வெற்றி நாயகர் வீர ஆஞ்சநேயர், அணைப்பட்டி
மதுரைக்கு அருகில் நிலக்கோட்டையில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அணைப்பட்டி என்ற இடத்தில் பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆறரை உயரத்தில் மிகப்பெரிய வடிவில் ஆஞ்சநேயர் காட்சி தருகின்றார்.
இவர் இடது கையைத் தொடையின் மீது வைத்து வலது கையில் சஞ்சீவி மலையை ஏந்திய ரூபத்தில் காட்சி அளிக்கின்றார். அவரது வாலில் நவக்கிரகங்கள் இருப்பதால் இக்கோவிலில் நவக்கிரக சன்னதி என்று தனியாக எதுவும் இல்லை. நவக்கிரக பீடம் மட்டுமே உள்ளது. இதற்கு அருகில் ஊர்த் தெய்வங்களான சப்த கன்னி, நாகர், விநாயகர் போன்றவை உள்ளன.
கதை 1
வைகை ஆற்றங்கரையில் எழுந்தருளியிருக்கும் அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர் சுயம்புவாகத் தோன்றியவர் என்று ஒரு கதை உலவுகின்றது. பதினாறாம் நூற்றாண்டில் மதுரையை ராணி மங்கம்மா ஆட்சி செய்தார். அக்காலகட்டத்தில் இப்பகுதியில் ஜமீன்தாரராக இருந்தவர் காமிய நாயக்கர் ஆவார். அவரே வரி வசூலிப்பவராக இருந்தார்.
ஒரு நாள் அவரது கனவில் ஆஞ்சநேயர் தோன்றி 'நான் தாழம்புதரில் புதைந்திருக்கின்றேன். என்னை எடுத்து வைத்து வணங்குங்கள்' என்று கூறினார். விழித்தெழுந்த காமநாயக்கர் ஜமீன்தார் தன் ஜமீன் ஆட்களை அழைத்துக் கொண்டு வந்து கனவில் கண்ட தாழம்புதரை அகற்றும் படி கூறினார்.
அங்கு ஒரு பெரிய பாறை புதைந்திருந்தது. அந்தப் பாறையில் ஆஞ்சநேயர் உருவம் காணப்பட்டது. அந்த பாறையை அவர்களால் நகர்த்த இயலவில்லை. எனவே அங்கேயே கோவில் கட்டினார்.
கதை 2
அணைப்பட்டி ஆஞ்சநேயருக்கு இன்னொரு கதையும் வழங்குகின்றது. பாண்டவர் வனவாசம் சென்ற காலத்தில் திரௌபதி தேவிக்கு தண்ணீர் தாகம் எடுத்தது. தர்மர் தன் தம்பி பீமனை அழைத்து 'அருகில் ஏதேனும் ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வா' என்றார்.
பீமன் அங்கே ஓடிக்கொண்டிருந்த வேகவதி (வைகை) ஆற்றங்கரைக்கு வந்தார். அப்படி வரும் வேளையில் அங்கு ஒரு வானரம் (குரங்கு) தன் வாலை நீட்டிப் படுத்துக் கிடந்தது. "ஏ வானரமே உன் வாலை எடு. நான் போக வேண்டும்' என்று பீமன் கூறினான். அந்த வானரம் பீமனைப் பார்த்து 'நீ தான் பெரிய பலசாலி ஆயிற்றே. என் வாலை சற்றுத் தள்ளி வைத்துவிட்டு தான் போயேன்' என்றது.
உடனே பீமன் அலட்சியமாகப் புன்னகைத்த படி குனிந்து குரங்கின் வாலை ஒரு கையால் எடுக்கப் பார்த்தான். அவனால் முடியவில்லை. இரண்டு கையாலும் தூக்கிப் பார்த்தான். தூக்க முடியவில்லை. அவனுக்குள் ஓர் அச்சம் பரவியது.
இது உண்மையிலேயே வானரம் தானா? அல்லது ஏதாவது அசுரனா? வானர ரூபத்தில் இங்கு வந்து படுத்து இருக்கின்றானா? என்ற அச்சம் நிலவவும் திரும்பித் தன் அண்ணனிடம் போய் 'அண்ணா, வழியில் ஒரு வானரம் வாலை நீட்டிப் படுத்திருக்கின்றது. அதன் வாலை என்னால் நகர்த்த இயலவில்லை. நான் எப்படி ஆற்றுக்கு போய் தண்ணீர் எடுத்து வருவது?' என்று கேட்டான்.
தர்மர் பீமனை நோக்கி, 'அது வேறு யாருமல்ல. உன்னுடைய தமையன் ஆஞ்சநேயர் தான். அவன் அஞ்சனையின் புத்திரன். நீ போய் அண்ணா சற்று வாலை நகர்த்திக் கொள்ளுங்கள், என்று மரியாதையாகச் சொல். அவர் உனக்கு வழி விடுவார்' என்றார். பீமன் ஆஞ்சநேயர் இருக்கும் இடத்திற்கு வந்து ''அண்ணா என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.
உங்கள் வாலை சற்று நகர்த்திக் கொள்ளுங்கள். நான் போய்த் தண்ணீர் எடுக்க வேண்டும்' என்று கூறவும் ஆஞ்சநேயர் தன் வாலை நகர்த்திக் வழி விட்டார். பீமன் தன் அண்ணன் ஆஞ்சநேயரைக் கண்டு வியந்து அவருக்கு அங்கு ஒரு கோயில் கட்டினான்.
காலப்போக்கில் பீமன் கட்டிய கோயில் மண்ணுக்குள் புதைந்து போனது. அந்த மூலவரை காமய நாயக்கர் கண்டெடுத்து மீண்டும் பிரதிஷ்டை செய்தார். அவர் தான் அணைப்பட்டியில் தாழம்புதருக்கு அடியில் புதைந்திருந்த வீர ஆஞ்சநேயர் ஆவார்.
கோயில் வழிபாடுகள்
அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி, ராமநவமி போன்ற பண்டிகைகள் சிறப்பாகக் கொண்டாடப்படும். இப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இங்கு சனிக்கிழமைகளில் வந்து வணங்கிச் செல்கின்றனர்.
நாயக்க மன்னர்களும் வைணவமும்
நாயக்க மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் வைணவம் செழிததது. சிவன் கோயில்களில் கூட பெருமாள் பிரதிஷ்டை செய்யப்பட்டு புதிய சந்நிதிகள் தோன்றின. நாயக்க மன்னர்கள் 14ஆம் நூற்றாண்டு முதல் 17ஆம் நூற்றாண்டு வரை இராமசாமி கோயில் , கோபால் சாமி கோயில் என்ற பெயர்களில் புதிய கோயில்களைப் பல ஊர்களில் கட்டினர்.
சில ஊர்களில் மன்னர்களின் வெற்றியைக் குறிக்கும் வகையில் வீரஆஞ்சநேயருக்குக் கோயில் கட்டப்பட்டது. சோழர் காலம் வரை அனுமன் என்று தமிழால் அழைக்கப்பட்டவர் நாயக்கர் காலத்தில் வடமொழியில் ஆஞ்சநேயர் எனப்பட்டார்.
அதுவரை சாந்த சொரூபியாக இராம பக்தனாக அறியப்பட்ட அனுமன் பின்னர் வீரத்தை அருளும் வீர ஆஞ்சநேயர் ஆனார். பெருமாள் கோயில்களிலும் அஞ்சேநேயருக்குத் தனிச் சந்நிதி இருந்தது. ஆயினும் பேச்சு வழக்கில் அனுமார் கோயில் என்றே மக்கள் அழைத்தனர்.
ஜெய வீர ஆஞ்சநேயர்
மதுரையில் மைசூர் மகாராஜாவை சேதுபதி மன்னர் மூக்கு அறுப்புப் போர் செய்து வெற்றி பெற்றார். இதனால் மதுரை தல்லாகுளம் பகுதியில் கள்ளழகரின் திருக்கண்ணாக விளங்கிய மைசூர் ராஜா மண்டபம் இராமநாதபுரம் சேதுபதிக்குகை மாறியது. தனது வெற்றியைக் குறிக்கும் வகையில் அம்மண்டபத்தை ஒட்டி சேதுபதி மன்னர் ஜெய வீர ஆஞ்சநேயர் கோயிலைக் கட்டினார்.
இக்கோயிலில் இடது கையைத் தொடையிலும் வலது கையை உயர்த்தி வெற்றியைப் பறை சாற்றும் வகையிலும் ஆஞ்சநேயர் காட்சி தருவார். அவரது வால் தலைக்கு மேலே போயிருக்கும் அதில் மணி தொங்கும். இந்த வெற்றிக் கோலம் அவரை ஜெய வீர ஆஞ்சநேயர் என்று போற்ற வைத்தது. இக்கோயில் மன்னரின் வெற்றியை நினைவூட்டும் தனிக் கோயில் ஆகும்.
வெற்றி நாயகர்
கல்வி, தொழில், திருமணம் ஆலியவற்றில் வெற்றி வேண்டுவோர் வீர ஆஞ்சநேயரை வாரத்தில் சனிக்கிழமைகளிலும் , மாதத்தில் மூல நட்சத்திரத்தன்றும் வழிபட்டு வரலாம்.
ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை, வடை மாலை, ராமஜெய சீட்டு மாலை அணிவித்துத் தொடர்ந்து தம் வேண்டுதல் நிறைவேறும் வரை அவரை வழிபட்டு வரலாம். ஆஞ்சநேயருக்கு வெண்ணெய்க் காப்பு சார்த்துவதும் வேண்டிய பலனை அளிக்கும். எடுத்த காரியம் எதுவாயினும் வெற்றி பெறும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |