குழந்தை வரம் அருளும் அமணலிங்கேஸ்வரர்
தமிழ்நாட்டில் சமண பௌத்த மதங்கள் செல்வாக்குடன் இருந்த காலத்தில் அவர்கள் பெரும்பாலும் தங்கள் வழிபாட்டு இடங்களை மக்கள் நடமாட்டம் குறைந்த மலைப்பகுதிகளில் அமைத்தனர். இது தலங்களில் பள்ளிகள் நடத்தினர். மருத்துவ சேவை ஆற்றினர்.
அச்சமயங்கள் இங்கிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு அவ் வழிபாட்டு இடங்கள் புதிய வரவான சைவ வைணவ சமயங்களின் வழிபாட்டுத் தலங்களாக மாறிவிட்டன.
அவற்றில் ஒன்று திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டையில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருமூர்த்தி மலையின் அமணலிங்கேஸ்வரர் கோயில் ஆகும். இம்மலைப் பாறையில் பல சமணத் துறவிகளின் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன.
அமணலிங்கேஸ்வரர்
19 ஆம் நூற்றாண்டில் திருமூர்த்தி மலையில் அமணலிங்கேஸ்வரர் பெயரில் தனிச் சன்னதியும் அருகே விநாயகர் மற்றும் முருகனுக்கு உப சந்நிதிகளும் கட்டப்பட்டன. மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் எழுப்பப்பட்டது. அதன் பின்பு இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இக்கோவில் வந்துவிட்டது. இன்று சிவாகம முறைப்படி மூன்று கால பூஜைகளும் இக்கோவிலில் நடைபெறுகின்றன. இங்கு எல்லா அமாவாசை நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் உண்டு. குறிப்பாக மகா சிவராத்திரிக்கு விடிய விடிய விசேஷ பூஜைகள் நடைபெறும்.
அமாவாசை வழிபாடு
பொதுவாக சைவ சமயத்தில் சிவபெருமான் சுடலையாண்டி என்பதால் அமாவாசை பூஜை அவருக்கு விசேஷம். அம்பாளுக்கு பௌர்ணமி பூஜை பிரசித்தம். சமணர் கோயில்களில் அமாவாசை வழிபாட்டுக்கு சிறப்புக் காரணம் உண்டு. இக்கோயில் சமணர் வழிபாட்டுத் தலமாக இருந்து சிவன் கோவிலாக மாறிய அதனால் இது குறித்த அமாவாசை வழிபாடு குறித்த தேடல் அவசியமாகின்றது.
சமண தீபாவளி
வடநாட்டில் மகாவீரர் ஒரு மன்னனின் அரண்மனையில் மக்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்த வேளையில் அதிகாலை 4 மணி அளவில் உட்கார்ந்து நிலையில் இயற்கை எய்தினார். அவர் இறந்துவிட்டதை உணர்ந்ததும் மன்னன் தன் அரண்மனையின் உப்பரிகையில் விளக்கேற்றினான். அதைப் பார்த்து மற்றவர்களும் அவரவர் வீட்டில் விளக்கேற்றினர். மகாவீரர் நிர்வாண நிலை அடைந்த நாள் அமாவாசை என்பதால் சமணர்கள் அமாவாசை நாளை வழிபாட்டுக்குரிய சிறப்புடைய நாளாகக் கருதுகின்றனர். இதுவே ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையாகும்.
பௌத்த தீபாவளி
பௌத்தர்கள் தீபாவளி பண்டிகையை குபேரனுக்குரிய பூஜை நாளாகக் கொண்டு புது கணக்குத் தொடங்குவார்கள். அவர்கள் மகிழ்ச்சியான நாளாக அதைக் கொண்டாட சமணர்கள் அன்று துக்க நிவாரண நாளாக எண்ணெய் வைத்து குளித்து இறைச்சி எடுத்து சாப்பிட்டு அந்நாளை அனுசரிப்பார்கள் தீபாவளியை அனுசரிப்பார்கள்.
கதை கதையாம் காரணமாம்
சமண பௌத்த சமயங்கள் வெளியேற்றப்பட்ட பிறகு தீபாவளி பண்டிகை தொடர்ந்து கொண்டாடப்பட்டது. ஆனால் அதற்குரிய காரணங்கள் மாற்றிச் சொல்லப்பட்டன. சமணர்கள் கொண்டாடிய பகுதியில் நரகாசுரனின் இறப்புக்காகக் கொண்டாடப்படுவதாக புதிய கதை உருவாக்கப்பட்டது.
பௌத்தர்கள் கொண்டாடிய பகுதியில் ராமன் அயோத்திக்குத் திரும்பிய நாள் என்பதால் விளக்கேற்றி அவனை வரவேற்றனர் என்று காரணம் தெரிவிக்கப்பட்டது. குபேர பூஜை கதை மாற்றப்பட்டு இராமன் கதை புழக்கத்திற்கு வந்தது. இதைத் தான் நம் கிராமங்களில் கதை கதையாம் காரணமாம் என்றனர்.
தமிழகத்தில் இருவகை தீபாவளி
தமிழ்நாடு ஒரே மாநிலமாக இருந்தாலும் பௌத்த சமயம் செல்வாக்கு பெற்ற திருச்சி தஞ்சாவூர் புதுக்கோட்டை நாகப்பட்டினம் பகுதிகளில் தீபாவளி பௌத்த சார்புடன் வீடுகளில் மாவிலை தோரணம் கட்டி லக்ஷ்மி பூஜையாக (குபேர பூஜை) மங்களகரமாகக் கொண்டாடப்படும். மதுரை ராமநாதபுரம் திண்டுக்கல் போன்ற பகுதிகளில் சமண சமயச் சார்புடன் இறந்தவருக்கரிய கடமைகளைச் செய்து கொண்டாடப்படும்.
ஆக சமயங்கள் மறைந்தாலும் அவற்றின் எச்சங்களான கோவில்கள் போன்ற கட்டுமானங்களும் பண்டிகை போன்ற பண்பாட்டு நிகழ்வுகளும் இன்னும் வேறு வேறு பெயரில் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
வழிபாட்டின் பலன்
திருமூர்த்தி மலையில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு வந்து வழிபடுகின்றவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும். திருமணத்தடை நீங்கும். இங்குள்ள விநாயகர் கோவிலின் முன்னே உள்ள வரடி கல் என்ற கல்லின் மீது தேங்காய் பழம் வைத்து வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும். மேலும் இக்கல்லை இரு கைகளாலும் பிடித்து மனம் ஒன்றி தியானம் செய்ய வேண்டும். அப்படிச் செய்யும்போது அந்த கல்லின் மீது வைத்திருக்கும் தேங்காய் பழத்தை தியானம் செய்வோர் அவர் அறியாமல் தொட்டு விட்டால் குழந்தை பேறு உறுதி.
மானஸ்தம்பம்
மானஸ்தம்பம் என்பது ஒரே கல்லில் செய்யப்பட்ட தூணாக தென்னிந்திய சமணர் கோவில்களில் முன்பு நடப்பட்டது. வடநாட்டில் இது பல கற்களின் அடுக்காக மிக உயரமாக இருக்கும். தென்னாட்டில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட தூணாக வைக்கப்படுகின்றது. இத் தூணின் உச்சியில் தீர்த்தங்கரரின் முகங்கள் நான்கு பக்கமும் காணப்படும். அதன் தலைப்பகுதியில் யட்சனின் முகம் இருக்கும். அவன் காவல் பணி செய்வான்.
தலைமைத் தெய்வம் -மும்மூர்த்தி
தென்னிந்தியாவில் மூன்று முகங்களை கொண்ட கற்களையும், தூண்களையும் சைவப் பேரெழுச்சிக்கு பிறகு மும்மூர்த்தி லிங்கம் என்று அழைத்தனர். தமிழகத்தின் வட மாவட்டங்களிலும் மேற்கே அமணலிங்கேஸ்வரர் கோவிலிலும் மும்மூர்த்திகளைக் கொண்ட லிங்கங்கலைக் கருவறையில் காணலாம். இக்குகை கோவிலில் உள்ளே கருவறையில் மும்மூர்த்திகளும் உள்ளனர்.
துணைத் தெய்வங்கள்
அமணலிங்கேஸ்வரர் கோயிலில் சிவபெருமான் தவிர அகோர வீரபத்திரர், வனதுர்க்கை, பத்திரகாளி, ஊத்துவ தாண்டவர், ராமாவதாரம், நரசிம்ம அவதாரம், விசாலாட்சி, காசி விஸ்வநாதர், வேணுகோபாலன், போன்றவர்களும் துணைத் தெய்வங்களாக காட்சி அளிக்கின்றனர்.
சப்த கன்னியர்
மும்மூர்த்திகளும் சிறு குழந்தைகளாக எட்டுக்கால் மண்டபத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது கஞ்ச மலையிலிருந்து ஒரு கல் உருண்டு வந்தது. அப்போது அடிவாரத்தில் இருந்த சப்த கன்னியர் ஏழு விரலி மஞ்சள் வைத்து உருண்டு வந்த கல்லை தடுத்து நிறுத்தினர். இவர்கள் மலைக் காவல் தெய்வங்கள். மலைவாழ் மக்களை இயற்கைப் பேரிடரில் இருந்து காப்பற்றும் சக்தி படைத்தவை. சில கன்னிகள் சமண சமயம் சார்ந்தவை. எல்லாம் ஒன்றுகலந்துவிட்டன.
இங்குள்ள சப்த கன்னியர் சிவன் கோவிலின் திருச்சுற்றில் உள்ள மகேஸ்வரி, கோமாரி, வைஷ்ணவி போன்றோர் கிடையாது. இவர்கள் பட்டாரசி, தேவகன்னி, பத்ம கன்னி சிந்து கன்னி, அகஜா கன்னி, வன கன்னி, சுமதி கன்னி என்பவர் ஆவர். இங்கே சப்த கன்னியருக்கு தனி சன்னதி உள்ளது.
புராணக்கதை -1
பழைய கோவில்கள் புதிய கோவில்களாக மாறும் போது பழைய தெய்வங்கள் சக்தி அற்றன என்பதை உணர்த்தும் வகையில் புதிய கதைகள் (தல புராணங்கள்) எழுத்தப்படுவதுண்டு.. அவ்வாறாக அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கும் ஒரு கதை உருவாக்கப்பட்டது.
சமணர்களில் திகம்பரர் , ஸ்வேதாம்பரர் என்று இரு பிரிவினர் உள்ளனர். அவர்களில் திகம்பரர் என்ற பிரிவினர் திசையை ஆடையாக உடுத்தியவர்கள். அதாவது துணி உடுத்தாதவர்கள். அல்லது எதுவுமே உடுத்தாதவர்கள். அமண கோலத்தில் இருப்பவர்கள்.இவர்கள் தாம் செல்லும் இடங்களுக்கெல்லாம் அம்மணமாகவே சென்றனர். இதனால் இவர்கள் ஊருக்குள் பெரும்பாலும் வருவதில்லை. மலையை குடைந்து படுகைகளை உருவாக்கி அங்கேயே தங்குவர். படுகைகளை உருவாக்கிக் கொடுத்தவர்கள் பெரும்பாலும் அரசர் மற்றும் வணிகர் ஆவர். அந்தந்த சமணப் படுகைக்கு மேல் இன்னார் கொடுப்பித்தோர் என்று என்ற கல்வெட்டும் காணப்படும்
அமண கோலத்தில் இறைவன் இருக்கின்றான் என்பதற்கு நியாயம் கற்பிக்கும் வகையில் ஓர் அழகான புராணக்கதை உண்டு. அத்திரி முனிவர் மனைவி சதி அனுசுயா மாபெரும் பத்தினி ஆவாள். இவளது கற்பின் திறத்தைச் சோதிக்க வேண்டி மும்மூர்த்திகள் மூவரும் யாசகர் போல அத்திரி ரிஷியின் குடிலுக்கு வந்தனர். அவர்களுக்கு உணவிடுவதற்காக அனுசுயா வெளியே வந்தாள். ஆனால் அந்த யாசகர் மூவரும் அனுசுயா தங்களுக்கு ஆடை இல்லாமல் வந்து உணவு வழங்கினால் மட்டுமே உணவு உண்போம் என்று சொல்லிவிட்டனர்.
அதிதி மகாதேவோ (விருந்தினர் இறைவனுக்குச் சமம் ) என்ற நம்பிக்கை இருந்த காரணத்தினால் இவர்களைப் பட்டினியாகத் திருப்பி அனுப்ப இயலாது. எனவே சதி அனுசுயா இம்மூவரையும் குழந்தைகளாக மாற்றினாள். தானும் தன் உடைகளை நீக்கிவிட்டு குழந்தைகளுக்கு அமிர்தப் பால் கொடுத்தாள். அவை பசியாறியதும் குழந்தைகளைக் கீழே கிடத்திவிட்டு இவள் போய் உடை மாற்றிக் கொண்டு வந்தாள். பின்பு அக்கு குழந்தைகளை மீண்டும் மனிதர்கள் ஆக்கினாள்.
யாசகர்களாக வந்த மும்மூர்த்திகளுக்கும் அவளது கற்பின் திறம் வெளிப்பட்டதால் அதனை மெச்சி அவர்கள் தங்களின் சுய உருவத்தை அனுசுயாவுக்குக் காட்டினர். அதிதி முனிவரையும் அவரது பத்தினி அனுசுயாவையும் வாழ்த்தி மறைந்தனர். ஆக மும்மூர்த்திகளும் குழந்தை வடிவில் அம்மணமாக வந்த தலம் இது என்பதால் இறைவன் அமணலிங்கேஸ்வரர் அழைக்கப்படுகின்றார்.
மானஸ்தம்பம் அமணலிங்கேஸ்வரர் கோயில் ஆரம்பத்தில் சமணர் கோவிலாக இருந்தது என்பதற்கான ஓர் உறுதியான அடையாளம், ஆதாரம் இக்கோவிலின் வாயிலில் இருக்கும் காணப்படும் மானஸ்தம்பம் என்ற தூண் ஆகும். இப்போது இதனை தீபஸ்தம்பம் என்கின்றனர். மானஸ்தம்பம் என்பது ஜைனர் கோவிலின் முன்பு நிறுத்தி வைக்கப்படும் தூணாகும். இந்தியாவில் உள்ள சரவணபெலகோலா உட்பட பல்வேறு சமண கோயில்களின் முன்பு மானஸ்தம்பம் உண்டு. 30 அடி உயரமுள்ள
புராணக் கதை 2
பொதுவாக சமண பௌத்தர்கள் வழிபாட்டு இடங்களில் சைவர்கள் சார்பாக அகத்தியர் கதை நிலவுவது உண்டு. காரணம், சமண பௌத்த முனிவர்களைப் பழைய பெயர்களில் அழைக்காமல் அகத்தியர் என்ற புதுப் பெயரில் வைதீக சமயத்தினர் அழைத்தனர். இங்கும் அது போல ஒரு கதை நிலவுகின்றது.
அகத்திய முனிவர் வடக்கே கைலாயத்தில் சிவன் பார்வதிக்கு நடந்த திருமணத்தை காணச் சென்றபோது அங்கு கூடிய கூட்டத்தினால் வடக்கே உயர்ந்து தெற்கே தாழ்ந்து விட்டது. சிவபெருமான் அகத்தியரிடம் நீ உடனே தெற்கே சென்றால் பூமி சமன்பட்டு விடும் என்றார். அகத்தியரும் சிவபெருமானின் கட்டளைக்கிணங்கி தென்பகுதிக்கு வந்தார். அவர் தென்பகுதிக்கு வந்ததும் தென்பகுதி வட பகுதியோடு சமமாக மாறிவிட்டது. அவர் கிளம்பும்போது 'நான் எப்படி இறைவா உன்னுடைய திருமணக் காட்சிகளை காண்பது?' என்று கேட்டார். 'நீ அங்கிருந்தே என்னுடைய திருமணத்தைப் பார்க்கலாம் 'என்று சிவபெருமான் தெரிவித்ததார். மகிழ்ச்சியோடு
சிவபெருமானின் கட்டளைக்கிணங்கி அகத்தியர் தென்பகுதிக்கு வந்து இங்கிருந்து சிவன் பார்வதி திருமணத்தை கண்ணாரக் கண்டு களித்தார். அகத்தியர் வந்து திருமணத்தை கண்டு களித்த தலம் அமணலிங்கேஸ்வரர் எழுந்தருளி இருக்கும் திருமூர்த்தி மலை ஆகும். இக்கதை இன்னும் சில கோயில்களுக்கும் தல புராண கதையாக விளங்குகின்றது.
சந்தனம் எறிதல் அமணலிங்கேஸ்வரர் கோவிலின் உள்ளே இருக்கும் மும்மூர்த்திகளின் எதிரே நின்று சந்தனத் உருண்டைகளை அவர்கள் மீது எறிய வேண்டும். சரியாக அவர்களின் நெற்றியில் சந்தன உருண்டை போய் அப்பிக்கொண்டால் அந்த உருண்டையை எறிந்தவரின் வேண்டுதல் உடனே நிறைவேறும். இந்நடைமுறை இக்கோவிலுக்கு உரிய தனிச் சிறப்பாகும்.
இதே பழக்கம் சமண சமயம் சிறப்புற்று இருந்த மதுரையில் மீனாட்சியம்மன் கோவிலில் உண்டு. அங்கு சந்தனம் எறிவதற்குப் பதிலாக கம்பத்தடி மண்டபம் முன்பு ஒன்பதடி உயர பத்திரகாளியின் மீது பசு வெண்ணெய் உருண்டைகளை பக்தர்கள் எறிந்தனர். பல நூறு ஆண்டுகள் பழக்கத்தில் இருந்த இம்முறை தற்போது சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு விட்டது.
அறிவுக்கடவுள் தட்சிணாமூர்த்தி
சமணர்கள் அறிவு ஆராய்ச்சிக் கொள்கையை தம்முடைய சமயக் கொள்கையாகக் கொண்டனர். எனவே அவர்கள் இறைவனை அறிவன் என்றும் அருகன் என்றும் அழைத்தனர். பல நூல்களை வடமொழியிலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்தனர். இவர்கள் மொழி பெயர்த்த காப்பியங்களும் உருவாக்கிய நிகண்டுகளும் பல பல. நிகண்டு என்பது செய்யுள் வடிவில் இயற்றப்பட்ட அகராதி ஆகும். ஒரு சொல்லுக்கு வழங்கும் பல பொருளை (அர்த்தத்தை) ஒரே செய்யுளாக இயற்றி வைத்தனர். ஒரு செய்யுளை படிப்பது ஒரு சொல்லின் பல பொருளை அறிய மாணவருக்கு எளிதாக உதவும். இவர்கள் இருக்கும் இடங்களில் பள்ளிகளை ஏற்படுத்தினர். ஆசிரியரும் மாணவருமாக இருந்த பள்ளிகள் சமணப் பள்ளிகள் எனப்பட்டன. இதன் காரணமாக கல் ஆலமரத்தின் கீழ் தட்சிணாமூர்த்தியும் அவரது பாதத்தில் சனக முனிவர்களும் அமர்ந்திருக்கும் கோலம் சிவன் கோயிலின் சிவன் கருவறையின் கோஷ்டத்தில் இடம் பெறும். பௌத்தர்களும் ஆலமரத்தின் கீழ் கவுதம் புத்தர் அமர்ந்து சீடர்களுக்கு போதிக்கும் சிலைகளைத் தமது வழிபாட்டுத் தலங்களில் வைத்திருந்தனர்.இதுவும் பின்னர் த்டசினா மூர்த்தி ஆயிற்று.
போக பாக்கியம், புத்ர பாக்கியம்
அமணலிங்கேஸ்வரர் கோயிலில் தட்சிணாமூர்த்திக்கு என்று தனிச் சிறப்பு உள்ளது. மாணவர்களின் கல்வி மேம்பாடு அடையவும் ஆடவர் மற்றும் பெண்களுக்கு போக பாக்கியம், புத்திர பாக்கியம் கிடைக்கவும் தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது சிறப்பு. கிரகங்களில் சுக்கிரன் ஆண் பெண் ஈர்ப்புக்கு (காதலுக்கு) உரியவன் என்றாலும் குரு பகவான் மட்டுமே அவர்களின் போகத்திற்கு உரியவன். பிறக்கும் புத்திரர்களுக்கு ம் குரு பகவானே புத்ரகாரகனாகவும் அதிகாரம் பெற்றவன் ஆகிறான். எனவே தட்சிணாமூர்த்தியை தொடர்ந்து வழிபட்டு வரும் போது மனிதர்களுக்கு நல்ல போக பாக்கியமும் புத்திர பாக்கியமும் கிடைக்கும். அறிவும் கல்வியும் வளரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |