தன்னுடைய சீடனாக ஏற்றுக் கொண்டார். அவனிடம் பல தெய்வீக சக்திகள் இருப்பதை பார்த்த அந்த சாமியாரும் ஊர் மக்களும் அவன் செய்து காட்டும் அதிசயங்களை கண்டு வியந்து மகிழ்ந்து போயினர்.
புலி மீதேறி வந்த மாதன்
ஒரு நாள் சித்தாந்த தேசிகர் இத் தெய்வ சிறுவனையும் இன்னும் சில சீடர்களையும் காட்டுக்குள் போய் பூ பூசைக்கு பூ பறித்துக் கொண்டு வரும்படி கூறினர். சிறிது நேரம் கழித்து சிறுவர்கள் வந்து விட்டனர். ஆனால் மாதன் வரவில்லை.
அவனைக் காட்டு விலங்குகள் ஏதேனும் அடித்துக் கொன்று விட்டதோ என்று பெரியவர்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அவன் புலியின் மீதேறி திரும்பிவந்தான். அவனுடைய கூடையில் பூக்கள் இல்லை மாறாக பல்வகை விஷப் பூச்சிகள் நிறைந்திருந்தன. அவனைக் கண்டு கிராமத்து மக்களும் சித்தாந்த தேசிகரும் அஞ்சி நடுங்கினர்.
விஷப் பூச்சி வசியம்
மாதன் புன்முறுவலுடன் தேள் பாம்பு போன்ற விஷ பூச்சிகள் நிரம்பிய கூடையை எடுத்துக் கொண்டு அங்கிருந்த ஒரு குளத்துக்குள் இறங்கினான். இறங்கியதும் அந்தக் கூடையை நீரில்அமழ்த்தினான் கூடையை அமிழ்த்தினான். கூடையில் இப்போது பூச்சிகளை காணவில்லை.
நிறைய பூக்கள் காணப்பட்டன இந்த அதிசயத்தை கண்டு ஊர் மக்களும் சித்தாந்த தேசிகரும் வியந்து போயினர் இவனுடைய தெய்வ சக்தியை நினைத்து இவனைத் தெய்வமாக வணங்கத் தொடங்கினர்.
சித்து விளையாட்டுகள்
சித்தாந்த தேசிகர் மாதனை கர்நாடகாவின் மற்றொரு பகுதியில் குடகு மலையில் உள்ள பிரபு லிங்க மாலை என்ற ம்லையில் வாழும் ஆதி கணேஷ்வர் என்பவரிடம் கல்வி கற்க அனுப்பி வைத்தார். மாதன் அங்கு சென்றும் சும்மா இருக்கவில்லை விஷப்பூச்சிகளை வைத்து சித்து வேலைகள் செய்தான். திடீரென்று பல்லியைப் பிடித்து பாம்பாக மாற்றுவான் பாம்பை பிடித்து பல்லியாக மாற்றுவான். பிரபலிங்க மலையில் வாழ்ந்த மலைவாழ் மக்கள் இவனைக் கண்டு அஞ்சினர்.
மாதன் கை படடால்
ஒரு நாள் ஒருவர் ஒரு பசு மாட்டை அழைத்துக் கொண்டு வந்து 'மாதா இந்த மாடு பால் கறப்பதே இல்லை மலடாகிவிட்டது இதற்கு பால் வரம் கொடு' என்று கேட்டார்.மாதன் பசு மாட்டைத் தொட்டுத் தடவினான். பசுவின் மடியில் இருந்து பால் சுரக்கத் தொடங்கியது.
இதன்பிறகு மக்கள் அவனைத் தெய்வமாகக் கொண்டாடினர். மற்றொருவர் தனக்குத் தீராத உடல் நோவு இருப்பதாகவும் தன்னை சுகப்படுத்த அங்கிருந்த மருத்துவர்களால் இயலவில்லை என்றான். மாதன் ஒருவன் மட்டுமே தன்னை க் குணப்படுத்த முடியும் என்றும் வேண்டி நின்றான்.
மாதன் தரையில் இருந்த மண்ணை எடுத்து அவன் கையில் விபூதியாக கொடுத்து அந்த விபூதியை அவன் உடல் முழுவதும் பூசவும் அவன் உடல் உபாதைகள் அனைத்தும் நீங்கின.
மாதன் கால் பட்ட இடமெல்லாம்
மாதன் மலைப்பகுதியில் காய்ந்த நிலப்பரப்பில் சென்றால் கூட அங்கு புதிய பசுந்தளிர்கள் தோன்றின. அந்த இடம் பச்சை பசேல் என்று மாறியது. அவன் உடம்பில் தெய்வீக மணம் கமழ்ந்தது. கௌதம புத்தர் மகாவீரர் போன்றோர் செல்லும் பகுதியெல்லாம் செடியில் இருந்தும் மரத்திலிருந்தும் பூக்கள் பூத்து அவர்களின் பாதங்களுக்கு மெத்தையாக விழுந்து கிடக்கும் என்பார்கள். அதுபோல மாதன் சென்ற இடங்களில் அவன் கால் பட்ட இடம் எல்லாம் பசுமையாக மாறிற்று.
கல்லாகிப் போன மாதன்
மாதன் ஒரு நாள் புல் தரையில் அமர்ந்து கண்ணை மூடி தியானம் செய்யத் தொடங்கினான். 12 ஆண்டுகள் ஆயிற்று. அவன் எழுந்திருக்கவே இல்லை. அமர்ந்த இடத்திலேயே தொடர்ந்து தவம் செய்து கொண்டிருந்தான். அதன் பின்பு அவன் அங்கேயே கல்லாக இறுகிப் போனான். அந்த கல்லை மக்கள் லிங்கமாகக் கொண்டு கோயில் கட்டி வழிபட்டனர்.அதுவே மதேஸ்வரன் கோயில் என்று கூறுகின்றனர்
மன்னர் மான்யம்
மக்கள் கோயில்கட்டி மாதன் கல்லை லிங்கமாகப் பிரதிஷ்டை செய்ததும் அந்த லிங்கத்தின் மீது ஐந்து தலை நாகம் ஒன்று படமெடுத்து நின்றது. மாதன் லிங்கத்தின் பெருமை ஊர் உலகம் எல்லாம் பரவியது. மாதேஸ்வரன் கோயிலுக்கு மைசூர் மகாராஜா பக்தர்கள் வந்து தங்கி செல்வதற்கு சகல வசதிகளும் செய்து கொடுத்தார். நிறைய நிவந்தங்கள் வழங்கினார். பொன் ஆபரணங்களையும் நவரத்தினங்களையும் நிலங்களையும் வழங்கினார்.
மலைக்குடிகளின் குலதெய்வம்
ஜிஞ்செ கவுடா என்பவர் இக்கோவிலை மீண்டும் சீரமைத்து இங்கு வரும் பக்தர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்தார். இம்மலையில் வாழும் சோளிகர் ,ஜெனு குருபர், காடு குருபர், குரு பகவுடர் போன்ற மலைவாழ் குடிகளுக்கு மாதேஸ்வரன் குலதெய்வமாக விளங்குகின்றார். மாதேஸ்வரனின் தீவிர பக்தர்களாக இருப்பவர்கள் லிங்கத்தைக் கோர்த்து கழுத்தில் அணிவார்கள். கண்ணப்ப நாயனாரின் வாரிசுகள் இங்கு பூசாரிகளாக இருக்கின்றனர்.
கோயில் மகிமை
விஷக்கடியில் பாதிக்கப்பட்டவர்கள் இக்கோவிலுக்கு வந்து நிவாரணம் பெறுகின்றனர். உற்சவ மூர்த்தியை புலி மீது இருத்தி கோயிலைச் சுற்றி வலம் வருவது ஒரு நேர்த்திக்கடனாக விளங்குகின்றது. அதைப்போல மாதன் ஈஸ்வரன் ஆகிவிட்டபடியால் ஈஸ்வரனுக்கு உரிய ரிஷப வாகனத்தில் உற்சவமூர்த்தியை எழுந்தருளச் செய்து கோயிலை வலம் வருவதும் சிறப்பு நேர்த்திக்கடன் ஆகும். தங்கத் தேர் இழுத்து வருவது சகல நன்மை அளிக்கும் என்று இக்கோவிலிலும் நம்பப்படுகின்றது.
கோயில் அமைப்பும் சிறப்பும்
கோவிலின் தோரண வாயில் அருகே வரசக்தி விநாயகர் கோயில் உள்ளது. அங்கிருந்து மலை மீது ஏறினால் அரச மரத்தடியில் இருக்கும் நாகர் திருமேனிகளை தரிசிக்கலாம். அதன் பிறகு கிழக்கு நோக்கி உள்ள கோவிலுக்குள் சென்றால் முதலில் தீப ஸ்தம்பம் உள்ளது.
அடுத்து மகாமண்டபத்தில் பலிபீடமும் நந்தியும் உள்ளன. இங்குக் கோயில் கொண்டிருக்கும் அம்மனின் பெயர் ராஜராஜேஸ்வரி. இங்குப் பாலமுருகனுக்கு தனி சந்நிதி உண்டு. வெளிப்பிரகாரத்தில் கன்னி மூலையில் கணபதியும் அக்கினி மூலையில் அக்கினி புத்திரன் முருகனும், இடையில் சண்டிகேஸ்வரரரும் ஈசானிய மூலையில் கால பைரவரும் தனி சன்னதிகளில் உள்ளனர்.
நவக்கிரக சந்நிதியும் உள்ளது. கருவறையின் கோஷ்டங்களில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை ஆகியோர் அருள் பாலிக்கின்றனர். இங்குப் பிரதோஷ பூஜை சிறப்பாக நடைபெறுகின்றது.
மாதேஸ்வரன் கோவிலில் தினமும் மூன்று கால பூஜை காலை எட்டு மணி மதியம் 12 மணி மாலை எட்டு மணிக்கு நடைபெறுகின்றன. இங்குப் பக்தர்கள் கிரிவலம் வருவதும் உண்டு. இக்கோவிலில் சஷ்டி, கிருத்திகை ,சதுர்த்தி, தேய்பிறை அஷ்டமி போன்ற நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். மகா சிவராத்திரி என்று மக்கள் ஏராளமாக கூடி இரவு முழுக்க சிவபூஜை செய்கின்றனர்
திருக்கல்யாணம்
மாதேஸ்வரனுக்கு ராஜராஜேஸ்வரிக்கும் ஆனி மாதம் திருக்கல்யாணம் நடைபெறுகின்றது. ஆனித் திருமஞ்சனத்திற்குப் பின்பு உற்சவ மூர்த்திகளான நடராஜரும் சிவகாமியும் திருக்கல்யாணத்தில் பங்கு பெறுகின்றனர்.
திருமணத் தடை உள்ளவர்கள் இத் திருக்கல்யாணத்தைக் காணும் பேறு பெற்றால் உடனே திருமணத் தடை விலகி நல்ல மணமகன் அல்லது மணமகள் அமைவார். இக்கோவில் விஷப்பூச்சிகளால் வைரஸ், நுண்ணுயிரி பாதிப்பால் உடல் நலிவுற்றோர் இக்கோயிலில் வந்து மாதேஸ்வரனை வணங்கி சென்றால் விஷப்பூச்சி தொல்லை அகலும்.
குட்டையூர் மாதேஸ்வரன்
கோயம்புத்தூர் மாவட்டத்தில் திருப்பூர் அருகே குட்டையூரில் ஒரு மாதேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தமிழ்நாட்டில் அதிகப் புழக்கத்தில் உள்ள காராம்பசு கதை வழங்குகிறது. . ஆடு மாடு மேய்க்கச் சென்ற சிறுவர்கள் ஒரு பசு மாடு மட்டும் அடிக்கடி காணாமல் போவதை கவனித்தனர்.
ஒரு நாள் அந்த மாடு எப்படி காணாமல் போகிறது என்று அதை தேடிச் சென்றபோது காராம் பசு ஒரு மரத்தடியில் நின்று பால் சுரந்து கொண்டிருந்தது. பசு அந்த இடத்தை விட்டு வெளியேறியதும் அங்கு ஒரு சுயம்புலிங்கம் இருந்ததைச் சிறுவர்கள் கண்டனர்.
இத்தகவலை ஊருக்குள் வந்து சொல்லவும் ஊர் மக்கள் மரத்தடியில் முளைத்திருந்த சுயம்புலிங்கத்திற்கு கோவில் கட்டி கும்பிடத் தொடங்கினர். இக்கோவில் மாதேஸ்வரன் கோவிலின் செல்வாக்கை உணர்த்துகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |