துன்பப்படும் வேளையில் இவர்களை நினைத்து கொள்ளுங்கள்
கடவுளால் படைக்கப்பட்ட உலகம்.ஆனால்,யாரும் ஒரே போல் இருப்பதில்லை.ஒவ்வொரு மனிதர்களும் வெவ்வேறு விதமாக இருக்கிறார்கள்.அது தான் இறைவனின் அரசியல்.ஆக பிறப்பின் ரகசியம் புரியாமல் பூமியில் பிறந்த மனிதர்கள் எதை நோக்கி தான் ஓடுகிறார்கள் என்று புரியவில்லை.
எல்லாம் தனக்கு என்றும் காலம் முடியும் முன் எல்லாம் விழுங்கிடவேண்டும் என்று அவசரமாக செயல்படுகிறார்கள்.இதனால் பிறரை காயப்படுத்துதல்,எதற்கும் அஞ்சாமல் தவறு செய்தல் போன்ற செயல்கள் சர்வ சாதாரணமாக நடக்கிறது.இதில் பாதிக்கப்படுபவர்களுக்கு தான் எத்தனை துன்பம்.
மனிதன் அவனுக்கு நடக்கும் ஒரு சிறு விஷயத்திற்கும் மனம் பொறுத்துக்கொள்ள முடியாமல் மிகவும் மனம் வருந்தி வாடுகிறான்.ஏன் இன்னும் சிலர் விபரீத முடிவகளையும் எடுத்து விடுகிறார்கள்.நாம் ஒன்றை மட்டும் நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.
காலம் ஓடிக்கொண்டு இருக்கிறது.அதில் நாம் வெறும் வழிப்போக்கர்கள்.நம்மை போல் துன்பம்,அவமானம் தோல்வி சந்தித்தவர்களுக்கும் இயற்கை கொடுத்த பரிசு மரணம்,மீண்டும் ஒரு ஜனனம் அவ்வளவே.ஆக நாம் வருந்தும் காலங்களில் புராணங்களையும்,காவியங்களையும் புரட்டி பார்க்க வேண்டும்.
எப்படி அவர்கள் துன்பத்திலும் கைவிடாத நம்பிகையையும்,மனதில் இறைவனையும் நிறுத்தி கடந்தார்கள் என்று.அப்படியாக நீங்கள் துன்பத்தில் வாடும் பொழுது இதை நினைத்து பாருங்கள்.
1.தகப்பனே கொலை செய்ய முயற்சித்த போதும் ப்ரஹ்லாதன் மனம் கலங்கவில்லை.
2.சுடுகாட்டு வெட்டியானுக்கு அடிமையாக்கிய போதும் ராஜா அரிச்சந்திரன் மனம் கலங்கவில்லை
3.பெற்ற பிள்ளையே கேவலப்படுத்திய போதிலும் கைகேயி மனம் கலங்கவில்லை
4.உறவினர்களே சபை நடுவே அசிங்கப்படுத்திய போதும் விதுரர் மனம் கலங்கவில்லை
5.அம்புப்படுக்கையில் வீழ்ந்த போதிலும் பீஷ்மர் மனம் கலங்கவில்லை
6.இளம் விதவையான சமயத்திலும் குந்திதேவி மனம் கலங்கவில்லை.
7.தரித்ரனாக வாழ்ந்த சமயத்திலும் குசேலர் மனம் கலங்கவில்லை.
8.ஊனமாகப் பிறந்து ஊர்ந்த போதிலும் கூர்மதாஸர் மனம் கலங்கவில்லை
9.பிறவிக் குருடனாக இருந்தபோதிலும் சூர்தாஸர் மனம் கலங்கவில்லை
10.மனைவி அவமானப்படுத்திய போதிலும் சந்த் துகாராம் மனம் கலங்கவில்லை
11.கணவன் கஷ்டப்படுத்திய போதும் குணவதிபாய் மனம் கலங்கவில்லை
12.இருகைகளையும் வெட்டிய நிலையிலும் சாருகாதாஸர் மனம் கலங்கவில்லை
13.கைகால்களை வெட்டிப் பாழுங்கிணற்றில் தள்ளியபோதும் ஜயதேவர் மனம் கலங்கவில்லை.
14,மஹா பாபியினிடத்தில் வேலை செய்த போதும் சஞ்சயன் மனம் கலங்கவில்லை.
15.பெற்ற பிள்ளையை பறிகொடுத்த போதும் பூந்தானம் மனம் கலங்கவில்லை.
16.கூடப்பிறந்த சகோதரனே படாதபாடு படுத்தியபோதும் தியாகராஜர் மனம் கலங்கவில்லை.
17.நரசிம்மர் சன்னிதியில் விஷ தீர்த்தம் தந்த போதும் மஹாராஜா ஸ்வாதித் திருநாள் மனம் கலங்கவில்லை.
18.சோழ ராஜனின் சபையில் கண்ணை இழந்த பின்பும் கூரத்தாழ்வான் மனம் கலங்கவில்லை.
இவர்களுக்கு இவ்வளவு துன்பம் ஏற்பட்ட நிலையிலும் அவர்கள் கலங்கவில்லை.காரணம் மனதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார்கள்.இதுவும் கடந்து போகும் என்று தீர்க்கமாக நம்பினார்கள்.பொறுமையே கடவுளை நெருங்கும் முதல் யுக்தி என்று அறிந்திருந்தார்கள்.
காலம் எதையும் மாற்றி அமைக்க வல்லமை பெற்றது என்று உணர்ந்திருந்தார்கள்.இறைவன் கொடுப்பதை ஏற்று கொள்ளும் மனப்பக்குவம் வைத்திருந்தார்கள்.அதுவே அவர்களை எந்த துன்பமும் அசைக்கமுடியாத ஆயுதம் ஆனது.
ஆக,தவறு செய்யாத மனம் பயம் கொள்வதில்லை.வஞ்சகம் இல்லாத நெஞ்சம் உண்மை பேச தயங்குவதில்லை.அதே போல் இறை நம்பிக்கை கொண்டவன் எதை கண்டும் கலங்குவதில்லை.இவ்வளவு தான் வாழ்க்கை.யார் வேண்டுமானலும் உங்களை நோக்கி எத்தனை பெரிய அம்புகள் எரியட்டும் காத்திருங்கள்.இறுதி நொடியில் காற்றும் இறைவனாக மாறி காப்பாற்றலாம.அது தான் இறைநம்பிக்கை நடத்தும் அதிசயம்.நம்பிக்கையே இறைவன்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |