திண்டுக்கல் ஊரில் நாம் பார்க்க தவறிய முக்கியமான ஆலயங்கள்
தமிழ் நாட்டில் அதிகம் மலை சுழுந்த பகுதிகளில் திண்டுக்கல் மாவட்டம் ஒன்று.ரோடுகளில் செல்லும் பொழுது எந்த திசையில் இருந்து பார்த்தாலும் அழகிய மலை தான் தென்படும்.அதையும் தாண்டி திண்டுக்கல் என்றாலே அப்பன் பழனி முருகன் தான் விஷேசம்.
பழனி ஆண்டவரை தரிசிக்க வெளி மாநிலம்,வெளி மாவட்டம் வெளி நாடுகளில் இருந்து வருவார்கள்.அது மட்டும் அல்லாமல் பழனி முருகனை அடுத்து பல விஷேச கோயில்கள் திண்டுக்கல் ஊரில் அமைய பெற்று இருக்கிறது.
ஆனால் பலருக்கும் அந்த கோயிலை தரிசிக்க சரியான வழிகாட்டுதல் இல்லை.அப்படியாக திண்டுக்கல் சென்றால் நாம் கட்டாயம் தரிசித்து வர வேண்டிய கோயில்களும் அதனுடைய வரலாறுகளையும் பற்றி பார்ப்போம்.
1.ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோவில்
திண்டுக்கல் ஊருக்கே பெருமை என்றால் அது முதலில் பழனி பால தண்டாயுதபாணி சுவாமி தான்.பழனி மலை உச்சியில் அமைந்து இருக்கும் முருகனை காண தினமும் பல்லாயிரம் மக்கள் வருகை புரிகின்றனர்.முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாவது வீடாக அமைய பெற்று இருப்பது இந்த பழனி மலை முருகன்.
இயறக்கை சூழலோடு அழகாக வீற்றி இருக்கும் முருக பெருமானின் சிலை நவபாஷாணத்தால், சித்தர்களில் ஒருவரான போகரால் வடிவமைக்கப்பட்டது. நவபாஷாணம் எனப்படுவது ஒன்பது வகையான நச்சுப்பொருட்கள் சேர்ந்தது. இந்த நவபாஷாண சிலை மீன்களை போன்று செதில்களை கொண்டதாக கூறப்படுகிறது.
தற்பொழுது இந்த சிலை சிறிது பழுதுபட்டுள்ளது. இரவில் இந்த சிலையின் மீது முழுவதுமாக சந்தனம் பூசப்பட்டு (சந்தனக்காப்பு) காலையில் விசுவரூப தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் சிறு வில்லை பிரசாதமாக வழங்கப்படுகிறது இது மிகச்சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.
மேலும் முருக பெருமான் கீழ் கண்ட அலங்காரத்தில் தினமும் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
சன்னியாசி அலங்காரம் காலை 6:40 மணி
வேடன்(பூசாரி) அலங்காரம் காலை 8:00 மணி
பாலசுப்ரமணியர் அலங்காரம் காலை 9:00 மணி
வைத்தீகல் (வைதீகன்-வேட்டைக்காரன்) அலங்காரம் மதியம் 12:00
ராஜா (ராஜா) அலங்காரம் மாலை 5:30 மணி
புஷ்பா அலங்காரம் இரவு 8:00 மணி
மலை உச்சியில் பழனி முருகன் வீற்றி இருப்பதால் பக்தர்களின் வசதிகளுக்கு ஏற்ப சில ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது.
1.படிப்பாதை
பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் மலைக்கோயிலுக்குப் படிப்பாதை வழியாகச் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம். படிப்பாதையில் மொத்தம் 693 படிகள் உள்ளன. பக்தர்கள் வசதிக்காகப் போதுமான இடைவெளியில் நிழல்மண்டபங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் உள்ளன.
2.யானைப்பாதை
பக்தர்கள் மலைக்கோயிலுக்கு யானைப்பாதை வழியாகவும் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம். இப்பாதை சாய்தளமாகவும், குறைவானப்படிகள் உள்ளதாகவும் அமைந்துள்ளதால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. பக்தர்கள் வசதிக்காக நிழல்மண்டபங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் உள்ளன.
3.மின்இழுவை இரயில்
பக்தர்கள் மலைக்கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக 3 மின் இழுவை இரயில்கள் முறையே 1965, 1982, 1988 ஆகிய ஆண்டுகளில் துவங்கப்பட்டு 8 நிமிடங்களில் மணிக்கு 200 நபர்கள் வீதம் மலைக்கோயிலைச் சென்றடையலாம்.
4.கம்பிவடஊர்தி
பக்தர்கள் மலைக்கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக கம்பிவட ஊர்திசேவை 03.11.2004ஆம் தேதியன்று துவங்கப்பட்டுள்ளது. இதன் வழியாக 1 மணி நேரத்திற்கு 150 நபர்கள் வீதம் 3 நிமிடங்களில் மலைக்கோயிலைச் சென்றடையலாம்.
வழிபாட்டு நேரம்
காலை காலை 5:30 முதல் மதியம் 1:00 மணி வரை மாலை மதியம் 1:00 முதல் இரவு 9:30 வரை
இடம்
315 தலைமை அலுவலகம், வடக்கு கிரி தெரு, பழனி, திண்டுக்கல் 624601
2.சௌந்தரராஜா பெருமாள் கோயில்,தாடிக்கொம்பு
திண்டுக்கல் சேலம் நெடுஞ்சாலையில், திண்டுக்கல் கரூர் வழித்தடத்தில் அமைந்துள்ள பல நூற்றாண்டுகள் பழமையான சௌந்தரராஜப் பெருமாள்.இது கி.பி 16 ஆம் நூற்றாண்டில், அச்யுத தேவ ராயரின் ஆட்சியின் போது கட்டப்பட்டது.
விஷ்ணு பகவான் சௌந்தரராஜப் பெருமாளாகவும், தூங்கும் நிலையில் லட்சுமி தேவியை கல்யாணி சௌந்தரவல்லி தாயாராகவும் வழிபடுகிறார்கள்.இங்கு விஷேசம் என்னவென்றால் பெருமாள் கோயிலாக இருந்தாலும், கோயில் வளாகத்தில் சிவபெருமானுக்குப் புனிதமாகக் கருதப்படும் வில்வ மரம் உள்ளது.
தன்வந்திரி, ஹயக்ரீவர் மற்றும் அன்னை சரஸ்வதி சன்னதிகளும் உள்ளன. கல்வியில் சிறந்து விளங்கவும், நினைவாற்றலை அதிகரிக்கவும் மக்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்கின்றனர்.
அழகர் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் சௌந்தரராஜப் பெருமாள் கோவிலிலும் அதையே செய்கின்றனர்.
மேலும் இக்கோயிலில் உள்ள பைரவர் மிகவும் விஷேசம்.பலரும் இங்குள்ள பைரவருக்கு பல வேண்டுதல்களை வைத்து பால் அபிஷேகம் செய்கின்றனர்.மேலும் திருமண தடை குழந்தை பாக்கியம் உள்ளவர்கள் யோயிலுக்கு சென்று சௌந்தரவல்லி தாயாரை வழிபட விரைவில் திருமணம் நடக்கும்.
வழிபாட்டு நேரம்
காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும்.
இடம்
CXQ4+V2V, தாடிக்கொம்பு,திண்டுக்கல் -624709
3.அருள்மிகு நரசிம்ம பெருமாள் கோயில்,வேடசந்துர்
திண்டுக்கல் மாவட்டத்தில் அடுத்து விஷேசமான கோயில் இந்த நரசிம்ம பெருமாள் கோயில்.இத்தலத்தில் சுவாமி நரசிம்ம பெருமாள் என்ற பெயரில் அழைக்கப்பட்டாலும், இங்கு பெருமாளுக்கு நரசிம்ம வடிவம் கிடையாது.
மூலஸ்தானத்தில் சங்கு, சக்கரத்துடன், அபய, வரத முத்திரைகள் காட்டியபடி சுவாமி காட்சி தருகிறார்.பெருமாளின் நரசிம்ம அவதாரம் மட்டும் தான் ஆண்ட்ரே தோன்றி அன்றே மறைந்த அவதாரம்.
தன்னுடைய பக்தன் பிரகலாதனைக் காப்பற்ற எடுத்த அவதாரம்.அவர் சிங்கம் முகத்துடன் மிகவும் உக்கிரமாக கோபமாக இருந்தார்.அவரை சாந்த படுத்துவது என்பது மிகவும் கடினமாக இருந்தது.அவரை சாந்தப்படுத்தும்படி தேவர்கள் சிவனை வேண்டினர்.
எனவே, அவர் சரபேஸ்வரர் வடிவம் எடுத்து, உக்கிரத்தைக் குறைத்தார். இந்நிகழ்வின் அடிப்படையில் இங்கு இவர், சாந்தமாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.
மேலும் சன்னதி முன்புள்ள மண்டபத்தில், சிவனின் லிங்க வடிவம் பொறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இங்கு ஒரே சமயத்தில் சிவன், பெருமாள் இருவரின் தரிசனம் பெறலாம்.
மேலும் இக்கோயில்,சுவாமிக்கு திருமஞ்சனம் செய்வித்து, புளியோதரை, சர்க்கரைப்பொங்கல் படைத்து, விசேஷ பூஜை செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.
வழிபாட்டு நேரம்
காலை 7.30 மணி முதல் 12மணி வரை, மாலை 4 மணி முதல் 7.30மணி வரையில் நடை திறந்திருக்கும்.
இடம்
அருள்மிகு நரசிம்ம பெருமாள் திருக்கோயில், வேடசந்தூர், திண்டுக்கல் மாவட்டம்
4.அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில், திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டத்தில் மிகவும் சக்தி வாய்ந்த கோயில்களில் கோட்டை மாரியம்மன் கோயில் ஒன்றாகும்.இந்த அம்மன் மிகவும் சக்தி வாய்ந்த அம்மனாக அந்த ஊர் மக்களால் போற்றுபடுகிறது.
அம்மன் அமர்ந்த கோலத்தில் இத்தலத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறாள்.8 கைகளுடன் காட்சி தரும் அம்மனின் வலது கைகளில் பாம்பு, சூலாயுதம், மணி, கபாலம், ஆகியவையும், இடது கையில் வில், கிண்ணம், பாம்பு, ஆகியவைகள் காணப்படுகின்றது.
ஆண்டுதோறும் மாசிமாதம் 20 நாட்கள் திருவிழா நடைபெறும். திருவிழா தொடங்க முன் அறிவிப்பாக மாசிமாதம் அம்மாவாசை முடிந்த 5-ம் நாள் கொடியேற்றம் செய்யப்பட்டு தொடர்ந்து 20 நாள்கள் சிறப்பாக விழா கொண்டாடப்படும்.
அதிகபட்சமாக ஒரு மாதம் வரை திருவிழா நடைபெறும்.இந்த அம்மனை மனதார வேண்டிக்கொண்டால் தாலி பாக்கியம் குழந்தை வரம் பெண்கள் சுபிட்சமாக இருப்பார்கள் என்று கூறுகின்றனர்.
வழிபாட்டு நேரம்
காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்
இடம்
அருள் மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில், திண்டுக்கல் – 624001
5.வண்டி கருப்பு சாமி கோயில்,திண்டுக்கல்
கருப்பண்ணசாமி என்றாலே மிகவும் துடிப்பானவர்.அவர் கொடுத்த வாக்கை எவ்வளவு பாடு பட்டாலும் காப்பாற்றி கொடுப்பார்.அப்படியாக திண்டுக்கல் மாவட்டத்தில் வண்டி கருப்பண்ணசாமி என்பவர் இங்கு மிகவும் விஷேசம்.
இங்கு இன்னோரு தகவல் என்னவென்றால் இங்குள்ள கருப்பண்ணசாமியை தரிசிக்க பெண்களுக்கு அனுமதி இல்லை.நினைத்த காரியம் நிறைவேற,இல்லை தொலைந்த பொருட்கள் கிடைக்கவோ இங்குள்ள கருப்பண்ணசாமியை வேண்டிக்கொண்டால் அவை கிடைக்கும் என்று ஊர் மக்கள் சொல்கின்றனர்.
மேலும் இங்கு ஒரு மிக திருவிழா நடை பெரும்.அதாவது ஏழு வருடம் ஒருமுறை ஏழு கிராமங்களும் ஒன்று சேர்ந்து குதிரையெடுப்பு திருவிழா கொண்டாடுவார்கள்.
அந்த விழாவிற்காக வைகாசி ஆனி மாதத்தில் குளத்தில் இருந்து மக்கள் களி மண் எடுத்து வந்து குதிரைகள் செய்யஆரம்பித்து விடுவார்கள்.
மேலும் விழாவின் ஒரு நாள் அன்று அதிகாலையில் முனீஸ்வரர் குருதி குடிக்கும் வைபவம் மிகவும் மே சிலிர்க்கவைக்கக்கூடிய ஒன்றாகும்.அந்த நிகழ்வின் பொழுது எந்த வாகனமும் கோயிலை கடக்கக்கூடாது என்பது கட்டளையாக பின்பற்ற படுகிறது.
வழிபாட்டு நேரம்
காலை 7 மணி முதல் 10 மணி வரை,மாலை 5 மணி முதல் 8 மணி வரை
இடம்
F5RC+GC4, திருச்சி-திண்டுக்கல் ரோடு Tamil Nadu 624801
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |